Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 17

ரங்க ராஜ்ஜியம் - 17
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம் - 17

இந்திரா சௌந்தர்ராஜன்

மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார்
பச்சைப் பசுந்தேவர் தாம்பண்டு நீரேற்ற
பீச்சைக் குறையாகி யென்னுடைய பெய்வளைமேல்
இச்சையுடையரே லித் தெருவே போதாரே

- நாச்சியார் திருமொழி

ரங்க ராஜ்ஜியம் - 17

`அந்தணரே! உங்கள் சகோதரன் முன்னால் உங்களை நான் வாழவைத்துக் காட்டுகிறேன். உங்களுக்கு என்ன வேண்டுமோ என்னிடம் கேளுங்கள். அசுவமேத யாகத்தின் பொருட்டு நானும் அந்தணருக்கு தானம் செய்யவேண்டிய கடமை கொண்டவன். அந்தணருக்கான அந்த தானம் உமக்கானதாய் இருக்கட்டும்...' என்றான்.’’

“பிறகு?”

“பிறகுதான் ஆரம்பமாயிற்று வாமனலீலை. ‘அப்பனே நீ அதிகமெல்லாம் எனக்கு எதையும் தரவேண்டாம் என் கால்களால் மூன்றடி நிலம் கொடுத்தால் போதும்’ என்று வாமனர் கூற, துந்து சிரித்துவிட்டான்.
‘அற்பம்... இது மிகமிக அற்பம்! மூன்றடி என்ன? மூன்று கோடி அடிகள்கூட கேளுங்கள் தருகிறேன். இந்த உலகம் என் உலகம். இந்த வானம் என் வானம். சர்வம் என் வசம்’ என்று அவன் பேசிய பேச்சில் செருக்கின் செம்மாப்பு!’’ - மகரிஷி சற்று இடைவெளி விட்டு கிளிச்சோழனைப் பார்த்தார்.

“மகரிஷி... எதற்கிந்த பார்வை?’’

“அகந்தை கொடியது - அதிலும் அசுர அகந்தை கொடிதினும் கொடியது! நம்மை நாம் அறியத் தொடங்கவே ஒரு பிராயம் தேவைப்படுகிறது. அப்படி அறியத் தொடங்கும்போது, முழுமையாக நம்மை நாம் அறிந்துகொள்கிறோமா என்றால் அதுவுமில்லை. நம் தாய் தந்தையை நாம் தீர்மானிக்கவில்லை - நம் பிறப்பு ஆண் என்றோ பெண் என்றோகூட நாம் தீர்மானிப்பதில்லை. பிறந்ததால் வளர்கிறோம், வளர்வதால் வாழ்கிறோம், வாழ்வதால் காண் கிறோம், காண்பதால் அறிகிறோம், அறிவதால் உணர்கிறோம் - இப்படி நம்மைச் சுற்றி உள்ளவற்றாலேயே நாம் ஆளாகிறோம். இதில் அடுத்து என்ன நடக்கும் என்பதும் நமக்குத் தெரியாது. நடக்க நடக்கவே எதுவும் தெரியும். கூட்டிக்கழித்துச் சொல்லப்போனால் பிரமாண்டமான இந்த உலகத்தில் கோடானு கோடி தூசுகளில் ஒரு தூசு நாம்... இதுதான் யதார்த்தம்! ஆனாலும் உலக மாயை ஆட்டுவிக்கத் தொடங்கிவிட்டால் எப்படி ஆகிவிடுகிறோம். என்று பார்த்தாயா?”

“புரிகிறது மகரிஷி. நீங்கள் இத்தனை விரிவாகக் கூறும்போது, எனக்கேகூட மேனி சிலிர்க்கிறது. தவறியும் அகந்தை வயப்படக்கூடாது என்கிற எச்சரிக்கை ஏற்படுகிறது.”

“அதற்காகவே உன்னை அப்படிக் கண்டேன். என் பார்வையின் பொருள் புரிந்து நீயும் சரியாக பதில் கூறிவிட்டாய்.”

“மகரிஷி... வாமனர் அடுத்து என்ன செய்தார்?’’

“என்ன செய்தாரா? துந்து முன் விசுவரூபம் எடுத்து நின்றார்! அதைக் கண்ட துந்து மிரண்டு போய் ‘விஷ்ணு நீயா?’ என்று அதிர்ந்தான்.

ரங்க ராஜ்ஜியம் - 17

‘நானேதான். பிறராலோ, என்னாலோ, பிரம்மன், ஈசன் என்கிற மூர்த்திகளாலோ மரணம் கூடாது என்று நீ வரம் வாங்கிவிட்டால் போதுமா? `என்னாலும் எனக்கு மரணம் நிகழக்கூடாது' என்று உன்னையும் இணைத்துக் கேட்க உனக்கு அறிவில்லாது போய்விட்டதே துந்து’ என்று விஸ்வரூப வாமன விஷ்ணு கூறவும் துந்து பதறிப் போனான்.

‘அப்படியானால் எனக்கு என்னால் மரணம் ஏற்படுமா?’ என்று கேட்டான்.

‘ஏற்படுமா என்ன... ஏற்படப் போகிறது பார்...’ என்று தன் ஒரு காலால் பூமியை ஒரு மிதிமிதித்தார் விசுவரூப வாமன விஷ்ணு! அப்படி அவர் மிதித்த இடத்தில் ஒரு பெரும் பள்ளம் உண்டாயிற்று, அந்தப் பள்ளத்தில் துந்துவும் தடுமாறி விழுந்திட, அப்படியே அவன் உடலைப் பள்ளத்தால் உண்டான மண்ணே பொங்கிப் பின் சரிந்து மூடிற்று. விஸ்வரூப வாமன விஷ்ணுவும் வைகுண்டபதியாகிட, பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் போற்றித் துதி செய்தனர்.”

“அருமை... அற்புதம்... ஆனந்தம்... பேரானந்தம்...” - கிளிச்சோழன் குதூகலித்தான்.

“இதற்கே இப்படி என்றால், பலிச் சக்கரவர்த்தி யின் கர்வபங்க நிமித்தம் எடுத்த வாமனாவதாரம் மேலும் உன்னை குதூகலிக்கச் செய்யுமே?” என்றார் மகரிஷி!

“நான் பாக்கியன் - பரமபாக்கியன் - எப்பேர்ப்பட்ட மூர்த்தியின் ஆலயத்தை மீட்டுள்ளேன். அடேயப்பா... நினைக்க நினைக்கச் சிலிர்க்கிறதே..!” - என்று ஆனந்தக் கூத்தாடியவன் “அந்த அவதாரத்தையும் கூறிவிடுங்கள்” என்றான்!

கிளிச்சோழன் பக்தியோடு கேட்க, நீலி வனத்து மகரிஷி வாமனாவதாரத்தின் இரண்டாம் பாகத்தைக் கூறத் தொடங்கினார்.

‘` `பலி’ என்கிற சொல்லைக் கேட்டாலே எல்லோருக்கும் அச்சமே ஏற்படும். உடம்பை விட்டு உயிரைச் செயற்கையாகப் பிரித்தெடுக்கும் செயலுக்கான பெயர் அது. உண்மையில் பலி எனும் சொல்லுக்கு முக்தி என்றொரு பொருள் உண்டு. இந்த `பலி' என்பது இறைநிமித்தம் மட்டுமே நிகழும்.

ஆலயங்களிலும் பலி பீடங்கள் இருக்கும்! இங்கே நாம்,  ஆணவம், அறியாமை முதலான நம் எண்ணங்களைப் பற்றியிருக்கும் உணர்வுகளைப் பணிந்து வணங்கிப் பலியிடுவோம். இதனால் சுத்திகரிப்புக்கு உள்ளாவோம். இப்படிச் சுத்திகரிப்புக்கானதாகவும் இறைவழியாகவும் உள்ள ஒரு செயலுக்கான பெயரையே தன் புத்திரனுக்குச் சூட்டியிருந்தான் விரோசனன் என்பவன்! இந்த விரோசனன் யாரோ அல்ல... நரசிம்மாவதாரம் என்று ஓர் அவதாரமே நிகழக் காரணமான பக்த பிரகலாதனின் புத்திரன்தான் விரோசனன்! இவன் புதல்வனும், பிரகலாதனின் பேரனும்தான் ‘பலி’ எனப்பட்டான்!

பாட்டன் பிரகலாதன் வழியில் விஷ்ணு பக்தியோடு வளர்க்கப்பட்டதால் மகாபலி என்றானான். பாட்டனே இவனுக்கு ஆன்மிக குருநாதரும் கூட! ஆனபோதிலும் அசுர வம்ச வித்தாக இருந்தமையால், அசுரர்களின் குருவான சுக்கிராச்சார்யர் இவனுக்கும் ராஜகுருவாக ஆனதோடு, பலியை பிரகலாதனிடமிருந்து பிரித்து அவனை பெரும் ஆசாபாசங்களுக்கு ஆட்படுத்தி, இந்திரன் முதலான தேவர்களை எல்லாம் அடிமைகளாக்கும்படிச் செய்தார்.

அசுரகுலத்தில் ஹிரண்யனுக்குப் பிறகு அவனது கொள்ளுப் பேரனான பலி அசுர புத்திக்கு ஆளாகி பெரும் கர்வமும் கொண்டவனானான்.

‘பலி! உன் கொள்ளுப் பாட்டன் ஹிரண்யன் சாதிக்காததை நீ சாதிக்கவேண்டும். ஈரேழு பதினான்கு புவனங்களும் அசுர சாம்ராஜ்ஜியம் என்றாகி, தேவர்கள் இங்கெல்லாம் பணியாளர் களாகி ஜீவிக்கவேண்டும்’ என்று நாள்தோறும் கூறி வந்தார். அதோடு, `அசுர குலம் தழைக்க வேண்டும் என்றால் யக்ஞம் எனப்படும் வேள்வி மிக முக்கியம். இந்த வேள்வியில் வழங்கப்படும் அவிர்பாகங்களாலேயே அசுர சக்தி தேவசக்தியை விஞ்சும் சக்தியாக மாற முடியும்.  இந்த உலகின் மிக உன்னதமான ஒரு செயல்பாடு உண்டென்றால் அது யக்ஞமே' என்று பலியை யக்ஞம் புரியவும் தூண்டினார்.

மகாபலியும் யக்ஞம் புரிந்ததோடு அவிர் பாகங்களை அசுர சக்திகளுக்கு வழங்கிட, உலகின் சமநிலை மெள்ளக் கெடத் தொடங்கியது. ரிஷிகள், முனிகளால் ஆத்மார்த்த தவம் இயற்ற முடியாது போயிற்று. சத்வ குணம் கொண்டவர்கள் நிம்மதி இழந்தனர். காமம் பெருகி அசுர வித்துக்கள் ஏராளமாய் தோன்றினர். சத்யமும், தர்மமும் நலிந்து கொண்டே போயின. பலியின் ராஜ்ஜிய நிர்வாகம் பிற அசுரர்களின் கொடூர நிர்வாகமாக இல்லை, அதேநேரம் தேவதமும் துளியுமில்லை.

ரங்க ராஜ்ஜியம் - 17

இதனால் கவலைகொண்ட இந்திராதி தேவர்கள், வழக்கம் போல் மகாவிஷ்ணுவை தஞ்சம் அடைந்து, வினோதமான ஓர் அசுர ஆட்சியை தாங்கள் கண்டு வருவதாகவும் இது தொடர்ந்தால் சத்ய, தர்மங்கள் பூண்டோடு அழிந்துவிடும் என்று முறையிட்டனர்.

ஸ்ரீமகாவிஷ்ணுவும், ‘காலத்தால் உங்கள் குறை தீரும். அச்சமும் சலனமும் இன்றி நீங்கள் உங்கள் ஜபதபங்களை தொடருங்கள். இது போன்ற தருணங்களில் நீங்கள் காட்டும் தீர்க்கமே மாற்றத்துக்குச் சக்தி தரும்’ என்றார்.

அப்போது ரிஷிகளும் ‘அப்படி தவத்தில் ஈடுபட எங்களால் முடியவில்லை. நாங்கள் புலனடக்கத்துக்கு முயலும் போதெல்லாம் எங்கிருந்தோ  ஓர் அசுரன் எங்கள் முன் தோன்றி எங்களைத் தடுக்கிறான். மீறினால் வெட்டிக் கொலையே செய்துவிடுகிறான். சிலர், எங்கள் வேள்வியின் அவிர்பாகத்தை அசுர சக்திக்கு அளிக்க வலியுறுத்துகின்றனர். இதனால் தேவர்களுக்கான வேள்வி முற்றாக நின்று போய் தேவர்கள் பசியோடு நலிந்து வருகின்றனர்’ என்று நீண்ட விளக்கமளித்தனர்.

`இனி அவ்வாறு நிகழாது! யாம் அதிதி எனும் ரிஷி பத்தினியின் கர்ப்பத்தில் மானுடப் பிறப்பெடுக்க உள்ளோம். காஸ்யபரே இந்தப் பிறப்பில் என் தந்தை. இவராலேயே துந்து முதல் சகல அரக்கக் குலமும் தோன்றியது. எனவே, இவரின் மூலம் பிறந்து யாம் புரியப்போகும் லீலை, காலகாலத்துக்கும் ஓர் அழியாப் பாடமாய் திகழப் போகிறது. எனவே, நீங்கள் உங்கள் வேள்விகளைத் தொடருங்கள். இனி, அசுர சக்திகள் மெள்ள தங்கள் வலிமையை இழக்கப் போவதைக் காண்பீர்கள்' என்று கூறினார். பின் அவ்வாறே அதிதியின் கர்ப்பத்தில் கலந்து மானுட கருப்பிண்டமாய் வளரத் தொடங்கினார்.

அதிதியின் கர்ப்பம் வளர வளர புறத்தில் அசுரர்கள் மெள்ள தங்கள் வீர்யத்தை இழக்கத் தொடங்கினர். நீண்ட உறக்கம், அசமந்தம், அஜீரணம், உடல் நலிவு, மனச்சலனம் என்று உடல் தொடர்பான வினைகளுக்கு ஆட்பட்டனர். இதையறிந்த சுக்ராசார்யர் தன் தீட்சையாலே சகலத்துக்கும் காரணம் அதிதியின் கர்ப்பம் என்பதை உணர்ந்துகொண்டார். தான் உணர்ந்ததை மகா பலியடமும் கூறினார். அதைக் கேட்டு கோபம்கொள்ள வேண்டிய மகாபலி, ‘மகாவிஷ்ணு இத்தனை ஆற்றல் படைத்தவரா!’ என்று வியக்கவே செய்தான்.

‘நீ வியப்பதற்காக நான் இந்த ரகசியத்தைக் கூறவில்லை. உன்னை மேலும் வலிமைப்படுத்திக் கொள். இல்லாவிட்டால் நீயும் உன் கொள்ளுப் பாட்டன் போல் விஷ்ணுபக்தனாகி, அரக்கர் குலத்தைத் திரும்ப தேவர்களுக்குக் கீழே கொண்டு சென்றுவிடுவாய்” என்றார்.

மகாபலியும் சுக்ராசார்யரின் வழிகாட்டுதலில், வேள்வி புரிந்து பலம் பெருக்க முனைந்தான். அதேவேளை, அதிதியும் ஒரு புரட்டாசி மாத சுக்லபட்ச சிரவண துவாதசி திதியில் அபிஜித் நட்சத்திரத்தில் (காலங்களில் மகோன்னதமான காலம்) அழகாய் கருக்கொண்ட மகாவிஷ்ணுவை ஒரு ஆண் மகவாய் பெற்றெடுத்தாள். மகாவிஷ்ணு வும் வாமனனாக இங்கே வளரத் தொடங்கினார்.

இந்தப் பிள்ளை தங்கள் கலி (துயர்) தீர்க்கப் பிறந்த பிள்ளை என்பதால், சூரியன் தன் பங்குக்கு சாவித்திரி மந்திரத்தை உபதேசித்தான். குருவான பிரகஸ்பதி பிரம்ம சூத்திரத்தை தேடி வந்து உபதேசித்தார். காஸ்யபரும் `முஞ்சி' எனும் மரத்தடியை கொடுத்திட, பூதேவி ஆசனம் கொடுத்தாள். சந்திரன் தண்டம் கொடுத்தான், தாயான அதிதி கௌபீனம் கொடுத்தாள். பிரம்மன் கமண்டலம் கொடுத்தான். குபேரன் பிக்ஷை பாத்திரம் கொடுத்தான், பார்வதி அதில் முதல் பிக்ஷை இட்டாள்.

பின் பிரத்வாஜ முனிவர் இவருக்கு உபநயனம் செய்வித்து வேத அத்யயனம் செய்வித்தார். ஆங்கீரச முனி இசைபட சாமவேதத்தை சொல்லித் தந்தார்.

மொத்தத்தில் ஒரு அவதார நாடகம் அதற்குண்டான திட்டங்கள் துளியும் குறைவின்றி நடந்தேறிட, வாமனமுனி எனும் வாமனப் பிள்ளை குட்டையான உருவில், அதேநேரம் ஜொலிக்கும் தேஜஸுடன் தன் அவதார நோக்கின் உச்சக்கட்டத்துக்குச் செல்லலானான்!

மிகச் சரியாக பலிச்சக்ர வர்த்தியும் வேள்விகளுக் கெல்லாம் வேள்வியான அஸ்வமேத யாகத்தைக் `குருக்ஷேத்திரம்' எனுமிடத்தில் நிகழ்த்தத் தயாராகியிருந்தான். இந்த வேள்வியை அவன் பலமுறை செய்துவிட்டான். இதை நூறுமுறை செய்யும் ஒருவன் எப்படிப்பட்ட பிறப்பாளனாக இருந்தாலும் இந்திரனுக்கும் மேலானவனாகி விடுவான். அவனை அமிர்தம் தேடி வரும். தேவ பொக்கிஷங்கள் சகலத்துக்கும் அவன் அதிபதியும் ஆகிவிடுவான். அந்த வகையில் மகாபலி தனது நூறாவது வேள்வியைத் தொட்டு அதன் முனைப்பில் இருந்தான்.

இவ்வேள்வியில் தானம் பிரதானம். தானம் பெறுபவர் குறையை உணர்ந்தால் வேள்வி முழுமை பெறாது. எனவே, மகாபலி குறைவின்றி இந்த வேள்வியை நடத்திடும் நிலையில், இதில் பங்குபெற வாமனனும் புறப்பட்டான். பலியின் வேள்வியை நினைத்த மாத்திரத்தில் அதில் சேர்க்கப்பட்ட அசுரர்களுக்கான அவிர்பாகம் அவ்வளவும், அந்த வாமன மூர்த்தியைச் சென்று சேரத் தொடங்கின!

அதைப் பெற வேண்டிய அசுராதியர் ஓலமிட, மகாபலி அதிர்ந்தான். குருவான சுக்ராசார்யரிடம், ‘எதனால் இப்படி நடக்கிறது?’ என்று கேட்டான். அவரும் கண்களை மூடி நிஷ்டையில் ஆழ்ந்து வாமனராய் ஸ்ரீமகாவிஷ்ணு வருவதை உணர்ந்தார். அதிர்ந்தார்!

- தொடரும்...