Published:Updated:

கேள்வி பதில்: கர்மவினைகள் நீங்க பரிகாரம் என்ன?

கேள்வி பதில்: கர்மவினைகள் நீங்க பரிகாரம் என்ன?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்: கர்மவினைகள் நீங்க பரிகாரம் என்ன?

கேள்வி பதில்: கர்மவினைகள் நீங்க பரிகாரம் என்ன?

கேள்வி பதில்: கர்மவினைகள் நீங்க பரிகாரம் என்ன?

கேள்வி பதில்: கர்மவினைகள் நீங்க பரிகாரம் என்ன?

Published:Updated:
கேள்வி பதில்: கர்மவினைகள் நீங்க பரிகாரம் என்ன?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்: கர்மவினைகள் நீங்க பரிகாரம் என்ன?

? கோயில் ராஜ கோபுரங்களில் பொருத்தப்படும் கலசங்களின் எண்ணிக்கை, கோயிலுக்குக் கோயில் மாறுபடுகிறதே, ஏன்?

- எம்.ரகுராமன், கும்பகோணம்

கேள்வி பதில்: கர்மவினைகள் நீங்க பரிகாரம் என்ன?

ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவனின் திரு உருவத்துக்கு ஏற்ப விமானங்களும் கோபுரங்களும் அமைக்கப்படுவது உண்டு. இதுபற்றியும் ஆலயத்தின் அளவு, அமைப்பு, மூலத்திருவுருவின் அமைப்பு ஆகியவைக் குறித்தும் ஆகமங்களும் சிற்ப நூல்களும் விளக்குகின்றன.

ஆலயங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. மக்கள் கூடக்கூடிய ஓர் இடமாக மட்டுமே அவற்றை நாம் பார்க்கக்கூடாது. அந்தக் காலத்தில், ஆலயங்களின் அமைப்பைப் பொறுத்தே நகரின் அமைப்பும் திகழும். உலகின் அனைத்து ஜீவராசிகளும் நன்மை அடையவேண்டும் எனும் நோக்கில்,  இடைவிடாது வழிபாடுகள் நடைபெறக்கூடிய ஒரு புனிதத்தலமே கோயில்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேள்வி பதில்: கர்மவினைகள் நீங்க பரிகாரம் என்ன?அங்கே, ஒவ்வொரு சிற்பத்தின் அமைப்பும், அளவும் எப்படி இருக்கவேண்டும் என்பதைப் பற்றி மிக நுணுக்கமாக நமது சாஸ்திரங்களில் விளக்கப்பட்டு உள்ளன. அவை அனைத்தும் அந்த ஆலயத்தில் தெய்விக ஆற்றலை நிலைநிறுத்தச் செய்வதற்கு மிகவும் உறுதுணையாக அமைகின்றன. அளவுகளிலோ அல்லது அமைப்புகளிலோ ஏதேனும் வேறுபாடுகள் இருப்பின்,  அந்த ஆலயத்தின் மூலம் முழுமையான பலனைப் பெற முடியாமல் போய்விடும். எனவே, ஆலயத் திருப்பணிகளின்போது, தேர்ச்சி பெற்ற ஆசார்யரையும் சிற்ப சாஸ்திரத்தில் தேர்ச்சிபெற்ற சிற்பியையும் ஆலோசித்துச் செயல்படுவது சிறப்பு.

விமானங்களிலும் கோபுரங்களிலும் சிறந்து விளங்கக்கூடிய கலசங்கள் அழகுக்கானவை அல்ல, அந்தக் கோயிலுக்குள் எழுந்தருளியுள்ள தெய்வ சக்தியின் பிரதிநிதியாகவே அவை திகழ்கின்றன எனலாம். ஆகவேதான், கலசங்களுக்கு முதலில் கும்பாபிஷேகம் செய்தபின்னரே மூலாலய கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்று ஆகமங்கள் பணித்திருக்கின்றன. திருக்கோயில்களில் அமையப் பெறும் கோபுர அளவுகளைப் பொறுத்து அதற்கு மகுடமாக விளங்கக் கூடிய கலசங்களின் எண்ணிக்கை மாறுபடும்.

? நாம், நம் வீட்டில் அன்னதானம் செய்யும்போது, மற்றவர்கள் கொடுக்கும் பொருள் களைப் பெற்று பயன்படுத்தலாமா?

- மணிவண்ணன், சேலம்


அனைவருக்கும் நிறைவைத் தரும் தானம் அன்னதானம் மட்டுமே.  பசியைப் போக்குதல் என்பது மிக உயர்ந்த செயல். நாம் அனைவரும் ஒவ்வொரு தினமும் யாரேனும் ஒருவருக்காவது அன்னம் அளித்து, அதன்பிறகே நாம் உணவருந்த வேண்டும் என்று நமது சாஸ்திரம் கட்டளை இடுகிறது.  `அன்னம் பஹு குர்வீத..' `தத் வ்ரதம்...' என்றெல்லாம் அறிவுறுத்துகிறது. அன்னதானம் நிறைய செய்யவேண்டும் என்றும் அதையே விரதமாகக்கொள்ளல் வேண்டும்  என்றும் வேதங்களில் கூறப்பட்டுள்ளது.

கேள்வி பதில்: கர்மவினைகள் நீங்க பரிகாரம் என்ன?

தாங்கள் இங்கே குறிப்பிட்டுக் கேட்டிருப்பது, தாங்கள் செய்யும் அன்னதானத்தில் பிறர் கொடுக்கும் பொருள்களைப் பயன்படுத்தலாமா என்று. ஒரு பொதுவான காரியத்தின் பொருட்டு தாங்கள் அன்னதானம் செய்ய விரும்பினால், மற்றவர்கள் தரும் பொருள் களையும் பயன்படுத்தலாம். தர்ம காரியங்கள் ஏதேனும் வகையில் யாரேனும் ஒருவர் மூலமாக நடப்பது சிறப்பானதே. ‘ஊர் கூடி தேர் இழுப்பது’ என்று கூறுவர். பலர் சேர்ந்து ஒரு நல்ல காரியத்தை செய்வது என்பது நமது வழக்கமே. 

? பூர்வ ஜன்ம கர்மவினைகளில் இருந்து விடுபட எளிய பரிகாரம் எதுவும் உள்ளதா?

- சிவசங்கர், ராமாபுரம்

யாநி காநி ச பாபாநி ஜன்மாந்தர க்ருதானி ச
தாநி தாநி வினச்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே... 
என்கிறது ஒரு சுலோகம்.

நாம் எந்தவிதமான பாபச் செயல்கள் செய்தோமோ, எவ்வளவு செய்தோமோ, அவை நாமறியாமலேயே நடந்திருந்தாலும், அவை அனைத்தும் நாம் இங்கு செய்யும் பிரதட்சிணத்தினால் விலகவேண்டும் என்று இறையின் திருமுன் தினமும் பிரார்த்திக்க வேண்டும். இங்கே குறிப்பிடப்படும் `பிரதட்சிணம்' என்பது, ஆலயத்தில் தெய்வத் திருவுருவங் களை வலம் வருதலை மட்டுமே குறிப்பதல்ல. நம் ரிஷிகளும் ஞானநூல்களும் அறிவுறுத்துவது போல்... உண்மை பேசுதல், நேர்மை, பிறர் பொருளின் மீது ஆசைப்படாமல் இருத்தல், யாரையும் துன்புறுத்தாமல் இருத்தல், இறைவனை அனுதினமும் வழிபடுதல், இறை சக்தியை அனைத்து ஜீவராசிகளிலும் கண்டு அனைவரையும் ஒன்றாக மதித்தல் ஆகிய நற்செயல்களை அனுசரித்து நடப்பதையும் குறிக்கும்.

நம்மால் இயன்றளவு சாஸ்திர அறிவுரைகளை அனுசரித்து நடந்தோமானால், நம் கர்மவினைகள் குறையும். அதாவது, தற்போது நாம் செய்யும் நற்காரியங்களுக்கு ஏற்ப நம் வினைகள் மெள்ள மெள்ள குறைந்து, பின்னர் இந்தப் பிறவியிலோ அல்லது வரும் பிறவிகளிலோ முழுமையாக ஒழிக்கப்பட்டுவிடும். அதன்பிறகு பிறப்பில்லா முக்திப்பேறு அடைய முடியும்.

? மகாலட்சுமியின் வாச ஸ்தலம் என்று போற்றப்படும் வில்வ மரத்தை வீட்டில் வளர்க்கலாமா அல்லது கோயில்களில்தான் வளர்க்கவேண்டுமா?

- எம்.சுந்தரமூர்த்தி, காஞ்சிபுரம்


வில்வம் - சிவபெருமானுக்கு மிகவும் ப்ரீதியானது. வில்வ இலைகளைச் சமர்ப்பித்து மகாலட்சுமியை வணங்கினால், உயர்ந்த பலன்களை அடையலாம். ஆகமங்கள் பல்வேறு மரங்களைப் போற்றி, அவை இருக்க வேண்டிய இடங்களைப் பற்றி சிறப்பாகப் போற்றுகின்றன.

கேள்வி பதில்: கர்மவினைகள் நீங்க பரிகாரம் என்ன?

மரங்களில் சில தெய்விகத் தன்மை வாய்ந்தவை. வில்வ மரம் மிகவும் தூய்மையானது. மகாலட்சுமியானவள் அனைத்து நேரங்களிலும் வில்வ மரத்தில் வசிப்பதால், அந்த மரத்தை மிகுந்த பக்தியுடனும் நம்பிக்கையுடனும் வழிபடுபவரின் கவலைகள் நீங்கி இன்பமான  வாழ்க்கை ஏற்படும்.

‘த்ரிதளம்’ உடைய ஒரே ஒரு வில்வ பத்திரத்தை சிவபெருமானுக்கு அளித்திட, நம் பாவங்கள் அனைத்தும் அழியும் என்றும், பல உயர்ந்த விரதங்களைக் கடைப்பிடிப்பதால் கிடைக்கும் பலன்கள் கிடைக்கும் என்றும் சாஸ்திரங்கள் விளக்குகின்றன. வில்வ இலை, வில்வக் காய் போன்றவை சில யாகங்களிலும் தேவியின் வழிபாடு களிலும் மிகவும் முக்கியமானதாகக் கருதப் படுகின்றன. ஆகவே வில்வம் விசேஷமானது!

நம் வீடுகளில் வில்வக் கன்றை ஊன்றி, அதைச் சிறப்பாக பராமரித்துப் போற்றிப் பாதுகாக்க முடியும் என்றால், வில்வத்தை நம் வீடுகளில் வளர்க்கலாம்.

? நான் தெருவில் சென்று கொண்டிருந்தபோது ஒரு காகம் வந்து தலையை உரசிச் சென்றது. இது ஏதேனும் அபசகுனமா? ஆம் எனில், அதற்கு என்ன பரிகாரம்?

- சங்கரசுப்பிரமணியன், சென்னை - 41


பொதுவாக நாம் ஒன்றை நினைத்து, அதைச் செய்யலாமா வேண்டாமா என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது, இதுபோன்று ஏதேனும் சில சம்பவங்கள் நடைபெற்றால் அவற்றுக்கு நாம் விளக்கங்கள் காணலாம். அப்போது, உரியவர்களிடம் ஆலோசனை கேட்டு, காரியத் தைத் தொடர்வதா அல்லது வேண்டாமா என்று நாம் முடிவு செய்துகொள்ளலாம்.

மற்றபடி, எவ்வித சலனமும் இல்லாத நிலையில்,  இதுபோல் நடைபெற்றால், அதை நினைத்துக் குழப்பம் அடையத் தேவையில்லை.

இதைப் படித்த பிறகும், தங்களுக்குள் அச்ச உணர்வு  இருந்தால், சனிக்கிழமையன்று ஸ்நானம் செய்து, அருகில் இருக்கக்கூடிய ஆலயத்துக்குச் சென்று வழிபடலாம். அல்லது வீட்டில் தெய்வ ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம். இதன் மூலம் இறையுணர்வு மேம்பட்டு, நம்மைப் பற்றியிருக்கும் அச்ச உணர்வு விலகிவிடும்.

ஆலயத்தில் பாராயணம் செய்யும்போது மற்றவர்களின் வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், அமைதியான ஓர் இடத்தில் அமர்ந்து பாராயணம் செய்யலாம். மேலும் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதும் நன்மை தரும். வீண் அச்சம் தேவையில்லை.

- பதில்கள் தொடரும்...

 `காளிகாம்பாள் கோயில்’ சிவஸ்ரீ  சண்முக சிவாசார்யர்

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை காளிகாம்பாள் கோயில்  சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism