Published:Updated:

திருவருள் செல்வர்கள்! - 16 - மண்ணெண்ணெய் நெய்யான அதிசயம்!

திருவருள் செல்வர்கள்! - 16 - மண்ணெண்ணெய் நெய்யான அதிசயம்!
பிரீமியம் ஸ்டோரி
News
திருவருள் செல்வர்கள்! - 16 - மண்ணெண்ணெய் நெய்யான அதிசயம்!

ஸ்ரீசிவசிதானந்த சுவாமிகள்

டியார்கள் பலரது வேண்டுகோளின்படி அந்த ஆலயத்தில், ஸ்ரீசீதாராமர், ஸ்ரீசந்தான கோபாலர், ஸ்ரீயோக நரசிம்மர் ஆகிய மூர்த்தங்களின் கும்பாபிஷேகத்துக்கு நாள் குறித்தார்கள். வேத பாராயண கோஷ்டி, திருவாய்மொழி - திவ்ய ப்ரபந்த கோஷ்டி என பாராயணங்களும் ஏற்பாடாகியிருந்தன. 

திருவருள் செல்வர்கள்! - 16 - மண்ணெண்ணெய் நெய்யான அதிசயம்!

மகான் ஒருவர் அந்தக் கும்பாபிஷேகப் பணிகளை முன்னின்று செய்துவந்தார். பத்து நாள்களுக்கு முன்னதாகவே, அம்பாள் ஸ்ரீராஜ ராஜேஸ்வரி சந்நிதியில் வேதபாராயண கோஷமும், ஸ்ரீசீதாராமர் சந்நிதியில் திருவாய்மொழி - திவ்யப்ரபந்த  கோஷ்டிகளும் நடைபெறத் தொடங்கின. வேதபாராயணம் செய்ய வந்த வேதியர்களிடம், “நீங்கள் வெகுசிரத்தையுடன் வேத பாராயணம் செய்தால், அதன் சக்தியை நீங்களே பின்னால் அறிவீர்கள்” என்று அருளியிருந்தார் அந்த மகான்.

பிரதிஷ்டையின்போது வைக்கவேண்டிய யந்திர ஸ்தாபனத்துக்குத் தேவையான தகடு பஞ்சலோகத்தால் செய்யப்பட்டது. அதில், மகான் தன் கரங்களாலேயே சக்ரம் வரைந்தார். பின்னர் அந்தத் தகடு தனிப்பெட்டிக்குள் வைத்துப் பூட்டப்பட்டு, சாவி சில முக்கியஸ்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நாள்தோறும் வேதபாராயணம் தொடங்கும் போது, அந்தப் பெட்டி கொண்டுவரப்பட்டு  பொது மக்கள் முன்னிலையில் திறந்து வைக்கப்படும். வேதபாராயணம் முடிந்ததும், தகட்டை எடுத்து நிறுத்துப் பார்த்து, அதன் எடை - தரம் ஆகியவற்றைக் குறித்துக் கொண்டு, பொதுமக்கள் முன்னிலையில் படிக்கவும் செய்வார்கள். பின்னர், மீண்டும் தகட்டைப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டி, முத்திரை வைப்பார்கள்.

நீதிபதிகள் சிலரும், பொற்கொல்லர் சிலரும் இந்தப் பணியைக் கவனித்து - நிர்வகித்து வந்தார்கள். நாள்கள் செல்லச் செல்ல, சிரத்தையாகச் சொல்லப்பட்ட வேதகோஷத்தின் மகிமையால், சக்ரம் வரையப்பட்ட தகட்டின் எடை அதிகரித்ததுடன், தரத்தில் உயர்ந்தும் வந்தது. நிறத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மஞ்சளாக மாறி வந்த அந்தத் தகடு,  பிரதிஷ்டைக்கு முன்தினம் முழுமையாகத் தங்கமாக மாறிவிட்டது!

அனைவரும் ஆச்சர்யப்பட்டு மகானைப் புகழ்ந்தார்கள். அவரோ, “என்னிடம் ஒன்றுமில்லை. எல்லாம் நம் வேதங்களின் மகிமை” என்றார். வேத மகிமையால் தங்கமாக மாறிய அந்தத் தகடு, மகானின் திருக்கரங்களாலேயே ஸ்ரீசீதாராமர் விக்கிரகத்துக்கு அடியில் வைக்கப்பட்டது.

இந்த அற்புதம் நடந்த இடம் திருக்குற்றாலத்தில் உள்ள - ஸ்ரீதத்தாத்திரேய மந்திராலயம் - ஸ்ரீசித்தேஸ்வரி பீடம். இந்த அற்புதத்தை நிகழ்த்திய மகான் ‘ஸ்ரீசிவசிதானந்த ஸரஸ்வதீ ஸ்வாமிகள்’ எனும் ஸ்ரீமௌனானந்த ஸ்வாமிகள். இது நிகழ்ந்த காலம் 5-7-1919. சித்தார்த்தி வருடம் - ஆனிமாதம் 20-ம் நாள்; சப்தமி திதி; வெள்ளிக்கிழமை, உத்திர நட்சத்திரம். (இனி அந்த மகானை ஸ்ரீஸ்வாமிகள் என்றே பார்க்கலாம்).    
    
இதே ஸ்ரீதத்தாத்திரேய மந்திராலயத்தில் ஸ்ரீஸ்வாமிகள் மற்றோர் அற்புதத்தையும் நிகழ்த்திக் காட்டினார்.

ஸ்ரீதத்தாத்திரேய மந்திராலயத்தின் தென்கிழக்கு மூலையில், பெரியதொரு விநாயகரைப் பிரதிஷ்டை செய்தார் ஸ்ரீஸ்வாமிகள். ஏகக் கூட்டம். விநாயகரின் பெரும் வடிவமும் அழகும், பார்த்தவர் களின் கண்களையும் கருத்தையும் கவர்ந்தன. அதை மேலும் அதிகரிக்கும்விதமாக, பிரதிஷ்டை முடிந்து கற்பூர ஆரத்தி எடுக்கும் நேரத்தில், விநாயகர் விக்கிரகம் சற்று அசையத் தொடங்கியது. நெருங்கிப் பார்த்தவர்கள் வியந்தார்கள்.

காரணம்? விநாயகரின் தொடையில் மனிதர்களுக்கு நாடி துடிப்பதைப் போலவே, ஜீவநாடி அடித்துக் கொண்டிருந்தது!

திருவருள் செல்வர்கள்! - 16 - மண்ணெண்ணெய் நெய்யான அதிசயம்!

பரபரப்பான அந்தச் சூழ்நிலையில் பெரும் மருத்துவர்கள் சிலர், தங்கள் ‘ஸ்டெதாஸ்கோப்’பைக் கொண்டு வந்து, நன்றாகப் பரிசோதித்துப் பார்த்தார்கள். பின்னர், “நாடி நல்ல நிலைமையில் ஓடிக் கொண்டிருக்கிறது’’ என்று தங்கள் அனுபவத்தையும் கூறினர்.

வம்பு பேசும் கும்பல் என்றும் இருக்கும்; எங்கும் இருக்கும் அப்படிப்பட்டவர்களில் சிலர், “அடப் போங்கய்யா! கல் சிலையில் எப்பிடி நாடி ஓடும்? உள்ளுக்குள்ளே எதையாவது இயந்திரங்களை வெச்சிருப்பாங்க” என்று வாதம் செய்தார்கள். இன்னும் சிலர், தங்கள் பங்குக்கு ‘ஜியாலஜி’ நிபுணர்கள் சிலரை அழைத்து வந்து, பல விதங்களிலும் பரிசோதனையும் செய்தார்கள்.

பரிசோதித்த நிபுணர்களும், “விக்கிரகத்தின் உள்ளே செயற்கை யான பொருள் எதுவும் இல்லை. இதில் இயற்கையாகவே நாடித் துடிப்பு உள்ளது” என்று வியந்துபோனார்கள்.

இவை எல்லாவற்றையும்விட விசேஷம்... பலரும் பலவிதமாகவும் பரிசோதித்தும், ஸ்ரீஸ்வாமிகள் ஒரு சிறு மறுப்புகூட வெளியிட வில்லை. “விநாயகருக்கு நான் மட்டும்தான் குழந்தையா என்ன? அவர்களும் குழந்தைகள்தானே. ஐந்து கரத்தானுடன் ஆசையாய் விளையாடுகிறார்கள். விளையாடட்டுமே!”என்பதுபோல, நடப்பதை யெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அந்த அதிசய விநாயகரின் நாடித்துடிப்பு, 4 நாள்கள்வரை நீடித்திருந்தது.

தான் ஒரு சுப்ரமண்ய பக்தர் என்றும், அதன் காரணமாகவே முதன்முதலில் தண்டாயுத பாணியைப் பிரதிஷ்டை செய்ததாகவும், அதன் சக்தியாலேயே மற்ற தெய்வங்களையும் பிரதிஷ்டை செய்த தாகவும் சொல்வார் ஸ்ரீஸ்வாமிகள். முருகப்பெருமானிடம் அவ்வளவு ஈடுபாடு ஸ்ரீஸ்வாமிகளுக்கு. அதை நிரூபிப்பதுபோல்... ‘அடியவர் இச்சையில் எவையெவை உற்றன அவை தருவித்தருள் பெருமாளே!’ எனும் அருணகிரி நாதரின் திருப்புகழ் வாக்கை மெய்ப்பிப்பது போல், ஒரு நிகழ்வையும் நடத்திக்காட்டினார்.

ஸ்ரீதத்தாத்திரேய மந்திராலயத்தில் நவராத்திரி உற்சவம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். ஒரு தருணத்தில், அவ்வாறான உற்சவத்துக்கு விரிவான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன.

பலகாரங்களை நெய்யில் செய்யவேண்டும் என்று தீர்மானித்த பொறுப்பாளர்கள், நெய்க்கான ஏற்பாட்டைச் செய்தார்கள். ஆனால், குறித்த காலத்துக்குள் நெய் வந்து சேரவில்லை. வெளியில் போய் வாங்கலாம் என்றால், அதற்கு நேரமும் கிடையாது; அவசரத் துக்குக் கிடைக்கவும் கிடைக்காது. விசேஷமாக லட்டு தயாரிக்கலாம் என்றிருந்தோமே... அது நடக்காது போலிருக்கிறதே” என்று, சமையற்காரர் உட்பட அனைவரும் கைகளைப் பிசைந்தார்கள்.

அதற்குள் ஸ்ரீஸ்வாமிகளுக்குத் தகவல் போனது. அவர் உடனே, “நெய்யைத் தயாரித்துக் கொடுக்கிறேன். கரியடுப்பு ஒன்றும் பெரிய இரும்புச்சட்டி ஒன்றும் கொண்டு வாருங்கள். கூடவே, இரண்டு டின் மண்ணெண்ணெயும் கொண்டு வாருங்கள்!” என்றார். அனைத்தும் உடனடியாகக் கொண்டுவரப்பட்டன.

அடுப்பு மூட்டி அதன்மேல் வைக்கப்பட்ட சட்டி காய்ந்ததும், அதில் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணெண்ணெயை ஊற்றிக் காய்ச்சலானார் ஸ்ரீஸ்வாமிகள். காயும்போது, ஏதோ ஒருவிதமான பச்சிலைச் சாற்றை அதில் பிழிந்தார். சற்றுநேரம் கழித்து, அடுப்பிலிருந்து சட்டியை இறக்கினார்கள். 
             
என்ன ஆச்சர்யம்! சட்டியிலிருந்த மண்ணெண் ணெய் முழுவது மாக, அப்படியே தூய்மையான நறுமணம் கமழும் நெய்யாக மாறி விட்டிருந்தது. அதைக்கொண்டு ஐயாயிரம் லட்டுகள் தயாரிக்கப் பட்டன. நவராத்திரித் திருநாள்கள் முழுவதும், அவை அடியார் களுக்கு வழங்கப்பட்டன; யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை.

திருவருள் செல்வர்கள்! - 16 - மண்ணெண்ணெய் நெய்யான அதிசயம்!

இவ்வாறு இருப்பிடம் தேடி வந்த அடியார்களின் குறை தீர்த்த ஸ்ரீஸ்வாமிகள், அடியார்களின் இல்லம் தேடிச்சென்று அல்லல் தீர்த்த வரலாறுகளும் உண்டு. அவற்றில் ஒன்று!

ராஜபாளையத்துக்கு அருகில் ராமநாதன் என்ற செல்வந்தர் இருந்தார். ரயில்வே துறையிலிருந்து ஓய்வுபெற்ற அவர், ஸ்ரீஸ்வாமி களின் தீவிர பக்தர். அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழ்ந்து வந்த அவர் மீது பலரும் பொறாமை கொண்டிருந்தனர். பகையாளிக் காய்ச்சலைவிட, பங்காளிக் காய்ச்சல் கொடுமையானது என்பதற் கிணங்க, பங்காளிகளின் கொடுமை அதிகமாகவே இருந்தது. ஒரு கட்டத்தில் அவர்கள் எல்லைமீறிப்போய், துர்ச்சக்திகளைப் பிரயோகம் செய்தார்கள். இவ்வளவுதான் என்று சொல்லமுடியாத அளவுக்கு ராமநாதனின் குடும்பம், துயரங்களை அனுபவித்தது! மாந்திரீகர்கள் பலரை வரவழைத்து பலவிதங்களில் முயற்சி செய்தும் பலன் இல்லை. ராமநாதன் குற்றாலத்துக்கு ஓடிவந்து, ஸ்ரீஸ்வாமிகளிடம் முறையிட்டார்.

அதேநேரத்தில், பெண் மந்திரவாதி ஒருவர் ராமநாதனின் வீட்டுக்குப் போய், ஏவல் முதலானவற்றை நீக்கிவிடுவதாக உறுதி யளித்தார். அதற்காக 300 ரூபாய் பேரம் பேசி, ஜபதபம் செய்வதாக அட்டகாசம் செய்துகொண்டிருந்தார். அந்த நேரத்தில்தான், ஸ்ரீஸ்வாமிகள் ராமநாதனுடன் அவர் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். ஸ்ரீஸ்வாமிகளைப் பார்த்ததும் மந்திர வாதிப் பெண்மணி, தாண்டிக் குதித்து ஸ்ரீஸ்வாமிகளைப் பலவிதமாக நிந்தனை செய்து பேசி, கோபத்துடன் வெளியேறிவிட்டார்.

அந்த ஆட்டம் எதையுமே லட்சியம் செய்யாத ஸ்ரீஸ்வாமிகள், ராமநாதன் வீட்டிலேயே மூன்று நாள்கள் தங்கி, தேவி பூஜைகளை விரிவாகவே செய்தார்; கூடவே, கிரஹச்சக்ரப் பிரதிஷ்டை ஒன்றையும் அந்த வீட்டில் செய்தார். அப்புறம் என்ன? சூரியன் உதித்தால், இருட்டு ஓடவேண்டியதுதானே?

ராமநாதனையும் அவர் குடும்பத்தையும் பீடித்துக்கொண்டிருந்த ஏவல் முதலான அனைத்தும் நீங்கின; அவர்கள் மகிழ்ந்தார்கள்.

அதேநேரம், ஸ்வாமிகளைத் திட்டிவிட்டுப் போன பெண் மந்திரவாதி திரும்பி வந்தார்; ஸ்ரீஸ்வாமிகளிடம் இனிமையாகப் பேசுவதைப் போன்று பேசி, ஓர் எலுமிச்சம்பழத்தை ஸ்ரீஸ்வாமிகளின் திருக்கரத்தில் வைக்க முயன்றார்.

ஸ்ரீஸ்வாமிகளோ, “ஊஹூம்! உன் சாமர்த்தியம் என்னிடம் பலிக்காது. இந்த எலுமிச்சம்பழ விவரம் எனக்கு நன்றாகவே தெரியும். நீ அதில் பிரயோகம் செய்திருக்கும் மந்திரமும் தெரியும். அதை நீயே வைத்துக்கொள். இங்கிருந்து நீ உடனே போகாவிட்டால், அதன் பலனை நீயே அனுபவிப்பாய்” என்று எச்சரித்தார்.

பெண் மந்திரவாதி நடுங்கி, ஸ்ரீஸ்வாமிகளிடம் மன்னிப்பு கேட்டு, அவர் அனுமதியின் பேரில் ராமநாதனிடம் தனது செலவுக்காகக் கொஞ்சம் பணமும் பெற்றுக்கொண்டு ஓடிவிட்டார். சூனியம் முதலானவை செய்த பங்காளிகளோ, பலவிதமான கர்மவியாதி களுக்கு ஆளாகி, சொத்துசுகங்களை இழந்து, நிர்க்கதிக்கு ஆளானார்கள்.

குற்றால அருவியை உத்தரணியில் பிடிப்பதைப்போல, திருக் குற்றாலம் ஸ்ரீமௌனானந்த ஸ்வாமிகளின் வரலாற்றில் ஒருசில துளிகளைப் பார்த்தோம். அடியார்க்கு அருள் செய்வதற்காகவே திருமேனி கொண்டு உலாவிய ஸ்ரீஸ்வாமிகள், 28 . 12. 1943; சுபானு வருடம், மார்கழி மாதம் 12- ம் நாள், திங்கள் இரவு 2.55 மணி (A.M.)அளவில், தன் திருமேனியை உதறினார். அவரின் திருமேனி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சிவலிங்கம் ஸ்தாபிக்கப்பட்டது.

இன்றைக்கும் குற்றாலம் ஸ்ரீதத்தாத்திரேய மந்திராலயத்தில் நிரம்பியிருக்கும்  ஸ்ரீஸ்வாமிகளின் திருவருள் சாந்நித்தியம்,  அடியார்கள் அனைவருக்கும் அருள்புரிந்து கொண்டிருக்கிறது.

-திருவருள் பெருகும்...

சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன் - படங்கள்: எல்.ராஜேந்திரன்