
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்படங்கள் கே.ராஜசேகரன்
வீசுகிற தென்றல் காற்றுக்கு பேதமில்லை. அதற்கு இன்னார், இனியார், நல்லார், தீயார் என்று வேறுபாடு பார்க்கத் தெரியாது. உயர்ந்தார், தாழ்ந்தார் என்று பாகுபாடு கிடையாது. எல்லோரையும் வருடி, தழுவிச் செல்லும். அதைப்போலத்தான் பரம்பொருள் எல்லோருக்கும் பொதுவானவர். இந்த நிலை எப்போது நமக்குப் புரிபடும்?

நம்மிடம் நிறைய ஆசைகள் இருக்கின்றன. அந்த ஆசைகளால் நம் ஐம்பொறிகளும் ஆபத்தின் வாசல்களைப்போல எதற்காகவோ திறந்தபடி காத்துக்கொண்டிருக்கின்றன. எப்படி? சற்று விரிவாகவே பார்ப்போம்.
ஆற்று நீரில் ஒரு மீன் வேகமாக நீந்தி வந்தது. காட்டாற்று வெள்ளத்தை எதிர்த்து நீந்துவதற்கு அந்தச் சிறிய மீனுக்கு எப்படி சக்தி கிடைத்தது? நமக்குப் பிரமிப்பாகத்தான் இருக்கும். ஆனால், காட்டாற்று வெள்ளத்தில் மீன் நீந்தி வந்தபோது, கரையோரத்தில் ஒருவன் தூண்டில் போட்டுக் காத்திருந்தான். தூண்டிலில் மாட்டியிருந்த புழுவை மீன் பார்த்தது. உடனே அதன் பாதை திசை மாறியது. தூண்டிலிலிருந்த புழுவை நோக்கிச் சென்றது. சிக்கிக்கொண்டது. மீனுக்கு ஏற்பட்ட நாக்கின் இச்சை, அதன் வாழ்க்கையை முடித்துவிட்டது.
வைரம் பாய்ந்த மரங்களைக்கூடத் துளைத்துவிடும் வல்லமை கொண்டது அந்த வண்டு. ஆனால், அது மலரின் மென்மைக்கு அடிமைப்பட்டது. மலரின் மணத்துக்கு, வண்ணத்துக்கு மயங்கும் அடிமை அது. ஒருநாள் மலர்களின் இதழ்களின் மேல் அமர்ந்தது. அது மாலை நேரம். மலரின் இதழ்கள் மூடின. வைரம் பாய்ந்த மரமாகிய சிறையைத் துளைத்து வெளியே வருகிற வண்டு, மலர்களின் மெல்லிய இதழ்ச்சிறைக்குள் சிக்கிக்கொண்டது. அதன் வாழ்க்கை முடிந்துவிட்டது. வண்டின் நாசியின் இச்சை, அதன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

அசுணமா என்று ஓர் அபூர்வப் பறவை இருக்கிறது. அது, இசைக்கு மயங்கக்கூடியது. அதைப் பிடிக்க ஒரு தந்திரம் செய்வார்கள். புல்லாங்குழலை எடுத்து இசைப்பார்கள். அசுணமா அந்த மெல்லிய இசைக்கு மயங்கி, எங்கிருந்து அந்த இசை வருகிறதோ, அதைக் கேட்டபடி அந்த திசை நோக்கிப் பறக்கும். புல்லாங்குழல் வாசிப்பவரின் பாதத்துக்குக் கீழ் ஒரு பள்ளம் இருக்கும். அந்தப் பள்ளத்தில் நெருப்பை மூட்டிவைத்திருப்பார்கள். பறந்து வரும் அசுணமா வாசிப்பவரின் தலைக்கு மேல் வட்டமிடும். அந்த நேரத்தில், அதை நெருப்பில் தவறிவிழச் செய்ய ஒரு யுக்தியைக் கையாள்வார்கள். வேறொரு வலிமையான இசைக் கருவியில் பலத்த ஓசையை எழுப்புவார்கள். திடீரென்று பலத்த ஓசையைக் கேட்டதும், அசுணமா தடுமாறிவிடும். பள்ளத்தில் இருக்கிற நெருப்பில் விழுந்துவிடும். கருகிப் போகும். இசை கேட்கிற செவியின் இச்சையால் அதன் வாழ்க்கை முடிந்துபோகும்.
விட்டில்பூச்சி, விளக்கின் முகம் பார்க்க ஆசைப்பட்டு, விளக்கின் ஒளிக்குள்ளேயே சென்று தன்னைக் கருக்கிக்கொள்ளும். அதன் விழி இச்சை அதன் வாழ்க்கையை முடித்துவிடும். நாம் கோயில்களில் யானை வளர்க்கிறோம். அதைக் காட்டிலிருந்து எப்படிப் பிடித்து வருகிறார்கள்? காட்டில் ஆண் யானை வரும் திசையில், அதற்குத் தெரிகிற மாதிரி எதிரே பெண் யானையை நிறுத்துவார்கள். பெண் யானையைப் பார்த்த பரபரப்பில் ஆண் யானை வேகமாக ஓடி வரும். நடுவே ஒரு பள்ளம் இருக்கும். அது ஆண் யானைக்குத் தெரியாது. பள்ளத்தைப் பசுந்தழைகளால் மூடியிருப்பார்கள். ஓடி வந்த ஆண் யானை, அந்தப் பள்ளத்தில் விழுந்து தன்னை நிரந்தரக் கைதியாக்கிக்கொள்ளும். அதன் உடல் இச்சை அதை ஆயுள் கைதியாக்கிவிடும்.
மீனுக்கு நாக்கின் இச்சை; வண்டுக்கு நாசியின் இச்சை; அசுணமாவுக்கு செவியின் இச்சை; விட்டில்பூச்சிக்கு விழியின் இச்சை; யானைக்கு உடலின் இச்சை. இவற்றின் வாழ்க்கை முற்றுப் பெற இவையெல்லாம்தாம் காரணங்கள். இந்த உயிரினங்களின் பொறிகளில் ஒன்றில் ஏற்பட்ட தடுமாற்றத்தில் வாழ்க்கை, தடம் மாறிப்போனது. நமக்கோ ஐம்பொறிகளும் ஆபத்தை `வா, வா’ என்று வரவேற்கக் காத்திருக்கின்றன.
நம் கண்கள் பார்க்கக் கூடாததையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கின்றன. காதுகள் கேட்கக் கூடாததையெல்லாம் கேட்டுக்கொண்டி ருக்கின்றன. நாவோ, தேவையில்லாததையெல்லாம் ருசி பார்த்துக்கொண்டிருக்கிறது. இப்படி ஐம்பொறிகளும் ஆபத்தை அழைத்துக்கொண்டிருக்கிறபோது எப்படி நாம் பக்குவப்படுவோம்?

ஒரு மாங்காயைக் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால், அதன் உள்ளே இருக்கிறவரை அது காயாகத்தான் இருக்கும். அதை வெளியே வைக்கிறபோதுதான் காற்றிலிருக்கிற வெப்பத்தோடு, ஈரத்தோடு வினைபுரிந்து மாங்காய், கனியாக மாறும். காய், கனியாக மாறுதல் பக்குவப்படுதல். காய், காயாகவே இருத்தல் பதப்படுதல். நாம் இப்போது பதப்படுத்தப்பட்ட உணவைச் சாப்பிடுவதைப்போல, பதப்படுத்தப்பட்ட வாழ்க்கையையே வாழ்கிறோம். பக்குவப்பட்ட வாழ்க்கைக்குத் தயாராக மறுக்கிறோம்.
புல்லாங்குழலின் இனிய இசை நம் செவிகளை மயக்குகிறது; இதயத்தை ஈர்க்கிறது. புல்லாங்குழலின் உள்ளே நுழைகிற காற்று, வெளியேறுகிறபோது ஓர் இனிமையை, இசையை ஏற்படுத்துகிறது. ஆனால், காற்றை உள்ளுக்குள் சிறைவைக்கிற பந்தோ நம் கால்களில் உதைபட்டுக் கிடக்கிறது. எவையெல்லாம், `எனக்கு எனக்கு...’ எனத் தக்கவைத்துக் கொள்ளப்படுகின்றனவோ, அவை பிறரால் நிராகரிக்கப்படுகின்றன. நம் வாழ்க்கை அறம் எப்படி அமைய வேண்டும்?
திருவள்ளுவர் சொல்வார்... `அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை.’ இல்வாழ்க்கையின் அடித்தளம் இல்லறம் என்று சொல்வார். அப்படி வாழ்கிற குடும்ப வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?
இளையான்குடி மாற நாயனார் என்று ஓர் அடியவர் இருந்தார். அவர் வீட்டுக்கு யார் வந்தாலும் உணவு கிடைக்கும். பசியோடு வரும் எவராயினும் புசிக்கவைத்துத்தான் அனுப்புவார். பசிப்பிணி நீக்கும் மருத்துவராக இருந்தார். வறுமையும் ஏழ்மையும் வந்த நிலையிலும் வந்தோர் பசி போக்குவதில் முனைப்பாக இருந்தார். அப்படிப்பட்ட நிலைப்பாடு இன்றைக்குச் சாத்தியமா?
ஒரு வீட்டு வாசலுக்குப் பிச்சைக்காரன் வந்தான். `அம்மா, தாயே... ஏதாச்சும் போடுங்கம்மா!’ என்றான். அந்த வீட்டுப் பெண் அவனுக்கு உணவைப் போட்டாள். அவன் உணவோடு வீட்டுக்கு எதிரேயிருக்கிற மரத்தடியில் போய் உட்கார்ந்தான். அந்த வீட்டுத் திண்ணையில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்த, அந்த வீட்டுப் பெண்ணின் கணவன் அவனைப் பார்த்தான், பரிதாபமாக.
பிச்சைக்காரன் சாப்பிட்டு முடித்ததும் அதே வீட்டுக்கு வந்தான். `அம்மா, தாயே...’ என்றான்.
அந்த வீட்டு அம்மா வெளியே வந்தாள். `இப்போதானே சாப்பாடு வாங்கிட்டுப் போனே... அதுக்குள்ள என்ன?’ என்று கோபத்தோடு கேட்டாள்.
`நான் சாப்பாடு வாங்க வரலைம்மா. இதெல்லாம் ஒரு சாப்பாடா... இதை மனுஷன் சாப்பிட முடியுமான்னு சொல்லிட்டுப் போக வந்தேன்.’
அந்தப் பெண்ணுக்குக் கோபம் கொப்புளித்தது. தன் கணவனைக் காண்பித்துச் சொன்னாள். `என் புருஷன் நான் சமைச்சுப் போடுற சாப்பாட்டை முப்பது வருஷமா எதுவும் பேசாம சாப்பிடுறார். நீ என் சாப்பாட்டைச் சாப்பிட்டுட்டு என்னையே குறை சொல்றியா?’

`அவர்தாம்மா, `நான்தான் சொல்ல முடியலை. நீயாவது சொல்லிட்டுப் போ’ன்னு சொல்லி, பத்து ரூபா பணம்வேற கொடுத்தார்’ என்று.
குடும்ப வாழ்க்கை இன்பத்திலும் துன்பத்திலும் இணைபிரியாத வாழ்க்கையாக அமைய வேண்டும். இளையான்குடி மாற நாயனாரைப் போன்ற உபசரிப்பு இன்றைய இல்லங்களில் நடைபெற வேண்டும். இதயங்கள் விரிந்தால், இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கும்.
முன்பெல்லாம் `விருந்தினர் இல்லங்கள்’ என்று தனியே இல்லை. சிற்றுண்டிச் சாலைகள் இவ்வளவு அதிகமாக இல்லை. நட்சத்திரத் தகுதி பெற்ற இத்தனை விடுதிகள் இல்லை. என்ன காரணம்? அப்போதெல்லாம் உறவுகளாக, விருந்தினர்களாக வீட்டுக்கு வந்தார்கள். இப்போது செல்வச் செழிப்பு வளர்ந்தது மட்டும் இந்த விடுதிகளின் வளர்ச்சிக்குக் காரணமல்ல. நம்மிடமிருந்து விருந்தோம்பல் பண்பு விடைபெற்றுவிட்டதைத்தான் இவை காட்டுகின்றன. அதனால்தான் `வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சின் மிசைவான் புலம்’ என்றார் திருவள்ளுவர்.
`விதைப்பதற்கு விதைநெல் இல்லையென்றாலும் நிலம் விளையும்’ என்று சொன்னார். `இது அறிவுக்கு ஏற்புடையது இல்லையே... எப்படி விதைக்காமல் விளைச்சல் கிடைக்கும்?’ என்று சிலர் கேட்டார்கள். `மந்திரத்தில் எப்படி மாங்காய் காய்க்கும்?’ என்று கேட்டார்கள்.
திருவள்ளுவர் சொல்கிறார்... `பிறருக்கு உபசரித்துவிட்டு, எல்லாவற்றையும் பிறருக்குத் தந்துவிட்டு வாழ்கிறவனின் நிலம் விளையும். அந்த நிலம் ஊர் மக்களின் பொது நிலம் ஆகிவிடுகிறது. அவனால் விதைக்க இயலாது போனால், அவனுக்காக ஊரார் விதைப்பார்கள்; உரமிடுவார்கள்; நீர் பாய்ச்சுவார்கள்; களை பறிப்பார்கள்; நிறைவாக விளைச்சலை வீடு கொண்டு வந்து சேர்ப்பார்கள். ஆக, விருந்தோம்புகிற பண்புதான் அவனைக் காப்பாற்றும்.’
இப்படிப் பிறருக்கு உபசரித்து வாழ்கிற இல்லறத்தின் பயன் என்ன? அதற்கும் திருவள்ளுவரே பதில் சொல்கிறார்...
`பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.’
`அறிவுடைய மக்களைப் பெறுவதுதான் இல்லற வாழ்வின் பயன்’ என்று சொல்கிறார். `அறிவறிந்த மக்கட்பேறு’ என்பதற்கு என்ன பொருள்? அடுத்த வாரம் விரிவாகப் பார்ப்போம்!
(புரிவோம்…)

நம் முன்னோர்கள் `காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்றார்கள். அதற்கு நாம் என்ன விளக்கம் தந்தோம்? `வாய்ப்பு கிடைக்கிறபோதே வாரிச் சுருட்டிக்கொள்!’, `பதவியில் இருக்கும்போதே பணம் பண்ணிக்கொள்.’ இவையா அதற்குரிய விளக்கம்? இல்லை. `உடலில் உயிர்க்காற்று உள்ளபோதே அறத்தால் ஆன செயல்களைச் செய்து, புகழைத் தூற்றிக்கொள்’ என்பதுதான் அதற்குரிய விளக்கம். அந்த விளக்கத்தோடு நம் வாழ்க்கை நடைபோடுகிறதா என்பதுதான் கேள்வி.
ஓவியம்: ரமணன்