பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

அன்பே தவம் - 6

அன்பே தவம் - 6
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பே தவம் - 6

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்படங்கள் கே.ராஜசேகரன்

`அறிவறிந்த மக்கட்பேறு’ என்பது பற்றி, கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தோம். அதற்கு என்ன பொருள்?

அப்பூதி அடிகள் என்று ஓர் அடியவர். அவர் திருநாவுக்கரசர் மீது பக்திகொண்டிருந்தார். அவரைத் தன் ஆதர்சமாக, ஆன்ம நாயகராகக் கொண்டிருந்தார். அதுமட்டுமல்ல, தன் எல்லாக் குழந்தைகளுக்குமே `திருநாவுக்கரசு’ என்று பெயர்வைத்திருந்தார். அவர் சேவையாகச் செய்துவந்த தண்ணீர்ப் பந்தல், அன்னதானச் சாலை எல்லாவற்றுக்கும் திருநாவுக்கரசர் பெயர். 

அன்பே தவம் - 6

இப்படி யாரைக் காலமெல்லாம் நேசித்தாரோ அந்தத் திருநாவுக்கரசரே அப்பூதி அடிகளின் வீட்டைத் தேடி வந்தார். வந்தவருக்கு உணவு படைக்கவேண்டிய சூழல். தன் மகன் மூத்த திருநாவுக்கரசை ``வாழையிலை பறித்து வா!’’ என்று ஆணையிட்டார் அப்பூதி அடிகள். அந்த மூத்த குழந்தை, `நல்லதாய் தந்தை ஏவ  நான் இது செயப்பெற் றேன்’ என்று நினைத்துக்கொண்டு ஓடியது. அதாவது, `நல்ல அப்பாவும் அம்மாவும் ஆணையிட, இந்தப் பணியைச் செய்யும் பேறு எனக்குக் கிடைத்தது’ என்று கருதி வாழையிலையைப் பறிக்க அந்தக் குழந்தை ஓடியது. போன இடத்தில் நடந்தது விபரீதம். அந்தக் குழந்தையை ஒரு விஷப்பாம்பு தீண்டிவிட்டது. உடலில் விஷமேறி, உயிருக்குப் போராடிய நிலையில்கூட அந்தக் குழந்தை தளரவில்லை. தான் எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும், வீட்டுக்கு வந்த பெரியவர் உணவருந்துவதில் தாமதம் ஏற்படக் கூடாது என்று வாழையிலையை வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, பிறகு மயங்கி விழுந்தது. இதுதான் `அறிவறிந்த மக்கட்பேறு.’

அன்பே தவம் - 6இதைத்தான் சேக்கிழார், `பண்டு பழுத்த முதுமை முழுத் தவம் இந்தச் சிறிய உடலில் புகுந்ததோ...’ என்று சொல்வார். ஒரு பெரிய, முழுமையான தவம்தான், அந்தச் சின்னஞ்சிறிய உடலுக்குள் புகுந்திருக்கிறது. ஆக, தவ வாழ்வுக்கு உருவம், வயது, வாழும் ஆண்டுகள் காரணமல்ல; தவத்தின் முதிர்வுதான் காரணம்.

அது, அமெரிக்காவில் ஒரு சிறு நகரம். அங்கே வசிக்கும் ஒரு குழந்தை, தன் அப்பாவிடம் கேட்டது. ``அப்பா உங்க ஒரு நாள் சம்பளம் எவ்வளவு?’’

அப்பாவுக்கு அலுவலகம் செல்லவேண்டிய அவசரம். குழந்தையின் கேள்வியை அலட்சியப்படுத்திவிட்டுப் போனார். மாலை வீடு திரும்பினார். அந்தக் குழந்தை அதே கேள்வியைக் கேட்டது... ``அப்பா, உங்க ஒரு நாள் சம்பளம் எவ்வளவு?’’ அப்போதும் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை.

இரவு உணவு மேஜையில் குழந்தை திரும்பக் கேட்டது... ``அப்பா, உங்க ஒரு நாள் சம்பளம் எவ்வளவு?’’
 
அப்பாவுக்குக் கோபம் வந்தது. ``ஏன் என் சம்பளத்தைக் கேட்கிறே... உன் அம்மா கேட்கச் சொன்னாளா... அவளுக்கு என் சம்பளத்து மேல சந்தேகமா?’’ என்று சத்தம் போட்டார். அடி ஒன்று வைத்தார். குழந்தை அழ ஆரம்பித்தது. அப்பா தன் அறைக்குப் போனார். அந்த இரவில் அவருக்கு உறக்கம் வரவில்லை. எழுந்து, குழந்தையின் அறைக்கு வந்து பார்த்தார். அப்போதும் குழந்தை உறங்காமல், அழுதுகொண்டே இருந்தது. அப்பாவைப் பார்த்ததும் அதே கேள்வியைக் கேட்டது... ``அப்பா, உங்க ஒரு நாள் சம்பளம் எவ்வளவு?’’

``கண்ணு... என் ஒரு நாள் சம்பளம் 40 டாலரம்மா’’ என்று குழந்தையின் கன்னத்தைத் தட்டிக்கொடுத்தபடி சொன்னார் அப்பா.

``ஐந்து டாலர் குறையுதுப்பா’’ என்றது குழந்தை. 

அன்பே தவம் - 6

``சத்தியமா என் ஒரு நாள் சம்பளம் 40 டாலர்தாம்மா.’’ குழந்தையின் தலையில் கைவைத்தார் அப்பா.

``இல்லப்பா. நீங்க உங்க சம்பளத்தைக் குறைச்சுச் சொல்றீங்கன்னு நான் சொல்லலை. என்கிட்ட நான் சேர்த்துவெச்ச பணம் 35 டாலர் இருக்கு. நீங்க ஒரு நாள் முழுக்க என்னோட அப்பாவா என்கூட இருக்கணும்னா, நான் உங்களுக்குத் தரவேண்டிய சம்பளப் பணம் 40 டாலர் இல்லியா... அதுல அஞ்சு டாலர் குறையுதுன்னு சொன்னேன்.’’ அவ்வளவுதான்... குழந்தையைக் கட்டியணைத்து, கதறியழுதார் அப்பா.

ஒருபுறம், பெற்றோர்கள் இல்லாமல் குழந்தைகள். இன்னொருபுறம், பெற்றவர்களைவைத்துப் பராமரிக்காமல் கைவிடும் குழந்தைகள். இப்படி இருதரப்பட்ட தலைமுறைகளுக்கு மத்தியில் நாம் தடுமாறிக்கொண்டிருக்கிறோம்.

ஒரு பள்ளிக்கூடத்தின் காலை பிரார்த்தனை நேரம். மாணவர்கள் வரிசையாக வகுப்பறைக்குப் போய்க்கொண்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்துக்குள் ஓர் ஒற்றைக்கண் உருவம் நுழைந்தது. ஒரு மாணவன், அந்த உருவத்தைப் பார்த்தான். ``ஐயோ... நம்ம பள்ளிக்கூடத்துக்குள்ள ஒத்தைக்கண் ராட்சசி நுழைஞ்சுட்டா...’’ என்று சத்தம் போட்டான். மற்ற மாணவர்களும் அந்த உருவத்தைப் பார்த்துவிட்டு, அலறியடித்து ஓடினார்கள்.

ஒரு மாணவன், அந்த உருவத்தை நின்று, நிதானமாக உற்றுப் பார்த்தான். பிறகு உரக்கக் கத்தினான்... ``டேய்... இது நம்ம மணியோட அம்மா.’’

அன்பே தவம் - 6இப்போது மாணவர்கள் அனைவரும் திரும்பி, அந்த உருவத்தைப் பார்த்தார்கள். அதே பள்ளியில் படிக்கிற மணி என்ற மாணவனின் அம்மாதான் அந்த ஒற்றைக்கண் உருவம். காய்கறிகளைக் கூடையில்வைத்து, தலையில் சுமந்து விற்கிற ஏழைத் தாய். பகலில், இரவில், வெயிலில், மழையில் காய்கறிகளை விற்று, தன் மகனைப் படிக்கவைக்கிற ஏழைத் தாய்.

மணி தன் அம்மாவைப் பார்த்து கோபம் கொப்புளிக்கக் கத்தினான்... ``நீ எதுக்குப் பள்ளிக்கூடத்துக்கு வந்தே? உன்னை அம்மான்னு சொல்றதுக்கே எனக்கு வெக்கமா இருக்கு. செத்துப் போ.’’

அம்மா அழுதுகொண்டே போய்விட்டாள். அந்த ஒற்றைக்கண் மனுஷி இரவு முழுக்க அழுதுகொண்டேயிருந்தாள். மணிக்கு ரொம்பத் திருப்தி. `இனிமே அம்மா பள்ளிக்கூடம் பக்கம் வர மாட்டா’ என்று மனதுக்குள் ஒரு நிம்மதி.

காலச்சக்கரம் உருண்டோடியது. மணி நன்கு படித்தான்; வளர்ந்தான்; உயர்ந்த பதவிவகித்தான். வெளிநாட்டில் வேலைக்குப் போனான். அங்கேயே அவனுக்குக் குடும்பம் அமைந்துவிட்டது. சொகுசான வாழ்க்கை, வேலை, குடும்பம்... அம்மாவை மறந்தே போனான்.  

அன்பே தவம் - 6

ஒருநாள், அவன் படித்த பள்ளியிலிருந்து, `பழைய மாணவர்’ என்ற முறையில் அவனைப் பாராட்ட அழைப்பு வந்திருந்தது. மணி ஊருக்கு வந்தான். பள்ளியில் பாராட்டையும் பதக்கத்தையும் மாலையையும் பெற்றான். பாராட்டுப் பெற்ற மகிழ்ச்சியில் பள்ளியை விட்டு வெளியே வந்தான். அவனிருந்த பழைய வீட்டைத் தேடிப் போனான். பள்ளியிலிருந்து சற்று தூரத்தில் அந்தப் பழைய ஓலைக் குடிசை இருந்தது. குப்பைமேட்டிலிருந்தது அந்த ஓலைக் குடிசை. அவன் குனிந்து உள்ளே போனான்.

நல்ல கும்மிருட்டு. ஒரு விளக்கு அணைகிறநிலையில் காற்றில் ஆடி, ஆடி எரிந்துகொண்டிருந்தது. அங்கே ஒரு மூலையில், கிழிந்த கோரைப்பாயில் ஒரு முதிய உருவம் மேல்மூச்சு, கீழ்மூச்சுவாங்கப் படுத்துக்கிடந்தது. அவன் அந்த மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் உற்றுப் பார்த்தான். மூச்சுவாங்கப் படுத்திருந்தது மணியின் அம்மாதான். அவள் கையில் ஒரு காகிதம். மகனுக்காகவே எழுதிய கடிதம். மணி அதைப் பிடுங்கினான். மெல்லிய விளக்கொளியில் அதைப் படித்தான்.

`மகனே மணி! என் கண்மணியே... நீ நன்றாக இருக்கிறாயா? இப்படிக் கேட்கக்கூட எனக்கு உரிமையில்லை. நீ நம் ஊர்ப் பள்ளி விழாவுக்கு வருகிறாய் என்று கேள்விப்பட்டேன். ஒருபோதும் அங்கு வந்து உன்னை அவமானப்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். மணி... நீ எப்போதும் என்னை வெறுக்கிறாய். ஆனால் இந்த அம்மா, எப்போதும் உன்னோடுதான் வாழ்கிறாள். உனக்குக் கடைசியாக ஒரு செய்தி. நீ பிறந்து சில நாள்கள்தான் இருக்கும். ஒரு விபத்தில் உன் ஒரு கண் போய்விட்டது. அப்போது இந்த அம்மா துடித்த துடிப்பு கொஞ்சமல்ல. மருத்துவர்களின் கால்களில் விழுந்து மன்றாடினேன். `என் மகன் மணி, ஒரு கண்ணோடு இந்த உலகில் வாழ முடியாது; வாழக் கூடாது. அவனுக்கு இரண்டு கண்களும் வேண்டும். அதற்காக என் கண்களில் ஒரு கண்ணை எடுத்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் என் உயிரைக்கூட எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று கெஞ்சினேன். மகனே மணி... என் கண்மணி ஒன்றை எடுத்துத்தான் மருத்துவர்கள் உனக்குப் பொருத்தியிருக்கிறார்கள். அந்தக் கண்மணி வழியே இந்த அம்மா எப்போதும் உன்னோடுதான் வாழ்கிறாள். உன்னிடமிருந்து விடைபெறும் அம்மா...’ என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

இப்படி எத்தனை மணிகளை சமூகம் பெற்றிருக்கிறது! அவர்கள் எப்போது கண்மணிகளாக மாறுவார்கள்... எப்போது கண்ணின் மணிகளாக அப்பாவை, அம்மாவைப் பேணுவார்கள்?

(புரிவோம்...)

அன்பே தவம் - 6

சிந்தனையாளர் சுகோம்லின்ஸ்கி (Sukhomlynsky), `குழந்தைகளுக்கு அறிவை, மூளையைக் கொடுங்கள்’ என்று சொல்லாமல், `குழந்தைகளுக்கு இதயத்தைக் கொடுங்கள்’ என்று சொன்னார். கும்பகோணம் பள்ளி தீப்பிடித்தது யாராலும் மறக்க முடியாத துயரச் சம்பவம். நண்பகல் நேரத்தில் அங்கே தீப்பற்றிக்கொண்டது. எரிந்த பள்ளிக்கூரையின் கீழே ஓர் இளம் பிஞ்சு மழலை மலர்... அந்தக் குழந்தையின் பெயர் தாரணிகா. தங்க மழலை. நெருப்பு வளையத்துக்குள் சிக்கிக்கொண்டிருந்த அந்தக் குழந்தையை அவள் சித்தப்பா உள்ளே புகுந்து அள்ளிக்கொண்டு வந்தார். உடைந்து, நொறுங்கி, சிதைந்துபோகிற நிலையிலிருந்த அந்தக் குழந்தை சொன்னது... `சித்தப்பா, என்னைப் பத்திக் கவலைப்படாதீங்க. என் தோழிங்க அங்கே நெருப்புக்குள்ள இருக்காங்க. முதல்ல அவங்களைக் காப்பாத்துங்க சித்தப்பா...’ இப்படிச் சொல்லிவிட்டுத் தன் சித்தப்பாவின் மடியிலேயே உயிரைவிட்டாள் தாரணிகா. அன்றைக்கு நெருப்புக்குப் பயந்து பலரும் ஓடிப்போனார்கள். ஆனால் மாணவர்கள், தங்கள் உயிரையே பரிசாகத் தந்து, மனிதநேயத்தின் உச்சத்துக்குப் போனார்கள்.

ஓவியம்: கார்த்திகேயன் மேடி