செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 55 பேர், சதுரகிரி மகாலிங்கம் மலையேறினர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அமைந்துள்ள சதுரகிரி மகாலிங்க மலை, ஆன்மிகத் தலமாக உள்ளது. மலை உச்சியில் சந்தனமகாலிங்கம், சுந்தரமகாலிங்கம் கோயில்கள் அமைந்துள்ளன. மகாலிங்கத்தை தரிசிப்பதற்காக ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாள்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம், லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்கு வருகைதருவர். தென்மாவட்டங்களில் மிகவும் பிரசித்திபெற்றது இந்த மலை. இயற்கையான காற்றை சுவாசித்தபடியே சுமார் 2 மணி நேரம் நடந்துசென்றால், மலைமேல் உள்ள கோயிலை அடையலாம்.

இந்நிலையில், சதுரகிரி மகாலிங்கம் மலைகுறித்த தகவல் அறிந்த செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் சுமார் 55 பேர் நேற்று மலையேறுவதற்காக இங்கே வந்தனர். நாளை அமாவாசை தினத்தை முன்னிட்டு, பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். எனவே, செக் குடியரசு நாட்டினர் அனைவரும் மலையடிவாரத்தில் தீவிர சோதனை செய்யப்பட்டனர். பின்னர், காவல்துறையினரின் பாதுகாப்புடன் அவர்கள் மலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.