மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி பதில்: தெய்வப் படங்கள் தெற்கு நோக்கி இருக்கலாமா?

கேள்வி பதில்: தெய்வப் படங்கள் தெற்கு நோக்கி இருக்கலாமா?
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில்: தெய்வப் படங்கள் தெற்கு நோக்கி இருக்கலாமா?

கேள்வி பதில்: தெய்வப் படங்கள் தெற்கு நோக்கி இருக்கலாமா?

 ? பூஜையறையில் சுவாமிப் படங்களை கிழக்கு அல்லது மேற்கு திசையைப் பார்க்கும்படிதான் வைக்கவேண்டும் என்கிறார்கள். ஆனால், எங்கள் வீட்டில் பூஜையறை தெற்குப் பார்த்து உள்ளது. நான் என்ன செய்வது?

- க.கணபதி சுப்பிரமணியம், மயிலாடுதுறை 

கேள்வி பதில்: தெய்வப் படங்கள் தெற்கு நோக்கி இருக்கலாமா?

பொதுவாகவே மனிதர்களுக்கு, அவரவர் காரியம் என்றால் அவை அனைத்தும் ஒழுங்காக இருக்கவேண்டும்; கடவுள் காரியம் எனில் அவை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற மனநிலை ஏற்பட்டுவிட்டதாக நினைக்கிறேன்.

தெய்வங்களைப் பல திருவடிவங் களில் அமைத்து, ஒவ்வொரு தெய்வ வடிவமும் இன்னின்ன தன்மை உடையவை என்று நம் ஆகமங்கள் தெளிவுபடுத்துகின்றன. பரம்பொருள் ஒன்றே பல உருவங்களை எடுத்து, பக்தர்களுக்கு அருள்வதாகவும் அவை கூறுகின்றன.

உங்கள் வீட்டில் பூஜையறை தெற்குப் பார்த்து இருந்தால், தெற்கு நோக்கி வைக்கவேண்டிய உக்கிர தெய்வப் படங்களை வைத்து வழிபடலாம். அத்துடன், அந்த பூஜையறையிலேயே கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி மற்ற தெய்வங்களின் படங்களையும் வைக்கலாம். திருவிளக்கையும் அந்தத் திசைகளை நோக்கியவண்ணம் அமைத்து வழிபடலாம். 

கேள்வி பதில்: தெய்வப் படங்கள் தெற்கு நோக்கி இருக்கலாமா?அப்படியான வசதியில்லை எனில், சிறிய அளவிலான பூஜையறையை மரத்தில் செய்து கிழக்கு நோக்கி இருக்கும்படி வைத்து, அதில் சிறிய அளவு தெய்வப் படங்களை வைத்து வழிபடலாம்.

வைரம் சிறியதாக இருந்தாலும், அதன் மதிப்பு அதிகமாக இருப்பதுபோல், சரியான திசையில் சிறிய தெய்வப் படங்களை வைத்து வழிபட்டாலும், முழுமையான பலன்களை நாம் பெறலாம். ஒவ்வொரு திசைக்கும் ஓர் ஆற்றல் உண்டு. எனவே தெய்வ சக்தி ஒவ்வொன்றும் அதற்குரிய திசைகளிலிருந்து அருள்பாலிக்கும் போது மிகுந்த பயன் கிடைக்கும்.

தெய்வ வழிபாடு என்பது நம் நன்மைக்காகத் தானே தவிர, தெய்வத்துக்கு ஆவது ஒன்றுமில்லை. நாம் செய்யும் யாகங்களினால் இந்திராதி தேவர்கள் மகிழ்ச்சியடைந்து, நமக்கு மழை போன்ற இயற்கை வளங்களை அளிப்பதாகச் சொல்லப்பட்டிருப்பது கூட, நம்முடைய நன்மைக்காகத்தானே தவிர, அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. நாம் எங்கிருந்தாலும் நம்மால் முடிந்த அளவுக்கு நம் முன்னோர்கள் நம்பிக்கையுடனும் பக்தியுடனும் கடைப்பிடித்து வந்த சடங்கு-சம்பிரதாயங்களை விடாமல் கடைப்பிடித்து வருவதே நமக்கு நன்மையை அளிக்கும்.

? செவ்வாய் தோஷத்தின் பாதிப்பு ஒருவருக்கு எவ்வளவு காலம் நீடிக்கும். அதற்கு என்ன பரிகாரம் செய்வது?

-எஸ்.ராமகிருஷ்ணன், சென்னை  - 28


ஒருவர் பிறக்கும்போது இருக்கக்கூடிய கிரகங் களின் அமைப்பைப் பொறுத்தே அவருக்கு செவ்வாய்தோஷம் இருக்கிறதா இல்லையா என்பதைக் கூறமுடியும். மழை பெய்யும்போது நாம் வெளியில் செல்ல நேரிட்டால், நம்மிடம் குடை இருக்கும்பட்சத்தில் மழையால் நமக்குப் பாதிப்பு இருக்காது. வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்தாலும் பாதிப்பில்லை.

கேள்வி பதில்: தெய்வப் படங்கள் தெற்கு நோக்கி இருக்கலாமா?

அதேபோல், செவ்வாய் குறிப்பிட்ட சில இடங்களில் இருந்தாலோ அல்லது சில கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை பெற்றிருந்தாலோ செவ்வாய் தோஷம் இல்லையென்று ஜோதிட நூல்கள் வலியுறுத்துகின்றன.

செவ்வாய் தோஷம் என்பது கால அளவுடன் தொடர்புடையதல்ல. ஒருவருக் குச் செவ்வாய் தோஷம் இருந்தால், செவ்வாய்க் கிரகம் எனப்படும் அங்காரகனை வழிபடவேண்டும். அப்போது, தோஷத்தின் தாக்கம் பெருமளவு குறைந்து நற்பலன்கள் கிடைக்கும்  என்பார்கள். இதுவும்கூட பொதுவான கருத்துதான். ஒருவரின் ஜாதகத்தை நன்றாக ஆராய்ந்து, மற்ற கிரகங்களின் சுப - அசுப பார்வைகளைக் கணித்து, அதற்கேற்ப உரிய பரிகாரங்களைக் கூற வேண்டும்.

? சனிக்கிழமைகளில் முடிவெட்டக்கூடாது என்று சொல்வது ஏன்?

- எம்.செந்தில்நாதன், வேலூர் - 2


நம் ரிஷிகள் நாள்கள், நட்சத்திரங்கள், திதிகள் என்று நிர்ணயம் செய்து கூறியிருப்ப துடன்,  இவற்றில் சில காரியங்களைச் செய்யலாம் என்றும், சிலவற்றைச் செய்யக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். அவரவர் பிறந்த கிழமைகளில் முடிவெட்டக்கூடாது என்பார்கள். ஆனாலும், இவை போன்ற நியதிகளுக்கு `இதுதான் நேரடியான அர்த்தம்’ என்று நம்மால் கூறுவது கடினம். சிலவற்றை நமது அனுபவத்தால் உணர முடியும். பல விஷயங்களை நாம் தொடர்ந்து
கடைப்பிடிக்கும்போதுதான், நம் முன்னோர் இதுபோன்ற நியதிகளை வகுத்து வைத்திருப்பது ஏன் என்பதற்கான காரணங்களை அனுமானிக்க முடியும்.

ஆக, முன்னோர் வகுத்தவற்றை நம்பிக்கையுடன் கடைப்பிடித்தால் ஏதேனும் ஒரு நற்பலன் நிச்சயம் கிடைக்கும். ஆனால், `இந்தப் பலன் கிடைக்கும் என்பதற்காகவே இந்த விஷயத்தை இப்படிச் சொல்லிவைத்தார்கள்’ என்று ஒவ்வொன்றுக்கும் காரணம் கற்பிக்க முடியாது.

? புத்தாடைகளில் மஞ்சள் வைப்பது ஏன்? திங்கள்கிழமைகளில் புத்தாடைகளை உடுத்தக்கூடாது என்கிறார்களே, ஏன்?

- இரா.சங்கரலிங்கம், குடியாத்தம்


மஞ்சள் மங்கலத்தின் அடையாளம். நாம் உடுத்திக் கொள்ளும் புத்தாடையை மங்கலகரமானதாகச் செய்ய, சிறிது மஞ்சள் பூசுவது வழக்கம். ‘வஸ்’ என்றால் தங்குதல; ‘த்ரா’ என்றால் காப்பாற்றுதல் என்று பொருள்.  நம் உடலை மறைத்து, நம் மானத்தைக் காப்பாற்றுவதால், ஆடையை `வஸ்திரம்’ என்று கூறுகிறோம்.

ஆடைகள் எப்படி இருக்கவேண்டும், அவற்றை எவ்வாறு உடுத்திக்கொள்ள வேண்டும் என்று நம் முன்னோர்கள் சில வழிமுறைகளை ஏற்படுத்திச் சென்றுள்ளனர். அதேபோல், நாள்களுக்கும் ஒரு சக்தி உண்டு. அதன்படி, இன்னின்ன நாள்களில் இவற்றைச் செய்யலாம்; இவற்றைச் செய்யக் கூடாது என்றும் கூறியுள்ளார்கள். ஆனால், பிறந்த நாள், விசேஷ தினங்கள் என்று வரும்போது நாள், கிழமை பார்க்கத் தேவையில்லை.

? பெண்கள் கருத்தரித்திருக்கும் போது வேறு வீட்டுக்குக் குடி போகலாமா?

-மாலதி சுப்பிரமணியம், சென்னை - 18


பெண்கள் கருத்தரித்தது முதல் பிரசவம் ஆகும் வரையிலான காலம், அவர்களின் மறுபிறவி என்றே சொல்லப்படுகிறது. அந்த காலகட்டத்தில் வேறு வீட்டுக்குக் குடிபோகாமல் இருப்பதே நல்லது. கருத்தரித்திருக்கும் பெண், உடல் மற்றும் மனநிலையில் எப்போதும் வலிமையுள்ளவளாக இருக்கவேண்டும். அவளுக்குச் சிரமம் ஏற்படாமல்  இருக்க, இடமாற்றத்தைத் தவிர்க்கலாம்.

வேறு வழியில்லை... வீடு மாற்றத்தைத் தவிர்க்க இயலாது என்ற நிலையில், மிகுந்த கவனத்துடன் செயல்படலாம். மற்றபடி, பெண்கள் கருத்தரித்திருக்கும்போது வீடு மாற்றம் செய்வதைத் தவிர்ப்பது நலம்.

- பதில்கள் தொடரும்...

`காளிகாம்பாள் கோயில்’ சிவஸ்ரீ  சண்முக சிவாசார்யர்

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை `காளிகாம்பாள் கோயில்'  சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002