
மண்... மக்கள்... தெய்வங்கள்! - 17
வடக்கால் அம்மன்
(தொடர்ச்சி)
ஊருக்கு ஒதுக்குப்புறமாக - காவலர்கள் இல்லாமல் தனித்துக் கிடந்த அம்மன் கோயில் தென்னந்தோப்பை இலக்கு வைத்துவிட்ட சத்தியன், அந்தத் தோப்புக்குள் பதுங்கிப் பதுங்கி ஊடுருவினான்.

அங்கே, நன்கு குலைதள்ளி நின்ற தென்னை மரத்தை அடையாளம் கண்டு விறுவிறுவென்று ஏறினான். உச்சியில் நின்றுகொண்டு, மேலிருந்த ஒரு மட்டையைப் பிடித்து நின்றுகொண்டு கீழிருக்கும் தேங்காய்களை உதைத்து, உதைத்துக் கீழே தள்ளினான்.
ஒரே ஒரு நொடி... விழ மறுத்த ஒரு தேங்காயை அழுத்தமாக மிதித்தான் சத்தியன். அதேநேரம், அவன் பிடித்திருந்த மட்டை பிய்த்துக்கொண்டு கையோடு வந்தது. பிடி நழுவ, ஓங்கி உயர்ந்து நின்ற மரத்திலிருந்து தடுமாறி கீழே விழுந்தான். அம்மன் கோயில் வாசல் ரத்தச் சகதியானது.

மறுநாள் காலை, சத்தியன் ரத்தம் தோய விழுந்து இறந்து கிடப்பதை ஊரார் கண்டார்கள். அருகில் பறித்துக் குவித்த தேங்காய்கள் கிடந்தன. அம்மன் கோயில் தென்னந்தோப்பில் நுழைந்த சத்தியனை அம்மனே தண்டித்துவிட்டதாகப் பேசிக்கொண்டார்கள்.
அந்த நிகழ்வுக்குப் பிறகு, நள்ளிரவுகளில் அந்தத் தென்னந் தோப்பிலிருந்து அலறல் ஒலியும் அழுகைச் சத்தமும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தன. போவோர் வருவோரெல்லாம் திடுக்கிட்டு மிரண்டார்கள். பிள்ளைகள் அச்சத்தில் உறைந்து நோய்வாய்ப்பட்டார்கள். சத்தியனைச் சாந்தப்படுத்த கோயில் வளாகத்திலேயே செங்கல்லால் பீடம் எழுப்பினார்கள் மக்கள். வாரந்தோறும் வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் சத்தியனுக்கு விளக்கேற்றி வணங்கினார்கள். அதன்பின் அவன் ஆங்காரம் அடங்கியது. அவன் இறையொளியில் கலந்தான்.
இப்போதும் அந்தக் கிராமத்தில் சத்தியன் பற்றிக் கேட்டால், கதை கதையாகச் சொல்கிறார்கள். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு வடகாலம்மன், திருடர்களைக் கண்டுபிடித்துத் தரும் தெய்வமாகிவிட்டாள். அவளுக்கு உற்ற காவலனாக இருந்து இப்போது சத்தியனும் உதவி செய்கிறான்!

வடக்காலம்மனைப் போலவே, சென்னை, வண்டலூர் அருகில் ரத்தினமங்கலம் என்ற கிராமத்தில் குடியிருக்கும் அரைக்காசுத் தாயும் சக்திமிக்கவள். பொருள்கள் தொலைந்துபோனாலோ, மனிதர்கள் காணாமல் போனாலோ அரைக்காசுத் தாயைக் கண்டு தங்கள் மனக்குமுறலைக் கொட்டுகிறார்கள். வெல்லம் போட்டு பொங்கல் வைத்து, தாய்க்குப் படைத்து கண்ணீர் மல்க வேண்டுகிறார்கள். காற்றின் வழி அவர்களின் தலைகோதி நம்பிக்கையையும் ஆறுதலையும் அள்ளி வழங்கி அனுப்பி வைக்கிறாள் அந்தத் தாய்.
வடமலை நாச்சியம்மா
கொஞ்சம் நுட்பமாகப் பார்த்தால், கிராம தெய்வங்களில் ஆண் தெய்வங்களைவிடப் பெண் தெய்வங்கள் உக்கிரம் நிறைந்தவர்களாக இருப்பதை உணரமுடியும். ஆண்களைக் காட்டிலும் அதீத ஆயுதங்களையும் அவர்கள் தரித்திருப்பார்கள். இதில் ஒரு தொன்மம் அடங்கியிருக்கிறது.
நம் ஆதி சமூகமென்பது தாய்வழியிலானது. தாய்தான் குடும்பத்துக்குத் தலைவி. அவள்தான் பொருளாதார சக்தி. தன் குழுவின் பட்டினி போக்க உழைப்பது, உழைத்ததை சேகரித்துப் பங்கிடுவது, பணிகளைப் பகுத்துத் தருவது, எதிரிகள் தாக்க வந்தால் தன்னுயிர் கொடுத்து தம் மக்களைக் காப்பது, விலங்குகளை வேட்டையாடுவது எனப் பெண்களே நம் குடும்பங்களை தலைமை வகித்து வழிநடத்தியிருக்கிறார்கள்.
இனக்குழு வாழ்க்கை மருவி உடைமை சமூகம் உருவானபிறகு, பெண்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். தந்தை வழிச் சமூகம் உயிர்ப்பிக்கப்பட்டது. பெண்களின் கடமைகளை ஆண்கள் அபகரித்துக்கொண்டார்கள். ஆனால்,
இன்னும் நம் வழிபாட்டு மரபில் பெண்களே வீரத்தின் அடையாளங்களாகக் கொண்டாடப் படுகிறார்கள். அரச நிர்வாகக் காலத்தில் பெண் தெய்வங்களையே போர் தெய்வங்களாக வைத்திருந் தார்கள். சோழர்கள் நிசும்பசூதனியை தங்கள் போர் தெய்வமாகக் கருதினர். அப்படியொரு போர் தெய்வம், வடமலை நாச்சியம்மா.

இப்போது, தேனி மாவட்டம் போடி நாயக்கனூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் வடக்கே ஒரு குன்றில் அமைதியாக அமர்ந்திருக்கிறாள் வடமலை நாச்சியம்மா. இருபுறமும் மா, சப்போட்டா, நெல்லி மரங்கள் சூழ, சமவெளியில் இருந்து ஒற்றையடியாக மேலேறுகிறது வடமலைக்கான பாதை.
பள்ளமும் மேடுமாக, வழுக்குப்பாறைகளையும், முற்களடர்ந்த புதர்களையும் கடந்து மேலேறினால், நான்குபுறமும் மலைகள் நம்மைச் சூழ்ந்து கொள்கின்றன. பள்ளம், மேடாக ஏறி இறங்கும் அந்தப் பாதையில் நீரூற்றுகளும் சுனைகளும் மனதைக் குளிரவைக்கின்றன. நடுவில் ஒரு குன்று. ‘பல்லாங்குழி குன்று’ என்கிறார்கள். அங்கே ஒரு தூணும், அழகாகத் தோண்டப்பட்ட ஒரு பல்லாங்குழி பள்ளமும் இருக்கின்றன. வடமலை நாச்சியம்மா அவ்வப்போது அந்த இடத்தில் அமர்ந்து பல்லாங்குழி விளையாடுவாளாம். அருகே, உருது மொழியில் சில வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன. அதைத் தாண்டி புற்களடர்ந்த தடத்தில் நடந்தால், மலையின் முடிவில் இருக்கிறது ஒரு சிறு கோயில்.
முகப்பில், ஒரு மர நிழலில் லாட சந்நாசி, வனப்பேச்சி, பைரவர் என பரிவாரங்கள் அமர்ந்திருக்கிறார்கள். மேலே கோயில். அந்தப் பக்க சரிவில், அருவியாக, நதியாக தண்ணீர் ஓடியாடி விளையாடுகிறது. போர் தெய்வமான வடமலை நாச்சியம்மா, உக்கிரம் தணிந்து இந்த இடத்தில் அமைதியின் உருவாக அமர்ந்திருக்கிறாள்.
வடமலை நாச்சியம்மா, போடி சமஸ்தானத்து தேவதை. சமஸ்தான ஆட்சியாளர்களின் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்தவள். போடி சமஸ்தானம் சேர நாட்டின் ஓர் அங்கமாக இருந்த பகுதி.
ஆந்திராவின் `பூட்டி' என்ற பகுதியை ஆட்சி செய்த ராஜ கம்பளத்து நாயக்கர்கள், இஸ்லாமிய ஆட்சியாளர்களின் செயல்பாடுகளால் வெறுப்புற்று, வடவீரநாயக்கன்பட்டி என்ற பகுதியில் குடியேறினர். 1350-ல் ஜக்கு நாயக்கர் என்பவர் தங்கள் தெய்வங்களான ஜக்கம்மா, பெரியாண்டவர், வடமலை நாச்சியாரைச் சேர்த்து அழைத்துக்கொண்டு தற்போதைய போடி நாயக்கனூருக்கு வந்து பாரம்பர்யமான வட்டக்குடிசை கட்டி குடியிருந்தார்கள்.
அப்போது, இந்தப் பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்டு, குலசேகரப்பாண்டிய பெரிய பொன்னம்பலத் தம்புரான் என்ற மன்னரால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. அந்தத் தருணத்தில் இந்தப் பகுதியில் விளைந்த வேளாண்மை முழுவதையும் 8 அடி உயரமும், 10 அடி நீளமும் கொண்ட பெரிய காட்டுப்பன்றியொன்று அழித்துக் கொண்டிருந்தது. அரசப் படையினர் இரவு பகலாகக் கண்விழித்துப் போராடியும் அந்தப் பன்றியை அழிக்க முடியவில்லை.
‘அதைக் கொல்பவர்களுக்குத் தக்க சன்மானம் அளிக்கப்படும்’ என்று திருவிதாங்கூர் மன்னர் அறிவித்தார். ராஜகம்பளத்து நாயக்கர்கள் தங்கள் தெய்வங்களின் துணைகொண்டு அந்த ராட்சச காட்டுப்பன்றியை உயிருடனே பிடித்துக் கொண்டுபோய் மன்னரிடம் ஒப்படைத் தார்கள்.
அந்த மக்களின் வீரத்தைக் கண்டு வியந்துபோன மன்னர், இவர்களின் பூர்வீகம் பற்றி விசாரித்தார். ‘ராஜகம்பளத்து வகையறா’ என்பது தெரிந்ததும், 48 கிராமங்களை உள்ளடக்கி ஒரு சமஸ்தானத்தை உருவாக்கி சுயமாக ஆளச் செய்தார்.
இந்த சமஸ்தானத்தின் முதல் மன்னராக ‘சில போட நாயக்கர்’ பொறுப்புக்கு வந்தார். அவரின் பெயரிலேயே ‘போடி’ என்றானது இந்தப் பகுதி.
இந்த மரபில் உதித்தவர்தான் ராஜூ நாயக்கர். மிகுந்த தெய்வ பக்தி கொண்டவர். தெய்வங்களெல்லாம் இறங்கி வந்து இவரிடம் பேசுமாம். இவரைப் பற்றி ஒரு கதை உண்டு.
மிகவும் சிலிர்ப்பான திருக்கதை அது!
- மண் மணக்கும்...
வெ.நீலகண்டன், படங்கள்: வீ.சக்திஅருணகிரி