கற்பக விருட்சத்தின் கீழ், பத்ரபீடத்தின்மீது அமர்ந்த நிலையில், ஸ்ரீசொர்ண பைரவி அருகிலிருக்க தம்பதி சமேதராக அருள்பவர் ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்.

`மேலிரு திருக்கரங்களில் சங்க, பதும நிதிகளை ஏந்திக் கொண்டு, மற்ற கரங்களால் அபய- வரத முத்திரை காட்டியபடியும், நாக, பாச, சூலம் தாங்கியவாறும், மடியில் அமிர்த கலசம் திகழ அருளும் மூர்த்தி இவர்' என்கின்றன ஞானநூல்கள். இவரின் இந்த எழிலுருவை தியானித்தாலே, பெரும் பலன்கள் உண்டு என்பார்கள் பெரியோர்கள்.
ஸ்ரீசொர்ணாகர்ஷணை பைரவ மூர்த்தியை, தேய்பிறை அஷ்டமித் திருநாளில் வணங்கி வழிபடுவது விசேஷம். இதனால், கடன்களும் கஷ்டங் களும் நீங்கும். நவமியில் வழிபட்டால் பகைவர் தொல்லைகள் நீங்கும்.
அமாவாசை தினங்களில் வணங்கி வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும். ராகு காலம் மற்றும் பிரதோஷ வேளை களில் இந்தப் பைரவரை தரிசித்து வழிபட்டால், சொத்து சம்பந்தமான சங்கடங்கள் அனைத்தும் விலகும். குளிகை வேளைகளில் வழிபட்டால், நீங்கள் செய்யும் நல்லசெயல்கள் பன்மடங்காகப் பெருகி வாழ்வில் வளம் கூடும்.
வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலைவேளையில் சொர்ணாகர்ஷண பைரவரை பூஜித்து வழிபட்டால், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
அதேபோல், தொடர்ந்து, 6 அஷ்டமி நாள்களில் 108 காசுகள் வைத்து ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை வணங்கி வழிபட்டால், வீட்டில் செல்வகடாட்சம் பெருகி, நினைத்தது யாவும் நடக்கும். புதிதாகத் தொழில் தொடங்கும் அன்பர்கள் ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை வழிபட்டுவந்தால் நிச்சயமாக வெற்றிபெறலாம். எனவே, மேற்சொன்ன நாள்களில் அருகிலுள்ள கோயில்களில் அருளும் ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை தரிசித்து, வணங்கி வழிபட்டு வாருங்கள்; உங்கள் வாழ்வு சிறக்கும்.
- கலைவாணி மனோஜ்குமார், சென்னை
