மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மகா பெரியவா - 17

மகா பெரியவா - 17
பிரீமியம் ஸ்டோரி
News
மகா பெரியவா - 17

ஓவியங்கள்: கேஷவ்

வம்பர் உறங்கச் சென்றுவிட்டது. டிசம்பர் விழித்துக்கொண்டுவிட்டது. சென்னையில் இனி கச்சேரிகள் களைகட்டும். தடுக்கினால் கல்யாணி, காம்போதியின் கால்களில்தான் விழ நேரிடும்!

மகா பெரியவா - 17

மகா பெரியவா சங்கீதத்திலும் அபரிமிதமான புலமையும் ஞானமும் பெற்றவர். இவரை தரிசிக்க வந்த இசைக் கலைஞர்கள் ஏராளமானோர். அவர்களைப் பாடச் சொல்லியும், வாசிக்கச் சொல்லியும் கேட்டு இன்புறுவார். கூடவே பெரியவா பாடிய சந்தர்ப்பங்களும் உண்டு. பாடல்களில் பதம் பிரிக்க வேண்டிய முறையைக் கற்றுக்கொடுப்பார். பொருள் விளக்குவார். அவரே கேள்விகள் கேட்டு, விளக்கமும் சொல்வார்.

மகா பெரியவரின் பக்தரான கணேச சர்மா, ‘சங்கீத சங்கரர் காஞ்சி மகா பெரியவர்’ என்று ஒரு நூல் எழுதியிருக்கிறார். விகடன் பிரசுரம் அதனை வெளியிட்டது.

மகா பெரியவா - 17இனி, மகா பெரியவருடன் இணைந்து இசையில் நனைந்து மகிழ்வோம்...

மகா பெரியவரின் தாய்வழி மூதாதையர்தான், சங்கீத உலகில் மிக முக்கியமாக மேளகர்த்தா ராகங்களை வகைப்படுத்திய ஸ்ரீவேங்கடமகி. சுவாமிகளின் தந்தை சுப்ரமண்ய சாஸ்திரிகள் இசை மாமேதையான
மகாவைத்யநாத சிவனின் பரம ரசிகர். வீட்டில் எப்போதும் வித்வான்கள் பலர் வந்து பாடுவார்கள். இசைக் கலையின் அருமைபெருமைகளை அலசுவார்கள். அவற்றைக் கேட்டுக் கேட்டு இசைஞானத்தை வளர்த்துக் கொண்டார் பெரியவா. சந்நியாசம் பெற்ற பின்னரும் கும்பகோணம் மடத்தில் தங்கியிருந்த தருணத்தில், தியாகராஜரின் சிஷ்ய பரம்பரையில் வந்த உமையாள்புரம் சுவாமிநாத ஐயர் தினமும் மடத்துக்கு வருவார்.அவர், சங்கீதம் பற்றிய பல விஷயங்களை மகா பெரியவருடன் விவாதித்து விட்டுச் செல்வது வழக்கம்.

மகா பெரியவா - 17

ஒருமுறை தேவகோட்டையில் மகா பெரியவா தங்கியிருந்தபோது, வித்வான் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் தரிசனத்துக்கு வந்திருந்தார். வித்வானை முத்துசுவாமி தீட்சிதரின் ‘ஸ்ரீசுப்ரமண்யாய நமஸ்தே’ கீர்த்தனையைப் பாடச் சொல்லி, அதற்கான அர்த்தத்தை பெரியவா வரிக்கு வரி விளக்கியது, இசை உலகுக்கு மகத்தான, மறக்க முடியாத நிகழ்வு!

அந்தப் பாடல் அமைந்த ராகத்தைப் பற்றிப் பேசிய மகா பெரியவா, ‘`காம்போதின்னு சொல்றோம். ஆனா, புஸ்தகப் பேரு காம்போஜிதான். காம்போஜம்தான். காம்போஜம் என்பது தற்கால கம்போடியா. அங்கே பாரத கலாசாரம் ரொம்ப ஆழமாகப் பரவியிருக்கிறது. சங்கீதத்தில் கொடுக்கல் வாங்கல் என்ற பரிவர்த்தனை ரொம்ப சகஜம். அதனால், அந்த தேசத்திலிருந்து இறக்குமதி பண்ணிண்ட ராகம் காம்போஜியான்னா, அப்படி இல்லைன்னு பேராசிரியர் பி.சாம்பமூர்த்தி முதலான ரிசர்ச்காரா சொல்றார்கள்.

பிறகு ஏன் காம்போஜின்னு பேரு? கம்போடியாவை மாத்திரம் காம்போஜம்னு சொல்லவில்லை. இந்தியாவின் வட எல்லையை ஒட்டி, சிந்து நதியைத் தாண்டி இமயமலையை அடுத்து இருக்கும் ஒரு பிரதேசத்தையும் காம்போஜம் என்கிறோம். இந்த விவரத்தை, ரகுவம்சத்தில் காளிதாசன், ரகு சக்கரவர்த்தி வெற்றி கொண்ட தேசங் களைச் சொல்லும்போது விவரிக்கிறான். இதிலிருந்து பாரதத்துக்கு உள்ளேயே ஒரு காம்போஜம் இருப்பது தெரிகிறது. அங்கே விசேஷமாக இருந்த ஒரு ராகத்திலிருந்து காம்போஜி உண்டாகியிருக்கலாம்.

சௌராஷ்டிரம், மாளவம், கௌள, கேதாரம், கூர்ஜரி, கன்னட, சிந்துபைரவி, யமுனா கல்யாணி போன்ற அநேக ராகங்கள் ஒவ்வொரு சீமையிலிருந்து வந்ததாலேயே அந்தச் சீமையின் பெயரையே வைத்துக் கொண்டிருக் கின்றன. அதுமாதிரி காம்போஜ தேச சம்பந்தமாக காம்போஜி ராகம்..” என்று விவரிக்கிறார்.

“காம்போஜி ஜன்ய ராகம். ஹரிகாம்போதிதான் மேளராகம், ஜனகராகம். ஆனால், ஹரிகாம்போதியை விட காம்போஜிதான் ஃபேமஸா இருக்கு. எப்படின்னா அப்பாவைவிட பிள்ளை பிரபலமா இருக்கற மாதிரி.”

ருமுறை தீவிர கர்நாடக இசை ரசிகர் ஒருவர் மகா பெரியவரை தரிசிக்க வந்திருந்தார்.

“முன்னெல்லாம் கச்சேரிகள்ல மகான் களின் பாடல்கள் விருத்தமா பாடறது உண்டு. அவற்றை ராக மாலிகையா பாடுவா... அதுல முதல் ராகமா அநேகமா கேதாரகெளளைதான் இருக்கும். அதுல ஒரு வசியம் இருக்கும். இப்போ அதையெல்லாம் கேட்க முடியறதுல்லே... பெரும்பாலும் தேஷ் மாதிரியான வடகத்தி ராகங்கள்தான் பாடறா...” என்றார்.

உடனே பெரியவா, “நீ இப்படி சொல்றே... ஆனா தேஷும், கேதார கௌளையும் ஒரே ஸ்கேல்தான்... அதாவது, ஒரே ஆரோகணம், அவரோகணம்தான்... ஒரே ஒரு வித்தியாசம், ஆரோகணத்துல நிஷாதம் மட்டும் வித்தியாசப்படறது...” என்று சொல்ல, ரசிகருக்கு வியப்பு. இரண்டு ராகங்களையும் லேசாக ‘ஹம்’ செய்து பார்த்தார்.

“பெரியவா சொன்ன மாதிரிதான் இருக்கு... ஆனால், இந்துஸ்தானி பாடகர்கள் ஸ்வரங்களை லைட்டா பிடிச்சு நிறுத்திப் பாடறதுக்கும், நம்ம வித்வான்கள் வெயிட்டா பாடறதாலும் வித்தியாசம் தெரியறது...” என்றார்.

மகா பெரியவா - 17

மகா பெரியவா விவாதத்தைத் தொடர்ந்தார்;

“இந்த லைட், புஷ்டி மாதிரியான வித்தியாசங்களெல்லாம் என்னை மாதிரி சாதாரண ரசிகர்களுக்குத் தெரியாது. ஒவ்வொன்றிலும் ஒரு தினுசு, அழகு இருக்கத்தான் செய்யறது. அவர்கள் ‘பைரவி’ன்னு சொல்றா, நாம ‘சிந்துபைரவி’ன்னு சொல்றோம். ஆனா, ஆரோகணம் அவரோகணம் முழுக்க நம்ம தோடிதானே? கமக மயமா இழைச்சு இழைச்சு தோடி பாடறதுல ஒரு கம்பீரமான அழகு இருக்குன்னா, அவர்கள் சிந்துபைரவியை இழைப்பதிலும் மனசு உருகத்தான் செய்யறது. தீட்சிதர், தியாகராஜர் மாதிரியான பெரியவர்களும்கூட இந்துஸ்தானி ராகங்களை ‘அடாப்ட்’ பண்ணிக்கொண்டிருக்காளே... ஒரே ஸ்கேலானாலும், ஸ்வரங்களை கையாளும் விதத்தினாலேயே ரொம்ப வித்தியாசமான ராகமாயிருக்கு என்பது ஆச்சர்யமாத்தான் இருக்கு...” என்றார்.

ந்தவேலூர் என்ற இடத்தில் மகான் முகாமிட்டிருந்தார். தியாகராஜரின் ‘விநாயகுநி வலநு ப்ரோவவே’ கீர்த்தனையைப் பாடுகிறார் ஒரு பக்தர்.

“இந்தப் பாடலை தியாகராஜர் ஏன் மத்யமாவதியில பாடினார் தெரியுமா? மத்யமாவதி என்றால் (மத்யமம் - இடை) அழகான இடையை உடையவள் என்று பொருள். பெண்களுக்கு அழகே அதுதான். காமாக்ஷியும் ‘தநுமத்யா’ (மெலிந்த இடையினள்) என்று சகஸ்ரநாமம் போற்றுபவள். அத்துடன், அவள் இருக்கும் வாசஸ்தலமும் காஞ்சி (ஒட்டியாணம் என்று பொருள்). இடுப்புக்கு ஆபரணமாவது ஒட்டியாணம்தானே! காஞ்சி, பூ நாபிஸ்தானம் என்றுதானே சொல்லப்படுகிறது. எனவே, இடுப்பழகியான அன்னை காமாக்ஷி இருக்கும் காஞ்சிக்கும் பொருத்தமான மத்யமாவதியில் பாடினார்'' என்று விவரித்தார் மகா பெரியவா.

பாடல்களை பாவத்துடன் பாட வேண்டும் எனில், மொழி அறிவு மிக முக்கியம். இதுபற்றியும், பாடல்கள் பற்றியும் காஞ்சி மாமுனிவரின் அருள் மொழி பருகப் பருக சுவைக்கும்.

“சுப்பராம தீட்சிதரின் ‘சங்கராசார்யம்’ என்ற சங்கராபரண கீர்த்தனையில், ‘பரமாத்வைத ஸ்தாபன லீலம்’ என்ற வரிக்கு ‘விளையாட்டாகவே பரம தத்துவமான அத்வைதத்தை ஸ்தாபித்தவர்’ என்று அர்த்தம். பாடும்போது ‘பரம அத்வைத ஸ்தாபன லீலம்’னு ‘அ’வில் அழுத்தம் கொடுத்துப் பதம் பிரித்துப் பாடினால்தான் சரியான அர்த்தம் வரும். அப்படிப் பாடினால் சங்கீதத்துக்கும், தாளத்துக்கும், அர்த்தத்துக்கும் குறையில்லாமல் இருக்கும். ஆனால், இதில் கவனமில்லாதவர்கள் ‘பரமா’ என்று அப்படியே நீட்டிக்கொண்டு போய் ‘த்வைத ஸ்தாபன லீலம்’னு பாடி ‘அத்வைத’ ஸ்தாபன ஆசார்யரை ‘த்வைத’ ஸ்தாபன ஆசார்யராக கன்வெர்ட் செய்துவிடுகிறார்கள்!

சங்கீதத்தில் சங்கீதம்தான் முக்கியம். அதில் த்வைதமோ அத்வைதமோ எந்த பேதமும் இல்லைதான். எனினும் விபரீதமாகப் பொருள் தரும்படி பாடுவது சரியில்லை. முத்துசுவாமி தீட்சிதர்,  ‘பஞ்சாசத் பீடரூபிணி' பாடலில் ‘பாவ, ராக, தாள விஸ்வாஸினி’ என்று பாவத்துக்கு முதலிடம் தந்த பிறகே, ராகம் அடுத்து தாளம் என்று மிக அழகாக priority - ஐ வரிசைப்படுத்துகிறார்.”

டமாடும் தெய்வத்தின் பரம பக்தர் அவர். மிகவும் அப்பாவியான மனிதர். ‘விநாயகுநிவலெநு ப்ரோவவே’ பாடலை முனிவரின் அருகில் அமர்ந்து பாடினார்.

பாடியவருக்குச் சங்கீதம், மொழி இரண்டு புலமையுமே பூஜ்ஜியம் என்பது அவர் பாடும்போதே வெளிப்பட்டது. பூர்த்தியானவுடன், ‘சரியாக இருந்ததா?’ என்று மகா பெரியவரிடம் தைரியமாகக் கேட்டார் அவர்.

“எனக்குச் சரியாயிருந்தது. உனக்கு வேண்டியது அதுதானே?”

அப்பாவி பாடகரும், “ஆமாம் பெரியவா... எனக்கு வேறு எதுவும் வேண்டாம்” என்று சொல்லி நமஸ்கரித்தார்.

“பகவானை பாவக்ராஹி என்றும் பாஹயக்ராகி அல்ல என்றும் - அதாவது மனப்பான்மையை ஏற்பவனேயன்றி, அதன் வெளிப்பாட்டை அல்ல - என்பது கண்கூடாக இருந்தது. அபூர்வமா பாடினே! பாட்டு என்ன பாஷை” என்று வினவினார் சுவாமிகள்.

“தெலுங்கு...”

“அப்படியா... அபூர்வ ராகம் பாடியது போல், அபூர்வ பாஷையும் பாடறையோன்னு ஆச்சர்யப் பட்டேன்!”

“எல்லாம் பெரியவா அனுக்ரஹம்..”

“அது சரி... இந்தப் பாட்டை நீ என்னிடம் வந்து பாடக் காரணம் என்ன?”

“பெரியவாளுக்குக் காமாக்ஷிதான் எல்லாம். பெரியவாளே காமாக்ஷிதான் என்பதால் பாடினேன்...”

“காமாக்ஷிதான் எனக்கு எல்லாம், நானேதான் காமாக்ஷி என்று நீ எப்படி கண்டுபிடிச்சே?”

“எனக்குக் கண்டுபிடிக்கவெல்லாம் தெரியாது பெரியவா. எனக்கு ஒண்ணும் தெரியாது. எல்லோரும் அப்படிச் சொன்னா... எனக்கும் பெரியவாளைப் பார்த்தவுடன் அப்படி தோணித்து...” என்று அழ ஆரம்பித்துவிட்டார் அந்த அப்பாவி பக்தர்.

அவரைப் பரிவுடன் சமாதானப்படுத்தினார் பெரியவா. பின்னர், அருகிலிருந்த எழுத்தாளர் ரா.கணபதியிடம், ‘`காமாக்ஷியைப் பற்றிப் பாடும் போது, தியாகராஜர் ஏன் ‘விநாயகுநி’ என்று `விநாயகனைக் காப்பது போல் என்னையும்' என்று ஆரம்பிக்கவேண்டும்? ஏதாவது விசேஷ காரணம் உண்டா” என்று வினவினார்.

- வளரும்

வீயெஸ்வி