Published:Updated:

ஆராய்ந்து அருள்புரியும் அண்ணலே... எமக்கும் அருளிட எழுந்தருள்வாய் கண்ணா! திருப்பாவை - 23

ஒருவருக்கு என்ன தேவை, எப்போது தேவை என்பதையெல்லாம் அறிந்த பகவான், உரிய காலத்தில் அவரவருக்குத் தேவையானவற்றை அருளவே செய்வார். அவரிடம் சென்று நாம் எதையும் கேட்கவே வேண்டாம்

ஆராய்ந்து அருள்புரியும் அண்ணலே... எமக்கும் அருளிட எழுந்தருள்வாய் கண்ணா! திருப்பாவை - 23
ஆராய்ந்து அருள்புரியும் அண்ணலே... எமக்கும் அருளிட எழுந்தருள்வாய் கண்ணா! திருப்பாவை - 23

"மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து 
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன் 
கோயில்நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய 
சீரிய சிங்காசனத்திருந்து யாம்வந்த 
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய் - திருப்பாவை 23

"மழைக் காலத்தில், மலையில் இருக்கும் குகைக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் வீரமுடைய சிங்கமானது, மழைக்காலம் முடிந்தவுடன் தனது உறக்கத்தை விட்டு, தீப் போல விழித்தெழுந்து, பிடரி மயிர் சிலிர்க்க, எல்லாத் தடைகளையும் உடைத்துக் கொண்டு, உடலை நிமிர்த்தி, கர்ஜனை செய்து புறப்பட்டு வரும்.

அந்தச் சிங்கத்தைப் போல, பூவைப்பூ வண்ணக் கண்ணா, நீயும் உனது இல்லத்திலிருந்து புறப்பட்டு, நாங்கள் இருக்கும் இடமான உனது அரண்மனைக்கு வந்து, பெருமை வாய்ந்த உனது அரியணையில் அமர்ந்து கொண்டு, நாங்கள் வந்த காரியத்தைக் கேட்டறிந்து, எங்களுக்கு அருள் புரிவாயாக...'' என்று பாடுகிறாள் கோதை

"யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோர்.."

நாங்கள் வந்த காரியத்தைக் கேட்டு, ஆராய்ந்து, அதில் உவப்பானதை அருள்வாயாக என்று வேண்டுகிறாள் கோதை..

வேண்டியது எல்லாவற்றையும் வரமாய்த் தருபவன்தான் இறைவன் என்பதற்காக அவனிடம், வீட்டைக் கொடு..  பொருளைக் கொடு.. நகையைக் கொடு.. என்று நமது பேராசைகளை எல்லாம் கோரிக்கையாக வைக்காமல், நியாயமான அத்தியாவசியக் கோரிக்கைகளை மட்டுமே கேட்க வேண்டும் என்கிறாள் கோதை..

எம்பெருமான் சில கணங்களில் எழுந்தருளுவான். எழுந்தருளும்போது அவன் தோற்றம் கம்பீரமான பிடரி மயிர்கள் சிலிர்த்தெழும் சிங்கத்தை ஒத்திருக்கும். பிரகலாதனுக்கு அருள் செய்த அந்த நரஹரியாய் அவதரித்த நாராயணனின் எழில் கண்டு கோபியர்கள் மதி மயங்குவர். அவன் சந்நிதியின் சாந்நித்யத்தில் லயித்திருக்கும் வேளையில், வேண்டுதல் என்று ஒன்றை வைப்பதென்பதே இயலாமல் போகும். அதனால் இங்கு அவனை  நாடி வந்து நிற்கும் இந்தப் பெண்களின் வேண்டுதல்தான் என்ன என்பதை அவனே ஆராய்ந்து அருளவேண்டும் என்று வேண்டுகிறாள் கோதை.  

ஆயர்குலப் பெண்களின் வேண்டுதல் இந்த உலகம் சார்ந்த ஒன்றாக இல்லையே, அவர்கள் அந்தக் கண்ணனையே அல்லவா வரமாகக் கேட்டார்கள்..?

இது நியாயமான கோரிக்கைதானா..??

இதைப் போலவே, கோரிக்கைகளை வைத்த தனது பக்தர்களுக்கு இதற்கு முன் என்ன செய்தாராம் அந்தப் பரந்தாமன்..? அது தெரிந்தால் இவர்களுக்கும் என்ன கிடைக்கும் என்பது நமக்குப் புரிந்து விடுமல்லவா.!

உலக விஷயங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டும் பாதுகாத்துக்கொண்டும் திரிகிற மனிதர்கள் இறைவனின் வாசலில் வந்து அவன் தரிசனம் வேண்டி நிற்பதில்லை. அப்படியே வந்து தமது லோகாயதமான வேண்டுதல்களை அவன் சந்நிதியில் வைப்பவர்களும் தனது தேவையைச் சொல்லி நீங்குவர். இறைவன் உறையும் இடத்தின் மகிமையே அவற்றை நிறைவேற்றிவிடும். அப்படியிருக்க இறைவனின் தரிசனம் ஒன்றையே, அவன் திருவடிகளை அடைவது ஒன்றையே தமது லட்சியமாகக் கொண்டு, தோழியருடன் கோதை கண்ணனின் தரிசனத்துக்காகக் காத்திருக்கிறாள்.

பிரகலாதன் தொடர்ந்து நாராயணனை ஸ்மரனை செய்துகொண்டிருந்தான். அதனால் அவன் பட்ட துன்பங்கள் எண்ணிலடங்காதன. அவனின் பக்தியில் இருந்த உறுதியான தன்மையைக் கண்டு நாராயணன் அவனைக் காத்து வந்தார். ஒரு கணம் அவன் தன் தந்தையோடு வாதஞ்செய்து பகவானின் தரிசனத்தை வேண்டி நின்றபோது, தூணிலிருந்து வெளிப்பட்டுத் தன் பிடரி சிலிர்க்க நின்றார். அவனின் துன்பம் தீர்த்தார். பிரகலாதன் அவரின் அவரின் சரண கமலங்களைப் பற்றிக் கொண்டான்.

இந்தக் கண்ணனும்  சீரிய சிங்கமாக எழுந்தருள்வான். ஆனால் நரஹரி போல பாதி சிங்கமும் பாதி மனித உடலும் கொள்ளாமல், யசோதை இளஞ்சிங்கமாய் தோன்றுவான். அப்போது நமது தீவினை யாவும் அழிந்து நாம் அவன் பாதக் கமலங்களைப் பற்றிக்கொள்ளலாம். அப்போது அவன் நாம் எதை நாடி வந்திருக்கிறோமா அதை அவன் தந்தருள்வான்.

கண்ணனைப் பொறுத்தவரை, அவனுக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடே இல்லை. தன்னை எதிர்த்து நிற்பவர்களுக்கும் அருள்புரியும் தயாபரன் அவன்! 

தன்னை எதிர்த்து நின்றவனுக்கும் பெறற்கரிய பேற்றினை அருளியவர் திருமால். காரணம், தன்னை எதிர்த்து நின்றவனின் மாத்ரு பக்தியின் சிறப்பினை உலகம் உணர்ந்துகொள்ளவே!

அவன்தான் இன்றைக்கு நம்மால், 'பெரிய திருவடி' என்று போற்றும் கருடாழ்வார். தன் பெரியன்னை கத்ருவுக்கு அடிமைப்பட்டிருக்கும் அன்னை விநதையை விடுவிக்க நினைத்த கருடன், அதற்குப் பிரதியாக கத்ரு கேட்டபடி தேவலோகம் சென்று அமிர்தகலசம் எடுத்து வந்தான். தேவர்களின் அமிர்தகலசத்தை அவர்களுக்கு மீட்டுக் கொடுக்கவேண்டி, மகாவிஷ்ணு கருடனை எதிர்த்துப் போரிட்டார். பின்னர், கருடன் தன் தாயிடம் கொண்டிருந்த அளப்பரிய பாசத்தில் நெகிழ்ந்தவராக, கருடனைத் தன் வாகனமாகவே ஏற்றுக்கொண்டார்.
கருடன் எதிர்த்துப் போரிட்டு, திருமாலுக்கு வாகனமாகும் பேற்றினை அடைந்தான் என்றால், தன் தாய் கத்ரு, சிற்றன்னை விநதைக்குச் செய்த கொடுமையை எதிர்த்து நின்ற ஆதிசேஷனை, கிடந்தால் சயனமாகவும்,. அமர்ந்தால் ஆசனமாகவும், நின்றால் குடையாகவும் கொண்டு அருள்புரிந்தார்.

ஆக, ஒருவருக்கு என்ன தேவை, எப்போது தேவை என்பதையெல்லாம் அறிந்த பகவான், உரிய காலத்தில் அவரவருக்குத் தேவையானவற்றை அருளவே செய்வார். அவரிடம் சென்று நாம் எதையும் கேட்கவே வேண்டாம். 

எனவேதான், 'உன் திருவடிகளைச் சரணடைந்து வந்திருக்கும் எங்களுக்குத் தேவையானவற்றை கண்ணா, நீயே ஆராய்ந்து அறிந்து அருள்வாயாக' என்று வேண்டுகிறாள் கோதை!