Published:Updated:

அன்பே தவம் - 7

அன்பே தவம் - 7
பிரீமியம் ஸ்டோரி
அன்பே தவம் - 7

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்படங்கள் கே.ராஜசேகரன்

அன்பே தவம் - 7

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்படங்கள் கே.ராஜசேகரன்

Published:Updated:
அன்பே தவம் - 7
பிரீமியம் ஸ்டோரி
அன்பே தவம் - 7

வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஒரு மகன், அப்பாவைப் பாதுகாக்க வீடு இடம் தராது என்று ஒரு காப்பகத்தைத் தேடிப் போனான். காப்பகம் வசதியாக இருக்கிறதா என்று பார்த்தான். ``நவீன வசதியோட இருக்குற ரூம் வேணும்’’ என்றான். யாருக்கு? தன்னை ஆளாக்கி, சீராட்டி, பாராட்டி வளர்த்த அப்பாவுக்கு. ``என் அப்பாவுக்கு எல்லா வசதியும் உள்ள அறை வேணும். அதற்கு எவ்வளவு வேணாலும் பணம் தர்றேன்’’ என்று காப்பகத்தின் உரிமையாளரிடம் சொன்னான். சொல்லிவிட்டு, அப்பாவின் சுமைகளை காரிலிருந்து எடுக்கப் போனான். அப்பாவே சுமையாகிவிட்டவனுக்கு, அப்பாவின் சுமைகள் எம்மாத்திரம்? கொண்டுவந்து இறக்கிவைத்தான். 

அன்பே தவம் - 7

அந்த நேரத்தில், அப்பாவும் காப்பகத்தின் உரிமையாளரும் நெருக்கமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவன், உரிமையாளரிடம் கேட்டான்... ``என் அப்பாவை உங்களுக்கு முன்னமே தெரியுமா?’’

``தெரியும்.’’

``எப்படித் தெரியும்?’’

``முப்பது வருஷத்துக்கு முன்னே இங்கே வந்திருந்தார்.’’

``எதுக்கு வந்தார்?’’

``தாய் தந்தையில்லாத ஒரு குழந்தையை இங்கிருந்துதான் தத்தெடுத்துப் போனார். அவர் தத்தெடுத்துக்கிட்டுப் போன அந்தக் குழந்தை நீதான். இப்போது உனக்கு அப்பாவாகிவிட்டவரை அநாதையாக்க நீ வந்திருக்கே.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அன்பே தவம் - 7இது குடும்பத்தின், அன்பின் ஆணிவேர் இற்றுப் போனதைக் காட்டுகிறது. இன்றைய சமூகத்துக்குத் தேவை, நல்ல குழந்தைகள். நல்ல குழந்தைகளை உருவாக்குகிற பொறுப்பு பெற்றோர்களுக்கு மட்டுமல்ல; நம் கல்விக்கூடங்களுக்கும் உண்டு. நம் கல்விக்கூடங்கள் எப்படியிருக்கின்றன? ஒருபுறம், எல்லா வசதிகளும் உள்ள கல்விக்கூடங்கள். தங்கள் குழந்தை கருக்கொள்ளும் முன்பே, அவர்களை எந்தப் பள்ளியில் சேர்க்கலாம், எந்தக் கல்லூரிக்கு அனுப்பலாம், எந்த நாட்டுப் பல்கலைக்கழகத்தில் பயிலவைக்கலாம், எந்த நாட்டுக்கு அவர்களைக் குடிமகனாக ஆக்கலாம் என்பதுவரை திட்டமிட்டு, தீர்மானிக்கிற பெற்றோர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலும் அவர்கள் அதிகாரவர்க்கத்தைச் சேர்ந்த பெற்றோர்கள்.

சில பெற்றோர்களுக்குத் தங்கள் குழந்தையின் கல்வி என்பது சமூக மரியாதைக்குத்தான். அழைப்பிதழில், முகவரியில் பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்ளப் பட்டங்களைப் பயன்படுத்துகிறவர்கள். பெரும்பாலும் அவர்கள் தொழில், வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆனால், இந்த நாட்டில் கோடிக்கணக்கான குழந்தைகள் `இன்றைக்கு நம் குழந்தை பள்ளிக்கூடம் போனதா, போகவில்லையா’ என்று எண்ணிப் பார்க்காத பெற்றோருக்குப் பிள்ளைகளாக இருக்கிறார்கள். தங்கள் வயல்வெளிகளில் முதிர்ந்து நிற்கிற நெற்பயிருக்குக் காட்டுகிற அக்கறையைக்கூட, தங்கள் குழந்தைகளின் கல்விக்குக் காட்டாத பெற்றோர்கள் இன்றும் இருக்கிறார்கள். அந்தக் குழந்தைகளுக்கு வகுப்பறையிலிருக்கிற ஆசிரியர்கள்தாம் பெற்றோர்களாக இருக்கவேண்டியிருப்பது காலத்தின் கட்டாயம். அந்தப் பொறுப்பு இன்றைய ஆசிரியத் தலைமுறைக்கு இருக்கிறது.  

அன்பே தவம் - 7

எழுத்தாளர், சமூக சிந்தனையாளர், கல்வித்துறையில் பணியாற்றியவர் பொன்னீலன். அவர் படித்த காலத்து ஆசிரியரை நினைவுகூர்ந்திருக்கிறார். சேதுராமய்யர் என்ற கண்டிப்பான ஆசிரியர். ஒருநாள், காலை பிரார்த்தனை நேரத்துக்கு முந்தைய தருணம். `அவர் இன்னிக்குப் பள்ளிக்கூடத்துக்கு வர மாட்டார்’ என்று மாணவர்கள் பேசிக்கொண்டார்கள். `ஏன்?’ ஒரு மாணவன் கேட்டான்.

`அவர் குழந்தை இன்னிக்கு செத்துப்போச்சு. ஆஸ்பத்திரியில கையில இறந்த குழந்தையைத் தூக்கிக்கிட்டு நின்னுக்கிட்டிருந்தார். நான் பார்த்தேன். அதனால அவர் இன்னிக்குப் பள்ளிக்கூடத்துக்கு வர மாட்டார்.’

பள்ளிக்கூட மணி ஒலித்தது. குறித்த நேரத்தில் ஆசிரியர் சேதுராமய்யர் வந்துவிட்டார். வகுப்பறைக்குச் சென்று பாடம் நடத்தினார். பிற்பகல் உணவு இடைவேளையையும், மற்றொரு இடைவேளையையும் சேர்த்து எடுத்துக்கொண்டு தன் குழந்தையின் இறுதிச் சடங்கை நிறைவேற்றிவிட்டு, மீண்டும் மாலையில் பள்ளிக்கு வந்தார்.

இதெல்லாம் அதீதக் கற்பனையோ என்று தோன்றலாம். ஆனால், விடுமுறை எடுப்பதற்காக இல்லாத தாத்தாவையும் பாட்டியையும் எத்தனை முறை எமலோகத்துக்கு அனுப்பிவைக்கலாம் என்று நினைக்கிற தலைமுறைகளுக்கு மத்தியில்தான் சேதுராமய்யர் போன்ற தலைமுறை பணி செய்திருக்கிறது. அதையெல்லாம் பொறுப்போடு சிந்திக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

`இளைஞர்களே... கனவு காணுங்கள், கனவு காணுங்கள்!’ என்று சொல்லி, நம் கனவில் நினைவாக நிற்கிறார் டாக்டர் அப்துல் கலாம். `எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று சொல்வதைப்போல அவர், `என் எல்லாப் பெருமைகளும் என் ஆசிரியருக்கே!’ என்று குடியரசுத் தலைவர் ஆசனத்தில் அமர்ந்த பெருமையைத் தன் ஆசிரியருக்குச் சமர்ப்பணம் செய்தார். குடியரசுத் தலைவர் பணிக்காலம் முடிந்ததும், ஆசிரியர் பணியைத் தேடிப் போனார்.

``விண்வெளித்துறையில் நிகழ்த்திய அரிய சாதனைகளுக்காக நீங்கள் பெருமைப்படுகிறீர்களா, அது உங்களின் சாதனை ஆயிற்றே... அதற்காக நீங்கள் மகிழ்ச்சி அடைகிறீர்களா, பெருமை அடைகிறீர்களா?’’ என்றெல்லாம் அவரிடம் கேட்டார்கள்.
 
அப்துல் கலாம் அடக்கமாகச் சொன்னார்... ``விண்வெளித்துறையில் செய்த சாதனைகளுக்காக நான் பெருமைப்படவில்லை. சில நேரங்களில், இறைவனுக்கு நான் கண்ணீரோடு நன்றி சொல்லியிருக்கிறேன். எப்போது தெரியுமா? நடக்க முடியாத குழந்தைகள், நடப்பதற்குத் தேவையான ஊன்றுகோலைத் தயாரிக்கிற உலோகத்தை என் ஆய்வுக்கூடம் கண்டறிந்த நாளன்று கண்ணீரோடு இறைவனுக்குக் கோடி நன்றிகள் சொன்னேன்.’’

அறிவு, அன்பின் பாதையைத் திறக்க வேண்டும். அன்பின் பாதையில் வேகமாக நடைபோட வேண்டும். அன்பும் அறிவும் இணைந்தால், உலகம் அருள்மயமாகும். அன்பும் அறிவும் பிரிந்தால், உலகமே இருள்மயமாகிவிடும். உலகம் அருள்மயமாக, அறிவின் தடம், அன்பின் பாதையில் பயணம் செய்ய வேண்டும்.

மதுரை, திருப்பாலைக்கு அருகே உலகத்துக்கு அறிவு விளக்கால் வழிகாட்டிக்கொண்டிருக்கும் யாதவர் கல்லூரி இருக்கிறது. அது நாம் கல்வி பயின்ற கல்லூரி. 

நாம் குன்றக்குடி ஆதீனத்தின் ஞானபீடத்துக்கு வந்த பிறகு, உரிமையோடும் உறவோடும், `கல்லூரியின் பழைய மாணவர்’ என்ற முறையில் பல முறை அழைப்பு வந்தது. மரபு கருதி, அதற்கு இசைவு தராமல் தவிர்த்துவிட்டோம். சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்தக் கல்லூரியின் தர மதிப்பீட்டுக் குழுவில் நம்மை அந்தக் கல்லூரி குறித்துப் பகிரச் சொல்லியிருந்தார்கள். தேசிய தர மதிப்பீட்டுக் குழு நாளன்று, திருமடத்திலிருந்து நம் வாகனம் புறப்பட்டது. 

மதுரை யாதவர் கல்லூரி வளாகத்துக்குள் நம் வாகனம் நுழைந்தது. தேசிய தர மதிப்பீட்டுக் குழுவிடம், கல்லூரியின் மாற்றத்தை உணர்ந்து, அதன் வளர்ச்சிக்கான செய்திகளைப் பதிவுசெய்தோம். தர மதிப்பீட்டுக் குழு கல்லூரிக்கு உயர்ந்த அங்கீகாரத்தைத் தந்தது. அங்கிருந்து நாம் வெளியே வந்தபோது, நம்முடைய வேதியியல் ஆசிரியர் டாக்டர் சேதுராமன் நமக்காகக் காத்திருந்தார்.

நோய் பாதித்த நிலையில் அவர் உடல் நலிவுற்றிருந்தது. அவர் நம் கையைப் பிடித்து அழைத்துப் போனார். கல்லூரி மாற்றம் கண்டிருந்தது. ஆய்வுக்கூடம் பிரமாண்டமாக உருவெடுத்திருந்தது. சேதுராமன் ஆசிரியர், வகுப்பறையில் கற்றுத் தந்ததெல்லாம் நம் நினைவுக்கு வந்தன. மாணவர்களுக்கு அவர் கண்டிப்பானவர். அவர் ஒரு பலாப்பழத்தைப் போன்றவர். பலாப்பழம், வெளியே முள்ளாக இருக்கும்; உள்ளே இருக்கும் சுளை இனிக்கும்.

மேல்நிலைப் பாடத்திட்டம் மாறியநிலையில் வந்த மாணவர்களை, கிராமப்புறங்களிலிருந்து வந்த மாணவர்களை அதீத அக்கறையோடும் கண்டிப்போடும் நடத்தினார். அதனால் சிலருக்கு அவர்மேல் வருத்தம்கூட உண்டு. மாணவர்களை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கூப்பிட்டு, `அந்த வேதியியல் சமன்பாட்டைக் கூறு!’ என்று ஒன்றைக் கேட்பார். அதன் விளைவு, இரவில், உறங்கிக்கொண்டிருக்கும் மாணவனை எழுப்பிக் கேட்டாலும், வேதியியல் சமன்பாட்டைச் சரியாகக் கூறிவிடுவான்.

ஆய்வுக்கூடத்துக்குள் நுழைந்தோம். அங்கே ஒரு மேஜை. அதன் மேல் படம் திரையிடப்பட்டிருந்தது. அதை நம்மைத் திறக்கச் சொன்னார். நாம் திரையை விலக்கினோம். உள்ளே நம் உருவப்படம் இருந்தது. ஆசிரியர் சேதுராமன், நம் கையைப் பிடித்தார். ``என் வாழ்க்கையில் ஆத்ம திருப்தி இன்று ஏற்பட்டிருக்கிறது. நீண்ட நாள்களாக எனக்கொரு ஏக்கம். என் இதயத்தில் தங்களைப் பற்றிய உணர்வுகளைப் பூட்டிவைத்திருந்தேன். தங்களின் உருவப்படத்தை, என் மேஜையில் தாங்களே திறந்துவைக்கும் நல்லபேறு எனக்குக் கிடைத்திருக்கிறது. இப்போதுதான் எனக்கு மன நிறைவு’’ என்றார். அவர் கண்கள் கலங்கியிருந்தன.

நாம் அவர் கைகளைப் பற்றிக்கொண்டு, ``நீங்கள் நீண்ட நாள் நலமாக வாழ வேண்டும்’’ என்று சொல்லி, அவர் அன்பை ஏற்றுக்கொண்டு புறப்பட்டோம். சிறிது கால இடைவெளிக்குப் பிறகு, பொதிகை தொலைக்காட்சியில், திருவெம்பாவை பற்றிய உரையாடலில் கலந்துகொண்டோம். மாணிக்கவாசகருக்கு ஞான ஆசிரியராக சிவபெருமான் இருந்த நிகழ்வை விவரித்தபோது, நமது குருமகா சந்நிதானத்தைப் பற்றி சிந்தித்துவிட்டு, தொடர்ந்து யாதவர் கல்லூரிப் பேராசிரியர் சேதுராமனை நினைவுகூர்ந்தோம். அவருடைய கற்பிக்கும் முறையை நாம் விவரித்துக்கொண்டிருந்தபோதுதான் அவருடைய ஆன்மா, இந்த உலகிலிருந்து விடைபெற்றிருந்தது.

ஆத்மார்த்தமான அன்பு என்பது இதுதான். குருவுக்கும் சீடனுக்கும் இடையிலிருக்கிற உறவு என்பது எல்லா எல்லைகளையும் தாண்டியது. பேராசிரியர் சேதுராமன் கல்லூரி வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு, தம் கல்விப் பணியை முடித்தவரில்லை; பல மாணவர்களின் வாழ்க்கைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு, அவர்களின் வாழ்க்கைப் போக்கை மாற்றியவர். அவரைப்போல எண்ணற்ற ஆசிரியர்கள் இந்தச் சமூகத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை இளைய தலைமுறை என்றென்றும் நன்றியோடு நினைவுகூர வேண்டும். 

(புரிவோம்...)

அன்பே தவம் - 7

100 டாலரைவிட மேலானது ஒரு டாலர்!

பிரஹாம் லிங்கன் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகப் பதவிவகித்த நேரம் அது. தன் மகனின் பள்ளி ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதினார். குடியரசுத் தலைவர் என்ற அதிகாரத்தில் அதை அவர் எழுதவில்லை; தன் மகனின் நன்மை, தீமையில் அக்கறைகொண்ட தந்தையாக ஒரு வேண்டுகோளை வைத்தார். வரலாற்றுப் புகழ்மிக்க நீண்ட, நெடிய கடிதம் அது. ஆனால், அதன் உயிர்ப்பு இதுதான். `என் மகனுக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுங்கள். வெற்றி தோல்விகளை அவன் புரிந்துகொள்ள வேண்டும். தேர்வில் தவறான முறையில் தேர்ச்சியடைவதைவிட, தோல்வியடைவது மேலானது என்பதை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். சாலையில் சாதாரணமாகக் கிடக்கிற 100 டாலரைவிட, உழைத்துப் பெறுகிற ஒரு டாலர் மேலானது என்பதை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். எல்லாவற்றையும்விட, நேர்மைதான் புனிதமானது என்பதை அவன் தெரிந்துகொள்ள வேண்டும்.’