மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அன்பே தவம் - 8

அன்பே தவம் - 8
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பே தவம் - 8

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்படம் கே.ராஜசேகரன்

மாவீரன் அலெக்ஸாண்டர் `இனி வெல்வதற்கு இடமே இல்லை’ என்ற இறுமாப்பின் உச்சத்தில் இருந்த காலம் அது. அவன் காலத்தில் வாழ்ந்தவர், ஞானி டையோஜனீஸ் (Diogenes). போருக்குப் புறப்படுவதற்கு முன்னர் அவரிடம் சென்றான் அலெக்ஸாண்டர். அவர் முன்பாக மண்டியிட்டு, ``உங்கள் ஆசி வேண்டும்’’ என்றான்.   

அன்பே தவம் - 8

``எதற்கு?’’

``போருக்குப் போகிறேன்.’’

``எங்கே?’’

``அண்டை நாடுகளை வெல்லப்போகிறேன்.’’

``பிறகு?’’

``ஆசியாவை வெல்லப் போகிறேன்.’’

``பிறகு?’’

``உலகையே வெல்லப் போகிறேன்.’’

``பிறகு?’’

அன்பே தவம் - 8``சும்மா இருக்கப்போகிறேன்.’’

டையோஜனீஸ் சொன்னார்... ``ஏன், இப்போதே நீ சும்மா இருக்கலாமே?’’

ஆசி வாங்கப் போன அலெக்ஸாண்டர், ஆடிப்போனான். இப்போது அவரை அவமானப்படுத்த முடிவுசெய்தான். டையோஜனீஸ் பக்கத்தில் ஒரு நாய் நெருக்கமாக நின்றுகொண்டிருந்தது. ``டையோஜனீஸ், எல்லாவற்றையும் துறந்த நீங்கள் இந்த நாயை மட்டும் நெருக்கமாக, உறவாக வைத்திருப்பது ஏன்?’’

அன்பே தவம் - 8

``அலெக்ஸாண்டர், இந்த நாய் எனக்கு உறவு இல்லையப்பா. இதுதானப்பா என் குருநாதர்.’’

``என்ன... நாய் உங்களுக்கு குருநாதரா?’’

``ஆமாம். நான் உலகையே துறந்தவன்; ஆனால், பசியைத் துறக்க முடியாதவன். வீடு வீடாகப் போய்ப் பிச்சையெடுப்பதற்காக ஒரு பிச்சைப் பாத்திரம் வைத்திருக்கிறேன். ஆனால், என் குருநாதர் இருக்கிறாரே... இவருக்கு அப்படி ஒரு பிச்சைப் பாத்திரம் தேவையில்லை. எந்த இடத்தில் உணவைப் போட்டாலும், பாத்திரம் இல்லாமல் அப்படியே எடுத்துக்கொள்வார். ஒரு மண் திருவோட்டை சொத்தாக, உடைமையாக வைத்திருக்கிற நான், எதுவுமே தேவைப்படாத இவரைத்தானே குருநாதராக ஏற்றுக்கொண்டாக வேண்டும்?’’

அலெக்ஸாண்டர் இந்தப் பதிலைக் கேட்டு, அவமானம் தாங்காமல் வேகமாக வெளியே போனான்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் அலெக்ஸாண்டர், டையோஜனீஸிடம் கேட்டான்... ``நான் உலகையே வென்றிருக்கிறேன். ஆனால், என்னைவிட உங்களைத்தான்  மக்கள் அதிகம் புகழ்கிறார்கள்... ஏன்?’’

``அலெக்ஸாண்டர், நீ மண்ணை வென்றவன். நானோ என்னை வென்றவன். தன்னை வென்றவன்தான் புகழ் பெற முடியும்.’’

இதைத்தான் திருவள்ளுவர்,

`இலர் பலராகிய காரணம் நோற்பார்

சிலர்பலர் நோலா தவர்’ என்கிறார்.

வறியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்; ஏழைகள் அதிகமாக இருக்கிறார்கள். இதற்கு யார் காரணம்? காரணம், தவசீலர்கள் குறைந்து போனார்கள் என்பதுதான்.

அன்பே தவம் - 8

சிலர், `உண்ணாமல் இருந்தால் அது சிறந்த தவம்’ என்று நினைக்கிறார்கள். ஆனால், நம் நாட்டில் மூன்று வேளையும் வயிறார உண்பதற்கு வழியில்லாத கோடிக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள்; பசியோடு வாழ்கிறார்கள். உண்ணாமல் இருப்பதுதான் தவம் என்றால், அவர்கள் தவசீலர்கள் ஆகிவிடுவார்களே!

சிலருக்கோ, `வாய் பேசாமல் மௌன விரதம் காத்தால் அதுவே தவம்’ என்று நம்பிக்கை. நாட்டில் எத்தனை குழந்தைகள் பிறக்கும்போதே வாய் பேச இயலாதவர்களாகப் பிறக்கிறார்கள்? அப்படியென்றால், அந்தக் குழந்தைகளெல்லாம் தவசீலர்கள் ஆகிவிட மாட்டார்களா?

சிலருக்கோ, `பிரம்மசர்ய விரதம் காத்தல்தான் தவம்’ என்று நம்பிக்கை. காட்டிலிருந்து எத்தனை வன விலங்குகள் அவற்றின் காதல் வாழ்வின் இணைகள் பிரிக்கப்பட்டு, நாட்டில் மனிதர்களால் வளர்க்கப்படுகின்றன? பிறகு, அவை தவம் செய்ததாக ஆகிவிடாதா? எது தவம்... எது தவ வாழ்வு?

`உலகம் யாரால் இருக்கிறது?’ என்ற கேள்வியை எழுப்பி, அதற்கு விடையை அருமையாகச் சொன்னான் புறநானூற்றுப் புலவன் ஒருவன்... `தமக்கென வாழாமல், பிறர்க்கென யார் வாழ்கின்றார்களோ அவர்களால்தான் இந்த உலகம் இருக்கிறது. அவர்கள்தாம் தவசீலர்கள்.’

அந்தத் தவ வாழ்வைத்தான் அப்பர் பெருமான், `நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்; நரகத்தில் இடர்ப்படோம் நடலை யில்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோமல்லோம் இன்பமே யெந்நாளுந் துன்பமில்லை...’ என்று பாடினார்.

அடிமைப்பட்டுக் கிடந்த மக்களுக்கு, அறியாமையில் உழன்று கிடந்தவர்களுக்கு, அச்சமற்ற வாழ்வுதான் ஆன்மிக வாழ்வு என்று அடையாளம் காட்டினார் அப்பர். அப்படிப்பட்ட ஆன்மிக வாழ்வு இன்று மலர வேண்டும். ஒரு சமத்துவ, பொருளாதார வாழ்வு மலர வேண்டும் என்பதற்காக அப்பர் பெருமான் `இரப்பவர்க்கு ஈய வைத்தார்...’ என்ற பாடலில், `தேவைக்கு அதிகமாகச் செல்வம் வைத்திருக்கிறாயா... வருமானவரிச் சட்டத்துக்கு பயந்து பதுக்குகிறாயா... யாருக்கும் பகிர்ந்து கொடுக்காமல், தனக்கு தனக்கு எனப் பதுக்கிவைக்கும் உனக்குப் பிற்காலத்தில் நரகம்தான் கிடைக்கும்’ என்று எச்சரிக்கை மூலம், சமத்துவ சமூக அமைப்புக்கு சமய வழியில் வழிகாட்டினார்.

திருப்புகலூர்த் திருக்கோயிலில் உழவாரப் பணி செய்தார் திருநாவுக்கரசர். அப்போது ஓரிடத்தில் பொன்னும் மணியும் வைரமும் வெளிப்பட்டன. அவற்றைக் கூழாங்கற்களைப்போல தூர எறிந்தார். திருநாவுக்கரசருக்கு வாழ்வின் பின்புலமாக அவருடைய தமக்கையார் திலகவதி இருந்தார். திலகவதிக்குப் பேசப்பட்ட கணவர், போர்க்களத்தில் மாண்டுவிட்டார். அதன் பிறகு இனி திருமண வாழ்வு இல்லை என்று முடிவெடுத்துவிட்டார் திலகவதி. பெற்றோரும் இல்லை.  இருக்கிற ஒற்றை உறவு, தம்பி என்னும் ஒரே உறவு. தன் உயிரைத் துறப்பதற்கு முன்பு, தம்பிக்காகவே வாழ ஆசைப்பட்டார். அதனால் துறவு வாழ்க்கை வாழ்ந்தார். 

அன்பே தவம் - 8

தாலி என்ற பொன்வேலி அந்தப் பெண்மணிக்கு இல்லை. மங்கலநாண் ஒட்டி உறவாடுகிற இடம், நம் இதயம் துடிக்கிற இடம். ஒரு பெண்ணின் உயிர்த்துடிப்போடுதான் மங்கலநாண் உறவாடுகிறது. அவள் உயிர்த்துடிப்பு எப்போதும் அவள் கணவன் பெயரை உச்சரித்துக்கொண்டே இருக்கும். அப்படி நினைக்கிற பெண்ணுக்கு மங்கலநாண் இல்லையென்று ஆன பிறகு அந்த உயிர்த்துடிப்பு யாருக்கு? எல்லா உயிர்களுக்குமாகத் தன்னை அர்ப்பணிக்கிற நிலையில் அந்தப் பெண்மணி வாழ்ந்தார். `அம்பொன்மணி நூல் தாங்காது அனைத்துயிர்க்கும் அருள் தாங்கி வாழ்ந்தார்’ என்று சேக்கிழார் குறிப்பிடுகிறார்.

அருள் வாழ்வு என்பது எல்லாவற்றையும் துறந்து வாழ்வது. தன்னைத் துறந்தும், பிறர்க்காக வாழ்வது. அப்படிப்பட்ட அடியவர்களைத்தான் சேக்கிழார் பெரிய புராணத்தில் பாடியிருக்கிறார். அவர்களுக்குத் துன்பமும் இன்பமும் ஒன்றுதான். தமக்கு வரும் நன்மையும் தீமையும், வாழ்வும் தாழ்வும், சுகமும் துக்கமும், மகிழ்ச்சியும் கவலையும் ஒன்றுதான். ஓடும் செம்பொன்னும் ஒன்றுதான். வீடுபேறு, முக்தி கிடைக்கிறது; பரம்பொருள் இன்பத்தில் நீந்தித் திளைக்கலாம் என்றாலும், `வீடும் வேண்டாம்’ என்ற நிலையில், `என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று அருட்பணி செய்கிறவர்கள் அவர்கள்.

அந்த அடியவர்கள் துறவுநிலையில் நின்றாலும் மனிதகுலத்தின் உறவைப் பேணி, பாதுகாத்தார்கள். காரைக்கால் அம்மையார் தன் தசையைத் துறந்தார். எலும்பு வடிவமாகிய பேயுருவம் கொண்டார். ஆனாலும், தமிழைத் துறக்காத மங்கை. அதனால்தான் பேயுருவம்கொண்டு அந்த அம்மையார் வந்தபோது, சிவபெருமான், `வருகின்றார் எம் அம்மை காண்’ என்று உமையம்மையாரிடம் சொன்னார். பிறவாதவன், இறவாதவன்... ஆனாலும், அவருக்கும் ஒரு தாயின் அன்பு தேவைப்பட்டது போலும்.

இதைத்தான் மாணிக்கவாசகர், `பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து’ என்று குறிப்பிடுகிறார். `நினைந்தூட்டும் தாய்’ என்கிற சொல்லை, தாய்க்கு அடைமொழியாக மாணிக்கவாசகர் பயன்படுத்துகிறார். தாய்மார்களிலேயே பல தரவரிசைகள் உண்டு. குழந்தை அழுதால்கூட உடனே பால் தராத தாய்; குழந்தை அழும்போது மட்டும் பால் தருகிற தாய்; `குழந்தைக்குப் பசிப் பொழுது வந்துவிடுமே’ என்று நினைந்து, வேளையறிந்து, உணர்வறிந்து ஊட்டுகிற தாய்... அவள்தான் தாயினும் சிறந்த தாய்.

யார் நினைந்தூட்டும் தாய்? இறைவன்தான். திருச்சிராப்பள்ளி மலையின் மேலே `தாயும் ஆனவனாக’ இறைவன் இருக்கிறான். அவன் தாயாக மாறியவன். எப்போது? மகப்பேற்றுவலியால் ஒரு பெண் துடித்தாள். காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு. உற்றார், சுற்றத்தார், அன்னை யாரும் இல்லை. மகப்பேறு மருத்துவம் பார்க்க ஆள் இல்லை. அந்தப் பெண் வலியால் துடித்த அலறல் கேட்டு, திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டையிலிருந்த இறைவன் இறங்கி வந்தான். தாயாக, தாதியாக மாறி அந்தப் பெண்ணுக்கு வைத்தியம் பார்த்தான். அதனால் இறைவனுக்குப் பெயர், `தாயுமானவன்.’ 

கர்ப்பப்பையைச் சுமந்திருக்கும் பெண்களால்தான் தாய்மை என்ற இயல்பை அடைய முடியும். ஓர் ஆண் எப்போது தாயாக முடியும்? இதயத்தில் கருணையைச் சுரந்தால், ஆணும் தாயாக முடியும். கவியரசர் கண்ணதாசன், `தாய்மை என்பதுதான் இறைமை; இறைமைதான் தாய்மை’ என்பார். ஆனால், சமூகத்தில் என்ன நடக்கிறது?

ஓர் அம்மா புலம்புகிறாள்; உயிர்வலிக்கச் சொல்கிறாள்... `மகனே, நீ குடியிருக்க என் வயிற்றிலே இடமிருந்தது. நான் குடியிருக்க ஓர் அறைகூடவா இல்லை உன் வீட்டில்?’

பெற்றோர், மின்னஞ்சலில் ஒரு கண்ணீர்க் கவிதையை மகனுக்கு அனுப்பினார்கள். `மகனே, நீ பிறந்த அன்று நம் தோட்டத்தில் வைத்தோம் ஒரு தென்னங்கன்று. நாங்கள் வார்த்த தண்ணீரில் தென்னை வளர்ந்தது. அதுதான் எங்கள் இருவருக்கும் துணையாக இருந்து சுவை நீரும் தந்து உதவுகிறது. எங்கள் வியர்வையில்தான் நீ வளர்ந்தாய். ஆனால், நீ ஈட்டுகிற செல்வம் உனக்கு மட்டும்தான் இன்பம் தருகிறது. ஒருநாள் நீ இமெயிலில் மூழ்கியிருக்கிறபோது எங்களை ஈ மொய்த்த சேதியும் உனக்கு வந்து சேரும். அப்போதுகூட நீ வராமல்போனாலும், இந்தத் தென்னை ஓலையே எங்கள் கடைசி மஞ்சமாகும்.’ இப்படிப்பட்ட குடும்ப அவலத்தை நாம் என்னவென்று சொல்வது?

`ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்’ என்கிறார் திருவள்ளுவர். ஒரு தாய்க்கு, தன் மகனை ஊரும் உறவும் பாராட்டுவதும் சீராட்டுவதும்தான், தன் மகனைப் பெற்ற நாளைவிட மகிழ்ச்சி தரும் திருநாள்.

தந்தைக்கு எது மகிழ்ச்சி?

`மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை 
 
என்நோற்றான் கொல் என்னுஞ் சொல்.’ `இந்தத் தந்தை இவனைப் பெற என்ன தவம் செய்தாரோ?’ என்று உலகம் பாராட்டுவதுதான் தந்தைக்கு மகிழ்ச்சி.

இதுபோன்ற இனிமையான சொற்களை இன்றைய இளைய தலைமுறை, பெற்றோர்களின் காதுகளில் ஒலிக்கச் செய்ய வேண்டும்!

(புரிவோம்...)

அன்பே தவம் - 8

எது துறவறம்?

சு
வாமி விவேகானந்தர் தம் இளமைக்காலத்தில் துறவியாக ஆசைப்பட்டார். அம்மாவிடம் போய், ``அம்மா, நான் துறவியாக வேண்டும்’’ என்று சொல்லி அனுமதி கேட்டார். அவருடைய அம்மா அதற்கு உடனே பதில் சொல்லாமல், ``ஒரு கத்தியை எடுத்து வா!’’ என்றார்.

விவேகானந்தர் கத்தியை எடுத்து வந்து நீட்டினார். அம்மா, அவரைப் பார்த்துவிட்டு ``பிறகு பார்க்கலாம்’’ என்று சொல்லிவிட்டார்.

விவேகானந்தர் துறவியாக அனுமதி கேட்பதும், அம்மா அவரைக் கத்தி ஒன்றை எடுத்துவரச் சொல்வதும், விவேகானந்தர் எடுத்து வருவதைக் கவனித்துவிட்டு, ``பிறகு பார்க்கலாம்’’ என்று சொல்வதும் வழக்கமாகவே இருந்தது. ஒரு முறை, இரு முறை அல்ல... பல முறை இப்படி நடந்தது.

ஒருநாள் அம்மா, துறவறத்துக்கு அனுமதி தந்துவிட்டார். இப்போது சுவாமி விவேகானந்தர் தன் மனதிலிருந்த சந்தேகத்தை அம்மாவிடம் கேட்டார். ``அம்மா நான் துறவியாக வேண்டும் என்று அனுமதி கேட்கிற தருணங்களிலெல்லாம் நீங்கள் கத்தியை எடுத்து வரச் சொன்னீர்களே... கத்திக்கும் துறவறத்துக்கும் என்னம்மா சம்பந்தம்?’’

சுவாமி விவேகானந்தரின் அம்மா சொன்னார்... ``மகனே... நான் கத்தியை எடுத்துவரச் சொன்னேன் அல்லவா? அந்தத் தொடக்க காலங்களில் நீ நீட்டும் கத்தியின் கூர்மையான, ஆபத்தான பகுதி என்னை நோக்கி இருக்கும். பாதுகாப்பான கைப்பிடிப் பகுதி உன்னை நோக்கி இருக்கும். இப்படித்தான் பல முறை நீ கத்தியை எடுத்து வந்து நீட்டினாய். இப்போது சில முறைகளாகத்தான் கத்தியின் கூர்மையான, ஆபத்தான பகுதி உன்னை நோக்கியும், பாதுகாப்பான கைப்பிடிப் பகுதி எதிரேயிருக்கும் என்னை நோக்கியும் இருக்குமாறு எடுத்து வந்தாய். மகனே... துறவு என்பது ஆபத்தைத் தனக்கும், பாதுகாப்பைப் பிறருக்கும் வழங்குவதாக இருக்க வேண்டும். அந்த வாழ்க்கைக்கு நீ பக்குவப்பட்டுவிட்டதால்தான், உன்னை நான் இப்போது துறவறத்துக்கு அனுமதித்தேன்.’’