மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி பதில்: வைகுண்ட ஏகாதசியன்று திதி கொடுக்கலாமா?

கேள்வி பதில்: வைகுண்ட ஏகாதசியன்று திதி கொடுக்கலாமா?
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில்: வைகுண்ட ஏகாதசியன்று திதி கொடுக்கலாமா?

கேள்வி பதில்: வைகுண்ட ஏகாதசியன்று திதி கொடுக்கலாமா?

? என் உறவினருக்கு வைகுண்ட ஏகாதசியன்று திதி வருகிறது. அன்று திதி கொடுக்கக்கூடாது என்கிறார்கள். அப்படியானால், வேறு எந்த நாளில் திதி கொடுக்கலாம்?

- கி.ராமகிருஷ்ணன், புதுக்கோட்டை

கேள்வி பதில்: வைகுண்ட ஏகாதசியன்று திதி கொடுக்கலாமா?

ஒருவரின் பிறந்தநாளை, அவரது நட்சத்திரத்தின் அடிப்படையில் கொண்டாடுவதும், இறுதி நாளை அன்றைக்கு இருக்கும் திதியின் அடிப்படையில் வருடம்தோறும் அனுஷ்டிப்பதும் வழக்கம். அவர் மறைந்த மாதமும் திதியும் வரும் நாளில், வருடம்தோறும் சிராத்தம் செய்யவேண்டும். சிராத்தம் செய்வதைத்தான் `திவஸம்' என்றும் `திதி கொடுத்தல்' என்றும் குறிப்பிடுகிறோம்.

தங்களின் உறவினர் வைகுண்ட ஏகாதசியன்று இவ்வுலகை விட்டுச் சென்றிருப்பது அவருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பேறு. அன்றுதான் அவருக்கு சிராத்தம் செய்யவேண்டும். கர்மா செய்பவருக்கு, ஏதேனும் தவிர்க்க முடியாத காரணத்தால் அதைச் செய்யமுடியாமல் போனால் மட்டுமே, வேறு நாள் பார்க்கவேண்டும். மற்றபடி குறிப்பிட்ட திதியன்று திவஸம் செய்வதே சிறந்தது.

கேள்வி பதில்: வைகுண்ட ஏகாதசியன்று திதி கொடுக்கலாமா?இறந்தவருக்கு நாம் இங்கு செய்யும் கிரியைகள், அவர் எங்கு எந்த உருவில் இருந்தாலும் அவரைச் சென்றடையும். நாம் நம் கைப்பேசியில் அனுப்பும் குறுஞ்செய்தி வேறு ஒருவரின் கைப்பேசிக்குச்  செல்வதைப் போல், நமது சநாதன தர்மத்தில் செய்யக்கூடிய ஒவ்வொரு கிரியையும் அதற்குரிய பலனைத் தரவே செய்யும். இவை அனைத்தும் காலம் காலமாக நம் முன்னோர்களால் கடைப் பிடிக்கப்பட்டு வருபவையாகும். எனவே, ஒருவர் மறைந்த திதியில்தான் அவருக்குச் சிராத்தம் செய்யவேண்டும்.
 
? குடும்பத் தலைவன் செய்யும் புண்ணியங்களில் அவன் குடும்பத்தினருக்குப் பங்கு உண்டு என்றும் அவனுடைய பாவங்களில் பங்கு இல்லையென்றும் சொல்கிறார்கள். அதேபோல், குடும்பத்தவரின் புண்ணியங்களில் அவனுக்குப் பங்கு இல்லை என்றும் சொல்கிறார்களே, இது சரியா?

 -எஸ்.கல்யாணசுந்தரம், சென்னை - 94


புண்ணிய, பாவங்கள் ‘அத்ருஷ்டம்’ என்று குறிப்பிடப்படுகின்றன. இவற்றை நாம் நம் கண்களால் பார்க்க முடியாது. ஆனால், அவற்றை நாம் உணரலாம். எப்படி நம் உயிரை நம்மால் பார்க்க முடியாவிட்டாலும், உயிர் என்பதை ஒப்புக்கொள்கிறோமோ, அதேபோன்று புண்ணிய, பாவங்களை நாம் ஒப்புக்கொண்டால்தான், நமக்கு ஏற்படக்கூடிய நிகழ்வுகளின் மூலம் அவற்றை உணரமுடியும்.

‘ஸாயா ரூபேண ஸம்ஸ்திதா’ என்ற வரிகளின் மூலம், தேவியானவள் அனைத்து ஜீவராசிகளிலும் நிழல் போல் விளங்குகிறாள் என்று விவரிக்கிறது மார்கண்டேய புராணம். இங்கு நிழல் என்பது நம்  கர்மவினைகளைக் குறிப்பிடுவதாகும்.

அவரவர் செய்த வினைப்பயனை அவரவரே அனுபவிக்கவேண்டும். ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்று பெரியோர்கள் கூறுவர்.

ஒருவர் தன் குடும்பத்துக்காக ஒரு வழிபாடு செய்தால், அதன் பலன் குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்கும். ஆனால், அவர் தனக்கு மட்டும் செய்துகொண்டால் அதன் பலன் அவரை மட்டுமே சேரும். புண்ணிய பாவங்களை அனுபவித்து, இரண்டும் முழுவதுமாக தீர்ந்த பிறகே ஒரு ஜீவன் முக்தி அடைய முடியும். 

கேள்வி பதில்: வைகுண்ட ஏகாதசியன்று திதி கொடுக்கலாமா?

இவருக்கு இவர் மகனாகப் பிறக்கவேண்டும் என்பதுகூட புண்ணிய பாவங்களின் அளவைப் பொறுத்தே அமைகிறது. அனைத்தும் இறைவனின் திருவுள்ளத்தின்படியே நடைபெறுகின்றன.

பொதுவாக நாம் பேச்சு வழக்கில், ‘தந்தையார் செய்த புண்ணிய பலனை இவர் அனுபவிக்கிறார்’ என்று சொல்வோம். ஆனால், இவரும்கூட முற்பிறவிகளில் செய்த நற்காரியங்களின் அடிப்படையில்தான் நல்ல பெற்றோருக்கு மகனாகப் பிறக்க முடியும்.

நம் கடமைகளைத் தவறாமலும் நேர்மையுடனும் செய்வதன் மூலம் நம் புண்ணிய பாவங்களின் அளவுகளில் மாறுதல் ஏற்படுத்தி, புண்ணியத்தை அதிகரிக்கச் செய்யலாம்.  அவரவர் கர்மவினைகள் அவரவருக்கு. பாவக் கணக்கைக் குறைப்போம்; புண்ணியத்தைப் பெருகச் செய்வோம்.

? கோயில் சொத்துகளை அபகரிப்பவர்களும் தெய்வச் சிலைகளைத் திருடி விற்பவர்களும் நன்றாகத்தானே இருக்கிறார்கள். தெய்வக் குற்றம் என்பதெல்லாம் உண்மையில்லையா?

- எம்.ராமகிருஷ்ணன், சென்னை - 18


நம்முடைய செயல்கள் அனைத்தும் கடவுளால் கண்காணிக்கப்பட்டு, புண்ணிய பாவங்கள் நிர்ணயிக்கப்படும். அதன் அடிப்படையில்தான் நம் பிறப்பும் நிச்சயிக்கப்படுகிறது. தவறு செய்யும்  ஒருவர் சமுதாயத்தில் உயர்ந்த நிலையிலும் நல்ல நிலையிலும் இருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. வெளித்தோற்றத்துக்கு வேண்டுமானால் அப்படித் தோன்றலாம். ஆனால், தெய்வத்தின் தண்டனையிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது.

நம் சநாதன தர்மப்படி, ஓர் உயிரானது முக்திப்பேறு அடையும் வரை பல பிறவிகள் எடுக்கும் என்பார்கள். இதன் அடிப்படையில் பார்த்தால்,  நாம் இந்தப் பிறவியில் அனுபவித்து வரும் இன்பமோ அல்லது துன்பமோ... அது இந்தப் பிறவியை மட்டுமே சாந்ததல்ல என்பதை அறியலாம்; அவை, பல பிறவிகளின் தொடர்ச்சியே என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஆக, இந்தப் பிறவியில் தொடர்ந்து தவறு களைச் செய்துவரும் ஒருவர் நற்பலன்களையே அனுபவிக்கிறார் எனில், முன்னர் பல பிறவியில் அவர் செய்த நல்வினைகளின் பயனே அதற்குக் காரணமாகும். ஆனால், புண்ணிய பலன்கள் முடிந்துவிட்டால், நற்பலன்களை அனுபவிக்க முடியாது. இதுவே பொது நீதி. தெய்வக்குற்றம் என்பது கண்டிப்பாக அதற்கு உரிய பலனைக் கொடுக்கவே செய்யும். இந்தப் பிறவியிலோ அல்லது அடுத்தடுத்த பிறவிகளிலோ செய்த வினைக்கு ஏற்ப தண்டனையைப் பெற்றே தீருவார்கள்.  ‘அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்’ என்பது நம் முன்னோர் கூறிய சத்திய வாக்கு.

- பதில்கள் தொடரும்... 


`காளிகாம்பாள் கோயில்’ சிவஸ்ரீ  சண்முக சிவாசார்யர் படம்: கே.எம்.பிரசன்னா

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை `காளிகாம்பாள் கோயில்'  சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002