மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 19

ரங்க ராஜ்ஜியம் - 19
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம் - 19

இந்திரா சௌந்தர்ராஜன் - ஓவியம்: ம.செபடங்கள்: என்.ஜி.மணிகண்டன்

“ஏழை ஏதலன் கீழ்மகனென்னாது
இரங்கி மற்றவற்கு இன்னருள் சுரந்து
மாழை மான்மட நோக்கி உன் தோழி
எம்பி எம்பியென்றொழிந்திலை உகந்து
தோழன் நீ எனக்கு இங்கொழியென்ற
சொற்கள் வந்து அடியேன் மனத்திருந்திட
ஆழி வண்ண! நின்னடியிணையடைந்தேன்
அணி பொழில் திருவரங்கத்தம்மாளே!”

- பெரிய திருமொழி


காபலி, வாமனர் கேட்ட அந்த மூன்றடி நிலம் எனும் வரதானத்தை எண்ணி சிரியாய்ச் சிரித்தான். பின்னர், ‘`முனிபுத்ரரே… இது என்ன வேடிக்கை? பெரிதாய் ஆஸ்ரமத்தோடு கூடிய வனம், பல்லாயிரம் பசுக்கள் அல்லது நதி பாயும் கிராமம் அன்றேல் ஒரு நகரம், அதுவும் இல்லையென்றால்... பெரும் வேள்வியின் பொருட்டு தேவைப்படும் நவரத்தினங்கள் மற்றும் வேள்வி தானப் பொருள்கள்... இப்படி, உங்களுக்குப் பயன்பட வேண்டி யதைக் கேட்பீர்கள் என்று பார்த்தால், மூன்றடி நிலம் என்று கேட்டு என்னைச் சிரிக்கவைத்து விட்டீரே…  இது என்ன விளையாட்டு! தைரியமாக தேவைப்படுவ தைக் கேளுங்கள்.” - என்று மகாபலி தன் அசுரச் சிரிப்புக்குப் பின்னே சற்று காரியக்காரனாகவும் பேசினான்.

ரங்க ராஜ்ஜியம் - 19

“விளையாடவில்லை பலி… இதுவே என் விருப்பம்! பரந்துபட்ட இந்த உலகில், எனக்கென ஓரடி நிலம்கூட  இல்லை என்பதால் தான் மூன்றடி நிலம்கேட்டேன்.''

“இந்த உலகில் உங்களுக்கென ஓரடி நிலம்கூட இல்லையா! இது என்ன பேதைமை? அதற்காக மூன்றடி நிலம் போதும் என்பது எந்த வகையில் சரி? நான் பேரரசன்… புவனங்கள் அவ்வளவும் என் சொத்து! அப்படிப்பட்ட என்னிடம் நீங்கள் இந்த பூ உலகையே கொடு என்றுகூட கேட்கலாம். அதுவே எனக்கும் பெருமை. மாறாக மூன்றடி கேட்பது என் வரையில் சிறுமையிலும் சிறுமை.”

“அது சரி… நீ முதலில் இந்த மூன்றடி நிலத்தைத் தா. பிறகு உன் விருப்பப்படி நீ சொன்னது போல் இந்த உலகைக் கேட்கிறேன். இது உன் சொந்தமாகத்தான் இருக்கிறது என்றால், இதில் மூன்றடியை நீ முதலில் எனக்குத் தந்தால் போதும்.”

“வேடிக்கையான மனிதர் நீங்கள்! சரி, அந்த மூன்றடி இடம் எங்கு வேண்டும், எத்திசையில் வேண்டும்... சொல்லுங்கள். உங்களுக்குத் தரவேண்டியதைத் தந்து விட்டு, நான் அடுத்த காரியத்தைச் செய்கிறேன்.”

“பேச்சு மாற மாட்டாயே?”

“இதென்ன கேள்வி? நான் மாபலி… பேரரசன்.”

“யாராக இருந்தால் என்ன? சொன்னதைச் செய்பவரும், சொன்னபடி நடப்பவருமே எனக்கும் மிக பிடித்தமானவர். சரி... நான் கேட்கும் இடத்தில் காலை வைப்பேன். அந்த அடியை நீ எனக்குச் சொந்தமாக்கிவிட வேண்டும். சரிதானே?”

“தாராளமாக…”

“இது போதாது… உறுதி தர வேண்டும்.”

“உறுதியா… நானா? போயும் போயும் மூன்றடிக்கா?”

“அதற்கேதான்!”

ரங்க ராஜ்ஜியம் - 19

“நீர், தோற்றத்தில் மட்டும் சிறு பிள்ளை இல்லை… பேச்சு, செயல் என்று சகலத்திலும் சிறு பிள்ளைதான். சரி, உறுதி தருகிறேன் போதுமா?”

“சொன்னால் ஆயிற்றா? மணப்பெண்ணைப் பெண்ணின் தந்தை தாரை வார்த்துத் தருகின்ற மாதிரி, புண்ணிய ஜலத்தால் தரவேண்டும்.”

“சரி… இன்னமும் ஏதாவது இருக்கிறதா?”

“இல்லையில்லை… அவ்வளவேதான்!”

வாமனர் அமரிக்கையாகச் சொல்ல, ஒரு கமண்டலத்தில் புண்ணிய ஜலம் கொண்டு வரப் பட்டது. அதுவரை அமைதியாக இருந்த சுக்கிராசார்யருக்குள் பெரும் பிரளயமே உருவாகத் தொடங்கிவிட்டது. அவரால் கூட, அந்த மூன்றடி நில சூட்சுமத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே ஒரு காரியம் செய்யத் தீர்மானித்தார்.

ஒரு சிறு கரு வண்டாக மாறி, கமண்டலத்தின் துவாரம் வழியே வெளிப்படும் புண்ணிய ஜலம், அதன் வழியே வெளிப்படாதபடி, துவாரத்தை அடைத்துக்கொண்டு விட்டால் செயல் தடைப் படும். செயல் தடைப்பட்டால், அது சகுனத் தடையாக கருதப்பட்டு, இந்த மூன்றடி தானம் இப்போது இல்லை என்றாகும்.

இப்போதைக்கு இதைவிட வேறு எந்தக் காரியத்தையும் செய்ய இயலாது என்பதும் அவருக்குப் புரியவே, அங்கிருந்து மெள்ள நீங்கி, தன் தபோ சக்தியால் தன்னை ஒரு கருவண்டாக ஆக்கிக்கொண்டார். அப்படியே பறந்து திரியத் தொடங்கியவர், மகாபலி கொடுக்க ஆயத்தமான கமண்டலம் மேலேயே பறக்கத் தொடங்கினார்.

மகாபலியும் ‘உம் நான் தயார்’ என்று கூறவும், ‘சற்றுப் பொறு’ என்ற வாமனர் விசுவரூபம் எடுக்கத் தொடங்கினார். அதைக் கண்ட மகாபலி மட்டுமல்ல எல்லோருமே அதிசயித்தனர். விண்ணுக்கும் மண்ணுக்குமாய் தாழங்குடையோடு நின்ற வாமனர், காலை உயர்த்தியபோது அது சுழலும் பூமி உருண்டையின் விட்ட பாகத்தை விடவும் அகலமாக இருந்தது. மகாபலி விதிர்த் தான். அந்த ஓர் அடிக்குள் மொத்த பூ உலகமும் அடங்கிவிட்டது!

அடுத்து, அதே காலை விண்ணை நோக்கி உயர்த்தவும், பாதமே கண்களுக்குப் புலனாகாத அளவு உயர்த்தப்பட்ட கால்களைச் சுற்றிலும் சூர்ய சந்திரர் முதல் நட்சத்திர தேவதாதேவியர்கள் தெரிந்தனர். மகாபலி விதிர்ப்பின் உச்சத்துக்குச் சென்றது மட்டுமல்ல, சுக்ராசாரியர் தடுத்ததன் நோக்கத்தைப் புரிந்துகொண்டு, அவரைத் தேடவும் செய்தான்.

ரங்க ராஜ்ஜியம் - 19

அவரோ கமண்டல துவாரத்தில் வண்டாகப் புகுந்து அடைத்துக்கொண்டிருந்தார். அடுத்த மூன்றாவது அடிக்காக வாமனர் மகாபலியைப் பார்க்கவும், மகாபலி தெளிந்தவனாக “எம்பெருமானே… என் சிரத்தில்தான் துளி இடம் உள்ளது. மற்றபடி உமக்கு நான் தர புவனத்தில் எங்கும் இடமில்லை'' என்று கை கூப்பியபடி மண்டியிட்டுப் பணிந்தான்.

ஓங்கி உலகளந்த அந்தக் கால்களின் திருவடியை மகாபலியின் சிரத்தின் மேல் புன்னகையோடு வைத்தார் வாமனரும்! அப்படி அவர் காலடி பட்ட மாத்திரத்தில் அவன் சிரத்தில் ஒரு சிலிர்ப்பு!

அத்துடன், கமண்டல வாயின் வழியே புண்ணிய நீரை வரவழைத்து, தன் உள்ளங்கையில் பற்றி தாரை வார்த்துத் தர மகாபலி விழையவும், நீர் வராது உள்ளிருக்கும் சுக்ராசார்யர் வண்டு வடிவில் தடுத்தபடி இருந்தார். அதைக் கண்டு மகாபலி பதற்றமடைய, வாமனரோ துளியும் பதற்றமின்றி சொன்னார்.

“கலங்காதே மகாபலி! ஏதோ அடைப்பு போல் தெரிகிறது. தர்ப்பையைக் கொண்டு குத்திவிட்டால் போகிறது” என்று தர்ப்பைப் புல்லை வரவழைத்து, கமண்டல துவாரத்தின் உள்ளே விட்டு, அங்கே  வழியை அடைத்தபடி இருக்கும் சுக்ராசார்யரை குத்தவும், கச்சிதமாக அவரது ஒரு கண்ணில் தர்ப்பை நுனிபட்டு, அதிலிருந்து ரத்தம் கொட்டத் தொடங்கியது.

இங்கோ, புண்ணிய ஜலம் பாய்ந்து மூன்றடி நிலம் வாமனரின் சொந்தம் ஆனது மட்டுமல்ல, மகாபலி சொன்னபடி நடந்தவன் என்றானான்! அப்படியே சாஷ்டாங்கமாய் வாமனர் காலில் விழுந்து ‘`எம்பெருமானே! அறிவு, அடக்கம், ஆற்றல் என்று சகலத்திலும் உங்களை விஞ்ச ஓருயிர் இந்த ஈரேழு புவனத்திலும் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டேன். நான், எனது, என்னுடையது போன்ற சொற்களால் ஆவதும் ஒன்றுமில்லை என்பதையும் புரிந்துகொண்டேன். என்னை மன்னியுங்கள்... என்னை இரட்சியுங்கள்... என்னை ஆட்கொள்ளுங்கள்...'’ என்று கதறத் தொடங்கிவிட்டான் மகாபலி!

நீலிவனத்து ரிஷி கிளிச்சோழனிடம் வாமன அவதாரத்தின் பொருள் பொதிந்த செயல்பாட் டைச் சொல்லி முடித்தவராய், `‘பாவம் சுக்கிராசார்யர்… தான் எனும் அகம்பாவமும், சுயநலமும் அவரின் ஒரு கண்ணைக் குருடாக்கின என்றால், மகாபலிக்கு பெரும் ஞானத்தை அளித்தன. `எம்பெருமானாம் அந்த இறைவனன்றி அணுவில்லை... அவனே சர்வவியாபி… அவனே சர்வக்ஞன்' என்பதை மகாபலியும் புரிந்துகொண் டான். இப்போது நீயும் புரிந்துகொண்டிருப்பாய்'' என்றார்.

“ஆம் மகரிஷி… எம்பெருமானின் திருச்செயல் கள் அவ்வளவும் மனிதக் குலத்துக்கு பெரும் பாடம்! கேட்கக் கேட்க எனக்குத் திகட்டவில்லை. மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம் என்கிற அவதாரங்கள் எனக்குப் பல நுட்பங்களை உணர்த்தின. ராமாவதாரமும் கிருஷ்ணாவதாரமும் கூட அப்படித்தானா?”

“இடையில் பரசுராமனையும், பலராமனையும் விட்டுவிட்டாயே..?”

“இந்த அவதாரங்களை எல்லாமும் தாங்கள் இதேபோல் விளக்கமாய் எனக்குக் கூறவேண்டும்.”

“ஒன்றை நன்றாய் தெரிந்துகொள். அவன் பெயரைச் சொல்லவே உள்ளது இந்த நாவு. அவனைப் பற்றி சிந்திக்கவே உள்ளது மனம். அவனைக் காண்பதற்கே இக்கண்கள் படைக்கப் பட்டன. ஆனால், நாம் இவ்வுலக மாயையில் மயங்கி இவற்றை எப்போதாவது செய்பவர்களாக உள்ளோம். நீ மயங்கிவிடாமல் எம்பெருமானை விதவிதமாய்ச் சிந்திக்க, இந்த அவதாரக்கதைகள்  உனக்குப் பெரிதும் உதவும். உனக்குச் சொல்லும் சாக்கில், நானும் சிந்தித்து பாக்யவானாவேன்” என்றார் மகரிஷி!

கிளிச்சோழனின் காலத்துக்குப் பிறகு, திருவரங்கம் ராஜமகேந்திர சோழனால் சீர்மை பெறத் தொடங்கியது. குறிப்பாய்... காவிரியில் வெள்ளம் பாயும் தருணங்களில், அரங்கத் தீவில் தெற்கிலும் வடக்கிலும் கிழக்கு மேற்காய் ஓடிடும் காவிரி, தெற்கில் கோயிலின் ராஜகோபுரம் கடந்து உள்புக முற்படுவதும், அதேபோல் வடக்கிலும் கொள்ளிட நீர் ஆலயத்துள் புகமுற்படுதுவதும்  அதிகமாயிற்று!
 
இக்காலங்களில், பக்தர்கள் எம்பெருமானை தரிசிக்க இயலாமல் போனது. இதை அறிந்த ராஜமகேந்திரன் வடக்கிலும் தெற்கிலும் ஆலயத்து மதில் கடந்து உள் புகும் நீரின் ஊற்றுக்கண்களைக் கண்டறிந்து அடைத்ததோடு, இங்கெல்லாம் மண்ணில் நீர் பொங்கியெழ இயலாதபடி தள வரிசையை உருவாக்கி, நீர் ஊற்றுப் பெருகி வருவ தைத் தடுத்து, அந்த நீரும் ஆற்றோடு ஓடும்படி செய்தான். அடுத்தடுத்து நடந்த திருப்பணிகளால், திரு உண்ணாழிச் சுற்று, `ராஜமகேந்திரன் சுற்று' என்று பெயர்பெற்றது.

- தொடரும்