ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!
முதல் வணக்கம் முதல்வனுக்கே!

என்னை நினைந்தடிமை கொண்டுடன் இடர்கெடுத்துத்
தன்னை நினையத் தருகின்றான் - புன்னை
விரசு மகிழ் சோலை வியன் நாரையூர் முக்கண்
அரசு மகிழ் அத்தி முகத்தான்.

- நம்பியாண்டார் நம்பிகள்

பொருள்: புன்னையும் மகிழ மரங்களும் அடர்ந்த சோலையால் சூழப்பெற்ற திருநாரையூரில் கோயில் கொண்டுள்ளார் முக்கட் பரமனாகிய சிவபெருமான். அவர் மகிழும் வண்ணம் முதல் மகனான விநாயகப் பெருமான் அங்கு விளங்குகின்றார். யான் அவரை நினைத்திடும் ஆற்றல் பெறுவதற்கு முன்பே, என் மேல் மிக்க கருணை கொண்டு என்னை ஆட்கொண்டார். எனது துன்பங்களை நீக்கித் தன்னை இடைவிடாது நினைத்துப் போற்றும் ஆற்றலை அப்பெருமான் எனக்கு அருள்கிறார்.

திருநாரையூர்

முதல் வணக்கம் முதல்வனுக்கே!
##~##
லகில் அனைத்து நலன்களும் நிறைந்த திருநாரையூரில் அருளும் ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீசுந்தர நாயகப் பெருமானை சிரத்தையுடன் பூஜித்து வந்தார், சந்திரசேகர சிவாச்சார்யர். அவரின் மகள் வயிற்றுப் பேரன் அனந்தேச்வரன். அவனும் இந்த இறைவனை அன்புடன் பூஜித்து வந்தான்.

அந்த வருடம், அவனும் அவன் மனைவி கல்யாணியும், வைகாசிப் பௌர்ணமி துவங்கி சதுர்த்தி வரை, அங்கே அருளும் பொள்ளாப் பிள்ளையாருக்கு விழா நடத்தி மகிழ்ந்தனர். (பொள் ளுதல் = உளியால் செதுக்குதல்) பொள்ளாப் பிள்ளையார் என்றால், உளியினால் செதுக்கப்படாத சுயம்புமூர்த்தி என்று பொருள். இவருக்கு 'நம்பியாண்டார்’ என்றும் பெயர் உண்டு.

மறுவருடம், வைகாசிப் பௌர்ணமியில், சுவாதி நட்சத் திரம்- ரிஷப லக்னத்தில், அவர் களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. மகனுக்கு, 'பக்த பாலசுபத்தன்’ எனப் பெயரிட்டனர். மூன்று வயதிலேயே அந்தக் குழந்தை, தன் தகப்பனார் பொள்ளாப் பிள்ளையாருக்கு பூஜை செய்வதை உன்னிப்பாகக் கவனிப்பான். விளையாடப் போகும் இடத்தில், அரச மரத்தடியில் இருக்கும் கணபதி சிலைக்கு, காய்ந்த சருகு களால் மாலை கட்டி சாத்துவான். சேற்றையே சந்தனமாகக் கருதி, அன்போடு பூசுவான். அதுமட்டுமா? மோதகம், திவ்ய அன்னம், லட்டு முதலான பட்சணங்களையும் மண்ணால் கற்பித்து, நைவேத்தியம் செய்வான். பழங்கள், தட்சணையை பாவனையாக வழங்கி பூஜிப்பான். பிறகு, ''ஸ்வாமி, நிவேதனங்களைச் சாப்பிடுங்கள்'' என்று வேண்டுவான். அதனால், விநாயகர் சைதன்யம் அந்த விக்கிரகத்தில் விளங்கியது.

அவனால் என்னென்ன மண் பொருட்கள் என்னென்ன நிவேதனமாக வைக்கப்பட்ட னவோ, அது அது அந்தந்த பட்சணமாகவே மாறின. அவற்றை விநாயகரும் விரும்பி உண்பார். இவ்விதமாக அந்த பாலகன், பல நாட்களாக பூஜித்து வந்தான். இது, அவன் பெற்றோருக்குத் தெரியாது. நாட்கள் நகர்ந்தன. விநாயகரின் திருவருளால் கல்வி- கேள்வி மற்றும் அனைத்து வித்தைகளையும் கற்றான். உரிய பருவத்தில் உபநயனம், சிவ தீட்சை முதலானவை செய்யப்பட்டது.

ஒருநாள், அனந்தேச்வரன் தன் மகனைப் பொள்ளாப் பிள்ளையாருக்கு பூஜை செய்து வருமாறு அனுப்பினார். குழந்தையாக இருந்த போது, தினமும் கணபதியை பூஜித்து, நைவேத்தியத்தை ஏற்கும்படி வேண்டுவான் அல்லவா? அதேபோல, பொள்ளாப் பிள்ளையாரிடமும் வேண்டினான் விநாயகரும் திருவமுது செய்தார். சிறுவன் வெறும் பாத்தி ரத்துடன் வீடு திரும்பினான். அனந்தேச்வரன், ''பிரசாதம் எங்கே?'' எனக் கேட்டார். ''பொள்ளாப் பிள்ளையார் சாப்பிட்டுட்டார்'' என்றான் மகன்.

''இதென்ன ஆச்சரியம்?'' என வியந்தாள் அன்னை கல்யாணி. தந்தை அனந்தேச்வரனோ, ''என் தந்தையின் பாட்டனார் காலம் முதல் இந்த கணபதி நமக்குக் குலதெய்வம். நம் மகன் மீது கொண்ட கருணையால், நம்பியாண்டாராகிய கணபதி, இவன் நிவேதித்த அன்னத்தை திருவமுது செய்திருப்பார். நானும் இவனுடன் சென்று, அந்த நிகழ்ச்சியைப் பார்த்து உறுதி செய்வேன்'' என்றார்.

மறுநாள் சித்ரா பௌர்ணமி. மகன் பூஜைக்குப் புறப்பட்டான். அனந்தேச்வரனும் மனைவியுடன் கோயிலுக்குச் சென்றார். சிறுவன் பூஜை திரவியங்களால் பூசித்து அன்னம், மோதகம் ஆகியவற்றை நிவேதித்தான்.

''எம்பெருமானே! திருவமுது செய்யுங்கள்'' என பிரார்த்தித்தான். பொள்ளாப் பிள்ளையாரும், அவை எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டார். அதைக் கண்டு அங்கு இருந்தவர்கள் சிலிர்த்தனர். அப்போது, அனைவருக்கும் கேட்கும்படி பொள்ளாப் பிள்ளையார் பேரொலி செய்தார். அந்த பாலகனுக்கு 3-வது

வயதிலேயே பக்தி உண்டானதையும், அவனது பக்திக்கு  வசமாகி, தாம் அவனுக்கு அருள் செய்ததையும் கூறினார். ''என் பக்தர் களுக்குள் சிகாமணியாகத் திகழும் இவன், நம்பியாண்டார் நம்பி என்று அழைக்கப் படுவான். இவனது பக்தியால், இங்குள்ள அனைவருக்கும் தரிசனம் தரப்பட்டது. உலகில் சைவ சமயத்துக்கும் பக்தி மார்க்கத்துக்கும் பெரும் தொண்டாற்றப் போகிறான் இந்தப் பாலகன்'' என்றும் அருள்புரிந்தார்.

அந்தக் காலத்தில் சோழ நாட்டை ஆண்ட அபயகுலசேகர சோழன், நம்பியாண்டார் நம்பியின் பெருமைகளைக் கேள்விப்பட்டு, விநாயகருக்கு விருப்பமான பட்சணங்களுடன் திருநாரையூருக்கு வந்து, நம்பியை வணங்கி னான் (ராஜராஜ சோழன் என்றும் ஒரு கருத்து உண்டு).  ''இந்த நைவேத்தியங்களை கணேசருக்கு நிவேதனம் செய்தருள்க'' என்று பிரார்த்தித் தான். நம்பியும் அவ்வாறே செய்ய, கணபதியும் அவற்றை துதிக்கையால் எடுத்து உண்டார்.

அவரிடம், ''ஸ்வாமி! மறைந்திருக்கும் தமிழ் வேதமாகிய தேவாரப் பாடல்களை, மீண்டும் கிடைக்க அருள வேண்டும்.'' என்று வேண்டினான் அரசன்.

ஆனைமுகனின் அனுக்கிரகத்தால், சிதம்பரம் கோயிலின் சிற்சபைக்கு அருகில் ஓர் அறையில், தேவாரப் பாடல் சுவடிகள் இருப்பது தெரியவந்தது. அரசனுடன் அந்தக் கோயிலை அடைந்து ஸ்ரீநடராஜரை வணங்கிய நம்பியாண்டார் நம்பி, 'கோயில் திருப்பண்ணியர் விருத்தகம்’ எனும் அற்புதப் பாமாலையைச் சூட்டினார். சோழனும், நம்பிகளுடன் சேர்ந்து தேவாரப் பாடல் சுவடிகளை வெளிக் கொணர்ந்தான். பிறகு, அரசனின் வேண்டுகோள்படி,  பாடல்களைத் திருமுறைகளாக வகுத்தார் நம்பிகள்.

சிதம்பரம்- காட்டு மன்னார்குடி வழியில் உள்ளது திருநாரையூர். நாரை வழிபட்டதால் இப்பெயர் வந்தது. திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் பாடியுள்ளனர். இங்கு, பொள்ளாப் பிள்ளையார் 8 திருவிளை யாடல்களைச் செய்தருளியதாகத் தலபுராணம் குறிப்பிடுகிறது. பொள்ளாப் பிள்ளையார் மீது நம்பியாண்டார் நம்பிகள் பாடிய இரட்டை மணிமாலை மற்றும் பிரபந்தங்கள் 11-ஆம் திருமுறையில் உள்ளன.

- பிள்ளையார் வருவார்...
படங்கள்: ந.வசந்தகுமார்