Published:Updated:

நாளை கூடாரவல்லி வைபவம்: ஆண்டாளின் வேண்டுதலை ராமாநுஜர் நிறைவேற்றிய கதை!

பக்தியால் ராமாநுஜர் பூதேவியையே தமக்கையாகப் பெற்றார். அதனாலேயே அவருக்குக் `கோயில் அண்ணன்' என்கிற திருநாமமும் ஏற்பட்டது. இன்றும் கூடாரவல்லி திருநாளில் இந்த வைபவம் நினைவுகூரப்படுகிறது.

நாளை கூடாரவல்லி வைபவம்: ஆண்டாளின் வேண்டுதலை ராமாநுஜர் நிறைவேற்றிய கதை!
நாளை கூடாரவல்லி வைபவம்: ஆண்டாளின் வேண்டுதலை ராமாநுஜர் நிறைவேற்றிய கதை!

நாளை கூடாரவல்லி. மனதாலும் வாக்காலும் இறைவனைக் கூடாமல் இந்த உலகத்து இன்பங்களோடு கூடியிருக்கும் ஆன்மாக்களையும் பரந்தாமன் வெல்லும் திறத்தை உரைக்கும் பாசுரம் `கூடாரைவெல்லும் சீர்கோவிந்தா'. இந்தப் பாசுரம் மார்கழி 27-ம் நாள் அன்று இசைக்கப்படுகிறது. அந்த நன்னாளில் பெருமாளுக்கு அக்கார அடிசலும், வெண்ணெய்யும் நிவேதனம் செய்யப்படும். 

ஆண்டாள், தன்னை ஶ்ரீரங்கனோடு சேர்ப்பித்தால் திருமாலிருஞ்சோலையில் கோயில் கொண்டிருக்கும் கள்ளழகருக்கு நூறு தடா அக்கார அடிசிலும் நூறு தடா வெண்ணெய்யும் சமர்ப்பிப்பதாக வேண்டிக்கொண்டாள்.

நம் முன்னோர்கள் சொல்லும் ஒரு பழமொழி `தெய்வக்கடன் நூற்றாண்டு'. பக்தர்கள் கோரிக்கையை நம்பிக்கையோடு இறைவனின் பாத கமலங்களில் வைப்பதே போதுமானது. ஆனால், சிலர் தங்களின் கோரிக்கைகள்  நிறைவேறும் பொருட்டு இறைவனிடம் நேர்ந்துகொள்வதும் உண்டு. அப்படி நேர்ந்துகொண்டவர்கள், கோரிக்கை நிறைவேறின பின்பு அதை மறந்துவிடுவதும் உண்டு. 

பின்னொரு நாளில் ஏதோ ஒரு காரியத்தடை ஏற்பட்டுக் கவலையுறும் நாளில், அவர்களுக்குத் தங்களது பழைய வேண்டுதல்கள் நினைவுக்கு வருவதுண்டு. இறைவனிடம்  நிறைவேற்றாத வேண்டுதல்களுக்காக  மனதில் குற்ற உணர்ச்சி கொண்டு வருந்துவர்.  அது அர்த்தமற்ற செயல். இறைவன் மேல் பக்தி செய்வதை மறத்தல்தான் தவறு. வேண்டுதல்களை மறப்பதோ நிறைவேற்றாமல் இருப்பதோ தவறில்லை; அதைக் கருணையே வடிவான இறைவன் பொருட்படுத்துவதுமில்லை. நம்முடைய மனத் திருப்திக்காக, வாய்ப்புக் கிட்டும்போது அதை நிறைவேற்றலாம் என்பதை நமக்குச் சுருக்கிச் சொல்லுவதுதான் `தெய்வக்கடன் நூற்றாண்டு' என்னும் வழக்கு.  
ஆண்டாள், பூமிப் பிராட்டியின் அவதாரம். அவள் கோவிந்தனை அடைவதையே தன் லட்சியமாகக் கொண்டவள். அதற்காக அவள் நாள்தோறும் வேண்டுதல்கள் வைத்தபடியே இருந்தாள். அப்படி அவள் பாடிய பாசுரங்களில் ஒன்று `நாறு நறும் பொழில்' என்னும் பாசுரம். 

நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான் 
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்; 
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் 
ஏறுதிருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ

இந்தப் பாசுரத்தில் ஆண்டாள், ``மாலிருஞ்சோலையில் வாழும் நம்பியே, என்னைக் கோவிந்தனோடு சேர்த்துவைத்தால் உனக்கு நூறு தடா அக்கார அடிசிலும், நூறு தடா வெண்ணெய்யும் நான் சமர்ப்பிக்கிறேன் " என்று வேண்டிக்கொள்கிறாள். பிறிதொருநாளில் ஆண்டாள், ரங்கமன்னாரோடு இரண்டறக் கலந்தாள்.

மானுடப் பெண்ணாக இருந்தவள் இறைவனோடு கலந்தபின் அவளும் இறைவனும் வேறுவேறல்ல. இனி அவளுக்கு அவளே நிவேதனம் செய்துகொள்ள அவசியமும் இல்லை. ஆண்டாள் செய்தது பெயரளவிலான ஒரு வேண்டுதல். அவள் தனது பாசுரத்திலேயே 'வாய்நேர்ந்து 

பராவி' என்றுதான் சொல்கிறாள். இறைவனுக்கு விருப்பமானவற்றை அவனுக்கு நிவேதனம் பண்ணுவதன் பலனையும், அதுவும் இயலாதவர்கள் மனதுள் நிவேதனம் பண்ணுவதுபோன்ற பாவனை செய்வதன் பலனையும் விளக்கும் ஓர் அற்புதச் சூத்திரம். அவள் தன் வாய்ச்சொல்லால் வேண்டிக்கொண்டாள். அதன் பயனையும் அடைந்தாள். 

ஆண்டாள் வாழ்ந்த காலம் கி.பி. 7-ம் நூற்றாண்டு என்று சொல்லப்படுகிறது. அவளுக்குப் பின் முந்நூறு ஆண்டுகள் கடந்து அவதரிக்கிறார் ராமாநுஜாசார்யர். அவர் ஆண்டாளின் வேண்டுதல்களைப் படித்தபோது, அவருக்குள் ஓர் எண்ணம் தோன்றுகிறது. `வாக்காலோ மனதாலோ ஆண்டாள் தாயார் இதை வேண்டிக்கொண்டுவிட்டாள். ஆனால், அதை அவளால் நிறைவேற்ற இயலவில்லை' என்ற மனத்தாங்கல் அவருக்கு ஏற்பட்டது. அன்னையின் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்று திருவுளம் கொண்டார். 

பிள்ளைகளுக்காக, சகோதர உறவுகளுக்காகப் பெற்றோர்களும் சகோதர சகோதரிகளும் வேண்டிக்கொள்வதுண்டு. அவர்களால் நிறைவேற்ற இயலாத சூழல் எழும்போது அதைப் பெற்றோரோ, சகோதர உறவுகளோ நிறைவேற்றுவது உலக வழக்கம். அப்படித்தான் ராமாநுஜர், ஆண்டாள் நாச்சியாரின் வேண்டுதலை நிறைவேற்ற முடிவு செய்தார்.
நூறு தடா அக்கார அடிசலும் நூறு தடா வெண்ணெய்யும் செய்வித்து கூடாரவல்லி நாளில் இறைவனுக்குப் படைத்தார். இதைக் கண்ட கோதை நாச்சியாரின் உள்ளம் நெகிழ்ந்தது. தன் பொருட்டு வேண்டுதலை நிறைவேற்றியவனை எண்ணிப் பூரிப்படைந்தாள். பூமாதேவியான ஆண்டாளின் தந்தை என விஷ்ணுசித்தர் இருக்க, ஒரு தமையனைப் போலத் தன் வேண்டுதல்  நிறைவேற்றிய ராமாநுஜரை அவள் தனது அண்ணனாகவே ஏற்றுக்கொண்டாள். 

ஒரு சிறு குழந்தையின் வடிவெடுத்து, கர்ப்பகிரகத்திலிருந்து ராமாநுஜரை `அண்ணா' என்றழைத்து ஓடிவந்து கட்டிக்கொண்டாள். என்னே பாக்கியம்! பக்தியால் ராமாநுஜர் பூதேவியையே தமக்கையாகப் பெற்றார். அதனாலேயே அவருக்குக் `கோயில் அண்ணன்' என்கிற திருநாமமும் ஏற்பட்டது. இன்றும் கூடாரவல்லி திருநாளில் இந்த வைபவம் நினைவுகூரப்படுகிறது. அக்கார அடிசலும், வெண்ணெய்யும் பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்படுகிறது. 

நாளை கூடாரவல்லி, வாருங்கள், ராமாநுஜரைப் போல நாமும் அக்கார அடிசலும் வெண்ணெய்யும் சமர்ப்பித்து அவன் திருவடிகளைத் தொழுது நற்பேறு பெறுவோம்.