மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 21

சிவமகுடம் - பாகம் 2 - 21
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - பாகம் 2 - 21

சிவமகுடம் - பாகம் 2 - 21

சிவமகுடம் - பாகம் 2 - 21

திருச்சந்நிதியில் சம்பந்தப்பெருமான் கண்மூடி வணங்கியபடியிருக்க, அவரின் திருவடியில் கிடத்தப்பட்டிருந்தாள் அந்த இளம்பெண்.

அவள், அவ்வூரின் அதிபதி கொல்லிமழவனின் மகள்!

ஒளிர்ந்தது திருமுகம்... உதிர்ந்தது கொன்றை!

`நமசிவாயம்... நமசிவாயம்...’ என்றபடியே ஆலயத்துக்குள் வெகுவேகமாகப் பிரவேசித்த சேவகன் ஒருவன், ஆலய வாயிலிலிருந்தும் வேகத்தைக் கைவிடாமல் விரைந்து சென்று சுவாமி சந்நிதியை அடைந்தான்.

சற்றுநேரத்துக்கு முன்புவரை திடலில் கூடியிருந்த கூட்டம், இப்போது சந்நிதியில் கூடிநிற்க, மீண்டும் `நமசிவாயம்... நமசிவாயம்...’ என்று வெகு சத்தமாய் உச்சரித்து கூட்டத்தின் கவனத்தை ஈர்த்து, அவர்களை விலக்கி, தனக்குத் தானே வழியேற்படுத்திக்கொண்டு சந்நிதி முன் வந்து நின்றான்.

கணப்பொழுது நிதானித்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்ட பிறகு, சிரத்துக்கு மேலாக கரங்களை உயர்த்திக் கூப்பி, தென்னாடுடைய ஈசனை - திருப்பாச்சிலாச்சிராமத்து நாதனை வணங்கித் தொழுதான். பின்னர், சிவப் பெரியவரின் அருகில் வந்து மிகப் பணிவோடு அவரின் காதருகில் ஏதோ சொன்னான்.  பெரியவரின் திருமுகம் மலர்ந்தது.

‘‘நன்று... மிக்க நன்று... சிவம் சித்தம் அதுவானால் அப்படியே செய்து விடுவோம்’’ என்றவர், தொடர்ந்து அவனிடம் கேட்டார்.

‘‘அதிபதி, தன் மகளை அழைத்துக்கொண்டு எப்போது வருகிறார்?’’

சிவமகுடம் - பாகம் 2 - 21

‘‘இந்நேரம் அவரின் திருமாளிகையிலிருந்து புறப்பட்டிருப்பார். ஆனால், அங்கிருந்த படியே கோயிலுக்கு வருகிறாரா அல்லது எல்லைக்குச் செல்கிறாரா என்று தெரியவில்லை. சிவக்கொழுந்தை வரவேற்க ஊர் எல்லைக்குச் செல்லும் எண்ணமும் அவருக்கு இருக்கிறது’’

‘‘அப்படியே செய்யச் சொல். நம் தலத்துக்கு வரும் ஞானக் கொழுந்தை நம் ஊரின் அதிபதியே எல்லைக்குச் சென்று வரவேற்பதுதான் முறை!’’

சிவப்பெரியவர் சொன்னதும், அவரைப் பணிந்து அவரிடம் திருநீற்றுப் பிரசாதம் பெற்றுக் கொண்டு சேவகன் விடைபெற்றுக்கொண்டான்.

சிவப் பெரியவர் சந்நிதியை நோக்கினார். சந்நிதிக்கு முன்னே பாவை விளக்குகளும், உள்ளே தொங்கு தீபங்களும் சுடர்முகம் காட்ட, அவற்றால் எழுந்த பேரொளியெல்லாம் தனக்குமுன் ஒரு பொருட்டே அல்ல என்பதுபோல், கோடிச் சூரியப் பிரகாசத்துடன் லிங்கத் திருமேனியனாய் ஒளிர்முகம் காட்டிக்கொண்டிருந்தார்... திருப்பாச்சிலாச்சிராமம் எனும் அந்தத் திருத் தலத்தின் நாயகனாம் அருள்மிகு சமீவனேஸ்வரர்.

‘திருச்சிற்றம்பலம்...’

பெரியவரின் வாய் முணு முணுத்தது. அவரையும் அறியாமல் உள்ளம் சிலிர்க்க, கண்கள் நீர் உகுத்தன. சிவலிங்கத் திருமேனியில் பாணம் மறைந்து, ஆவுடையின்மேல் லிங்கோத்பவ பேருருவாய் சிவம் தோன்றி புன்னகைப்பதுபோல் தோன்றியது பெரியவருக்கு. `இன்று ஏதோ அற்புதம் நிகழப் போகிறது’ என்று அவரின் மனம் அவருக்கு உணர்த்திய அதே வேளையில், இறையின் திருமுடி யில் சூடப்பட்டிருந்த கொன்றைச் சரங்களில் ஒன்று உதிர்ந்து விழுந்தது!

மதிற்புறத்திலும் நீர்ப்பரப்பிலும்!

‘இது பாண்டியர் தேசமா... பட்சிகளின் தேசமா...’ வியப்புடன் கூடிய எண்ணவோட்டம், இளங் குமரனின் தூக்கத்தைக் கெடுத்து விட்டிருந்தது. ஆம்! முந்தைய நாள் முன்னிரவு தொடங்கி நள்ளிரவு வரையிலுமாக அவன் சந்தித்த சம்பவங்கள், அவனுக்குள் மிகப்பெரிதான திகைப்பையும் திகிலையும் உண்டாக்கியிருந்தன என்றே சொல்லவேண்டும்.

அதனால் உண்டான சிந்தனை களின் காரணமாக தூக்கம் கெட்டுவிட்டபடியால், அந்த விடியலின் கீழ்வானத்தை விடவும் அதிகமாகச் சிவந்து திகழ்ந்தன இளங்குமரனின் கண்கள். ஆயினும், வைகை தீரத்துக்காற்று அவன் முகத்தில் மோதி சுகம் கொடுத்து அவனின் களைப்பை களையச் செய்தது. வாளுறை பிணைப்போடு கூடிய இடைக்கச்சையைக் கழற்றிச் சரி செய்து மீண்டும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டவன், வைகையை நோக்கிய தனது நடையை வேகப் படுத்தினான். இடைக்கச்சையைத் தொட்டதும், அதையொட்டிய பழைய ஞாபகங்கள் மீண்டும் துளிர்த்தன.

முந்தைய நாள் பாண்டிமா தேவியாரிடம், தனது யூகமென்று சில விஷயங்களை இளங்குமரன் எடுத்துரைத்ததும், அதைத் தொடர்ந்து அவர் அவனிடம் சீற்றம் காட்டியதும் நினைவுக்கு வந்தன. மட்டுமின்றி, அவன் புறப்படுவதற்குமுன் `மேல் வஸ்திரத்தை இடைக்கச்சையாக மாற்றிக் கட்டிக்கொள்’ என்று அவர் ஆணையிட்டதையும், அதை தான்  மறுதலித் ததையும் எண்ணிப் பார்த்தான். காரணம் காரியம் தொட்டே தேவியார் அப்படிக் கட்டளையிட்டிருக்கிறார் என்பது, தொடர்ந்து நிகழ்ந்த சம்பவத்துக்குப் பிறகே அவனுக்கு உறைத்தது.

‘அப்பப்பா..! சிறிது தாமதித்திருந்தாலும் ஆக்ரோஷமான அந்தக் கிளியால் பார்வையே பறிபோயிருக்குமே’ இப்போது நினைத்தாலும் அந்த வீரனுக்குள் ஓர் உதறலை ஏற்படுத்தவே செய்தது அந்தச் சம்பவம்.  

ஆம்! பாண்டிமாதேவியாரின் கட்டளையைப் பொருட்படுத்தாமல்  இளங்குமரன் நகர முற்பட்டவேளையில், `கீச் கீச்’சென்று கத்தியபடி அவன் கண்களைக் கொத்திப் பிடுங்கிவிடுவது போல் பறந்துவந்தது அந்தக் கிளி. நல்லவேளை யாக வாயு பகவான் துணைக்கு வந்தார். திடுமென சாளரம் வழியே புகுந்த காற்றினால் அந்த இடத்தில் அலங்காரமாக தொங்கவிடப் பட்டிருந்த திரைச்சீலை வேகமாக அசைந்து அலைபாய, இயற்கையாய் கிளிக்கு ஏற்பட்டது பெருந்தடை. அதேநேரம் காற்றின் சலனத்தால் இளங்குமரனின் அந்த மேல் வஸ்திரமும் தானாக  தோள்களிலிருந்து நழுவியிருந்தது.

பெருங்காற்று நின்றபிறகு கிளியைத் தேடினான் இளங்குமரன். திரைச் சீலை மெள்ள அசைந்து விலக, தூண்மாடத்தில் தொற்றிக் கொண்டிருந்த அந்தக் கிளி இவனையே பார்த்துக்கொண்டிருந்தது. ஆனால், அப்போது அதனிடம் ஆக்ரோஷம் இல்லை.

இளங்குமரன் அதைப் பரீட்சிக்க நினைத்து இடைக்கச்சையை அவிழ்த்து மேல் வஸ்திரமாக அணிவதுபோல் பாசாங்கு செய்யவும், மீண்டும் சிறகடித்து கதறத் தொடங்கியது கிள்ளை. சட்டென்று மேல் வஸ்திரத்தை அவன் கீழிறக்க, கிளியும் சாந்தமுற்றது. அந்தக் கிளி பழக்கப் பட்டிருந்த விதத்தை எண்ணி வியப்பின் உச்சிக்கே சென்றான்.

சிவமகுடம் - பாகம் 2 - 21

இது இப்படியென்றால்... அவன் மாளிகை யிலிருந்து வெளியேறிய தருணத்தில், மாளிகை யின் மதிற்புறத்தில் வேறோரு விசித்திரத்தைக் காண நேரிட்டது. மிக ஆகிருதியான உருவம் ஒன்று... ஒரு பல்லியைப் போன்று, பெரும்பாலும் பிடிமானங்கள் ஏதும் இல்லாத அந்த மதிலில் எதை எதையோ தேடிப்பிடித்து நகர்ந்து கொண்டிருந்தது புலப்பட்டது.  அந்த உருவம் நகர்வது, மாமன்னரின் துயில்மாடத்துச் சாளரத்தை நோக்கி என்பதை நொடிப்பொழுதில் கணித்துவிட்ட இளங்குமரன், சற்றும் தாமதிக்காமல் தனது குறுவாளை எடுத்து அந்த உருவத்தைக் குறிவைத்து வீசினான். மறுகணம் அந்த அதிசயம் நிகழ்ந்தது. எங்கிருந்தோ பறந்துவந்த கருடப்பறவை ஒன்று மிக ஆக்ரோஷமாக அந்த முரட்டு உருவத்தின் மீது பாய்ந்தது. தொடர்ந்து ‘ஆங்...’ என்ற அலறலும், கூடவே அந்த உருவம் மதிலிலிருந்து தரையில் வீழ்ந்ததற்கான பெருஞ்சத்தமும் கேட்டது.

இளங்குமரன் விரைந்தோடினான்... உருவம் விழுந்திருக்கக்கூடும் என்று தான் கணித்த இடத்துக்கு. ஆனால் அங்கே எவரையும் காணவில்லை. அதற்குள்ளாக பெருஞ்சத்தம் கேட்டு இரவுக் காவலர்களும் அங்கே வந்து சேர்ந்திருந்தார்கள். அவர்களில் ஓரிருவரை, மாமன்னர் மற்றும் பாண்டிமாதேவியாருக்கான பாதுகாவலை அதிகப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிட்டான்.

தற்போதைக்கு ஆபத்து நீங்கிவிட்டது என்றபடியாலும் மாமன்னரைத் தொந்தரவு செய்ய விரும்பாததாலும் தேடுதல் குறித்து அதிகச் சந்தடிகளுக்கு இடம்கொடுக்கவில்லை இளங்குமரன். ஆகவே, மற்ற வீரர்களிடம் ‘வந்தவன் ஒருவன்தான் என்பதால் பதற்றம் தேவையில்லை. அதிகச் சந்தடியில்லாமல் தொலைந்தவனைத் தேடுங்கள்’ என்று ஆணை தந்ததுடன், தானும் பல இடங்களில் தேடி அலைந்து அவனைக் கண்டறிய இயலாத ஏமாற்றத்துடன் திரும்பி படுக்கையில் வீழ்ந்தான். ஆனாலும் தூக்கம் வரவில்லை.

இரவில் அந்தப் பறவைகளின் நடமாட்டம் ஆச்சர்யத்துக்குரியது என்றால், பழக்கப் படுத்தப்பட்ட சேனாவீரர்களைப் போன்று அவை துல்லியத் தாக்குதல்களை நிகழ்த்துவது விநோதத்திலும் விநோதம்தான். 

சிந்தனைகளில் கழிந்தது மீதி இரவு!

மீண்டும் வலுவாக முகம் மோதிய தென்றல், வைகைக் கரை நெருங்கி விட்டதை இளங் குமரனுக்கு உணர்த்தியது. `நீராடித் திரும்பியதும், முதற்கண் பாண்டிமாதேவியாரைச் சந்தித்து மன்னிப்புக் கோர வேண்டும்.  நடந்தவற்றை விவரிக்கவேண்டும்’ என்று தீர்மானித்துக் கொண்டவன், மேலாடைகளைக் களைந்து கரையில் வைத்துவிட்டு,  ஒற்றை வஸ்திரத் துடன் வைகையின் நீர்ப்பரப்பில் பாய்ந்தான்.

நீருக்குள் மூழ்கி அவன் மேலெழுந்தபோது, வேறொரு முகமும் சேர்ந்தெழுந்தது, அவன் அணுக்கத்தில். அது, நள்ளிரவில் மதிலின்மீது அவன் பார்த்த அந்த முரட்டு உருவத்தின் கோரமுகமேதான்!

வந்தது பிள்ளை... தந்தது வரம்!

ஓர் அச்சில் அச்சுப்பிறழாது சுழலும் உலகம், ஒன்பது வாயில்கள் இருந்தும் உடலைவிட்டு நீங்காது நிலைத்திருக்கும் உயிர், முறைதவறாது வந்து விலகும் இரவு-பகல்கள், உதிர்ந்து விழாமல் அந்தரத்தில் மலர்ந்து சிரிக்கும் தாரகைகள்... இப்படி இந்தப் பிரபஞ்சத்தில்தான் எத்தனை அற்புதங்கள்.

ஆனால் அவை அத்தனையும் சேர்ந்தாலும் இந்த அற்புதத்துக்கு ஈடாகுமா?

சிவப்பெரியவரின் வணங்கிய கரங்கள் வணங்கியபடியே இருந்தன. `சிவக்கொழுந்து... சிவக்கொழுந்து...’ என்று உச்சரிக்கத் தொடங்கிய அவரின் அதரங்கள் அந்தச் செயலை தொடர்ந்துகொண்டே இருந்தன. கண்களும் நீர்ப் பெருக்கை நிறுத்தியபாடில்லை. அவரின் மனமோ அந்தக் கோயிலுக்கு வந்துசேர்ந்திருந்த ஆளுடைப் பிள்ளையின் பேரழகில் முற்றிலுமாக தன்னைப் பறிகொடுத்திருந்தது.

கண்மலர்கள் சிரிக்க, கைம்மலர்கள் பொற்றாளம் இசைக்க, செங்கனி வாய் மணிஅதரம் அசைத்து `நமசிவாய’ என்று ஐந்தெழுத்தைப் போற்ற, புண்ணியக் கன்றாகி நின்று பதியாகிய பரமனைக் கண்டு கசிந்துருகும் ஞானசம்பந்தப் பெருமானை, தான் தரிசித்து மெய்ம்மறந்து நின்றிருந்தார் சிவப்பெரியவர். அவர் மட்டுமா அந்த ஊரே சிலிர்ப்பில் ஆழ்ந்திருந்தது.

திருச்சந்நிதியில், சம்பந்தப் பெருமான் கண்மூடி வணங்கிய படியிருக்க அவரின் திருவடியில் கிடத்தப்பட்டிருந்தாள் அந்த இளம்பெண். திருப்பாச்சிலாச்சிராமம் எனும் அவ்வூரின் அதிபதியாம் கொல்லிமழவனின் மகள் அவள். கொடும் நோயில் தாக்கத்தால் துவண்டுகிடந்தாள் அந்தப் பாவை.

‘‘எப்படியேனும் என் மகளை குணப்படுத்தி அருள்க’’ என வேண்டி நின்றான் கொல்லிமழவன். அவனுக்கு அருள் செய்ய மனமிசைந்தது ஞானக்கொழுந்து.

``துணிவளர் திங்கள் துளங்கி விளங்க...’’ எனத் தொடங்கி, யாழினும் இனிய குரலிசைத்து பதிகம் பாடியது. அவர் பதிகம் மாடி முடித்தபோது அந்த அற்புதமும் நிகழ்ந்தது!

அதேவேளையில், வனப்புறத்துக் குன்று ஒன்றின் மீது சிவதியானத்தில் லயித்திருந்தாள் பொங்கிதேவி!

- மகுடம் சூடுவோம்...

- ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்