ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!
##~##
ச்சிக் கலசத்தில் சூரியக்கொடி; உள்ளே புதுமணத் தம்பதியாக... ரகுகுல திலகமாம் ஸ்ரீராமனும், சாட்சாத் பூமாதேவியின் அம்சமான சீதாப் பிராட்டியும்! குதிரைகளைச் செலுத்தியதோ, திரிபுவனச் சக்ரவர்த்தி தசரதன்! அடடே... அவர், ஒரே தருணத்தில் பத்து ரதங்களைச் செலுத்தும் வல்லமை பெற்றவர் ஆயிற்றே! அதனால்தானே அவருக்கு தசரதன் என்று பெயர் வந்தது. பிறகு, கேட்கவா வேண்டும்; விண்ணகச் சூரியனை எட்டிப் பிடித்துவிடுவது போல், புயல் வேகம் காட்டின புரவிகள்.

அன்பு மகன்களுக்குக் கல்யாணம் முடிந்த ஆனந்தம் அவருக்குள். அவர் புரவிகளைச் செலுத்தும் வேகத்தில் அது வெளிப்பட்டது. அரை நாழிகைக்கு முன்புதான் மணமக்களை அழைத்துக்கொண்டு, குலகுரு வசிஷ்டரோடும், மற்ற பரிவாரங்களோடும் மிதிலை யிலிருந்து புறப்பட்டிருந்தார் அவர். அதற்குள் மூன்று யோஜனை தூரத்தைக் கடந்துவிட்டிருந்தார்கள்!

திடீரென, ரதத்தின் வேகம் மட்டுப்பட்டது. குதிரைகள் கனைத்தன. அதற்குமேல் நகர விருப்பம் இல்லாததுபோல், முரண்டு பிடித்தன. எங்கிருந்தோ பறந்து வந்த பறவைக் கூட்டமும் கத்தித் தீர்த்தது. அதேநேரம்... அங்கு எதிர்ப்பட்ட கால்நடைகள், பிரதட்சிணமாய் அவர்களைக் கடந்து சென்றன.

இது நல்லதா? கெட்டதா? இந்த நிமித்தங்கள் எல்லாம் எதை உணர்த்துகின்றன? குழப்பத்துடன் தசரதன் தேரிலிருந்து இறங்குவதற்கும், வசிஷ்டர் அருகில் வருவதற்கும் சரியாக இருந்தது.

''தசரதா... விரைவில் ஏதோ ஓர் ஆபத்து நம்மை அணுகப் போகிறது என்பதை பக்ஷிகள் உணர்த்துகின்றன. ஆனால், வந்த வேகத்தில் அது நீங்கிவிடும் என்பதை பிராணிகளின் பிரதட்சணம் உணர்த்துகிறது'' என்றார் வசிஷ்டர்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, பெரும் சூறாவளி வீசியது. ஆகாயமெங்கும் புழுதி எழுந்து, திசை களை மறைத்தது. சற்று நேரத்தில் அந்தப் புழுதி அடங்க, சூரியகோடிப் பிரகாசத் துடன் ஓர் உருவம் வருவது தெரிந்தது.  

தசாவதாரம் திருத்தலங்கள்!

வருவது யாரென்று இவர்கள் உற்றுப் பார்க்க... ஸ்ரீபரசுராமர்தான் வந்து கொண் டிருந்தார்! அப்போது, அவர் எப்படி திகழ்ந்தாராம்? அதை, அற்புதமாக விவரிக்கிறது வால்மீகி ராமாயணம் (பால காண்டம்; சர்க்கம் 74-76).

ஜடாமண்டலத்துடன், மின்னற் கொடி போன்ற வில்லையும், மிக சிரேஷ்டமான பாணத்தையும் கைகளில் ஏந்தியபடி, தோளில் சத்ருக்களை ஜெயம் கொள்ளும் கோடரியுடன் அவர்களின் எதிரில் தோன்றினார் பரசுராமர். பிருகு வம்சத்தில் உதித்த ஜமதக்னியின் மைந்தனான அந்த உத்தமர், பிரளய காலாக்னியைப் போல தேஜஸுடன்.... சாமானியர்களால் கண்ணெடுத்தும் பார்க்க முடியாதவராக, கயிலாயத்தைப் போன்று எவராலும் வெல்ல முடியாதவராகத் தோன்றினாராம்!

அவரைக் கண்டதும் தசரதர் வெலவெலத்துப் போனார். 'இவர், ஆயிரம் கரங்கள் கொண்ட கார்த்தவீரியனையே வென்றவர் அல்லவா? தன் தந்தையின் மரணத்துக்குப் பழிவாங்க, க்ஷத்திரிய வம்சங்களை பலமுறை வேரறுத்தவர் ஆயிற்றே. இவரால், என் கண்மணி ராமனுக்கு எதுவும் நேர்ந்துவிடக்கூடாதே’ என்று கலங்கினார்.

பாவம் தசரதர்! பரம்பொருளின் அருளாடல்கள் அவருக்குத் தெரியுமா என்ன? தன்னுடன் இருப்பதும், எதிரில் நிற்பதும் ஒன்றுதான் என்பதை அறியாத அவரின் பேதை மனதுக்குள், என்னென்னவோ எண்ணங்கள் அலைபாய்ந்தன.  எனினும், எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், ஸ்ரீபரசுராமரை உபசரிக்க- அதிதி பூஜைக்கு வேண்டிய அர்க்க பாத்திரம் முதலானவற்றை எடுத்த படி, ஸ்ரீபரசுராமரை வரவேற்றார்; சிரம் தாழ்த்தி வணங்கினார்.

எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டாலும், பரசுராமரின் பார்வை என்னவோ ஸ்ரீராமனின் மீதே லயித்திருந்தது. ஸ்ரீராமனும் வணங்கினார்; புன்னகைத்தார்!

ஆனால் பரசுராமரோ, ''ஹே ராமா... தாடகை, ஸுபாஹு முதலான ராட்சஸர்களை நீ அழித்தாய் என்றும், அகலிகைக்கு உன்னால் விமோசனம் கிடைத்தது என்றும், பெரும் வல்லமை பெற்ற சிவதனுசை முறித்துப் போட்டாய் என்றும் கேள்வியுற்றேன். ஆனாலும், இதோ என்னிடம் இருக்கும் தனுசில், வலிமையான இந்த பாணத்தைப் பூட்டி நீ நாணேற்ற வேண்டும். அப்படி நாணேற்றினால், உனது வீர- தீரத்தை மெச்சி உன்னுடன் யுத்தம் செய்வேன்!'' என்றார்.

சக்ரவர்த்தி திருமகன் மீண்டும் புன்னகைத்தான். ஸ்ரீராமனின் ரௌத்ரம் உலகறியாததா என்ன? ஆனாலும், உயிருக்கு மேலான தந்தையின் முன்னால் அதிர்ந்து பேசக் கூடாது அல்லவா? எனவே, மென்மையாகப் பேசத் துவங்கினான். ''ஸ்வாமி, அமைதி கொள்ளுங்கள். அந்தணர்களையும் ஆவினங்களையும் காப்பதே என்னைப் போன்றவர்களின் கடமை. அறத்துக்குப் புறம்பாக செயல்பட மாட்டேன்!'' என்றான்.

ஆனாலும் ஸ்ரீபரசுராமர் விடுவதாக இல்லை. வேறுவழியின்றி அவரிடம் இருந்து அற்புதமான அந்த விஷ்ணு தனுசை கையில் வாங்கினான் ஸ்ரீராமன்! மகத்துவமான அந்த தனுசு இனி அவனிடமே தங்கப் போகிறது. தர்மம் காக்க, இந்தப் பூமியில் ஸ்ரீராமன் நிகழ்த்தப் போகும் ஒவ்வொரு யுத்த வேள்வியிலும் அவனுக்கு உறுதுணையாக இருக்கப்போகிறது!

தேவ சிற்பி விஸ்வகர்மா வல்லமை மிகுந்த இரண்டு தனுசுகளைச் செய்தார். அவை தெய்வத் தன்மை கொண்டவை. அளவற்ற வல்லமை கொண்டவை. அதில் ஒன்றை, திரிபுர சம்ஹாரத்தின் போது சிவபிரானிடம் தந்தார்கள் தேவர்கள். மற்றொன்றை ஸ்ரீமகாவிஷ்ணுவிடம் தந்திருந்தனர்.

ஒருமுறை சிவன்- விஷ்ணு இருவரில் பெரியவர் யார் எனும் சந்தேகம் எழுந்தது. அதற்கான விடை தேடி பிரம்மனிடம் சென்றனர். 'எவ்வளவு முறை உபதேசித்தும் இவர்களுக்கு உண்மை புலப்படவில்லையே’ என வருந்திய பிரம்மதேவன், உண்மையை அனுபவத்தில் உணர்த்துவது என முடிவு செய்தார். அதன்பொருட்டு, சிவனார்- விஷ்ணுவுக்கு இடையே விரோதம் மூளச் செய்தார். ஆனால் நடப்பதை அறியாதவர்களா அவர்கள் இருவரும்?! எனினும் கோபம் கொண்டவர்களாக களம் கண்டனர்.

தசாவதாரம் திருத்தலங்கள்!

அப்போது, 'ஸ்ரீமகாவிஷ்ணு ஆயுதத் தைத் தொடாமலேயே 'ஹூம்’ என் றொரு சத்தம் செய்தார்; சிவனார் முதல் அகில லோகங்களும் பிரமித்தன’ என்கிறது வால்மீகி ராமாயணம்.

ஒரு கட்டத்தில், தேவர்களே வேண்டிக்கொள்ள யுத்தம் நின்றது. தன்னிடம் இருந்த தனுசை, விதேஹ  வம்சத்தில் பிறந்த தேவராதன் என்ற ரிஷியிடம் கொடுத்தார் சிவன். அதுவே ஜனகரிடம் வந்து சேர்ந்தது. அந்த சிவ தனுசை முறித்து, சீதாவை கரம் பிடித் தார் ஸ்ரீராமன்.

ஸ்ரீமகாவிஷ்ணு, தன்னிடமிருந்த தனுசை, பிருகு வம்சத்தில் பிறந்த ரிசீகரிடம் கொடுத்தார். அவர், தன் மகனான ஜமதக்னி யிடம் அதை ஒப்படைக்க, அவரிடம் இருந்து ஸ்ரீபரசுராமர் பெற்றுக்கொண்டார். இப்போது, அந்த விஷ்ணு தனுசு... ஸ்ரீராமனிடம்!

தனுசு பரிமாற்றம் மட்டுமா? எப்பேர்ப்பட்ட அற்புதம் நிகழப் போகிறது அங்கே! அதைத் தரிசிக்க பிரம்மாதி தேவர்களும், கந்தர்வர்களும், கிண்ணரரும், மகரிஷிகளும், சித்த புருஷர்களும் அங்கே கூடிவிட்டனர். ஜீவராசி கள் அனைத்தும் இமைக்கவும் மறந்து சலனமற்று நின்றன!

விஷ்ணு தனுசை லாகவமாக கையில் ஏந்தி, அதில் பாணத்தை யும் பூட்டி நாணேற்றிய ஸ்ரீராமன் கேட்டார்... ''தவசீலரே... ஸ்ரீராம பாணத்தை வில்லில் பூட்டி விட்டால், அது இலக்கைத் தாக்காமல் திரும்பாது. நான் இலக்காக எதைக் கொள்வது?''

இப்போது, பரசுராமரிடம் புன்னகை. எதிரில் நிற்பது, தன்னைப் போன்றே... சாட்சாத் ஸ்ரீமகாவிஷ்ணுவின் இன்னொரு அம்சம் என்பதைத் தெரிந்துகொண்டார்.

புனிதம் மிக்க சக்ரதீர்த்தம் எனும் திருத்தலத்தில் தான் தவம் செய்ததும், அதனால் மகிழ்ந்து விஷ்ணு பரம்பொருள் காட்சி தந்ததும் நினைவுக்கு வந்தது.

தசாவதாரம் திருத்தலங்கள்!

அப்போது, 'என் அருள் அம்சம் உன்னிடம் வைக்கப்பட்டதால், கார்த்த வீரியார்ஜுன னையும், அதர்மம் புரிந்த க்ஷத்திரியக் கூட்டத் தையும் அழித்தாய். இனி, உன் மனம் சாந்தம் அடைய பூமியை காசியப முனிவருக்குத் தானம் கொடுத்துவிட்டு. திரேதா யுகத்தில் ஸ்ரீராமனாக நான் வரும்போது என்னைச் சந்திப்பாய். அப்போது உன்னிடம் இருக்கும் என் அம்சத்தை எடுத்துக் கொள்வேன்’ என்று பரம்பொருள் அருளியதை யும் எண்ணிப்பார்த்தார்.

அந்தத் தருணம் வந்து விட்டதை உணர்ந்தவர், ''ஸ்ரீராமா நீயே மூலப் பரம் பொருள், எனது புண்ணிய கர்மாக்களின் பலன்களை எல்லாம் பரம்பொருளின் ஸ்வரூபமான உனக்கு அர்ப் பணிக்கிறேன். அவற்றை உன் பாணத்துக்கு இலக்காக ஏற்றுக்கொள்!'' என்றார். அத்துடன், ஸ்ரீராமனை பலவாறு துதித்துப் போற்றவும் செய்தார் ஸ்ரீபரசுராமர். ('அத்யாத்ம ராமாயணத்தில் உள்ள ஸ்ரீபரசு ராமரின் ராம ஸ்துதிகள் மகிமைகள் நிறைந்தது’ என்பார்கள் பெரியோர்கள்).

வால்மீகி ராமாயணமோ 'காசியபருக்கு பூமியைத் தானம் தந்ததால், ஓர் இரவுகூட அவ்விடத்தில் தங்குவதில்லை என பரசு ராமர் சங்கல்பித்ததாகவும், அதனால் நினைத்ததும் நினைத்த இடத்துக்குச் செல்லும் சக்தியைத் தவிர, மற்ற புண்ணிய பலன்களை ராம பாணத்துக்கு இலக்காக்கும்படி ஸ்ரீராமனை அவர் கேட்டுக் கொண்டதாகவும் விவரிக்கிறது.

ஸ்ரீராமனும் அப்படியே செய்தார்.  விண்ணும் மண்ணும் அதிர்ந்தன. பிரணவ நாதம் முழங்க...  சர்வமுமாய்த் திகழும் ஸ்ரீவிஷ்ணுப் பரம்பொருள், தன் சக்தியை தானே வாங்கிக் கொண்டது. தேவர்கள் யாவரும் பூமாரிப் பொழிந்தனர். ஆமாம்... பூமியில், அதர்ம  பாரத்தைக் குறைக்கும் பணியில் பாதியை ஸ்ரீபரசுராமர் முடித்துவைக்க; மீதி பாதி, ஸ்ரீராமனால் நிகழப் போகிறது!

ஸ்ரீபரசுராமர் பூரண திருப்தியுடன், மகேந்திர கிரி எனும் தலத்துக்குப் புறப்பட்டார்!

- அவதாரம் தொடரும்...