ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

தெரிந்த புராணம்... தெரியாத கதை!
தெரிந்த புராணம்... தெரியாத கதை!

நமஸ்தே அஸ்து பகவன்
விஸ்வேஸ்வராய மஹாதேவாய
த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய
திரிகாலாக்னிகாலாய காலாக்னிருத்ராய
நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜயாய
ஸர்வேஸ்வராய ஸதாசிவாய
ஸ்ரீமன் மஹாதேவாய நமஹ

பொருள்: பகவானே, விஸ்வேஸ்வரா, மஹாதேவா, முக்கண்ணனே, முப்புரம் எரித்தவனே, முச்சுட காலா, காலாக்னி வடிவா, ருத்ரா, நீலகண்டா, எமனை வென்றவா, ஸர்வேஸ்வரா, சதாசிவா, தேவதேவா... போற்றி, போற்றி!

- ருத்ரம்

##~##
யிரினங்களுக்கெல்லாம் படியளந்து, ஜீவன்களைக் காப்பவன் சிவன். தவம் புரிந்தவர்கள் அசுரர்களாயினும் தேவர்களாயினும் வரம் தந்து காக்கும் வள்ளல் பரமேஸ்வரன். மரண பயத்தினின்றும் மக்களைக் காக்கின்ற மகேசன் அவன்.

ஆனால் அவனும் பல தருணங்களில் சம்ஹார மூர்த்தியாக, அழிக்கும் கடவுளாக செயல்பட்ட வரலாறுகள், புராணத்தில் உண்டு. தீமைகளையும் தீயவர்களையும் அழித்தால்தானே நன்மைகளையும் நல்லவர்களையும் காக்க முடியும்! செடிகளை அழிக்கும் பூச்சிகளைக் கொன்று, தாவரங்களைக் காக்கும் விவசாயியைப் போல் செயல்படுபவன் இறைவன். அந்த விதத்தில் பரமேஸ்வரன் சம்ஹார மூர்த்தியாகி, தீமைகளைச் சுட்டெரித்த வரலாறே, திரிபுர சம்ஹாரம். தாரகாசுரன், சூரபத்மன் ஆகிய அசுரர்கள் முருகனால் அழித்து, ஆட்கொள்ளப்பட்ட பிறகு நிகழ்ந்த சம்பவம் இது!

வித்யுந்மாலி, தாரகாக்ஷன், கமலாக்ஷன் ஆகியோர் தாரகாசுரனின் புதல்வர்கள். இந்த மூவரும் தங்கள் தந்தையின் மறைவுக்குப் பிறகு, பல நூறு வருஷங்கள் பிரம்மனைக் குறித்து கடுந்தவம் புரிந்தனர். பிரம்மன் தோன்றினான். அவர்கள் வேண்டும் வரம் தர அபயக்கரம் காட்டினான். எல்லா அரக்கர்களையும் போலவே, இவர்களும் பேராசையுடன் பல்வேறு வரங்களைக் கேட்டனர்.

''பிரம்மதேவா, நாங்கள் மனதால் நினைத்த இடத்துக்கு நகரக்கூடிய மூன்று அசுர நகரங்களை நிர்மாணிக்க வேண்டும். அவை பொன், வெள்ளி, இரும்பு ஆகிய உலோகங்களால் அமைய வேண்டும். அந்த மூன்று நகரங்களும், எப்போது ஒன்றாகச் சேர்கின்றனவோ, அப்போது சிவபெருமானால் அனுப்பப்படும் ஒற்றை பாணத்தினால் மட்டுமே அவற்றுக்கு அழிவு ஏற்பட வேண்டும். அதுவரை நாங்கள் இறவாமல் உயிர்வாழ வேண்டும். அந்த நகரங்களில் எல்லா சுகபோகங்களும் நிலைத்திருக்க வேண்டும். தங்களையும் சிவபெருமானையும் எப்போதும் பூஜித்து வழிபட்டு அருள் பெறும் வல்லமை எங்களுக்கு வேண்டும். ஸ்ரீமன் நாராயணனாலோ, வேறு எந்தத் தேவர்களாலோ எக்காரணம் கொண்டும் எங்களுக்கு அழிவு ஏற்படக் கூடாது'' என்றெல்லாம் சாதுர்யமாக வரம் கேட்டனர். பிரம்மனும் வரம் தந்தார்.

கடல்கள் நடுவே இரும்பு, வெள்ளி, பொன்னாலாகிய மூன்று அழகிய நகரங்கள் தனித்தனியே நிர்மாணிக்கப்பட்டு, திரிபுரம் என்று அழைக்கப்பட்டது. மூவரும் தனித் தனியே ஆட்சியைத் தொடங்கினர். எந்தவொரு சூழலிலும் மூன்று நகரங்களும் ஒரே இடத்தில் சேராத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உறுதி பூண்டனர். தவறாமல் பிரம்ம யக்ஞமும் சிவ பூஜையும் நடத்தினர். தங்களுக்குக் கிடைத்த வரத்தின் பலனால், தேவர்களை யும் மனிதர்களையும் அடக்கி ஆண்டதுடன், எண்ணியபோதெல் லாம் இடம்பெயர்ந்து, எண்ணற்ற இயற்கைச் சக்திகளை அழித்து, பேரானந்தம் அடைந்தனர்!

தன்னை அழிக்க எவருமில்லை என எண்ணும்போதுதான் தலைக் கனம் அதிகமாகிறது; விவேகமும் நன்மை, தீமைகளைப் பகுத்தறியும் திறனும் அழிகிறது. இந்த நிலையில் மனிதன் மாபெரும் தவறுகள் செய்யத் தலைப்படுகிறான். இந்த நியதிக்கு எவரும் விதிவிலக்கல்ல. திரிபுர அரக்கர்களுக்கு அழிவு ஏற்படும் காலம் நெருங்கியது.

தவறாத சிவபூஜையும், பிரம்ம யக்ஞமும் தேடித் தந்த புண்ணிய பலம்தான் அந்த அரக்கர்களை அரணாகக் காத்துக்கொண்டிருந்தது. அவர்களது தீவிர பக்திக்கு ஒரு சவாலாக 'மாயை’ எனும் தேவன் உருவானான். தன்னுடைய அம்சமாகவே அவனை உருவாக்கினார், ஸ்ரீமன் நாராயணன்.

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

மொட்டைத் தலை, காவி உடை, மரத்தால் செய்த கமண்டலம், மயில் குஞ்சம், ஒரு கையில் தோலாசனம், தண்டம் ஆகியவற்றுடன் மாயா புருஷன் திரிபுரம் புறப்பட்டான். சனாதன தர்மத் துக்குப் புறம்பான ஒரு வேதத்தை உருவாக்கினான். புதிய பூஜா முறைகளைக் கற்பித்தான். மலையை மடுவாக்கி, மடுவை மலையாக்கி, கையசைவில் கேட்ட பொருள்களை உருவாக்கி, மாயாமந்திர ஜாலங்கள் பல செய்து திரிபுரர்களைக் கவர்ந்தான். ''சிவனையும் பிரம்மனையும் வழிபடுவதில் வளர்ச்சி இல்லை. அது பழைய தர்மம். தன்னையே தெய்வமாக வழிபடுவதே புதிய தர்மம்'' எனப் புதுக் கொள்கைகளைப் பரப்பினான்.

மெள்ள மெள்ள இந்த மாயையை அவர்கள் வழிபடத் தொடங்கினர். சிவபூஜையும் பிரம்ம யக்ஞமும் நின்றது. சுய பூஜை தொடங்கியது. கலி யுகத்தில் நடப்பது போலவே... இத்தகைய மாயா ஜாலங்கள் மட்டுமே தெய்வ சக்தி என அந்த அரக்கர்கள் எண்ண ஆரம்பித்தனர். அவர்களின் அறிவுக் கண்கள் மறைந்தன; அழிவு அவர்களை நெருங்கியது.

அசுரர்கள் சிவ நிந்தனை செய்யத் தொடங்கியதால், காக்கும் சிவன் அழிக்கும் ருத்ரனாக ஆகிவிடுவார் என்பதை அறிந்த நாராயணன், தேவர்களை அழைத்தார். விஸ்வ கர்மாவைக் கொண்டு, ஈஸ்வரனின் வடிவமான பல்வேறு லிங்கங்களை உருவாக்கித்தரச்சொன்னார்.

அஷ்டதிக் பாலகர்களில் தேவேந்திரனுக்கு பதுமராக லிங்கத்தையும், குபேரனுக்கு ஸ்வர்ண லிங்கத்தையும், எமதருமனுக்கு கோமேதக லிங்கத்தையும், வருணனுக்கு நீல லிங்கத்தையும், வாயுவுக்கு பச்சை லிங்கத்தையும், நிருருத்யைக்கு வெள்ளி லிங்கத்தையும், அக்னி பகவானுக்கு ஜோதி லிங்கத்தையும், ஈசானனுக்கு மரகத லிங்கத்தையும் கொடுத்தார். அவரும் பிரம்மனும் ஒரு ஸ்படிக லிங்கத்தை எடுத்துக்கொண்டனர். சிரத்தா பக்தியுடன் தேவர்கள் பல காலம் லிங்க பூஜை செய்தனர். சிவபெருமான் பிரத்யட்சமாகி, உலக நன்மைக்காகத் திரிபுரர்களை அழித்து, அனைவரையும் காப்பதாக வாக்களித்தார். இந்தத் திருப்பணியில் எல்லா தேவர்களும் பங்கேற்க விரும்பினர்.

சிவபெருமான் மகா ருத்ரனாக உருவெடுத்தார். திரிபுர சம்ஹாரத்துக்காக புதுமையான ஒரு தேரைப் படைத்தான் விஸ்வகர்மா. பஞ்ச பூதங்களால் அமைந்த தேரின் சக்கரங்களாக சூரிய- சந்திரர்கள் அமைந்தனர். நட்சத்திரங்கள் சக்கரங்களின் அலங்காரக் கற்களாகின. இந்திரன், வருணன், நிருருத்யை, குபேரன் நான்கு தூண்களாகினர். வாயு, தேரைச் செலுத்தும் சக்தியாக நின்றார். ஈசானன், பரமேஸ்வரன் கவசத்தில் அமர்ந்தான். ஓம்காரமெனும் பிரணவம் சாட்டையானது. மேருவை வில்லாக வளைத்து, வாசுகியை நாணாக்கி, மஹா விஷ்ணுவையே அஸ்திரமாக்கி எடுத்துக்கொண்டார் ருத்ரன். நவக்கிரகங்கள் தேர்க் கொடிகளாகவும் தோரணங்களாகவும் மிளிர்ந்தனர். அக்னியும் எமனும் சக்கரத்தில் இரு அச்சுக்களாக அமர்ந்தனர். சக்தி சூலமாகி, முருகன் வேலாகி, சிவனுக்கு ஆயுதங்களாக அமைந்தனர்.

தேர்க் கலசமாக இருந்தது, விநாயகர். அவர் ஞான ஸ்வரூபனல்லவா? ஒரு கணம், ரதம் முழுவதையும் உற்று நோக்கினார். தவறொன்று நிகழ்ந்து இருப்பதைக் கண்டார். ரதம் புறப்படும் நேரத்தில் ரதத்தை நிறுத்தினார். எல்லா தேவர்களும், ஏன்... சிவனாரும் ஆச்சரியம் மேலிட கணபதியை நோக்கினர்.

திரிபுரத்தை எரிக்கவும், திரிபுர அசுரர்களின் ஆயுளை முடிக்கவும் மூல காரணமாக இருக்க வேண்டியவர்கள் எமனும், அக்னியும். அவர்கள் தேரின் அச்சாணிகளாக இருந்தனர். எந்தக் காரியத்திலும் வெற்றியைத் தேடித் தரவல்ல காஷ்டை, முகூர்த்தம் எனும் இரு தேவதைகளும் தேரின் அமைப்பில் இடம் பெறவில்லை. இதனை அறிந்துதான் மஹா கணபதி தேரை நிறுத்தினார். தேரின் அச்சாக இருந்த எமனையும் அக்னியையும் மாற்றி விட்டு, அங்கே காஷ்டை, முகூர்த்தம் ஆகிய தேவதைகளை அமரச் செய்தார். அக்னியையும் எமனையும், அஸ்திரமாக இருந்த விஷ்ணுவின் சிரத்திலும், பாதத்திலும் அமரச் செய்தார்.

ருத்ர ரதம் புறப்படுமுன் விக்னத்தைக் களைந்த கணபதியை, விக்னேஸ்வரன் என தேவர்கள் வாழ்த்தினர். எந்தக் காரியத்தைச் செய்யும் முன்பு விக்கினம் அல்லது தடைகள் நீங்க, விநாயகனை வழிபடுங்கள் என ஈஸ்வரன் கட்டளையிட்டார்.

ஆக... சிவனது ரதத்தின் அச்சை முறித்து தடை செய்தவரல்ல கணபதி; அதை சரியாக அமைத்து தடையை நீக்கியவர். அவரை வாழ்த்திய பின்பு ருத்ர ரதம் புறப்பட்டது. திரிபுர நகரங்களை ஒவ்வொன்றாகத் தாக்க ஆரம்பித்தார் ருத்ரன். அவருடைய தாக்குதலைத் தனித் தனியே சமாளிக்க முடியாத அசுரர் மூவரும் தாங்கள் பெற்ற வரத்தின் தன்மையை ஒரு கணம் மறந்து, மூவரும் ஒன்றாகச் சேர்ந்து தாக்கி முக்கண்ணனை அழித்துவிடலாம் என்று எண்ணி, திரிபுரங்களையும் ஒரே இடத்தில் சேர்த்தனர். அஸ்திரமாக இருந்த விஷ்ணு திரிபுரத்தைத் தாக்க, அக்னி அதனை எரிக்க, எமன் காரணகர்த்தாவாகி அசுரர்களின் உயிர்களைக் கவர்ந்து சிவனிடம் சேர்க்க, திரிபுர சம்ஹாரம் நிகழ்ந்தது. தர்மம் மீண்டும் தழைத்தது.

திரிபுரத்தை எரித்தது யார்? சிவன் மட்டுமல்ல; மும்மூர்த்திகளும் தேவர்களும் மட்டுமல்ல; அசுரர்கள் செய்த தீமைகளே அவர்களைச் சுட்டெரித்தன!

- இன்னும் சொல்வேன்...