ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்

வரம் கொடுக்கும் வழிபாடுகள்

வரம் கொடுக்கும் வழிபாடுகள்
வரம் கொடுக்கும் வழிபாடுகள்
வரம் கொடுக்கும் வழிபாடுகள்

புஷ்ய நட்சத்திரத்தை பூசம் என்று சொல்வோம். இது, கடக ராசியில் அடங்கிய நட்சத்திரம். கடகத்துக்கு அதிபதி சந்திரன். ஆனால் நவாம்சகத்தில், அதன் நான்கு பாதங்களுக்கும் முறையே சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோருடன் தொடர்பு உண்டு. முப்பது நாள் கொண்ட ராசியை சரி சமமாக 9-ஆகப் பிரித்தால், ஒரு பிரிவில் 3.30 நாட்கள் வரும். அது, அந்த ராசியில் இருக்கும் நட்சத்திரங்களில்... முதல் நட்சத்திரத்தின் முதல் பாதம் ஆகும். அப்போது, 2 1/4 நட்சத்திரங்கள் ராசியில் அடங்கும்.

நவாம்சகங்கள், நட்சத்திர பாதத்தை உள்ளடக்கியது. பூசம் நட்சத்திரத்துக்கு, கடகத்தில் இருந்து 2, 3, 4 மற்றும் 5-வது நவாம்சகங்கள் வரும். இந்த நவாம்சக அதிபதிகள், நட்சத்திரத்துடன் இணைந்திருப்பர். பலன் சொல்லும்போது, நவாம்சக ராசியும் சேர்த்துச் சொல்ல வேண்டும் என்கிறது ஜோதிடம் (பலமம் சகர்ஷயோ:)  

ராசிகள் ஜடங்கள். அவற்றுக்கு உயிரூட்டுவது நட்சத்திரங்களும் கிரகங்களுமே. இல்லாள் இருந்தால் இல்லம் உயிர் பெற்றிருக்கும் என்கிறது தர்ம சாஸ்திரம் (கிருஹிணீ கிருஹமுச்யதெ...) ஆன்மாவுடன் இணைந்தால் மட்டுமே மனம் செயல்படும். அதற்கு சைதன்யம் அளிப்பதில் நட்சத்திரத்துக்கும் பங்கு உண்டு. நட்சத்திரத்தை, 'ஜோதிஸ்ஸீ’ என்கிறது வேதம் (ஜ்யோதிரிதீநக்ஷத்திரேஷூ).

##~##
ராசியின் உருவத்தை வரையறுப்பது, நட்சத்திரங்களும் அதனுடன் இணைந்த கிரகங்களுமே. மேஷம், ரிஷபம் என்ற ராசியின் வரையறையை அகற்றிவிட்டு, அச்வினி முதல் பாதத்தில் இருந்து மேஷம் முதல் நவாம்சகத்தைக் கணக்கிட்டால், ராசி சக்கரத்தில் 108 நவாம்சகம் இருக்கும். 9 முறை 12 ராசிகள் சுழன்று வரும். எண்ணிக்கையின் எல்லை - 9; கிரகங்கள்- 9. நட்சத்திரங்களின் 9 பாதம் ராசியில் அடங்கும். ராசியில் வளைய வரும் அத்தனை கிரகங்களும் நட்சத்திர பாதத்துடன் இணைந்துதான் பலனை வரையறுக்கும். 'நட்சத்திர பாதசாரங்கள்’  என்று பஞ்சாங்கத்தில் குறிப்பு உண்டு.

சூரியனிடம் ஸத்வ குணம், சுக்கிரனிடம் ரஜோ குணம், செவ்வாயிடம் தமோ குணம் தென்படும். இன்ப - துன்பங்களின் தாக்கத்தில் மனம் நிலைகுலையாமல் தெளிவுடன், சிந்தனையில் ஆழ்ந்த செயல்பாடும்... அதேநேரம், சுக்கிரனின் சேர்க்கையில் உற்சாகமும், செவ்வாயின் பங்கில் மெத்தனமும், அறியாமையும், ஆசையும், மோகமும், ஆராயாமல் செயலில் இறங்கும் இயல்பும், புதனின் விவேகமும் கலந்த பலன், புஷ்ய நட்சத்திரத்தில் பிறந்தவனிடம் தென்படும் என்கிறது ஜோதிடம்.

புஷ்ய நட்சத்திரத்தை 'திஷ்யம்’ என்கிறது வேதம் (திஷ்யோ நக்ஷத்திரம்...). பும்ஸுவனத்தில் இதன் இணைப்பு சிறப்பு என்கிறது சாஸ்திரம் (பும்ஸுவனம் வ்யக்தே கர்பே திஷ்யேண...). பூசத்தின் தேவதை பிரஹஸ்பதி (திஷ்யோ நக்ஷத்திரம் பிரஹஸ்பதிர்தேவதா) நாவன்மைக்குப் பேர் போனவர் பிரஹஸ்பதி (பிரஹஸ்பதிர் வாசாம்...). அவரை, தேவர்களின் குரு என்கிறது புராணம்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்

மனதில் பதிந்த எண்ணம் சொல் வடிவம் பெற்று வெளிவரும். சொல்லானது எண்ணத்தைப் பிரதிபலிக்கும். குரு, சொல்லழகு மிக்கவர்; உலகுக்கு உபதேசம் செய்யும் திறன் படைத்தவர். அவரை மிஞ்சிய அறிவாளி இல்லை. 'அவன் என்ன பிரஹஸ்பதியோ?’ என்ற சொல்வழக்கு அதற்குச் சான்று. அவர், தேவதைகளுக்குள் முதல்வன்! 'அவரருள் எங்களுக்கு எல்லா விஷயங்களிலும் வெற்றி தர வேண்டும். சிறுமை, இளமை, முதுமை- அத்தனையிலும் பாதுகாவலனாக இருந்து, எந்த உபாதையும் எங்களை அண்டாமல் பாது காக்க வேண்டும்’ எனும் வேண்டுகோள் வேதத்தில் உண்டு.

சாந்தமான உருவம், எல்லோரிடமும் அன்புடன் பழகும் பாங்கு, அறிஞன், செல்வச் சீமான், அறத்துடன் இணைந்த செயல்பாடு ஆகிய அத்தனையும் அவனில் தென்படும் என்கிறார் வராஹமிஹிரர்.

களையோடு காட்சி தருவான், ஸத்வ குணத்துடன் தென்படுவான், கல்வியில் கரை கண்டவன், மனைவி- குழந்தைகள்- அடியாட்கள் ஆகியோருடன் இருப்பவன், பிறந்த குலத்துக்குப் பெருமை சேர்ப்பவன் ஆகிய தன்மைகள் அவனில் தென்படும் என்பார் பராசரர்.

முதல் பாதத்தில், நீண்ட ஆயுளுடன் திகழ்வான். 2-வதில், பிறர் சொத்தை தனதாக்கிக் கொள்வான். 3-வதில், உலக வியலில் திளைத்து சுவைத்து மகிழ்வான். 4-வதில், செல்வச் சீமானாக மாறுவான் என்று பாதங்களுக்கு பதிலளிக்கிறது பிரஹத்ஸம்ஹிதை. தேவர்கள், வேதம் ஓதுபவர்கள், பெரியோர்கள் ஆகியோரிடம் பக்தியுடனும், அடக்கத்துடனும் செயல்படு வான்; எதிர்ப்பு தாக்கினாலும் பொறுமை இழக்காத இயல்பு தென்படும்; நாட்டுக்குச் சேவை செய்து அரசு மரியாதையை ஏற்பான்; பங்காளி கள்- நண்பர்கள் குழாமுடன் திகழ்வான் என்று விளக்கம் அளிக்கிறது ஜாதக பாரிஜாதம்.

பூசம், மூன்று தாரைகளை உள்ளடக்கிய நட்சத்திரம். மென்மையான நட்சத்திரம் இது. கிரய - விக்ரயம், இயல், இசை, நாடகம், சில்பம், மருந்து, பயணம், அணிகலன், 64 கலைகள், உயர்கல்வி ஆகியவற்றுடன் இந்த நட்சத்திரத்தின் இணைப்பு சிறப்பு பெறும் என்கிறார் வராஹமிகிரர்.

திருமணம் தவிர மற்ற நல்ல காரியங்களுக்கு சிறப்புண்டு என்கிறது ஜோதிடம். பூணூல் கல்யாணத்துக்கு இதன் சேர்க்கை, 'பிரம்மவச்சஸை’ப் பெருக்கும் அதாவது, வேதக் கல்வியில் ஏற்பட்ட களை மங்காமல் இருக்கும். வர்த்தகம், வங்கிகள், பணத்தைப் பெருக்கும் உண்டியல் வணிகம், மாட்டுச் சந்தை, வேள்வி, வேதம் ஓதுதல், சில்பக் கலை, மருத்துவம் போன்றவற்றுக்கு இந்த நட்சத்திரத்தின் சேர்க்கை வலுவூட்டி சிறப்பிக்கும் என்கிறார் பராசரர்.

பூசம் நட்சத்திரத்துக்கு, முதல் தசை சனி பகவானின் தசை. 19 வருடங்கள் நீண்டு நிற்கும். அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரங்களுக்கும் அது பொருந்தும். சுக்கிரனுக்கு அடுத்தபடியாக, வருஷங்கள் அதிகமான தசை இது.

சுக்கிரன் - 20; சனி - 19; ராகு - 18; புதன் - 17; குரு - 16; சந்திரன் - 10; செவ்வாய், கேது - 7; சூரியன் 6 என்கிற வரிசையில்...இரண்டாவதாக சனைச்சர தசை வருகிறது. ஆயுஷ்காரகனாகத் திகழும் அவனது தசையில், நீண்ட ஆயுளுடன் செல்வத்தில் திளைத்து மகிழும் பேறு கிட்டுவதும் உண்டு. கொடுப்பதற்கும் கெடுப்பதற்கும் சளைக்காதவன் சனைச்சரன்.

லக்னத்திலிருந்து 8-ல் எந்தக் கிரகம் இருந்தா லும் ஆயுளைக் கெடுப்பான்; சனி பகவான் ஆயுளைக் கொடுப்பான் என்கிறது ஜோதிடம். கெடுப்பதற்குப் பதிலாகக் கொடுப்பான் என்று ஜாதகா தேசம் சொல்லும் (விபரீதம் சனே: ஸ்ம்ருதம்). மெதுவாக நகர்ந்து செல்பவன் என்கிற கருத்தில், அவனது பெயர் சனைச்சரன் என்று அமைந்திருக்கிறது.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்

முன்ஜன்ம கர்மவினையின் பாப பலன் பெரும்பாலும் வெளிப்படும் வேளை என்பதைச் சுட்டிக்காட்டும் சனி தசை... தாமஸ குணமும், அறியாமையும், ஆசையும் வெளிப்படும் வேளையாக மாறிவிடும். அது, துயரத்தை சந்திக்க வைக்கும். யோககாரகன், எட்டில் இருப்பவன், லக்னாதிபதி, பாவாதிபதி, சுபனோடு இணைந்தவன், சுபன் பார்த்தவன்- இப்படி நல்ல தகுதிகள் சேர்ந்திருந்தால், அவனது தசை பூர்வ ஜன்ம புண்ணியத்தின் பலனை வெளியிடும். உழைத்துச் செயல்பட்டு செல்வத்தை ஈட்ட வைப்பான். ஆசை மிகுதியால் தரம்தாழ்ந்த செயலிலும் செயல்பட வைப்பான். அப்போது, அது கீழ்த்தரமான செயல் என்று மனம் எண்ணாது!

தசைகளில் அடங்கிய புக்தி- அந்தரம் என்கிற பிரிவில் 9 கிரகங்களின் பங்கும் சேர்வதால், நல்ல பலன்களை அதிகமாகப் பெற வாய்ப்பும் உண்டு.

சனி என்றதும் மூஞ்சியை சுளிக்கவோ, நடுங்கவோ தேவையில்லை. கெடுதல் அல்லது நல்லதை விளக்கும் போது, நமக்கு விளங்க வைக்க, இரண்டையும் அளவுக்கு மீறி உயர்த்திச் சொல்வது அதன் நடைமுறை. அலசி ஆராய்ந்து தெரிந்துகொள்ள வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு.

'ப்ரும் ப்ருஹஸ்பதயெ நம:’ என்று சொல்லி வழிபட வேண்டும். 'ப்ருஹஸ்பதே அதியதர்யோ...’ என்ற மந்திரம் சொல்லியும் வழிபடலாம். மந்திரம் தெரியாதவர்கள்,

'த்விஜமாங்கிரஸம் பீதம் ஸைந்தவம்ச
ஷடங்குலம். த்யாயேத் பீதாம்பரம்
ஜீவம் ஸரோஜஸ்தம் சதுர்புஜம்’

- என்ற செய்யுளைச் சொல்லி 16 உபசாரங்களைச் செய்யவும். மனம் தொடாத செயல்பாடு பலன் அளிக்காது.

எப்போதும் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கும் மனம், எளிதில் பிரஹஸ்பதியை நினைக்காது. நினைத் தாலும், மறுகணம் அதிலிருந்து அகன்று மற்றொன்றில் பற்றிக்கொண்டு விடும். அலைபாயும் மனதை அடக்கியாள்வது எளிதல்ல. மனதில் பதிந்திருக்கும் எதிரிடையான துர்வாசனை, பிரஹஸ்பதியை நினைக்க விடாது. பாசாங்கு செய்யுமே தவிர உண்மையாக ஈடுபடாது. அதை வழிக்குக் கொண்டு வர, முயற்சி எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இன்று நாம் இருக்கிறோம்.

பிரஹஸ்பதியின் உருவத்தை எதிரே வைக்க வேண்டும். அதை உற்றுப் பார்த்து, உருவ அமைப்பை உணர வேண்டும். கண்களை மூடிக்கொண்டு, அந்த உருவத்தைப் பார்க்க வேண்டும். மனதிடம், அதைப் பார்த்துக் கொண்டிருக்கும்படி கட்டளை இட வேண்டும். அதேநேரம். 'பிரும் பிரஹஸ்பதயெ நம:’ என்று மனதில் அசைபோட வேண்டும்.

நில்லாமல் அசைந்து கொண்டிருக்கும் மனதில், உருவத்தையும் மந்திரத்தையும் சுமத்தி, மற்ற புலன்களுக்கு அதைத் தாவ விடாமல் கண்காணிக்க வேண்டும். அதில் மனம் லயித்துவிட்டால் அசையாமல் இருந்து விடும். அப்படி, ஒரு விநாடி இருந்துவிட்டால், காலப்போக்கில் அதிக நேரம் மனதை ஒருநிலைப்படுத்த இயலும். மனம் உருவத்தில் லயிக்க வேண்டும், மந்திரத்தை அசைபோட வேண்டும். அது தொடர்ந்தால், மனதில் இருக்கும் விபரீத எண்ணங்கள் செயல்படாமல் தடுக்கப்பட்டு, பலம் இழந்துவிடும். அப்போது, நமது விருப்பம் ஈடேறிவிடும்.

இது இயலாது எனில், வெளிப்படையான பூஜையில் ஈடுபடவும். உருவத்தை எதிரில் வைத்து, கைநிறைய புஷ்பத்தை அள்ளி, இதயத்தில் இருக்கும் இறைவனை மூச்சுக் காற்று வழியாக வெளியே வந்ததாகப் பாவித்து (அப்போது பெருமூச்சு விட்டு), புஷ்பத்தில் மூச்சுக்காற்று பட்டு அதில் அவன் இறங்கி வந்ததாக நினைத்து, அதை உருவத்தில் சேர்க்கவேண்டும்.

அப்போது, உள்ளிருக்கும் இறைவன் மூச்சுக்காற்று வழி வெளிவந்து, புஷ்பத்தில் பட்டு உருவத்தில் இறங்கி அமர்ந்துவிடுவான். அதன் பிறகு, மனதை ஒருநிலைப்படுத்தி, எதிரில் இருக்கும் இறையுருவத்தில் அவனைப் பார்த்து, 16 உபசாரங்களை நடைமுறைப் படுத்தலாம்.

ஒவ்வொரு உபசாரத்துக்கும் 'பிரும் பிரஹஸ்பதயெ நம:’ என்று சொல்லிச் செய்ய வேண்டும். உபசாரம் முடிந்ததும், 'ஆவாஹனம் நஜானாமி நஜானாமி விசர்ஜனம், பூஜாவிதிம் நஜானாமி க்ஷமஸ்வ பரமேச்வர’ என்று சொல்லி, சாஷ்டாங்கமாக வணங்க வேண்டும்.

ஆனால், சிறுகச் சிறுக... வெளிப்படையான பூஜையில் இருந்து, மனதில் இருத்தி அசைபோடும் பூஜைக்கு மாற வேண்டும். இது, மனதை அடக்கவும், அத்துடன் உபாசனையில் ஈடுபடவும் உதவும். மனதில் குடியிருத்தி 108 தடவை மந்திரத்தை அசை போடுவது சிறந்த வழிபாடு.

- வழிபடுவோம்