ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!
திருப்பட்டூர் அற்புதங்கள்!
##~##
'நா
ன் நன்றாக இருக்க வேண்டும்; என் குடும்பமும் குழந்தையும் க்ஷேமமாக இருந்து, சிறப்புற வாழ வேண்டும்’ என்று நாம் நமக்காகப் பிரார்த்திப்போம். அதே நேரம், நமக்காக இன்னொரு நபரும் பிரார்த்தனை செய்வார். அதனால்தான் அவர்களை ஆச்சார்யர்கள், குருக்கள் என்றெல்லாம் போற்றுகிறோம். 'இந்த நட்சத்திரக்காரர்கள், இந்த கோத்திரத்துக்கு உரியவர்கள், இங்கே உன் சந்நிதானத்துக்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லா க்ஷேமங்களையும் தந்து நீதான் அருள் புரியணும்!’ என்று அவர்கள் நமக்காகப் பிரார்த்தனை செய்துகொள்கிறார்கள்.

நம் பெயரையும் இல்லாளின் பெயரையும் குழந்தைகள் மற்றும் பெற்றோரின் பெயர்களையும் சொல்லி அவர்கள் அர்ச்சனை செய்யும்போதே, நம் மனதுள் இருக்கிற முக்கால்வாசி துக்கங்கள் பறந்தோடிவிடும். இதனால்தான், கோயிலால் பிராபல்யம் அடைந்த ஆச்சார்யர்களைவிட, அவர்களால் அந்தக் கோயில் இன்னும் மேன்மையுறுவதாக நினைக்கிறோம்.

இத்தனைச் சிறப்புகள் கொண்ட சிவாச்சார்யர்களுக் கும் இந்தத் திருப்பட்டூருக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?

இந்தப் பூவுலகில் எத்தனையோ சிவாலயங்கள் உள்ளன. அந்தந்த தேசத்து மன்னர்கள், அந்த இடத்தின் பெருமையை, தலத்தின் கீர்த்தியை அறிந்து, அங்கே கோயிலை எழுப்பி, அந்தணர்களை, ஆச்சார்ய புருஷர்களை நியமித்து, அவர்களுக்கு நிலம் ஒதுக்கித் தந்து, வீடு கட்டிக் கொடுத்து, அவர்களை மிக சௌகர்யமாகப் பார்த்துக்கொண்டார்கள். சிவ தரிசனம் செய்வதே பெரும் புண்ணியம்; சிவ பூஜை செய்வது என்றால் எத்தகைய பாக்கியமாக, எந்த ஜென்மத்துப் புண்ணியமாக இருக்க வேண்டும்?!

ஆகமங்களைக் கட்டிக் காக்கிற, இறை வழிபாட்டை இன்னும் இன்னும் வளர்க்கிற சிவாச்சார்யர்களுக்கு அருள்பாலிக்கிற ஒப்பற்ற தலம், இந்தத் திருப்பட்டூர். அதனால்தான், 'ஆகமச் செல்வர்களுக்கு அருள் நல்கும் இறைவனே!’ என்று இந்தத் தலத்து இறைவனை, போற்றிப் புகழ்ந்துள்ளனர்.

வேதங்களை பூரணமாகக் கற்றுக் கொண்டு, அதனை இறைச் சந்நிதியில் உச்சரித்து, அதனால் அந்தக் கோயிலுக்கு இன்னும் இன்னும் சக்தியையும் சாந்நித்தியத்தையும் பெருக்குகிற கடமைக்கு உரியவர்கள் சிவாச்சார்யர்கள். அவர்களும் அவர்கள்தம் குடும்பத்தாரும் வாழ்வாங்கு வாழ, அவர்களின் சந்ததிகள் சீரும் சிறப்புமாக செழிக்க, திருப்பட்டூரின் ஸ்ரீபிரம்ம புரீஸ்வரரும் ஸ்ரீகாசிவிஸ்வநாதரும் அருள்புரிகின்றனர். உலகம் முழுவதும் உள்ள சிவ ஸ்தலங்களில் இறைப் பணியாற்றும் சிவாச்சார்யர்கள், அர்ச்சகர்கள், குருக்கள்மார்கள் என அனைவரும் வாழ்வில் ஒருமுறையேனும் இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்ரீகாசிவிஸ்வநாதரையும் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரையும் கண்ணாரத் தரிசித்து, வணங்கினால் போதும்... அவர்கள் அகமும் புறமும் புத்தொளி பெற்று, புதிய தேஜஸுடன் சிவத்தொண்டு புரிவர் என்பது ஐதீகம்! அவர்கள் சந்ததி, சீரும் சிறப்புமாக வாழும் என்பது உறுதி.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

சிவனடியார்கள் கொண்டாடுகிற தலம் என்றும், சிவாச்சார்யர்களுக்கு அருள் வழங்குகிற அற்புதத் திருவிடம் என்றும் திருப்பட்டூரைப் பார்த்தோம். இந்தத் தலத்துக்கு இன்னொரு சிறப்பும் உண்டு.

'தில்லை மூவாயிரம்; திருப்பிடவூர் மூவாயிரத்து ஒன்று’ என்கிற சொலவடை ஒன்று ஒருகாலத்தில் இருந்ததாம்! அதாவது, தில்லையம்பதி எனப்படும் சிதம்பரத்தில் மூவாயிரம் அந்தணர்கள் இருந்தார்கள்; இங்கே திருப்பட்டூரில் மூவாயிரத்தொரு அந்தணர்கள் வாழ்ந்தனர் என்று அர்த்தமாம். ஆக, ஒருகாலத்தில் மிகச் செழிப்பாக இருந்து, எப்போதும் வேத கோஷங்கள் காற்றில் நிரம்பித் ததும்பிய புண்ணிய பூமியாக, இந்தத் திருப்பட்டூர் திகழ்ந்திருக்கிறது.

ஆக, வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் என சிவ யோகிகளுக்கு அருள்பாலித்து, அவர்களை ஆட்கொண்டு அருளிய சிவனார் குடியிருக்கும் திருத்தலம் திருப்பட்டூர். அதேபோல், ஆகம விதிகளை மீறாமல், வேதங்களை உச்சரித்து, உரிய காலங்களில் பூஜைகளைச் செய்து, இறை வனை அபிஷேகித்து, அலங்கரித்துத் தொண்டு செய்கிற, சேவையாற்றுகிற சிவாச்சார்யர்களுக்கு அருளை அள்ளி வழங்குகிற திருவிடம், திருப்பட்டூர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, சிவ சாபத்துக்கு ஆளாகி, அதில் இருந்து மீண்டு, இழந்த பதவியை அடைந்த ஸ்ரீபிரம்மா தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிற க்ஷேத்திரமும் இதுவே! 'இங்கு வருகிற என் அடியவர்களுக்கு, விதி இருப்பின் விதி கூட்டி அருளுக!’ என சிவனாரின் திருவாக்கின்படி, இந்தத் தலத்துக்கு வருகிற அன்பர்களின் தலையெழுத்தையே மாற்றி அமைத்துத் திருத்தி அருள்கிற ஸ்ரீபிரம்மாவின் பேரருள் நிறைந்திருக்கிற அற்புதமான ஸ்தலம்!

'திருப்பதிக்குச் சென்றால் திருப்பம் நிகழும்’ என்பது போல், 'திருப்பட்டூர் சென்று வந்தால், வாழ்வில் முன்னேற்றங்கள் நிச்சயம்’ என்று சொல்கிற அடியவர்கள் ஏராளம். ஸ்ரீகாசி விஸ்வநாதர் ஸ்ரீவிசாலாட்சியுடன் தனியே கோயில் கொண்டிருப்பதால், இது காசிக்கு நிகரான தலம் என்கின்றனர் ஒரு சாரார். வியாக்ரபாதர் உண்டு பண்ணிய தீர்த்தத்தில், அந்தக் கங்கை நீரே வந்து கலந்ததாக ஐதீகம். எனவே, இங்கே காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள தீர்த்தம், கங்கைக்கு நிகரானது எனச் சொல்லி பரவசப்படுகின்றனர் பக்தர்கள். 'இந்தத் தலம், மிகப் பிராபல்யமான புண்ணியத் தலமாக எல்லா திசைகளிலும் உள்ள மக்களுக்குத் தெரியும் காலம் வெகு தொலைவில் இல்லை’ என்று சொல்கிற ஓலைச் சுவடியின் வாக்கு பலித்துக் கொண்டிருக்கிற தருணம் இது.

ஆகமச் செல்வர்களுக்கு, சிவாச்சார்யர்களுக்கு அருள் வழங்கும் திருப்பட்டூரில் காலடி வைத்ததுமே சிலிர்க்கிறது மனம். 'என் சிவனே! எந்த ஜென்மத்துப் புண்ணியமோ இது!’ என்று அவன் திருச் சந்நிதிக்குள் நெருங்குகிற வேளையில், நெக்குருகிப் போகிறது இதயம்.

'திருப்பட்டூர், திருப்பட்டூர், திருப்பட்டூர்...’ என்று புண்ணிய பூமியின் பெயரைச் சொல்லிச் சொல்லியே பூரித்துப் போகிறது மனம்.

ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயிலாகட்டும், ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆலயமாகட்டும்... இந்தக் கோயில்களைக் கட்டுகிற பணியில் இருந்த அனைத்து அன்பர்களையும் சிற்பிகளையும் கையெடுத்துத் தொழத் தோன்றுகிறது.

ஒரு காலைப் பொழுதில், இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்ரீகாசிவிஸ்வநாதர் மற்றும் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயில்களுக்குச் சென்று, எந்தப் பதற்றமும் பரபரப்பும் இல்லாமல், மிக நிதானமாக, சந்நிதி சந்நிதியாகச் சென்று, நின்று, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் வழிபடுங்கள். ஆகமச் செல்வர்களுக்கு அருளும் இறைவன், அடியவர்களாகிய நம் தலையெழுத்தையே திருத்தித் தந்தருள்வார்.

- பரவசம் தொடரும்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்