ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி

1949 ஏப்ரல் மாத நடுவில், பகவான் ஸ்ரீரமண மகரிஷியின் இடது  முழங்கைக்கு அருகில் தோன்றியிருந்த பரு போல் இருந்த கட்டி ஒன்று, அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது. டாக்டர் சங்கர்ராவ் என்பவர் அந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.

ஸ்ரீரமண மகரிஷி

'எனக்கு இது வலிக்கவில்லையே! எதற்காக இதை அகற்றவேண்டும்? இது சாதாரணமாகத்தானே இருக்கிறது. மிகவும் அழுத்தினால் வலிக்கிறது. இருந்துவிட்டு போகட்டுமே’ என்று பகவான் கேட்க, டாக்டர் சங்கர்ராவ் அதை மறுத்தார். 'இந்தக் கட்டி பெரிதாகிக்கொண்டே இருக்கிறது. விட்டால் மிகவும் பெரிதாகிவிடும். இப்போதைக்கு, இந்த அறுவை சிகிச்சை செய்தால், இம்மாதிரி பெரிதாகாது. கட்டுப்படுத்தி விடலாம்’ என்று சொன்னார். பகவான் ரமண மகரிஷி மௌனமாக இருந்தார்.

ஆஸ்ரமத்தில் உள்ளவர்களும் மருத்துவர்களும் ஆஸ்ரமத்து சர்வாதிகாரி நிரஞ்சனா சாமியினுடைய அலுவலகத்தில் ஒன்று கூடி விவாதித்து, அறுவை சிகிச்சை மேற்கொள்வதே சரி என்று சொல்லி பகவானிடம் தெரிவித்தனர். பகவான் சரி என்று சொல்லிவிட்டார். அவருடைய அன்பர்கள் இதைக்கண்டு பதறினார்கள்.

'இது ஒன்றும் பெரிய விஷயமில்லையே! அரசமரத்து பால் வைத்து கட்டினால் போதுமே. அடங்கிவிடுமே’ என்று ஒரு பக்தை சொன்ன போது, 'ஆமாம், அரசமரத்துப் பால் இதற்கு நன்றாகக் கேட்கும். ஆனால் என்ன செய்வது. அவர்கள் வேறு விதமாகத் திட்டம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களெல்லாம் பெரிய மருத்துவர்கள்’ என்று பகவான் பதில் சொன்னார்.

'என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். என் முயற்சி எதுவுமில்லை’ என்பது போல் அமைதி அவரிடம் இருந்தது. அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு கட்டுப் போடப் பட்டது. ஆனால் மூன்று வாரங்களுக்குப் பிறகு மறுபடியும் வேறொரு கட்டி சற்று மேல்பக்கம் வந்தது. அதையும் அறுவை சிகிச்சையில்தான் எடுக்கவேண்டும் என்பது போல் சொன்னார்கள். அறுவை சிகிச்சை மேற்கொள்ளக் கூடாது என்று பக்தர்கள் சிலர் வாதாடினார்கள்.

ஆயுர்வேதம், ஹோமியோபதி என்றெல்லாம் பேசினார்கள்.

இரண்டாம் முறை அறுவை சிகிச் சைக்குப் பிறகு ஹோமியோபதி மருத்துவமே சிறந்தது என்று நிலைநாட்டப்பட்டு, அந்த மருத்துவமுறை பின்பற்றப்பட்டது. 'கட்டியைக் கீறாமல் இருந்திருந்தால் ஹோமியோபதி நிச்சயம் வேலை செய்திருக்கும். கீறிவிட்டார்கள். இதை நான் குணப்படுத்த முடியும் என்று அகங்காரப்படவில்லை. பகவானே தன்னை குணப்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்ற பிரார்த்தனையோடு ஹோமியோபதி மருத்துவர் தன் மருந்துகளை ஆரம்பித்தார். ஆனால், வியாதி குணமடையவில்லை. ஆயுர்வேதம் மிகச் சிறந்தது என்று மறுபடியும் பலர் விவரமாகச் சொல்ல, அதற்கும் பகவான் சம்மதித்தார்.

ஸ்ரீரமண மகரிஷி

ஆஸ்ரமத்து அன்பரான குஞ்சுசுவாமிகள் மூஸ் என்பவரை கேரளாவில் இருந்து அழைத்து வந்தார். 'கடவுளே, இதைக் கீறிவிட்டீர்களே... இது சீறும் அல்லவா. நாகப்பாம்பை கிளறிவிட்டது போல் அல்லவா ஆகிவிட்டது’ என்று அந்த ஆயுர்வேத வைத்தியர் அலுத்துக்கொண்டார். அவரும் மருத்துவ முறையை ஆரம்பித்தார். கை சிவந்து வீங்கி, ரத்தப் போக்கும் இருந்தது. வெகு நிச்சயமாக அது கடுமையான வலியை பகவானுக்குக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் வலிக்கிறது என்று பகவான் முனகக்கூட இல்லை. மிக அமைதியாகத் தாங்கிக் கொண்டார்.

ஒரு நாட்டு வைத்தியர் பச்சிலை வைத்துக் கட்டினார். காரமான பச்சிலையில் கால்களில் நடுக்கம் உண்டாயிற்று. தடுமாற்றம் ஏற்பட்டது. தவறி விழுவது என்பது ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் ஏற்பட்டது. அவரால் நடமாட முடியவில்லை. எனவே பச்சிலை வைத்தியம் நிறுத்தப்பட்டது.

எப்போதும், சமையலறைக்குப் போய், ஒருமுறை உணவு தயாராவதை எட்டிப்பார்த்து விட்டு, உணவுக் கூடத்துக்கு போய் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்ட பகவான், ஹாலிலேயே இருந்த இடத்திலேயே கை அலம்பினார். இது பக்தர்களுக்கு வேதனையைக் கொடுத்தது. ஆயுர்வேத பிளாஸ்டர் போடலாமா, அரச மரத்து பால் வைக்கலாமா என்று பக்தர்கள் டாக்டரிடம் கேட்டபோது. 'ஏதாவது செய்து கொள்ளுங்கள். இதையெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள். சரியான மருத்துவர் வைத்து நடத்திக்கொள்ளுங்கள்’ என்று சினந்து கூறினார்கள். பக்தர் கூட்டம் எந்த வழியில் பகவானுக்கு உதவுவது என்று தெரியாமல் இருந்தது. பகவானோ எது நடந்தாலும் நடக்கட்டும் என்று மௌனமாக இருந்தார்.

##~##
ஆயுர்வேத பிளாஸ்டர்கள் போடப்பட்டன. ஆனால் சென்னையிலிருந்து புதிய மருத்துவர்கள் வந்தார்கள். அவர்கள் வந்து பார்த்துவிட்டு உடனடியாக மறுபடியும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் ரத்தப் போக்கு அதிகரித்து உடம்பு க்ஷீணமடையும் என்றார்கள். ஆயுர்வேத பிளாஸ்டர்கள் அகற்றப்பட்டன.

மீதி இருந்ததை என்ன செய்வது என்று சொல்லும்போது, அங்கு வந்த பக்தைக்கு இதே மாதிரி கழுத்தில் கட்டிகள் இருந்தது தெரிந்து, அவளுக்கு அது கொடுக்கப்பட்டது. அந்த ஆயுர்வேத ப்ளாஸ்திரிகளை அவள் போட்டுக்கொண்ட சில நாட்களிலேயே அவளுக்குக் குணம் தெரிந்தது. ஆனால் பகவானுக்கு அறுவை சிகிச்சை மூன்றாம் முறையாக நடத்தினார்கள். கையை எடுக்க வேண்டியிருக்கும் என்று டாக்டர்கள் சொன்னார்கள். கையை எடுத்துவிட்டால் வேறு இடத்தில் கட்டி வராதா என்று பகவான் கேட்டதற்கு, அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. வந்தாலும் வரும் என்ற நிலைமைதான் இருந்தது. எனவே கை எடுப்பது என்பது பற்றி பகவான் மறுத்து விட்டார்.

ஸ்ரீரமண மகரிஷி

வங்கத்திலிருந்து வந்த கவிராஜ பண்டிதர் மிக விலை உயர்ந்த மருந்துகளை கொடுக்கச் சொல்லிவிட்டு, பகவானாகத்தான் இதை ஆற்றிக்கொள்ள வேண்டும் என்று சொல்லி விட்டுப் போய்விட்டார். அந்த மருந்துகள் பகவானுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. எனவே அவையும் நிறுத்தப்பட்டன.

நாளுக்கு நாள் கட்டி பெரிதாகிக் கொண்டே வந்தது. செக்கச் சிவந்து காணப்பட்டது. சூரிய ஒளியில் நின்றால் அது குணமாகும் என்று சொல்லப்பட்டது. 'சூரிய ஒளியில் அது மரகதமணி போல் பிராசிக்கிறது பார்’ என்று பகவான் அதை அழகாக அனுபவித்தார். சூரிய நமஸ்காரம் செய்தால், ம்ருத்தியுஞ்ஜய ஜபம் செய்தால், பகவானுடைய உடல் குறை நீங்கும் என்று சொன்னார்கள். எனவே ஆஸ்ரமத்து அன்பர்கள் சூரிய நமஸ்காரம் செய்தனர். ம்ருத்தியுஞ்ஜய ஜபம் ஆரம்பித்தார்கள்.

'ம்ருத்யுஞ்ஜய ஜபம் செய்தால் மரணம் நின்றுவிடுமா?’ என்று பகவான் கேட்டார். எவரும் பதில் சொல்லவில்லை. 'ம்ருத்யுஞ்ஜய ஜபம் செய்தால் மரண பயம் போகும். ஆனால் மரணம் போகாது’ என்று பகவானே பதில் சொன்னார். ஆனால், அன்பர்கள் செய்கிற எந்தவித பிரார்த்தனைக்கும் தடை சொல்லாது நடக்கட்டும் நடக்கட்டும் என்று ஆதரவாகத்தான் பேசினார்.

1950-ஆம் வருடம்,ஏப்ரல் மாதம், யுகாதி பண்டிகையை யட்டி,  பக்தை ஒருவர், அவருக்கு வழக்கம் போல பரிசளிக்கும் விதமாக கௌபீனமும் மேல் துண்டும் கொண்டு போய்க் கொடுத்தார். 'அட, யுகாதியா!? அப்படியானால் விக்ருதி வருடம் வந்து விட்டதா? சரி’ என்றார். அப்படிச் சொன்ன போது, அது யுகாதியை அவர் வரவேற்பதாக இல்லை. இதோடு முடிந்துவிட்டது என்பது போல த்வனி இருந்தது. பக்தர்கள் அதைக் கேட்டுக் கண்கலங்கினார்கள்.

பக்தை அவரிடம் அருகே போய், ''யார் யாருடைய நோயை எல்லாமோ குணப்படுத்தி இருக்கிறீர்களே. உங்களுடைய நோயை நீங்கள் குணப்படுத்திக் கொள்ளக் கூடாதா. இந்த உடல் வாதையிலிருந்து நீங்கள் விடுபடக் கூடாதா?'' என்று கதறினார்.

''நீ ஏன் என்னை உடலாக நினைக்கிறாய்? நான் உடலல்லவே. இத்தனை நாள் பழகியும் இது தெரியாமல் இருக்கிறாயே'' என்று, கதறிய பக்தையையே குற்றஞ்சாட்டி சமாதானப் படுத்தினார் பகவான்.

நாளாக நாளாக, பகவான் உடல் க்ஷீணமடைந்தது. நடக்கும்போது தவறி விழுந்தார். அவருடைய கட்டு முழுவதும் ரத்த விளாறாகியது. ரத்தத்தால் கௌபீனம் நனைந்தது. தரையெல்லாம் ரத்தம் சிதறியது. ஆனால், பலபேர் உதவி செய்ய வந்தும் அதைத் தடுத்துவிட்டு, பகவான் தானே எழுந்து நின்றார். பின் பக்கம் போய் வந்தார். அதற்குப் பிறகு உணவு உண்பது என்பது சிரமமாயிற்று. நீராகாரமாகத்தான் எடுத்துக் கொள்ள முடிந்தது. லேசான வயிற்றுப் போக்கும் குமட்டலும் இருந்தன. ஜீரணசக்தி குறைந்து போயிற்று. நோயினாலோ மருந்தினாலோ அவர் உடல் நலம் குன்றிக்கொண்டே இருந்தது.

கவிராஜ பண்டிதரின் மருந்து, ஆறுவேளைக்கு திரவ ரூபமாகக் கொடுக்கப் பட்டது. மீண்டும் மீண்டும் மருந்தா என்று பகவான் அலுத்துக் கொண்டார். 'போதுமே, விட்டுவிடுங்களேன்’ என்பது போல அது இருந்தது. ஆனால் அன்பர்கள் விடவில்லை. பகவானும் மறுக்கவில்லை. எது சொன்னாலும் சரி என்று கேட்டுக் கொண்டார். ஆனால், மக்களுக்குத் தரிசனம் செய்வதைத் தடுக்கக்கூடாது என்று கண்டிப்பாக இருந்தார். நோயுற்ற நிலையிலும் துவண்டு கிடந்த நிலையிலும் கட்டிலில் இருந்தபடியே, வருகின்ற பக்தர்களுக்கு ஒன்றரை மணி நேரம் இரண்டு மணி நேரம் தரிசனம் கொடுத்தார். வருவோரை உற்றுப் பார்த்து பார்வையாலேயே ஆசிர்வதித்தார்.

ஸ்ரீரமண மகரிஷி

ஆனால், ஏப்ரல் 10-ஆம் தேதியிலிருந்து தரிசனம் நிறுத்தப்பட்டது. பகவான் படுக்கையில் சலனமில்லாமல் இருந்தார். அவருடைய ரத்த அழுத்தம் மிகவும் கீழாகப் போய்விட்டது. அந்த நிலையில் ரத்த அழுத்தம் இருப்பின், ஒருவர் நிச்சயம் மரணமடைய வேண்டும். ஆனால் பகவான் நிதானமாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தார்.அவ்வப்போது கண் திறந்து ஏதாவது பேசினார். ஆனால் ஏப்ரல் 13-ஆம் தேதி, மறுபடியும் தரிசனம் ஆரம்பிக்கப்பட்டது. பக்தர்களை வரிசைப்படுத்தி, சட்டென்று பார்த்துவிட்டு நகரும்படியாகக் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். சாரை சாரையாக ஜனங்கள் வந்து பார்த்துக் கொண்டிருந் தனர். ஏப்ரல் 14-ஆம் தேதி தரிசனத்தை நிறுத்தி விடலாம் என்று ஆஸ்ரம அதிகாரிகள் முடிவு செய்தபோது, நிறுத்தக்கூடாது என்று பகவான் கட்டளை இட்டுவிட்டார். எல்லோரையும் வரிசையாக நிற்க வைத்து அனுப்பினார்கள். பகவான் கண் திறந்து சகலரையும் பார்த்தார். அவருக்கு நெருக்கமான அன்பர்கள் மீது, அவர் கண்கள் நிலைத்தன. ஒவ்வொருவராக தடவிக் கொடுப்பதைப் போல அந்தப் பார்வை நகர்ந்தது. துக்கத்தை அடக்கிக்கொண்டு, அழுகையை நெஞ்சுக்குள் தேக்கிக்கொண்டு, அந்த இடத்தில் அழக் கூடாது என்று மனதை ஒருமுகப்படுத்திக்கொண்டு, கைகூப்பிய வண்ணம் 'எங்களை விட்டு பிரியாதீர்கள்’ என்று சில பக்தர்கள் மனமுருக வேண்டிக் கொண்டிருந் தனர். 'இத்தனை வேதனை தாண்ட வேண்டுமா. பரவாயில்லை நீங்கள் இந்த உடலை விட்டு எங்குமாய், எல்லா இடத்திலுமாய் எங்களோடு இருங்கள்’ என்று வேறு சில பக்தர்கள் மெல்லிய குரலில் பிரார்த்தனை செய்தார்கள்.

இரவு ஏழு மணிக்கு தரிசன நேரம் முடிந்தது. பகவான் தன்னை பத்மாசன நிலையில் வைக்கும்படி கேட்டுக் கொண்டார். செயற்கை சுவாசத்துக்கு உண்டான ஆக்ஸிஜனை எடுக்கும்படி சொல்லிவிட்டார். சற்று தொலைவே உள்ள பகவானுடைய தாயாரின் சமாதி இருந்த மண்டபத்தில் உள்ள அன்பர்கள், பகவான் எழுதிய 'அட்ச ரமண மாலை’யைப் பாட ஆரம்பித்தனர். அதைக் கேட்டதும் பகவானின் கண்கள் மெள்ளத் திறந்து கண்ணீர் சொரிந்தன. காது முழுவதும் அட்ச ரமண மாலையிலேயே இருந்தது.

எல்லோர் மனதிலும் பகவான் தங்களை விட்டு போகப் போகிறார் என்ற துக்கம் இருந்தது. எதுவும் செய்ய முடியாமல், இந்த விஷயத்தைத் தடுக்க முடியாமல், இது அவருடைய விருப்பம் என்பதாக எல்லோரும் மௌனமாக ஒரு சக்திக்கு கட்டுப்பட்டு இருந்தனர். யாரும் யாரோடும் பேசிக் கொள்ளவில்லை. ஆஸ்ரமத்து வேலைகள் எதுவும் நடைபெறவில்லை. நமசிவாய மந்திரம் சொன்னார்கள். சிலர் வேத பாடங்களை சொன்னார்கள். சிலர் எதுவும் செய்யாமல் பித்துப் பிடித்தது போல, வெட்ட வெளியை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அற்புதமான குருவை, தினம் தினம் சந்தித்து ஆனந்தம் அடைந்த குருவை, எல்லா விதமான உதவிகளும் பெற்றுத் தங்களுக்கு அருகே கம்பீரமாக வாழ்ந்த ஒரு குருவை இழக்கப் போகிறோமே என்ற அவஸ்தையில் இருந்தனர். இது நடக்காமல் நின்றுவிடக் கூடாதா. மறுபடியும் இந்த ஆஸ்ரமம் சிரிப்பும் பாட்டுமாய் இருக்கக் கூடாதா, அவருடைய அசைவான நடையை இந்த பக்தர்கள் தரிசிக்கக் கூடாதா. ஒவ்வொருவராக விசாரித்து நடப்பாரே, அது மீண்டும் இங்கு நடக்கக் கூடாதா என்றெல்லாம் ஏங்கினர். அந்த சந்தோஷம் எல்லாம் இல்லை. இனி அந்தச் சம்பவங்கள் எல்லாம் நடக்கப்போவது இல்லை; எல்லாம் ஒரு முடிவுக்கு வரப் போகிறது என்று தெரிந்து, பேரவஸ்தையில் நெளிந்தார்கள். முன்னும் பின்னும் அலைந்தார்கள். அயர்ந்தார்கள். அட்ச ரமண மாலை தொடர்ந்து பாடப் பட்டுக் கொண்டிருந்தது.

8.45-க்கு அவருடைய மூச்சு நின்றுவிட்டது. உடம்பு சில்லிடத் துவங்கியது. பக்தர்கள்  கதறினர். சிலர் தலையில் அடித்துக் கொண்டு அழுதனர். சிலர் கீழே விழுந்து புரண்டு கதறினார்கள். சிலர் என்ன செய்வது என்று தெரியாமல் தலையை பிடித்துக்கொண்டு தனியே விம்மித் தீர்த்தார்கள். பெற்ற தாயை இழப்பதை விட, தந்தையை இழப்பதைவிட மிகக் கடினம் குருவின் பிரிவை சகித்துக் கொள்வது. உலகமே இருண்டது போல, இருதயமே அறுந்து விழுந்தது போல, வெட்ட வெளியில் நிர்கதியாய் விடப்பட்ட கன்றுக்குட்டியைப் போல மனம் தவிக்கும்.

உலக வாழ்க்கைக்கும் உயர்ந்த மனோநிலை அடைவதற்கும் இகத்திற்கும் பரத்திற்கும் எல்லா நேரங்களிலும் உதவி செய்ய ஒரு தனிமனிதருக்கு குருவைத் தவிர யார் உண்டு? மேய்ப்பனை இழந்த மந்தை வேறெங்கும் போகாது, அவனிருந்த இடத்திலேயே இருக்கு மாம். இன்னொரு மேய்ப்பர் யார் என்று தேடுமாம். விதம் விதமான குரலில் கதறிக் கொண்டிருக்குமாம். பகவான் ஸ்ரீரமணரது அன்பர்கள் அப்படித்தான் துடித்தார்கள்.

8.47-க்கு திருவண்ணாமலை வான் வெளியில் ஒரு மிகப்பெரிய வால் நட்சத்திரம் வடக்கு நோக்கிப் போயிற்று. அந்த வால் நட்சத்திரத்தை சென்னையில் உள்ளவர்கள் கூட தெளிவாகக் கண்டார்கள். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அந்த வால் நட்சத்திரம் தெளிவாகத் தெரிந்தது. ஒரு பெரிய மகான் இந்த பூமி விட்டுக் கிளம்பி விட்டார் என்பதை அந்த வால் நட்சத்திரம் உறுதி செய்தது.

உள்ளளி பெருகிய ஒரு ஞானியின் ஆன்மா, உடல் பிரியும்போது இன்னும் ஜொலிப்பாகி, சுடராகி, மேலெழும்பி வெளி முழுவதும் கலந்தது. இது இன்னொருவித விஸ்வரூபம். நான் சாதாரணன் இல்லை என்று சொன்ன காட்சி!

(அடுத்த இதழில் நிறைவுறும்)