மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

கேள்வி-பதில்
கேள்வி-பதில்

எங்கள் பகுதிகளில் தை மூன்றாம் நாள், சிறுவீட்டுப் பொங்கல் எனக் கொண்டாடுவார்கள். முதல் நாள் சூரியனையும், மறுநாள் கோமாதாவை வழிபடவும் பொங்கல் வைக்கிறோம். 3-ஆம் நாள் சிறுவீட்டுப் பொங்கல் வைப்பது, ஏன்?

- சி.மகேஸ்வரி, அம்பாசமுத்திரம்

முதல் நாள் பொங்கல், இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் அன்றே கனுப்படி வைத்து, காகத்துக்கு அன்னம் அளிப்பது உண்டு. 3-ஆம் நாள் காணும் பொங்கல். விருந்துக்கு போவார்கள். அதுவே, தங்கள் பகுதியில் உள்ள நடைமுறையில், சிறுவீட்டுப் பொங்கலாக மாறியிருக்கலாம்.

தேசத்துக்குத் தேசம், ஊருக்கு ஊரு சம்பிரதாயம் மாறுபடும். அந்த ஊர் மக்களுடைய நம்பிக்கையின் அடிப்படை யிலும் பல பண்டிகைகள் தோன்றுவதுண்டு. குறிப்பிட்ட பகுதி மக்களால் கடைப்பிடிக்கப்படும் பண்டிகைகள், அவர்களது சம்பிரதாயத்தில் விளைந்தது. அதை பொது விதியாக ஏற்பதில்லை. சம்பிரதாயம் நழுவினாலும் பாதகம் ஏற்படாது.

கேள்வி-பதில்

சகஸ்ர பிராமண போஜனம் பற்றிக் கேள்விப்பட்டிருக் கிறேன். 'சமஸ்த தோஷ நிவர்த்திக்காக அஷ்டோத்திர பிராமண போஜனம் செய்யலாம்; ஒரு நாளைக்கு 10 பிராமண போஜனம் வீதம், 11 நாட்களுக்குச் செய்யலாம்’ என்று நண்பர் ஒருவர் சொன்னார். அஷ்டோத்திர பிராமண போஜனத்தின் தாத்பர்யம் என்ன? பலன் என்ன?

- வி.பிரதிக்க்ஷம் ஐயர், சென்னை-17

விருந்தோம்பல் அறத்தில் அடங்கும். வேதம், 'அதிதி தேவோபவ’ என்கிறது. தினமும் அன்னதானம் செய்யச் சொல்கிறது வேதம். வேதத்தைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றவருக்கு உணவளிப்பது தகும். மரத்துக்கு நீர் விட்டுப் பராமரிப்பது, அதிலிருந்து கிடைக்கும் பழங்கள் மற்ற உயிரினங்களுக்குப் பயன்படும் என்ற கண்ணோட்டத்தில் விளைந்தது. அதிதியின் வரவை அக்னிதேவனின் விஜயமாகச் சொல்கிறது வேதம். (வைச்வானர: ப்ரவிசதி அதிதிர் ப்ராம்மணோ கிருஹான்).

உயிரினங்களுக்கு அளிக்கும் உணவு, அவற்றைப் படைத்தவனை திருப்திப்படுத்தும். 'நான் அக்னி வடிவில் உயிரினங்களின் உதரத்தில் ஊடுருவியிருக்கிறேன்’ என்கிறான் கண்ணன் (அஹம்வைச்வானரோ பூத்வாப்ராணினாம் தேஹமாச்ரித:). இப்படி இறைவன் மறைமுகமாக ஏற்கும் அந்த உணவை, நேரடியாக அவனது 108 நாமாக்களைச் சொல்லி உணவூட்டுவது, அஷ்டோத்தரம். பூணூல் கல்யாணத்துக்கு முந்தின நாள், 108 நாமாக்களைச் சொல்லி, கடவுள் வழிபாடு செய்வது, அதாவது அஷ்டோத்தரம் செய்வது, இன்றைக்கும் கேரளத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 'முன்னோர், தேவர்கள், வேதம் ஓதுபவர்கள், அக்னி பகவான் ஆகியோருக்கு அளிக்கும் உணவில், நான் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று சொல்வான் கண்ணன் (தேவான் பித்ரூன்...).  

தருணம் வாய்க்கும்போதெல்லாம் உணவளிக்கலாம். 10 நாட்களில் அஷ்டோத்தரம் நிறைவு செய்யலாம். வசதியைப் பொறுத்து, ஒரே நாளிலும் செயல்படலாம். பண்டைய அரச பரம்பரை, சத்திரங்கள் அமைத்து அன்னதானத்தைக் கடைப்பிடித்தது  உண்டு. பிறந்தவன் உணவின்றி தவிக்கக் கூடாது என்கிற நல்லெண்ணம் பாரதப் பண்பாட்டில் ஒன்று.

எனது மகன்கள், தலை ஆவணி அவிட்டம் முதல், தினமும் ஒரு வேளை சமிதா தானம் செய்து வருகின்றனர். அதில் உபயோகிக்க, சமித்து எவ்வளவு நீளம் இருக்க வேண்டும்? சமித்து கிடைக்காத நேரத்தில் வேறு என்ன உபயோகிக்கலாம்? வெளியூர் செல்ல நேரிடுவதால் தடை ஏற்படுகிறது. இதனால் குறை ஏற்படுமா?

- அகிலா, வேலூர்

சமிதா தானத்தில் சமித்து 'ஒட்டசாண்’ அளவு இருக்க வேண்டும். அக்கறை இருந்தால் சமித்தை கட்டுப்பாடில்லாமல் சேமிக்கலாம்.

எதிர்பாராத நிலையில் சமித்து கிடைக்க வில்லை எனில், தர்ப்பையைப் பயன்படுத்தலாம். அதேநேரம், தெரிந்தே... தினமும் ஒருவேளை சமிதா தானம் செய்வதைத் துறக்கும் துணிவு வந்த பிறகு, சமித்துக்குப் பதிலாக வேறொரு பொருளைத் தேடவேண்டிய கட்டாயம் இருக்காது. வெளியூர் செல்வதற்கும் தடை இருக்காது. சௌகர்யம் இருக்கும்போது பண்ணலாம் என்று வந்துவிட்டால், சாஸ்திரம் தானாகவே கழன்று விடும். அன்றாடக் கடமை கள், பெருமைக்குரிய விஷயமாக மாறிவிட்டன. முடிந்த அளவு செயல்படுங்கள்.

பெண்ணுக்கு பிறந்த ஜாதகம் சரியாக கணிக்க இயலாதபோது, அவளது ரிது ஜாதகத்தை வைத்து திருமணம் செய்யலாமா? ரிது ஜாதகம் கணிப்பதன் பலன் என்ன?

- டி.கே.ராஜாராவ், சென்னை-11

இன்றைய சூழலில், சரியாக ஜாதகம் கணிக்க இயலாது என்பது ஏற்கக் கூடியதாக இல்லை. கணிப்பொறியில் ஜாதகம் கணிக்கும் முறை அறிமுகமான பிறகு, இப்படியரு நிலைமை தலைதூக்காது. கணிப்பொறி வருவதற்குமுன், பிறந்த தேதியே தெரியாதவர்களுக்கு ஜாதகம் கணிக்கும் முறையை, 'நஷ்ட ஜாதகம்’ என்கிற தலைப்பில் விளக்கியிருக்கிறார் வராஹமிஹிரர். படிப்பறிவு இல்லாத பாமரர்கள் குழந்தை பிறந்த தேதியை மறந்து விடுவது உண்டு. அன்றாடம் வயிற்றுப் பிழைப்புக்கே அல்லல் படும்போது, தேதி நினைவில் இருந்து அகன்றுவிடும். இதுபோன்ற தருணங்களில், ரிதுவான நேரத்தை (வயதுக்கு வந்த பொழுதை) பிறந்த வேளையாகப் பாவித்து ஜாதகத்தை உருவாக்கினார்கள்.

காலம் மாறிவிட்டது. மருத்துவமனையில் இருந்து வெளிவரும் போது, ஜாதகத்துடன் வரும் முறை வந்துவிட்டது. ஆகையால், ரிது ஜாதகத்தைப் பற்றிய தத்துவங்களை ஆராய்வதில் முனைய வேண்டாம். இன்றைய நாளேடுகளில் ஜோதிடத் தகவல்கள் நிரம்பி வழியும் சூழலில், பிறந்த தேதியை மறக்க வாய்ப்பே இல்லை. அப்படியே மறந்தாலும் ஜாதகம் கணிக்க காத்திருக்கிறது நஷ்ட ஜாதகம். ரிது ஜாதக ஆராய்ச்சியில் குழப்பம்தான் வரும். தெளிவு ஏற்படாது.

கேள்வி-பதில்

இரவு வேளையில் இலையில் நீர் தெளித்துச் சாப்பிடக்கூடாது என்கிறார்களே, ஏன்?

- எஸ்.சுந்தர், திருநெல்வேலி-7

இலையை சுத்தம் செய்த பிறகே, உணவு பரிமாற வேண்டும். அதற்கும் நேரம் காலத்துக்கும் சம்பந்தம் இல்லை. இலையில் தூசி படிந்திருந்தால், அது உணவைப் பாதிக்கும். அதை அகற்ற இலையைத் தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். மாற்றுத் தகவல்களை மறந்து விடுங்கள். விஞ்ஞான ரீதியான மூட நம்பிக்கைகள் வளர்ந்து வருவது நமது துரதிர்ஷ்டம்.

கார்த்திகை மாதம் கார்த்திகை தீபம் கொண்டாடுகிறோம். அதே போன்று ஆடி மற்றும் தை மாதக் கிருத்திகைகளையும் சிறப்பாகச் சொல்கிறார்களே, ஏன்? இந்த தினங் களில் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும். அன்றும் கார்த்திகை விரதம் இருக்க வேண்டுமா?

- எம்.சங்கரி, சேலம்

கேள்வி-பதில்

கார்த்திகை மாதம் கார்த்திகை தீபம் என்பது விரதத்தில் அடங்கும். அந்தக் கார்த்திகையானது, மாதத்தைக் குறிக்கும்; நட்சத்திரத்தை அல்ல. கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி அன்று தீபம் வரும். அன்றைய தினம் நட்சத்திரம் கார்த்திகையாக இருக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை. கார்த்திகை மாதத்தில், பௌர்ணமி அன்று தீபம் ஏற்ற வேண்டும். சில வருடங்களில், அன்று கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து இருக்கும். பௌர்ணமியுடன் சேரும் நட்சத்திரத்தை வைத்து, மாதத்தின் பெயர்கள் இருக்கும். சித்திரை நட்சத்திரம் பௌர்ணமியுடன் இணைந்த மாதம் சித்திரை. விசாகத்துடன் பௌர் ணமி இணைந்த மாதம், வைகாசி. ஆனாலும் நட்சத்திரங்கள்- 27, திதிகள்- தேய்பிறையில் 15; வளர்பிறையில் 15. ஆகையால் திதிகள் எண்ணிக்கையில் மூன்று நாள் அதிகம் இருப்பதால், எல்லா பௌர்ணமியிலும் குறிப்பிட்ட நட்சத்திரம் வராது!

கேள்வி-பதில்

ஆடி மற்றும் தை மாதம் வரும் கார்த்திகையானது நட்சத்திரத்தைக் குறிக்கும். அது கார்த்திகை விரதம். குறிப்பாக, முருகனை வளர்த்த கன்யைகள் கார்த்திகைப் பெண்கள் ஆறு பேர். கார்த்திகை நட்சத்திரத்திலும் ஆறு தாரைகள் உண்டு. ஆகையால், முருகனை வழிபடும் விரதமாகவும் கார்த்திகை விரதம் மாறிவிடும். நட்சத்திர விரதம் என்று கார்த்திகை விரதத்தைச் சொல்கிறது, விரத ராஜம் என்ற நூல். எது எப்படியானாலும் கார்த்திகையில் முருகனை வழிபடும் மரபு தொன்றுதொட்டு இருப்பதால், எல்லா கார்த்திகை நட்சத்திர விரதங்களிலும் முருகனை வழிபடலாம். சரவணப் பொய்கையில் தோன்றிய முருகனை வாரியெடுத்து வளர்த்து உலகுக்கு அளித்தவர்கள் கிருத்திகைப் பெண்கள். அவர்களின் நினைவோடு முருகனை ஆராதிப்பது சிறப்பு.

- பதில்கள் தொடரும்...