ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

'சரஸ்வதி நமஸ்துதியம் வரதே காமரூபினி
வித்யாரம்பம் கரீஷ்யாமி சித்திர் பவதூர் மேசதா’

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

சீர்காழியில், எங்கள் சுற்றுலாப் பேருந்து போய் நின்ற போது, கிழக்கு வெளுக்கத் தொடங்கியது. திருத் தோணியப்பரையும் சட்டநாதரையும் வணங்கும் ஆர்வத்தோடு விரைவாக காலைப் பணிகளை முடித்துவிட்டு, கோயில் வளாகத்தில் நுழைந்ததும், மேலே சொன்ன பாடல் வரிகள், குழந்தைகளின் மழலை மொழியில் எங்கள் காதுகளில் தேனாய்ப் பாய்ந்தன.

''குழந்தைகளின் குரலில் இந்த வரிகளைக் கேக்கறப்ப, எவ்ளோ இனிமையா இருக்கு!'' என்றேன் நான். பொட்டலத் தில் இருந்து பட்டாணிகளை எடுத்து வாய்க்குள் எறிந்து 'கடுக்’கென்று கடித்தபடி, ''நல்லாத்தான் இருக்கு. ஆனா, அர்த்தம் புரியலையே?'' என்றார் பரமசாமி.

''அது ஒண்ணுமில்லீங்க... சரஸ்வதி தேவியே! உன்னை வணங்குகிறேன்; நீ வரங்களைத் தருவதுடன், காண்போரின் கண்களுக்கு அழகிய ரூபத்தோடும் காட்சி தருகிறாய். என் கல்வியை நீ தொடங்கி வைக்க வேண்டும்; இந்தக் கல்வியில் பரி பூரணம் அடைய, நீ எனக்கு அருள வேண்டும் என்பதைத்தான் இந்தப் பிள்ளைகள் சம்ஸ்கிருதப் பாட்டாகப் பாடுகிறார்கள்'' என்று விளக்கம் தந்தேன்.

''எனக்கு வடமொழி தெரியாதே! நான் எப்படி சரஸ்வதியை வணங்குவதாம்?'' என்றார் பரமு கவலையாக.

''ஏன்? தமிழ்மொழியில்கூட கலைமகளை எத்தனையோ புலவர்கள் பாடியிருக்கிறார்களே! அதில் ஒரு பாட்டை எடுத்துப் பாடவேண்டியதுதானே?'' என்று நான் சொல்ல, ''அப்படி யார் யார் பாடியிருக்கிறாங்க?'' என்று அடுத்த கேள்வியைப் போட்டார் பரமசாமி.

''காளமேகப் புலவர், 'வெள்ளைக் கலைஉடுத்தி...’ன்னு பாடுறார். அதுல, 'புவியரசோடு எனக்குச் சரியாசனம் தந்த தாய்’னு சொல்ற அழகே அழகு! அதேபோல, 'வெள்ளைக் கமலத்திலே அவள் வீற்றிருப்பாள்’னு மகாகவி பாரதியார் சிலாகிக்கறதும் அற்புதம்! அதுமட்டுமா? 'சகலகலாவல்லி மாலை’ங்கற நூலில், பத்துப் பாடல்களில் சரஸ்வதிதேவியை சகலகலாவல்லி என வாழ்த்தியிருக்கிறார் குமரகுருபரர்'' என விவரித்தேன். உடனே பரமசாமி வியந்தவராக, ''அப்ப எந்த மொழியில வேணும்னாலும், கடவுளைக் கும்பிடலாமா? பலன் இருக்குமா?'' என்றார்.

##~##
''அதுல என்ன சந்தேகம்? இயேசு, ஹீப்ரு மொழியின் கிளை மொழியாகிய அராமிக் மொழியிலும், புத்தர் பாலி மொழியிலும், நபிகள் நாயகம் அரபு மொழியிலும் போதித் தார்கள். 'சுந்தரா! சொற்றமிழால் என்னைப் பாடுக’ என்று சுந்தரரிடம் சிவபெருமான் சொன்னார். ஆக, கடவுளைப் போற்றிப் பாட, மொழி ஒரு தடையே இல்லை. இருந்தாலும், அவரவர் தாய் மொழி யில் இறைவனைப் பாடுதல் நலம்'' என்று சொல்லிவிட்டு, ''திருநாவுக்கரசர் கூட தம் தேவாரத்தில் 'தமிழோடு இசைபாடல் மறந்தறி யேன்’ என்று தமிழை இசையோடு சேர்த்துப் பாடச் சொல்கிறார்'' என்று நான் சொல்லவும், வியப்பின் உச்சிக்குப் போனார் பரமசாமி.

''சரி... எந்த பாட்டும் பாடாம, மனசார கடவுளை வேண்டினாலும், அவர் நமக்கு அருள் புரிவாரா?'' என்று, பட்டாணியை மென்றுகொண்டே கேட்டார் பரமசாமி.

''ஓ... தாராளமா! 'சும்மா இரு சொல் அற...’ என்று அருணகிரிநாதரும், 'சும்மா இருப்பதே சுகம்’ என்று தாயுமானவரும் பாடியிருக்காங்களே..!'' என்றேன்.

அதன்பின்பு, பரமசாமி எதுவும் பேசாமல், கேள்வி எழுப்பாமல் 'சும்மா’ வந்தார்... கையிலிருந்த பட்டாணி தீர்ந்துவிட்டதால்!