ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

பாகவதம் படைத்த தூரிகை!

பாகவதம் படைத்த தூரிகை!

பாகவதம் படைத்த தூரிகை!
பாகவதம் படைத்த தூரிகை!
##~##
தியந்தம் இல்லாத இறைவனை ஒரு வடிவத்தில் அடக்கி, அழகுபடுத்தி, நம் மனம் விரும்பும் திருவுருவையும் கொடுத்து, அந்தப் பரம்பொருளை நேரில் தரிசித்துவிட்ட திருப்தியையும் எல்லையற்ற மகிழ்வையும் அளிக்கவல்லன தூரிகைகள். அப்படியரு தூரிகைக்குச் சொந்தக்காரர் ஓவியர் கேஷவ்.

கார்ட்டூனிஸ்டாகவே இவரை அறிந்தவர்களுக்கு, இவர் வரைந்த தெய்விகப் படங்கள், நிச்சயம் ஆச்சரியம் அளிக்கும்.

சென்னை அடையாறு, கிரீன்வேஸ் பகுதியில் இருக்கும் ஓவியர் கேஷவின் வீட்டுக்குள் நுழைந்தபோது, நமக்கும் அதே ஆச்சரியம் தொற்றிக்கொண்டது. வரவேற்பறையில் நம்மை வரவேற்ற ஓவியங்களில்...  நம்மை வெகுவாக ஈர்த்தது, காஞ்சி மகாபெரியவரின் ஓவியம்.

கருணை பொழியும் அந்தக் கண்களும், தீட்சண்யமும்... வெகு அற்புதம்!

'பரமாச்சார்யார் மறைவதற்கு ஒரு வருடத்துக்குமுன் இந்தப் படத்தை முடித்துவிட்டு, காஞ்சிபுரத்துக்கு எடுத்துச் சென்றேன். அன்று பெரியவாளைத் தரிசிக்க பெருங்கூட்டம் காத்திருந்தது. நல்லவேளையாக, மடத்து சிப்பந்தி ஒருவர், என்னிடமிருந்த ஓவியத்தைப் பார்த்து விட்டார். அதை வாங்கிக்கொண்டவர், 'பெரியவாளிடம் காண்பிக்கிறேன். அவர் அழைத்ததும் வந்து சொல்கிறேன்’ என்றபடி உள்ளே சென்றுவிட்டார்.

அந்தச் சிப்பந்தியிடம் இருந்து ஓவியத்தை வாங்கிப் பார்த்த பெரியவா, என்னை அழைத்து வரச்சொன்னார். நானும் முன்னால் போய் பணிவாக நின்றேன். கனிவுடன் ஆசீர்வதித்தவர், மட்டைத் தேங்காய் ஒன்றை கொண்டுவரச் சொல்லி என்னிடம் தரச் சொன்னார் (அந்தத் தேங்காய் இன்னும் அப்படியே ஓவியத்தின் முன் வைக்கப்பட்டுள் ளது, குறிப்பிட்ட தேதியுடன்). மாலையும் அணிவிக்கச் சொன்னார்'' என்று விவரித்த கேஷவ், படத்தில் பெரியவாளின் ஆசிபுரியும் கரத்தைச் சுட்டிக்காட்டி, ''ஆசிபுரியும் அந்தக் கையைப் பாருங்கள்... கட்டைவிரல், அப்படி மூன்றாக மடிந்து இருக்க வேண்டும். நமக்கெல்லாம் அந்த முத்திரை அவ்வளவு எளிதாக வந்துவிடாது. சொல்லப் போனால், நான் ஏதோ பாக்கியம் செய்திருக்கிறேன்.'' என்கிறார் நெகிழ்ச்சியுடன்!

அடுத்தடுத்த படங்களிலும் நம் பார்வை பதிந்தது. ஸ்ரீராமனின் முன் பவ்வியமாக வளைந்து வணங்கும் சொல்லின் செல்வனின் சரணாகதி, மிகவும் தத்ரூபம். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக... ஸ்ரீமத் பாகவத ஓவியங்கள்; ஸ்ரீவிஷ்ணுவின் அவதாரக் கதைகள், ஒரே கேன்வாஸில் (10.5X6 அடி) ஓவியங்களாக! எப்படி சாத்தியமானதாம்?!

பாகவதம் படைத்த தூரிகை!

'குஜராத்தில் கேசவ் நாராயண் டோங்க்ரே என்ற பெரியவர் பாகவத பிரவசனம் செய் வார். கோரக்பூர் கீதா பிரஸ் அச்சகத்தினர் வெளியிட்ட பாகவத மூலம்தான் இதற்கு அடிப்படை. அலகாபாத் அருகே மான்கட் என்ற இடத்தில், கிருபாளு மகராஜ் என்பவரும் பாகவத தாத்பரியத்தை விளக்கிச் சொல்வார். நிறையக் கேட்டிருக்கிறேன். பாகவதக் கதைகளை ஏழு நாட்கள் சொல்வார்கள். இதற்கு பாகவத சப்தாஹம் என்று பெயர். இந்த ஏழு நாள் சப்தாஹத்தை ஒரே கான்வஸில் போட முடியுமா என்று யோசித்தேன். அதன் விளைவுதான் இது...'' என்ற கேஷவ் பாகவதம் குறித்தும் விளக்கினார்.

'பாம்பு தீண்டி ஏழு நாட்களில் மரணம் என்பது பரீட்சித்து மன்னனுக்கு உண்டான சாபம். நற்கதி கிடைக்க ஏழு நாட்களையும் பயனுள்ளதாக கழிக்க விரும்பினான் பரீட்சித்து.

இந்த நிலையில் சுகபிரம்ம மகரிஷி அங்கு வர, அவர் மூலம் பாகவதக் கதைகளைக் கேட்டு மன்னன் நற்கதி அடைந்தான்.

'உலகில் பக்தி மட்டுமே இருக்கிறது. அதன் குழந்தைகளான ஞானமும் வைராக்கியமும் வலுவிழந்து வருகின்றன. அவற்றை உயிர்ப்பிக்க என்ன செய்யலாம்’ என நாரதர் கேட்டபோது, 'பாகவத சப்தாஹம் ஒன்றே அதற்கு வழி. உயிர்களாகிய ஜீவாத்மா, பகவானாகிய பரமாத்மாவுடன் இணைய அதுவே வழி வகுக்கும்’ என்றாராம் சூரிய பகவான். அத்தனை மகத்துவமானது, பாகவதக் கதையைக் கேட்பதும் படிப்பதும்!

அற்புதமான அந்தக் கதைகளை படங் களாக்கி, அதுவும் ஒரே கேன்வாஸில் ஓவியங் களாகத் தந்தால்... அதைப் பார்த்து ரசிக்கும் ஒவ்வொருவருக்கும் பாகவதக் கதையைப் படிக்கும் தூண்டுதல் ஏற்படுமே என்ற எனது ஆசையில் விளைந்ததே இந்த ஓவியம்'' என்கிறார் கேஷவ்.

கான்வாஸில் மொத்தம் 79 எபிசோட்கள். இதை அவர் வரைய ஆரம்பித்தது, 2007 விஜய தசமி நாளிலாம். நேரம் கிடைக்கும்போது எல்லாம் ஒவ்வொரு பாத்திரமாக வரைந்து வந்தாராம். சில நேரங்களில் குறிப்புகள் புதிதாகக் கிடைத்தால், வரைந்ததை அப்படியே அழித்துவிட்டு, புதிதாக- திருத்தமாக வரைய ஆரம்பிப்பாராம்.

''எந்த ஓவியத்துக்கும் ஆதாரமான குறிப்புகள் இல்லாமல், அதை வரைவதில்லை'' என்று புன்னகைக்கிறார் கேஷவ். உண்மைதான் அவரது ஆர்வமும், உழைப்பும் ஓவியங்களில் தெரிகிறது.

கிருஷ்ணாவதாரம், அஷ்டபுஜ நாராயணன், பரசுராம அவதாரம், பகீரதன் தவம், வாமன அவதாரம், பாற்கடல் கடைதல், மோகினி அவதாரம், சிவபெருமான் விஷம் அருந்துவது, கஜேந்திர மோட்சம், கலி நிக்ரஹம், புரஞ்சனோபாக்யானம்... என ஒவ்வொன்றும் அவ்வளவு நேர்த்தி. நாவால் சிறுவன் பிரக லாதனை பரிவுடன் வருடும் நரசிம்ம மூர்த்தி ஓவியம், விசேஷம்!

அதேபோல், ஜடபரதன் கதை, சனத் குமாரருக்கு உபதேசம்,  யுதிஷ்டிரரின் மடியில் தலை வைத்து அம்பு படுக்கையில் கிடக்கும் பீஷ்மர், விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லும் காட்சி, ததீசி மகரிஷியிடம் இந்திரன் வஜ்ரா யுதம் கேட்பது, சுகபிரம்மம் பாகவதம் சொல்ல ஆரம்பிப்பது, நந்தியின் மீது அமர்ந்தபடி சிவனார் விஷ்ணுவைப் போற்றும் 'ருத்ர கீத’ காட்சி... ஒவ்வொன்றும் ஒரு கதை சொல் கின்றன. ராமாயணக் காட்சியும் அசத்தல்!

பாகவதம் படைத்த தூரிகை!

அனைத்தையும் ரசித்தபடியே வந்த நம் பார்வை, கஜேந்திர மோட்ச காட்சியில் முதலையின் கழுத்தில் இருக்கும் மணியின் மீது லயித்தது. அதற்கும் ஒரு விளக்கம் தருகிறார் கேஷவ்:

'இவை எல்லாமே அடையாளங்கள்... ஒருவித சிம்பல்ஸ்தான்.  முதலையின் கழுத்தில் இருக்கும் மணி, காலத்தைக் குறிக்கிறது. 'இளமையில் ஆடிக் களிக்கிறோம். அப்போது எல்லோரும் நம்முடன் இருக்கிறார்கள். ஆனால், மூப்பு வந்ததும் விலகிப்போய் விடுகிறார்கள். 'ஜரா’ என்பது மூப்பைக் குறிக்கும். ஆக, காலம் எனும் முதலை காலைப் பிடித்ததும்தான் நாம் இறைவனை நினைக்

கிறோம்’ என்று டோங்கரே தனது சொற்பொழி வில் கூறியிருக்கிறார். வாழ்க்கையின் யதார்த்தம் இதில் வெளிப்படுகிறது!''

அவர் சொல்லச் சொல்ல... வெள்ளைத் திரையில் மிளிரும் வண்ண ஓவியங்களோ, நம்மை  புராண காலத்துக்கே அழைத்துச் செல்கின்றன. காளியை- காளியமர்த்தனத்தை தரிசித்து மகிழ்கிறோம். கம்சனையும் சந்திக்கிறோம். உத்தவருடன் சேர்ந்திருந்து பகவானின் உபதேசத்தை நேரில் கேட்பதாக உவகை கொள்கிறோம், கிருஷ்ண- குசேலர் சந்திப்பைப் பார்த்து, அந்த நட்பை சிலாக் கிறோம், ஓவியம்தான் எனினும் நிஜம்போல் திகழும் கங்கை- யமுனை நதிகளில் மானசீக மாக நீராடி குதூகலிக்கிறோம்!

''ஒய்யாரமாக நிற்கும் அந்த கண்ணனை கவனித்தீர்களா?''

ஓவியர் கேஷவ்வின் குரல் நம்மை நிஜத்துக்கு அழைக்க, நீல வண்ணக் கண்ணனைக் காண்கிறோம். திரிபங்கி நிலையில் காட்சி தருகிறான் அழகு கண்ணன்.

''உடலை மூன்று இடங்களில் வளைத்தபடி அருள்வது திரிபங்கி நிலை. இந்த மூன்றும் சத்வ, ரஜோ மற்றும் தமோ குணங்களைக் குறிக்கும். மூன்றையும் வென்றால்தான், நிர்க்குணமாகி இறைவனை அடைய முடியும்'' என்கிறார் ஓவியர் கேஷவ்.

உண்மைதான்! அப்படியரு உயர்ந்த நிலையைப் பெற, இது போன்ற தெய்வீக ஓவியங்கள், நிச்சயம் உதவும்!

படங்கள்: கே.ராஜசேகரன்