ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

புராண, இதிகாசங்களில் நிர்வாகத் திறன்!

புராண, இதிகாசங்களில் நிர்வாகத் திறன்!

புராண, இதிகாசங்களில் நிர்வாகத் திறன்!
புராண, இதிகாசங்களில் நிர்வாகத் திறன்!
புராண, இதிகாசங்களில் நிர்வாகத் திறன்!

டாக்டர் பட்டம் பெற்ற பிறகு, மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி, தணிக்கை மற்றும் நிர்வாக ஆலோசக நிறுவனத்தில் வேலை பார்த்த ஒருவர், தாம் படித்த படிப்புக்கும் பார்த்த தொழிலுக்கும் சம்பந்தமே இல்லாத ஒரு துறையில் இன்று பிரபலமாக இருக்கிறார். அவர்... தேவ்தத் பட்நாய்க்.

கிஷோர் பியானியின் பேன்டலூன் மற்றும் பிக் பஸார் நிறுவனங்களில் இவர் வகிக்கும் பதவிக்குப் பெயர்: 'சீஃப் பிலீஃப் ஆஃபீசர்’ (Chief Belief Officer). இப்படியரு பதவி உலகில் வேறு எந்த நிறுவனத்திலுமே இல்லை! நம் புராணங்களிலும் இதிகாசங்களிலும் உள்ள ஆழ்ந்த தத்துவங்களையும் கருத்துக்களையும் தேவ்தத் பட்நாய்க் தமது சொற் பொழிவுகள் மூலம் உலகின் பல நகரங்களிலும் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்லி வருவதையும், நம் இதிகாச புராணங்களைக் கதை சொல்வது போல் அத்தனை அற்புதமாக அவர் எழுதிய ஆங்கில நூல்களை பெங்குவின் நிறுவனம் வெளியிட்டு, அவை பல்லாயிரக்கணக்கில் விற்பனையாவதையும் அறிந்த கிஷோர் பியானி, தேவ்தத்தை அழைத்தார். 'உங்கள் பதவியை உதறிவிட்டு விலகி, என்னிடம் வாருங்கள். என் நிறுவனத்தில் பிரதான நம்பிக்கை அதிகாரியாக இருங்கள். 'இன்ஸ்பிரேஷனல் ஸ்பீக்கர்’ (ஊக்கம் தரும் சொற்பொழிவாளர்) ஆக, 'லீடர்ஷிப் கோச்’ (தலைமைக்குத் தூண்டும் பயிற்சியாளர்) ஆக, எல்லா ஊழியர்களுக்கும் உதவுங்கள்!' என்றார். பிறகென்ன... உடனே வந்து சேர்ந்துவிட்டார் தேவ்தத் பட்நாய்க்.

புராண, இதிகாசங்களில் நிர்வாகத் திறன்!
##~##
எகனாமிக் டைம்ஸில் 'பிசினஸ் சூத்ரா’ என நான்கு வருடங்களாக எழுதி வருகிறார். சன்டே மிட்டே, தெஹெல்கா, ஹிந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா என இவர் எழுதிவரும் பத்திரிகைகளின் பட்டியல் நீளமானது. இவரின் பதினேழு நூல்களில், 'செவென் சீக்ரெட்ஸ் ஆஃப் ஹிந்து காலண்டர் ஆர்ட்’, 'மித் = மித்தியா’ மற்றும் 'ஜெயா - இல்லஸ்ட்ரேடட் ரீடெல்லிங் ஆஃப் மஹாபாரதா’ மூன்றும் இன்றைக்கும் பெஸ்ட் ஸெல்லர் பட்டியலில் இருக்கிற நூல்கள். இளைய தலைமுறைக்காக ஏழு நூல்கள்; எல்லாமே இதிகாச புராணங்களின் பாத்திரங்களையும் தத்துவங்களையும் அடித்தளமாகக் கொண்டவை. 'த பிரெக்னென்ட் கிங்’ மட்டும்தான் இவர் எழுதியிருக்கும் ஒரே நாவல்.

சொற்பொழிவுகள் ஆற்றுவதற்காக சென்னை வந்திருந்த தேவ்தத் பட்நாய்க்கை நேரில் சந்தித்துப் பேசினோம்.

'நிர்வாக இயலில் சொற்பொழிவு ஆற்றுவதற்கு எந்த வகையில் நம் இதிகாச- புராணங்கள் உங்களுக்கு உதவுகின்றன?''

'இப்போதிருக்கும் நம் நிர்வாக இயல் எல்லாமே அமெரிக்க, ஐரோப்பிய மாடல்கள். அங்கே வேண்டுமானால் அந்த உத்திகள் கையாளப்படலாம்; செல்லுபடியாகலாம். நம் இந்தியாவுக்கு ஐயாயிரம் வருட பாரம்பரியம் இருக்கிறது. நம்மிடம் இல்லாத எந்தப் புதிய கருத்தையும் மேற்கத்திய மேதைகள் சொல்லிவிடவில்லை. நாம் நம்மிடம் இருப்பதைப் பார்க்கத் தவறிவிட்டோம். அதைத்தான் என்னுடைய நூல்களிலும் சொற்பொழிவு களிலும் கூறி வருகிறேன். உலகம் முழுக்கச் சுற்றுப்பயணம் செய்து, பெரிய பெரிய நிர்வாக இயல் அமைப்புகளிலும் கார்ப்பொரேட் நிறுவனங்களிலும் சொற்பொழிவு செய்கிறேன்'' என்றவர், தொடர்ந்தார்...  

புராண, இதிகாசங்களில் நிர்வாகத் திறன்!

'உங்களுக்கு ஓர் உண்மையைச் சொல்கிறேன். எனக்கு சம்ஸ்கிருதம் கொஞ்சம்கூடத் தெரியாது. நம் புராண- இதிகாசங்களைப் பற்றி அறிய, சம்ஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. 120 கோடி மக்கள் உள்ள நம் தேசத்தில், எத்தனை பேர் சம்ஸ்கிருதம் அறிந்தவர்கள் இருக்கிறார்கள்? புராண- இதிகாசங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தால் போதும். சிறு வயதில் அமர்சித்ர கதாவும், சந்தமாமாவும் படிக்கக் கேட்டு வளர்ந்தேன். அவை

எனக்குள் தங்கிப் போய்விட்டன. பொழுது போவதற்காகப் படித்ததையும் கேட்டதையும் நான் மறக்கவில்லை. பின்னர் பாரதிய வித்யா பவன் வெளியிட்ட கமலா சுப்பிரமணியத்தின் நூல்களைப் படித்தேன். எத்தனை எத்தனைக் கதைகளை நாம் கேட்காமலும் சொல்லாமலும் விட்டிருக் கிறோம், எத்தனை அர்த்தங்கள் சொல்லப்படாமலே மறைந்து கிடக்கின்றன என்பது அப்போதுதான் புரிந்தது. எல்லாமே நம்மிடம் இருக்கிறது. ஆனால், நம்மில் யாரும் அவற்றைப் படிப்பதில்லை!' என்றார் தேவ்தத், மிகுந்த ஆதங்கத்துடன். அவரே தொடர்ந்தார்...

''இதிகாச புராணங்களில் நிர்வாக இயல் விளக்கங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். ராமர் காட்டுக்கு அனுப்பப்பட்டார். பிரச்னைகளுக்கு மேல் பிரச்னைகள் வந்தன. அவற்றை எல்லாம் சமாளித்து, இலங்கை சென்று, வெற்றி அடைந்தார். அதுவே, பாண்டவர்கள் எல்லாவற்றையும் இழந்து, தோல்வியுற்று, எதுவும் சரியில்லை என்று ஓலமிட்டார்கள். ராமரைப் போல் எந்தப் பிரச்னையையும் தைரியத்துடன் எதிர்கொண்டு வெற்றி கொள்ளவும், 'எனக்கு மட்டும் எல்லாமே தப்புத் தப்பாக நடக்கிறது’ என்று பாண்டவர்கள் போல் அழவும் நாம்தான் காரணம். வாய்ப்பு நம்மிடம்தான் தரப்படுகிறது. நாம்தான் வாய்ப்பைச் சரியானபடி பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதைத்தான் புராணங்களும் இதிகாசங்களும் வலியுறுத்துகின்றன.

புராண, இதிகாசங்களில் நிர்வாகத் திறன்!

சில வேளைகளில், என்ன சொல்லப்படு கிறது என்பதைவிட, அது எப்படிச் சொல்லப் படுகிறது என்பது ரொம்ப முக்கியம். நிர்வாக இயலில் அடிப்படையான விஷயம் இது. கிருஷ்ணர், விநாயகர், அனுமன் என யாரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். இவர்கள் தொடர்பான நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனித்துப் பார்த்தால், அவை இதைத்தான் வலியுறுத்தும்.

மாற்றம் என்பது அவசியமானது. ஆனால், அது எப்போதுமே, எவரையுமே பயமுறுத்துகிறது. எனவே, தேவையான அந்த மாற்றத்தைச் சாமர்த்தியமாகக் கொண்டு வருவதோ, அல்லது தன் ஊழியர் குழுவினரிடம் திணிப்பதோ தலைமைப் பொறுப்பில் இருப்பவரின் கையில்தான் இருக்கிறது. பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சாதுர்யமான செயல்பாடுகளைக் கவனித்துப் பாருங்கள்; இந்த நிர்வாக இயல் தத்துவம் உங்களுக்குப் புரிபடும்.

தலைமை என்பதையே எடுத்துக் கொள்ளுங்களேன். மன்னன் யாருக்காக? வெறும் கிரீடத்தைத் தாங்குவதற்கு மட்டுமா அவன் தலை இருக்கிறது? மக்கள் நலனை முன்னிட்டு சுமையான பொறுப்புகளையும் அவன் தாங்கவேண்டும் என்பதைத்தான் அந்தக் கிரீடம் குறிப்பால் உணர்த்து கிறது. கிரீடம் என்பது ஓர் அடையாளம். 'லீடர்ஷிப்’ என்பது பொறுப்புகளைச் சுமத்தல்தான்.''

'உங்கள் 'ஜெயம்’ புத்தகம் பற்றிச் சொல்லுங்களேன்..?''

''ராமாயணத்தில் பலவகை இருப்பது போல, மகாபாரதத்திலும் பலவகை உண்டு. இந்தோனேஷிய மகாபாரதம், தெலுங்கு மகாபாரதம் எல்லாம் இருக்கின்றன. தமிழில் தெருக்கூத்து மகாபாரதமும் உண்டு. நூலகத்தில் எல்லாவற்றையும் ஒரு வரி விடாமல் ஆங்கிலத்தில் படித்துவிட்டுத்தான் அந்தப் புத்தகத்தை எழுதினேன். அதனால்தான் அது இத்தனை பிரபலமாக இருக்கிறது. ஆயிரக்கணக்கில் விற்பனை ஆகிறது' என்று சொல்லும் பட்நாயக், அந்த நூலில் உள்ள 250 ஓவியங்களையும் அவரே வரைந்துள்ளார். அந்த ஓவியங்களை வரைவதற்கு உதவியாக இருந்தவர், தன் கார் டிரைவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

'நம் புராண இதிகாசங்கள் வாய்மொழியாக, வழிவழியாக நமக்குக் கிடைத்த பொக்கிஷங்கள். பிரிட்டிஷ் தாக்கத்தினால் நாம் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டோம். மராத்தி நாடகங்கள், தெலுங்கு நாடகங்கள் எல்லாவற்றையும் பார்த்தேன். இந்தியப் பண்டிகைகள், கொண்டாட்டங்கள் அனைத்தையும் அறிந்துகொண்டேன். இதையெல்லாம் எளிமையாக நவீன வாசகனுக்கு எப்படிக் கொடுப்பது என்று யோசித்தேன். தெற்கே இருப்பவர்களுக்கு வட நாட்டு விஷயங்கள் தெரிவதில்லை; வடக்கே உள்ளவர் களுக்குத் தென்னிந்தியா பற்றித் தெரியவில்லை. திரௌபதி பற்றி எத்தனை எத்தனைத் தகவல்கள்! பலவற்றையும் நாம் இழந்துவிட்டோம்.

புராண, இதிகாசங்களில் நிர்வாகத் திறன்!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மட்டும்தான் மீசையுடன் கிருஷ்ணர் மூலவராகக் காட்சி தருகிறார். இந்தியாவில் வேறு எங்குமே இப்படி இல்லை என்பது தெரியுமா உங்களுக்கு? நம் தேசத்தைப் பற்றிய அறிவு அவசியம். நான் எழுதுவது எல்லாம் நான் அறிந்ததில் பத்து சதவிகிதம்தான்' என்றவர், சற்று இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்...

புராண, இதிகாசங்களில் நிர்வாகத் திறன்!

'புக் ஆஃப் ராம் எழுதும்போது, கொஞ்சம் சவாலாகவே உணர்ந்தேன். காரணம்... சிக்கலான ஆதாரங்கள், தகவல்கள்! 'ஜெயா’வும் அப்படித் தான். ஏராளமான தகவல்களைச் சேர்த்துக் கோக்க வேண்டியிருந்தது. கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம் எல்லாம்கூட ஆங்கிலத்தில் படித்தேன். நம் நாட்டில் பெரும்பகுதி ஞானமும் தொலைந்து போய்விட்டது; அல்லது, சிதறிக் கிடக்கிறது. இங்கேதான் தேடல் அவசியமாகிறது. இந்திய மைதாலஜி அதாவது நம் புராண- இதிகாசங்கள் அனந்தம் (எண்ணிலடங்காதது) மற்றும் சூட்சுமமானது.

ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். எனவே, வார்த்தைகள் முக்கிய மல்ல. அர்த்தங்கள்தான் முக்கியம். சிந்தனை அல்லது எண்ணம்தான் பிரதானம். அதைத்தான் ஐடியா என்கிறோம். அதேபோல், அனுபவமும் முக்கியம்.'

'நீங்கள் மேற்கத்திய நாடுகளில் சொற்பொழிவு செய்கிறீர்களே, ஆதரவு எப்படி இருக்கிறது?''

'நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது. அவர் களுடைய அறிவு எல்லாம் பிரச்னைகளுக்குத்தான் இட்டுச் செல்கின்றன. உலகப் போர், இராக் போர் என எல்லாமே மேற்கத்திய எண்ணங்கள் உருவாக்கியவைதான். 'எங்கள் இந்தியாவில் 6,000 சமூகங்கள் இணைந்து வாழ்கிறோம்’ என்று சொன்னால், அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. நம்ப மறுக்கிறார்கள்'' என்றவர்,  

''எனக்குப் பிடித்த நகரம் இந்தச் சென்னைதான். அமெரிக்காவில் நிர்வாக இயல் படித்துவிட்டு, என் தந்தை முதலில் வேலையில் சேர்ந்தது

சென்னையில்தான். இங்கேதான் என் மூத்த சகோதரி ஸீமா பிறந்தாள். குழந்தைப் பருவத்தை நான் இங்கே செலவிட்டிருக்கிறேன். பிறகுதான் மும்பைக்குக் குடிபெயர்ந்தோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, என்னுடைய 'ஜெயம்: மகாபாரதம்’ புத்தகம் விகடன் பிரசுரம் மூலமாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, ஆங்கிலத்தைத் தவிர, வேறு மொழிகளில் வராத என் படைப்பு, முதன் முதலாக தமிழில் வருவதில் எனக்குக் கூடுதல் பெருமை'' என்று சிலிர்ப்புடன் தெரிவித்தார் தேவ்தத் பட்நாயக்.

படங்கள்: வி.செந்தில்குமார்