ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

மங்காத வாழ்வளிப்பாய்... செங்கதிர் தேவனே!

மங்காத வாழ்வளிப்பாய்... செங்கதிர் தேவனே!

மங்காத வாழ்வளிப்பாய்... செங்கதிர் தேவனே!
மங்காத வாழ்வளிப்பாய்... செங்கதிர் தேவனே!
மங்காத வாழ்வளிப்பாய்... செங்கதிர் தேவனே!

னுதினமும் கண்களால் காணக் கிடைக்கும் தெய்வம் சூரிய பகவான். பிரத்யக்ஷமான அந்தத் தெய்வத்துக்கு நன்றி தெரிவித்து, அவரை வழிபடும் இனிய திருநாள்தான் பொங்கல்.

சூரியன், மகரத்தில் பிரவேசிக்கும்... உத்தராயனப் புண்ணிய காலத்தின் துவக்க நாளான தைப் பொங்கல் அன்று, இயற்கை அளித்த காய்-கனிகள், தானியங்கள், பொங்கல் படையல்கள் படைப்பதுடன்... கதிரவக் கடவுளின் மகிமைகளையும் அறிந்து அவரைப் பூசிப்பது, இன்னும் சிறப்பல்லவா?

ஞானிகளும் மகான்களும் சூரியக் கடவுளை மிக அற்புதமாகப் போற்றுகிறார்கள். சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள், முதல் பாட்டிலேயே 'ஞாயிறு போற்றும் ஞாயிறு போற்றுதும்’ என்று சூரியனைக் கொண்டாடுகிறார்.

எல்லாம் வல்ல இறைவன் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாக விளங்குகிறார். காண்பானும், காட்டுவிப்பவனும், காட்சியும், காட்சிப் பொருளுமாக அனைத்துமாகி நிற்பவன் இறைவன் என்கின்றன இந்து மத புராணங்கள். இதற்குச் சாட்சியாக திகழ்பவர் சூரியதேவன். எனவேதான் நக்கீரர், 'உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு’ என, திருமுருகாற்றுப் படையின் துவக்கத்திலேயே பகலவனைப் போற்றி மகிழ்கிறார். சைவம் அவரை ஸ்ரீசிவ சூரியனாய் வணங்கச் சொல்கிறது; வைண வம் ஸ்ரீசூரிய நாராயணராக காண்கிறது.

##~##
ஆதவன் வழிபாடு என்பது தொன்மையானது மட்டுமல்ல; உண்மையானதும்கூட. ஜெகம் புகழும் காவிய நாயகனாம் ஸ்ரீராமனை, ரகோத்தமன் என்பார்கள். ரகு குல உத்தமன் எனப் பொருள். ஆமாம், சூரிய குலத்தில் வந்துதித்தவன் ஸ்ரீராகவன்.

பெரும் வல்லமை படைத்த தசகண்டனாம் ராவணனை வெல்வதற்கு, அகத்திய முனிவர் உபதேசித்தபடி, சூரிய பகவானின் தோத்திரமான 'ஆதித்ய ஹ்ருதயத்தை’ கூறி, வழிபட்டார் ஸ்ரீராமன்.

மகாபாரதத்தில், பாண்டவர் களின் தாயான குந்திதேவி, தன் முதல் குழந்தையான கர்ணனைப் பெற்றது, சூரியனின் அருளாலேயே!

அதுமட்டுமா? அள்ள அள்ளக் குறையாது அன்னம் தரும் அட்சய பாத்திரத்தை திரௌபதிக்கு அருளியதும் சூரியதேவனே. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் மைந்தன் சாம்பன், சூரிய உபாசனை யால் உயர்வு பெற்றான் என்றொரு தகவல் ஸ்ரீமத் பாகவதத்தில் உண்டு.

அருணகிரிநாதரின் திருவகுப்பு பாடலில், முருகப்பெருமானின் திருவடிப் பெருமைகளை விளக்கும் 'சீர்பாத வகுப்பு’ எனும் தலைப்பின் கீழ் முதல் பாடல்,

உததியிடை கடவும்மர கதவருண குலதுரக
உபலளித கனகரத சதகோடி சூரியர்கள்
உதயம்என அதிகவித கலபகக மயிலின் மிசை
யுகமுடிவின் இருள் அகல ஒருஜோதி வீசுவதும்...

- என விவரிக்கிறது.

மங்காத வாழ்வளிப்பாய்... செங்கதிர் தேவனே!

ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் உலா வரும் சூரியனை, 'எழுபரிரதத்து இரவி’ எனக் குறிப்பிடும் அருணகிரியார், சிவப்பு, பச்சை முதலிய ஏழு நிறக் குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் கதிரவன் காட்சி தருகிறான் என்கிறார். இப்படி மெய்ஞ்ஞான நூல்கள், ஏழு குதிரைகள் குறிப்பிடுவதையே, விஞ்ஞானமும், 'VIBGYOR’ என ஏழு வண்ணங்களாகக் குறிப்பிடுகிறது.

மெய்ஞ்ஞானம் சூரிய நமஸ்காரத்தையும், சந்தியாவந்தனத்தையும் தினசரி வழிபாடாகச் சொல்கிறது. விஞ்ஞானமோ, சூரிய ஆற்றல் (Solar power)  மேலான சக்தி எனப் போற்றுகிறது.

சந்தியாவந்தனம் என்பது, உதய காலத்தில் சூரியன் ரதத்தில் புறப்படும் நேரத்திலும், அவன் நடுஉச்சியில் சுடர்விடும் நேரத்திலும், மாலையில் ரதம் விட்டு இறங்கும் நேரத்திலும் நாம் செய்ய வேண்டிய ஒரு கடமையாகும். இதையே, 'காணாமல் கோணாமல் கண்டு’ என ஒரு பழமொழி விளக்குகிறது.

'நீ ஒளி! நீ சுடர்! நீ விளக்கம்! நீ காட்சி!' என வசனக் கவிதையில் சூரியனை வாழ்த்தும் மகாகவி பாரதி, பாஞ்சாலி சபதத்தில் வரும் பாடல் ஒன்றில் சூரிய தேவனுக்கு உரிய காயத்ரி மந்திரத்தின் தமிழ் வடிவத்தை வழங்குகிறார். 'செங்கதிர் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்; அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக!’ என்பதே அந்த மந்திரத்தின் பொருள் எனத் தெரிவிக்கிறார்.

'காலைக்கே முழுகி குணதிக்கினில்
ஆதித்யா எனப்பகர் தர்ப்பண
காயத்ரி ஜபம் அர்ச்சனை செய்யும் முனிவோர்கள்

- என அருணகிரிநாதர், அற்புதமாக சூரிய வழிபாட்டைத் திருஆனைக்கா திருப்புகழில் தெரிவிக்கிறார். அகில உலகங்களுக்கும் அன்னையான அம்பாளை ஆராதிக்கும் அபிராமி அந்தாதியும் 'உதிக்கின்ற செங்கதிர்...’ என்றே தொடங்குகிறது.

சூரியனிலிருந்து வெடித்து வந்த பிழம்பே இந்தப் பூமி என அறிவோம். எனில், பூமியைப் பெற்றெடுத்த தாயாக சூரியன் விளங்குகிறான். ஆக, உலக அன்னையாகத் திகழும் அபிராமியை, ஆதவனுக்கு நிகராகவே அபிராமி பட்டர் குறிப்பிடுகிறார்.

'ஞாயிறு ஆயிரம்’ என்று வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் கதிரவனைப் பற்றி பாடியுள்ளார். அருக்கன், ஆதித்தன், ஆதவன், இரவி, தாரகை நாயகன், திவாகரன் எனப் பல பெயர்களால் சூரியனை அழைக்கிறார் அவர். அனுமனுக்கு ஆசிரியராக ஆதித்தன் விளங்குவதை,

'ஒப்பில் மாருதிக்கு ஒன்பது இலக்கணம்
செப்பி ஆண்ட திவாகர மூர்த்தியே'

- எனப் போற்றி மகிழ்கிறார்! விஸ்வாமித்திர முனிவர் கதிரவனுக்கான காயத்ரி மந்திரத்தை அருளினார். சூரியனை வழிபட்டு, சுக்ல யஜூர் வேதத்தை அருளினார்யாக்யவல்கியர்.

உத்தரம் என்றால் வடக்கு; அயனம் என்றால் வழி. சூரியன் உத்தராயன புண்ணிய காலத்தில் வடக்கு திசையில் ரதத்தில் பயணம் செய்யும் காலமே, தேவலோகத்தின் வைகறைப் பொழுதாகத் திகழ்கிறது. இத்தகைய புண்ணிய காலத்தை எதிர்நோக்கியே அம்புப் படுக்கையில் காத்திருந்தார் பீஷ்மர்!

இப்படி, அவதாரப் புருஷர்களும் ஆன்றோரும் போற்றித் துதித்த ஆதவனை, அவனுக்குரிய தை மாதத்தில் நாமும் வழிபடு வோம். தமிழகத்தில் சூரியனார் கோயில், ஒரிசாவில் 'கொனார்க்’ ஆலயம் இரண்டும் சூரிய தேவனை வழிபடச் சிறந்த ஆலயங்கள். நம் பாவங்கள் அனைத்தும் பொசுங்க இந்தத் தலங்களையும் தரிசித்து வருவோம்; 'ஆதவா போற்றி, ஆதித்யா போற்றி...’ என அவன் நாமம் சொல்லி வணங்குவோம். அவனருளால் அனைத்து நலன்களும் கைகூடப் பெறுவோம்!