ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

பிள்ளைத் தமிழ் பாட வந்தோம்!

பிள்ளைத் தமிழ் பாட வந்தோம்!

பிள்ளைத் தமிழ் பாட வந்தோம்!

றைவன் பிரியத்துக்குரியவன். அந்தப் பிரியமானவனுக்கு, இருப்பதில் உயர்வானதை- மிகச் சிறந்ததை சமர்ப்பித்து சந்தோஷப்படுத்த மனம் ஆசைப்படும். அவனைப் பாடும்போதும், உயர்வான பொருள் வைத்துப் பாடத் தோன்றும்.

சரி... இருப்பதில் உயர்வானது - மிகச் சிறந்தது, எது?

பிள்ளைச் செல்வத்தைவிட வேறு உயர்ந்தது உண்டா என்ன?! ஆகவேதான், இறையை பிள்ளையாய்க் கருதி, பிள்ளைத் தமிழ் பாடி வைத்தார்கள் போலும் நம் பெரியவர்கள்!

வேறொரு விதமாகவும் பார்க்கலாம்! இறையை தோழனாக்கினார் சுந்தரர்; அவனை நாயகனாக்கி, தான் காதலியாகி பாடி மகிழ்ந்தார் திருமங்கையாழ்வார்; அன்னையே என்றார் அபிராமிப் பட்டர். இப்படி, அறிந்துணர்தற்கு அரியவனான இறைவனை, சாதாரண மனித அறிவுக்கு உகந்தவாறு அம்மை-அப்பனாகவும், தோழனாகவும், நாயகனாகவும் கருதி வழிபடுதல் சுலபம். குழந்தையாய்க் கருதி அவன் மேல் அன்பைச் சொரிவது அதை விட இன்னும் எளிய வழி அல்லவா?!

ஆக, இறையையும் அவனருள் பெற்ற மகான்களையும் குழந்தையாக பாவித்துச் சீராட்டி மகிழும் கவிதையே பிள்ளைக்கவி. இதில் பத்து பருவங்கள் உண்டு.

##~##
காப்பு:
பிள்ளைக்கு எவ்வித தீங்கும் நேரக்கூடாது என வேண்டிப் பாடுதல்.

செங்கீரை: பிறந்து ஐந்து மாதத்தில் குழந்தைக்கு தலை நிற்கும். கீரைத் தண்டினைப் போன்று மென்மையாக... இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக தலை அசைத்துப் பார்க்கும். இதை வர்ணிக்கும் பருவம்.

தால்: தாலாட்டு பாடும் பருவம்.

சப்பாணி: குழந்தை எழுந்து அமர்ந்து கைகொட்டும் பருவம்.

முத்தம்: குழந்தையை முத்தம் தரச்சொல்லிக் கேட்பது.

வாரானை: தளர்நடை போடும் குழந்தையை 'வா... வா...’ என்று அழைப்பது.

அம்புலி: நிலாவைக் காட்டி சோறூட்டும் பருவம்.

சிறுபறை: கையில் சிறு மேளத்தையும் குச்சியையும் கொடுத்து விட, குழந்தைகள் விளையாடும் பருவம்.

சிற்றில்: கொஞ்சம் வளர்ந்துவிட்ட குழந்தை மணலில் வீடு கட்டி விளையாடுவதைச் சொல்வது.

சிறுதேர்: சிறு வண்டி இழுத்து நடை பழகும் பருவம்.

இவை, ஆண்பாற் பிள்ளைத் தமிழின் 10 பருவங்கள். பெண் குழந்தையெனில், கடைசி மூன்றும் மாறுபடும். அவை, அம்மானை, நீராடல், ஊசல். அதாவது, ஒரு குழந்தை பிறந்தது முதல் வளர வளர செய்யும் காரியங்களை வர்ணித்துப் பாடுவதே, பிள்ளைத் தமிழ். தமிழில்  பெரியாழ்வார்தான் முதன்முதலில் பிள்ளைக்கவி பாடியவர் எனலாம். அவர் பிள்ளைக் கவியென்று தனியாகப் பாடவில்லை. எனினும் பெரியாழ்வார் திருமொழியின் முக்கியமான பகுதி கண்ணனின் குழந்தைப் பருவத்தைக் குறித்துப் பாடியதுதான்!

பகழிக் கூத்தரின் திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ், அந்தகக் கவி வீரராகவ முதலியாரின் சேயூர்ப் பிள்ளைத் தமிழ், வேப்பத்தூரரின் அழகர் பிள்ளைத் தமிழ் ஆகியன பழைமையானவை. ஸ்ரீமுத்துக் குமாரசுவாமி, ஸ்ரீமீனாட்சி அம்மை பேரில் குமரகுருபரரும், அனுமன் மீது அருணாசலக் கவிராயரும் பிள்ளைத் தமிழ் பாடியிருக்கின்றனர். அவற்றில் சில உங்களுக்காக!

இலக்கியச் சுவையுடன் இறை சாந்நித்தியமும் நிறைந்த இந்தப் பாடல்களைப் பாடி வழிபட, பிள்ளை இல்லாதவர்களுக்கு தெய்வாம்சம் பொருந்திய குழந்தை பிறக்கும். இக-பர தொல்லைகள் யாவும் நீங்கி, குழந்தையாய் மனம் குதூகலிக்கும்!

தொகுப்பு: நமசிவாயம்

பிள்ளைத் தமிழ் பாட வந்தோம்!
பிள்ளைத் தமிழ் பாட வந்தோம்!
பிள்ளைத் தமிழ் பாட வந்தோம்!
பிள்ளைத் தமிழ் பாட வந்தோம்!