மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அன்பே தவம்

அன்பே தவம்
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பே தவம்

தொடர் - 10தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்படங்கள்: கே.ராஜசேகரன், ஓவியம் பாலகிருஷ்ணன்

புத்தாண்டு மலர்கிறது.  புதிய சிந்தனைகள், புதிய எண்ணங்கள், புதிய திட்டங்கள் புத்தாண்டில் நம்மை வரவேற்றுக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு புத்தாண்டு தினத்திலும் `அதிகாலை எழுவோம்’; `ஆண்டவனைத் தொழுவோம்;’ `உடற்பயிற்சி செய்வோம்’; `நல்ல நூல்களைக் கற்போம்’; `புதிய செயல்திட்டங்கள் வகுப்போம்’ என்றெல்லாம் எவ்வளவோ உறுதிமொழி எடுப்போம். மதுப்பழக்கத்துக்கு அடிமையான சிலர் அதை விட்டுவிடுவதாக உறுதியெடுப்பார்கள். புகைபிடித்தலுக்கு அடிமையான சிலர் அதை விட்டுவிடுவதாக உறுதியெடுப்பார்கள். பெரும்பாலும் பல உறுதிமொழிகள் காற்றில் கரைந்த கற்பூரமாக, தண்ணீரில் எழுதிய எழுத்துகளாகப் புத்தாண்டு தினத்தோடு விடைபெற்றுவிடும். 

அன்பே தவம்

`வேடிக்கை மனிதரைப்போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?’


என்கிறான் பாரதி. `சராசரி மனிதக் கூட்டத்துக்குள் என் வாழ்க்கையை முடித்துவிடுவேனா... சராசரிகளைப்போல் என் வாழ்வு முடிந்துவிடுமா... எப்படி என் வாழ்வு இருக்க வேண்டும்?’ பொங்கி எழுகிறான் பாரதி. `என்னைப் புதிய உயிராக்கு’ என்கிறான். `நேற்றுவரை நான் செய்த தவறுகள் என்னோடு இல்லாது போகட்டும். நான் புதிய மனிதனாகப் பிறவியெடுக்க வேண்டும். என்னைப் புதிய உயிராக்கு’ என்று மன்றாடுகிறான். நாமும் நம்மைப் புதியவர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும். எப்படி?

கடந்தகாலத்தில் நாம் சந்தித்த காயங்கள், கசப்புகள், கண்ணீர்த் துளிகள், கோபக் குப்பைகள் விடைபெறட்டும். எவர்மீதும், எதன்மீதும் வெறுப்புகொள்ளாமல், பிறரை நேசிப்பவர்களாக நாம் மாறுவோம்.
 
இறை வாழ்த்தைப் போற்றித் தொடங்குவதே காவிய மரபு. அதன் எல்லைகளைத் தாண்டி, இயற்கையைப் போற்றி, தன் காவியத்தைத் தொடங்கினார் இளங்கோவடிகள். திங்களை,  ஞாயிற்றை, மாமழையைப் போற்றினார். அப்படி இயற்கையைப் போற்றி வாழ்ந்த வாழ்வு இன்று என்னவாயிற்று? இயற்கையோடு எதிர்த்து நடத்திய எதிர்த்தாக்குதல் மனிதகுலத்தை வீழ்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது.

மனிதன், முதலில் தன் சொந்தச் சகோதரர்களோடு சண்டையிட்டான். அடுத்து அண்டை வீட்டுக்காரனோடு, பிறகு தெருவில் சண்டை போட்டான்; ஊர்களோடு சண்டையிட்டான்; நாடுகளோடு சண்டையிட்டான். இப்போது உலகத்தோடு சண்டையிட்டுக்கொண்டி ருக்கிறான். எல்லாச் சண்டைகளையும் விஞ்சுகிற அளவில் இயற்கையோடு அவன் நடத்திய தாக்குதல் மனிதகுலத்தைத் தற்கொலைப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக இருக்கிறது.

அன்பே தவம்கஜா புயலின் படையெடுப்பு எதைக் காட்டுகிறது? நாம் இயற்கையை விட்டு விலகிவிட்டோம்; இயற்கையை எதிரியாக பாவித்துவிட்டோம்; இயற்கையோடு சண்டையிட்டபடி நம் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது.
 
நம் நாட்டில் இன்னமும் ஏழைகள், வறியவர்கள் இருக்கிறார்கள். இவர்களின் மனப்போக்கு ஏன் வறுமையை, ஏழ்மையை எதிர்த்துப் போராடாமல் இருக்கிறது? பின்தங்கிய நாடுகளில் மக்களின் மனப்போக்கு ஏன் இப்படி இருக்கிறது என்று ஓர் ஆய்வே நடந்தது.  அந்த ஆய்வுக்காக மூன்று தட்டுகளை வடிவமைத்து, அவற்றில் எலிகளை வைத்தார்கள். ஒரு தட்டில் அதிக உணவும், ஒரு தட்டில் குறைந்த உணவும், ஒன்றை வெறும் தட்டாகவும் அமைத்து, அவற்றில் எலிகளை விட்டார்கள்.

அதிக உணவு இருந்த தட்டிலும், வெறும் தட்டிலும் எந்த மாற்றமும் இல்லை. எதில் குறைந்த உணவு இருந்ததோ, அங்கே எலிகள் ஒன்றையொன்று சண்டை யிட்டுக்கொண்டன; கடித்துக்கொண்டன. பிறகு, கடிபட்ட எலிகளை வெறும் தட்டிலே வைத்தார்கள். அங்கே வசிக்க அந்த எலிகள் விரும்பவில்லை என்பது தெரிந்தது. அந்த எலிகளை அதிக உணவுள்ள தட்டில் வைத்தார்கள். அங்கே வசிக்கவும் அவற்றுக்கு விருப்பம் இல்லை என்பது தெரிந்தது. கடிபட்ட அந்த எலிகள் தாங்கள் கடிபட்டு, பாதிக்கப்பட்ட குறைவான உணவு உள்ள இடத்தில் வசிக்கவே விரும்பின என்பது ஆய்வில் தெரியவந்தது. இப்படித்தான் பின்தங்கிய நாடுகளிலும் மக்களின் மனநிலை இருக்கிறது. ஏழ்மையை, வறுமையை மாற்ற அவர்கள் முயல்வதில்லை. அதற்கு விதியைக் காரணம் காட்டி, முடங்கிப் போகிறார்கள். `மனித முயற்சி, விதியின் விளைவு’ என நினைத்து முடக்கப்படுகிறது என்று அந்த ஆய்வில் சொல்லப்பட்டது. 

இப்போதெல்லாம் ஆண்டவனின் ஆலயங்களிலேயே வேறுபாடு. சில திருக்கோயில்களின் உண்டியல்களில் காணிக்கை நிரம்பிவழிகிறது. சில திருக்கோயில்களிலோ அன்றாட பூசைக்கே தடுமாற்றம். என்ன காரணம்? `கடவுள்தான் ஏழையை, பணக்காரனைப் படைக்கிறான்’ என்று மனிதன் நினைக்கிறான். ஆனால் மனிதன், கடவுளையே ஏழைக் கடவுளாகவும், பணக்காரக் கடவுளாகவும் மாற்றிவிடுகிறான்.  நம்முடைய சோர்ந்துபோகிற பொறிகளுக்கு, புலன்களுக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறவர்; களைத்துப்போகிற மனங்களுக்கு ஆறுதலை, தேறுதலைத் தருகிறவர்; உழைக்க மறுக்கிற, மறக்கிற மக்களுக்கு ஊக்கத்தை, உற்சாகத்தைத் தருகிறவர் இறைவன். இதுதான் இறைமையின் ஆற்றல் என்பதை நாம் உணர வேண்டும். அதைத்தான்,

`தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்’


என்று திருவள்ளுவர் சொன்னார். 

ஆங்கிலத்தில், `SMART’ என்று சொல்வார்கள். SMART என்பதன் விளக்கம் என்ன?

Systematic (பணியின் செயல்திட்டம்), Measurable (பணிப் பயனின் அளவீடு), Admirable (அந்தப் பணியால் கிடைக்கிற பாராட்டு), Rejoice (பணியில் கிடைக்கிற மகிழ்ச்சி), இதற்கெல்லாம் மேலாக Time Bound (பணியைச் செய்வதற்கான கால வரையறை). இந்த ஐந்தும் ஒருங்கிணைந்தால்தான் அந்தச் செயல் வெற்றிபெறும். அதற்குப் பெயர்தான் `SMART.’ ஒரு பணியைக் கடமைக்காக அல்ல,  ஈடுபாட்டுடனும் மகிழ்வோடும் செய்ய வேண்டும்.  

அன்பே தவம்

`ஷேக்ஸ்பியர் கவித்துவமாக நாடகங்களை வடித்ததைப்போல, மைக்கேல் ஏஞ்சலோ ஓவியம் தீட்டியதைப்போல, பீத்தோவன் அற்புதமான இசைக்கோவை களை உருவாக்கியதுபோல நாம் எந்தப் பணியையும் மிக நேர்த்தியாகச் செய்ய வேண்டும்’ என மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் சொல்வார்.  ஓர் அறையைத் தூய்மை செய்கிற பணியாக இருந்தால், அதையும் மகிழ்வோடும் ஈடுபாட்டோடும் செய்ய வேண்டும். அப்படிச் செய்கிறபோதுதான் அந்தப் பணி சிறக்கும்.

ஆன்மிகத் தடத்தில் நம் மகா சந்நிதானம் குன்றக்குடி அடிகளார் பெருமான் புத்தாண்டு வந்தால், கடைநிலை ஊழியர்கள், பணியாளர்கள், கிராமப் பொதுமக்கள் என அனைவருக்கும் புதிய நாட்குறிப்பேடு (Diary)வழங்குவார். அது ஆங்கிலப் புத்தாண்டுக்காக வழங்கப்படுவதல்ல.  எல்லாக் குறிப்பேடுகளிலும் கடைநிலை ஊழியர் முதற்கொண்டு ஒவ்வொருவரின் பணியும் கடந்த ஆண்டு எப்படி இருந்தது, வரும் ஆண்டில் எப்படி இருக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் இருக்கும். ஒவ்வொருவரும் அதை வேதப்புத்தகமாக எண்ணிப் பெற்றுக்கொள்வார்கள். `கடந்த ஆண்டு செய்த பணியைவிட, இந்த ஆண்டு என் பணி உயரச் செல்ல வேண்டும்; உன்னதமாக இருக்க வேண்டும்’ என்று சிரத்தையோடு பணியாற்றுவார்கள். நாட்குறிப்பேடு பரிசுப் பொருள் அல்ல. நம் பணியின் திட்டம்.    

எத்தனை இயற்கைப் பேரிடர்களை எதிர்கொண்டுவிட்டோம்?  சுனாமி தொடங்கி இன்றுவரை புயலின் தாக்குதல் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. அண்மையில் கஜா புயல் நம்மைப் புரட்டிப் போட்டுவிட்டது. திருவாரூரைச் சேர்ந்த  மைதீன் கோவிந்தராஜன், நிவாரணப் பணிகளுக்காக நம்மோடு திருத்துறைப்பூண்டிக்கு வந்திருந்தார். 1992-ம் ஆண்டில், `தண்டியடிகள் அறக்கட்டளை’ என்ற மக்கள் இயக்கத்தின் மூலமாக, நம் மகாசந்நிதானத்தின் தலைமையில் திருவாரூர் கமலாலயத்தில் தூய்மைப்பணி செய்தவர்; சுனாமி நிவாரணப் பணிகளின்போதும் நம்மோடு தோளோடு தோள் கொடுத்தவர்; ஆதரவற்ற பிணங்களை அகற்றுவதற்கு உதவிசெய்தவர். இப்போதும் நம்மோடு இணைந்து ஏழை மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார். இன்னும் ஈரோட்டிலிருந்து வந்திருந்த அருள்நெறித் திருக்கூட்ட அன்பர்கள். அ.திருநாவுக்கரசு, செந்தூர் பெரியசாமி, முருகேசன், வெங்கடாசலம் என எண்ணற்றோர். இவர்கள், தாங்கள் ஆன்மிகப் பணி, கல்விப் பணி மட்டும் செய்பவர்களல்லர், பொதுநலப் பணியும் செய்பவர்கள் என நிரூபித்தார்கள். இரவு முழுக்க உறங்காமல் பயணம் செய்து அவர்கள் வழங்கிய நிவாரணப் பொருள்கள் ஏராளம். ஏழை மக்களின் கண்ணீர் துடைத்த இப்படிப்பட்ட அன்பர்களின் சேவை என்றைக்கும் தேவைப்படுகிறது.

அன்பே தவம்


   
ஆலயங்களில் சேவை செய்வதும்,  அன்னதானம் செய்வதும் மட்டுமல்ல புண்ணியப் பணி. ஏழை எளியவர்களின் கண்ணீரைத் துடைப்பதுதான் புண்ணியத்திலும் புண்ணியம். அந்தப் புண்ணியத்தைச் செய்கிற புண்ணிய சீலர்கள் தோழமையாக இருப்பதுதான்  நாம் பெற்ற பெரும்பேறு. கஜா புயல் நிவாரணப் பணியாற்றியவர்களுக்கு நாம் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறோம். வார்த்தைகளால் அல்ல; வாழும் வாழ்க்கையால்தான் நன்றி சொல்ல முடியும். 

ஒரு மன்னர்,  `அமைதியின் அடையாளமாக ஓர் ஓவியத்தை வரைய வேண்டும். எந்த ஓவியம் சிறப்பாக இருக்கிறதோ, அதற்குப் பரிசு’ என்று அறிவித்தார். பல ஓவியர்கள் போட்டியில் கலந்துகொண்டார்கள். அவற்றில் இரண்டு ஓவியங்கள் இறுதிக்கட்டத்தில் மன்னரின் பார்வைக்கு வந்தன. ஓர் ஓவியத்தில், அமைதியான ஏரி.  அந்த ஏரியில் பிரதிபலிக்கிற உயரமான மலை. மலையைச் சுற்றிலும் பசுஞ்சோலை. தெளிந்த நீலவானம். வெண்மேகங்கள்...  அப்படியே அமைதியைத் தந்த பூரண ஓவியமாகக் கண்களுக்குத் தெரிந்தது. மன்னர் அடுத்த ஓவியத்தைப் பார்த்தார்.  அதில் மலை இருந்தது; மரங்கள் இல்லை. வெறும் கந்தகக் காடுபோல, மரங்கள் இல்லாமல் மலை தெரிந்தது. அந்த மலைக்குக் கீழே வானம் மின்னல் தெறிக்கக் கோபக்கனலோடு இருந்தது. பேரிரைச்சலோடு அருவி கொட்டிக்கொண்டிருந்தது. அந்த அருவிக்கும், அருவியின் இரைச்சலுக்கும், அந்த மலைக்கும் அமைதியின் தொடர்பே இல்லை. மன்னர் ஓவியத்தை உற்றுப் பார்த்தார். பேரிரைச்சலாகக் கொட்டுகிற அருவிக்குப் பின்னே, மலையின் பாறையில் ஒரு பிளவு இருந்தது. அந்தப் பிளவில் ஒரு புதர். அதில் தாய்ப்பறவை கூடுகட்டியிருக்க, அதற்குள் இரண்டு குஞ்சுகள் இருந்தன. விண் பிளந்து விழும் அளவுக்கு ஒலிக்கும் அந்த அருவிக்குப் பின்னால் இருந்த பறவைக்கூட்டில் சலனமற்று, பூரண அமைதியோடு இரண்டு குஞ்சுகள்! அவை இரைச்சலைப் பற்றிக் கவலைப்படவில்லை. அமைதியின் ஆனந்தத்தில் இருந்தன.  அந்த ஓவியம் மன்னரைக் கவர்ந்தது. பரிசுபெற்றது. ஆக, அமைதி என்பது புறச்சூழலில் இல்லை. இதயத்தின் ஆழ்ந்த உணர்வுகளில் இருக்கிறது என்பதைத்தான் அது காட்டுகிறது. வாழும் தலைமுறை புதிய ஆண்டில் பூரண அமைதியைச் சிந்திக்க வேண்டும். மகிழ்ச்சியை, ஆனந்தத்தைச் சிந்திக்க வேண்டும். அதற்காக இயற்கையிடம் மண்டியிட்டுப் பிரார்த்திப்போம். 

அன்பே தவம்

`நித்தம் நித்தம் புதுப்புதுப் பெயர் சூட்டிக்கொள்ளும் புயற்காற்றே! இந்தப் புத்தாண்டில் மண்டியிட்டு உன்னிடம் மன்றாடுகிறோம். இனியேனும் எளிய மக்களின் மீதான உன் தாக்குதலை நிறுத்து. வாழ்க்கை ஓர் அழகிய ஓவியம். அதைக் கலைத்துவிடாதே; உன் வேகக் காற்றால் அழித்துவிடாதே, உன்னை எதிர்க்க எங்களிடம் ஆயுதங்கள் இல்லை. உன் தாக்குதலால் தடுமாறி நிற்போர் சிந்தும் கண்ணீர்த்துளிகளைத் துடைக்கும் கருணைக் கரங்களும், உதவும் அன்பு இதயமுமே எங்களிடம் இருக்கின்றன. புயலைக் கடந்துவரும் புத்தாண்டே, ஆதரவுக் கரம் நீட்டி, அன்பைச் சுமந்து வா… அன்பைச் சுமந்து வா…’   

(புரிவோம்...)       

அன்பே தவம்
அன்பே தவம்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே நம்முடைய நிர்வாகத்திலுள்ள பள்ளியின் வகுப்பறைகள் கஜா புயலால் சேதமடைந்துவிட்டன. அதைக் காணச் சென்றபோது, மக்களின் அவலநிலையைப் பார்க்க நேர்ந்தது. ஏறத்தாழ 20 நாள்களுக்கும் மேலாக மின்சாரம், குடிநீர் கிடைக்காமல் அல்லல்படும் மக்கள். அங்குதான், சீனு சின்னப்பா என்ற நம் அன்பரைச் சந்தித்தோம். புதுக்கோட்டை மாவட்டம் முழுக்க, `மகாராஜா பேக்கரி’ என்ற இனிப்பகங்கள் நடத்துபவர். உடல் நலிவுற்ற நிலையிலும், உள்ளம் தளராமல் ஏழைகளுக்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிக்கொண்டிருக்கிறார். திருத்துறைப்பூண்டி அருகே அவர் பிறந்த பாமணி கிராமம் உட்பட 15 கிராமங்களுக்குப் பல லட்ச ரூபாய் செலவில் பொருள்களை நிவாரணமாக வழங்கியிருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டத்திலும் பல கிராமங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கியிருக்கிறார். கிராமத்தில் விவசாயத்தோடு தொடங்கிய வாழ்வு, இன்று இனிப்பகத்தின் உதவியால் இனிப்பாக மாறியிருக்கிறது. அவர், ஏழை மக்களுக்கு இனிப்பாக இருக்கிறார். அவருக்கும் ஒரு துயரச் செய்தி வந்தது. அவர் சகோதரியின் மகனும் இயற்கை விவசாய ஆர்வலருமான நெல் ஜெயராமன் மறைந்துவிட்ட செய்தி. ஆனால், அடுத்த நாளே மக்களுக்கு நிவாரணப் பணிகளைத் தொடர ஓடிவந்துவிட்டார். அவரைப் பார்த்து, `இப்படியும் ஒருவரா?’ என்று நாம் வியந்து, நெகிழ்ந்துபோனோம்.