ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

தினமும் புண்ணிய தரிசனம்!

நல்லது நடந்தது!

மகிழ்ச்சியில் வீரபாண்டி மக்கள்

தினமும் புண்ணிய தரிசனம்!
##~##
'ஸ்ரீ
வீரபத்திரர் தவமிருந்து சிவனாரின் அருள் பெற்ற திருத்தலங்களில், வீரபாண்டி ஸ்ரீஅதுல்யநாதேஸ்வரர் கோயிலும் ஒன்று. ஸ்ரீஅஷ்டபுஜ துர்கை சாந்நித்தியத்துடன் திகழும் தலங்களில் இதுவும் ஒன்று. இத்தனை பெருமைகள் கொண்ட ஆலயத்தின் அவல நிலையை, கடந்த 11.1.11 தேதியிட்ட இதழில், ஆலயம் தேடுவோம் பகுதியில், 'அதுல்யநாதருக்கு அள்ளிக் கொடுங்கள்’ என எழுதியிருந்தோம்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ளது வீரபாண்டி திருத்தலம். அழகிய லிங்கத் திருமேனியுடன் அருளும் ஸ்ரீஅதுல்யநாதேஸ்வரரும், சகல செல்வங்களும் தரும் ஸ்ரீசௌந்தர்ய கனகாம்பிகையும் குடியிருக்கும் கோயில் கோபுரம் இன்றி, சிதிலம் அடைந்து  காட்சி தருகிறது என்று எழுதியிருந்தோம்.

'ஆங்காங்கே சந்நிதிகளும் விரிசலுடன் இருந்தது. எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் மண்டபத் தூண்கள் இருந்தன. ஊர்மக்களின் துணையுடன் திருப்பணிகளைத் துவக்கினோம். ஆனால், போதிய நிதியின்றி, வேலைகள் பாதியில் அப்படியே நிற்கின்றன. இந்தக் கோயில் பழைய பொலிவுடன் திகழ வேண்டும் என்பதே எங்களின் கனவு'' என 78 வயதுப் பெரியவரும் திருப்பணிக் குழுவின் தலைவருமான குப்புசாமி வேதனையுடன் தெரிவித்ததையும் குறிப்பிட்டிருந்தோம்.

தினமும் புண்ணிய தரிசனம்!

இதையடுத்து, உலகின் பல மூலைகளில் இருந்தும் சின்னதும் பெரிதுமாக உதவிகள் மளமளவென வரத் துவங்க, திருப்பணிக் குழுவினரும் ஊர்மக்களும் உற்சாகமானார்கள். இரவு - பகல் பாராமல் வேலைகள் துரிதமாக நடந்தன. கடந்த 10.7.11 அன்று, விழுப்புரம் மாவட்ட மக்கள் பலரும் திரண்டிருக்க, விமரிசையாக கும்பாபிஷேம் நடந்தேறியபோது, அனைவரின் முகத்திலும் அப்படியரு பிரகாசம். 'கோபுர தரிசனம் மட்டுமல்ல... கோபுரம் கட்டுகிற திருப்பணிக்கு உதவினாலும் கோடி புண்ணியம்தான்!’ என அந்தக் கட்டுரையின் கடைசி வரிகள் நினைவுக்கு வந்தன. ஓங்கி, உயர்ந்து, நிமிர்ந்து வண்ணங்களுடன் திகழ்கிற அந்தக் கோயிலின் கோபுரத்தைப் பார்க்கிறபோது, அந்தத் திருப்பணியில் சக்தி விகடன் வாசகர்களின் கைங்கர்யமும் கண்டிப்பாக இருந்திருக்கும் என எண்ணிப் பூரித்துப் போனது மனது.  

தென்னாடுடைய சிவபெருமானுக்கும் அவர்தம் அடியவர்களுக்கும் நன்றிகள்!

- வி.ராம்ஜி