ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

கோடி வரம் தரும் கூடுமலை நாயகன்!

கோடி வரம் தரும் கூடுமலை நாயகன்!

கோடி வரம் தரும் கூடுமலை நாயகன்!
கோடி வரம் தரும் கூடுமலை நாயகன்!
##~##
'இ
ந்த ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும், ஒரு தெய்விக அதிர்வு உடலில் பரவுவதை உங்களால் உணரமுடியும்’ என்று சொல்லிச் சிலிர்க்கிறார்கள் அன்பர்கள் பலரும்!

அந்தக் கோயில், கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீமகா கணபதி ஆலயம். அவர் பெயருக்கேற்ப உண்மையிலேயே மகா கணபதியாக, மிகப் பிரமாண்ட மாகக் காட்சி தருகிறார். கோயிலின் பின்னணியில் தெரிகிற அந்த மலையும் அத்தனைப் பிரமாண்டம். அந்த மலையின் பெயர்... கூடுமலை. மலையின் மூன்று முகடுகள் கூடுகிற இடத்தில் கோயில்கொண்டு, தன்னை நாடி வருவோருக்கு வாரி வழங்கும் வள்ளலென அருள்புரிகிறார் ஸ்ரீமகா கணபதி.

கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், முல்பாகல் நகரில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது கூடுமலை. பெங்களூரூவில் இருந்து சுமார் 90 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, இந்த மலை. கூடுமலை என்று சொல்லப் பட்டு வந்ததை, 'குருடு மலை’ என்று காலவழக்கத்தில் சொல்கிறார்கள், ஊர்மக்கள். கூடுமலையின் அடிவாரத்தில் அழகுற அமைந்துள்ளது ஸ்ரீமகா கணபதியின் ஆலயம்.  

மூலவரின் உயரம் சுமார் 14 அடி; அகலம் சுமார் 7 அடி. நமது விக்னங்களை எல்லாம் தீர்த்து வைக்கும் ஸ்ரீவிக்ன விநாயகரைப் பார்த்தபடி, அவருக்கு எதிரில் அவரின் வாகனமாம், மூஞ்சூறு. அட... அதுவும் பிரமாண்டம்!

கோடி வரம் தரும் கூடுமலை நாயகன்!

மூலவரின் திருமேனி, நான்கு யுகங்களாக இருப்பதாகச் சொல் கிறார்கள். கிருத யுகத்தில் படைப்புக் கடவுளான ஸ்ரீபிரம்மா, காக்கும் கடவுளான ஸ்ரீவிஷ்ணு, அழிக்கும் கடவுளான ஸ்ரீசிவ பெருமான் ஆகிய மூன்று பேரும், இந்தத் திருவிடத்தில் கூடிப் பேசுவார்களாம்; பொழுதைக் கழிப்பார்களாம்.

அந்தக் காலகட்டத்தில், திப்ராசுரன் எனும் அரக்கன், தேவர்களையும் மக்களையும் அச்சுறுத்தி, அவர்களுக்குத் துன்பம் கொடுத்து வந்தான். அவனை அழிக்கும்படி, மும்மூர்த்தி களிடம் தேவர்கள் புலம்ப... அவர்கள் ஸ்ரீகணேசரை அழைத்து, அசுரனை அழிக்கும்படி தெரிவித்தனர். அதன்படியே ஸ்ரீகணபதி அந்த அசுரனை அழித்து, தேவர்களையும் மக்களை யும் காத்தருளினார். இதில் மகிழ்ந்த மும்மூர்த்திகளும் ஸ்ரீகணபதியின் பிரமாண்டத் திருவிக்கிரகத் திருமேனியைப் படைத்து, கூடுமலை அடிவாரத்தில் பிரதிஷ்டை செய்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

அடுத்து வந்த திரேதா யுகத்தில், நினைவாற்றலும் ஞாபக சக்தியும் கேட்டு, ஸ்ரீஅனுமன் இங்கு வந்து ஸ்ரீமகா கணபதியைப் பிரார்த்தித்தார். அவருக்குக் காட்சி தந்ததுடன், நினைவாற்றல் எனும் சக்தியையும் வழங்கியருளினார், கணபதி. அதன் பிறகு, ஸ்ரீசீதா பிராட்டியைத் தேடி இலங்கைக்குச் சென்ற ஸ்ரீஅனுமன், அங்கே சீதையைக் கண்டதும் ஒருகணம் என்ன செய்வது, என்ன சொல்வது என்று தெரியாமல் விக்கித்து நின்றாராம். சட்டென்று மகா கணபதியின் பேரருளால் ஞாபகம் வந்தவ ராக, ஸ்ரீராமர் கொடுத்தனுப்பிய கணையாழியை ஸ்ரீசீதையிடம் ஞாபகமாகக் கொடுத்தார் என்றொரு கதை உண்டு. அதேபோல், ஸ்ரீராமபிரான் ராவண யுத்தத்துக்குக் கிளம்புவதற்கு முன்னதாக, இங்கே வந்து மனமுருகி ஸ்ரீமகா கணபதியை பூஜித்துச் சென்றார்; வெற்றி பெற்றார் என்றும் சொல்வர்.

கோடி வரம் தரும் கூடுமலை நாயகன்!

துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் தமக்கு ஷமந்தகமணிய முனிவர் அளித்த சாபத்தைப் போக்க, இந்த மகா கணபதியைப் பூஜித்து, சாபம் நீங்கப் பெற்றதாகச் சொல்கிறது தல புராணம். பஞ்ச பாண்டவர்களும் இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்ரீமகா கணபதியைப் பூஜித்து சென்றதால், குருக்ஷேத்திர யுத்தத்தில் வெற்றி வாகை சூடினார்களாம்.

ஆக, மூன்று யுகங்களிலும் அருள்பாலித்தவர் ஸ்ரீமகா கணபதி. இவரின் திருமேனி, திறந்தவெளியில்... வெயிலிலும் மழையிலுமாகவே இருக்க, கலியுகத்தில்... மகா கணபதியின் மகத்துவத்தை அறிந்து உணர்ந்த விஜயநகரப் பேரரசர் ஸ்ரீகிருஷ்ணதேவராயர், அற்புதச் சிற்பங்களுடன் கூடிய அழகிய ஆலயத்தை எழுப்பினார். பேளூர், ஹளபேடு கோயில்களின் சிற்பப் பொக்கிஷங்களை உருவாக்கிய சிற்பிகளான டங்கணாச்சாரி மற்றும் ஜெகன்னாச்சாரி ஆகிய இருவரும் இந்தக் கோயிலை உருவாக்கித் தந்தார்கள்.

கோடி வரம் தரும் கூடுமலை நாயகன்!

கோயிலை ஒட்டிய மலை; அருகில் அமைதியாக ஓடுகிறது கவுண்டின்ய நதி. மலையில் உள்ள குகை ஒன்றில், சப்த ரிஷிகளில் ஒருவர் என்று போற்றப்படும் கவுண்டின்ய முனிவர் வசித்தார். தினமும் மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீமகா கணபதியை வழிபட்டு, தவம் இயற்றி, மோட்சம் எய்தினார் அவர். கவுண்டின்ய முனிவர் நடுநிசியில் அருவமாக ஸ்ரீமகா கணபதி ஆலயத்துக்கு வருவதாகவும், பக்தர்களின் எண்ணங்களை ஈடேற்றித் தருவதாகவும் இங்கே ஒரு நம்பிக்கை! ஆண்டுக்கு ஒருமுறை வரும் ரிஷி சப்தமி நாளில், இரவு நேரத்தில் கூடுமலைப் பகுதியிலிருந்து தீபங்கள் மகா கணபதி ஆலயம் நோக்கி வருவதையும், பின்னர் அந்த ஒளித்தீபங்கள் திரும்பி மலைக்குச் செல்வதையும் அன்பர்கள் பலர் தரிசித்திருக்கிறார்களாம்!

உள்ளே கருவறையில்... சர்வ அலங்காரத்தில் மகா கணபதியின் தரிசனம் சிலிர்க்கச் செய்கிறது. இங்கு, விசேஷ தினங்களில் ஸ்ரீவிநாயகருக்கு வெண்ணெய்க் காப்பு நடைபெறும். முழு வெண்ணெய்க் காப்பு அபிஷேக- அலங்காரத்துக்கு ஆயிரம் கிலோ வெண்ணெய் தேவைப்படுமாம்!

எந்தக் காரியத்தைத் துவக்குவதாக இருந்தாலும், கூடுமலை மகா கணபதிக்கு பூஜை செய்துவிட்டு, அதன்பிறகே காரியத்தைத் துவக்குவது கர்நாடக மாநில பக்தர்களின் வழக்கம். அப்படிச் செய்தால் மகா கணபதியின் பேரருளால்,  தங்களுக்கு வெற்றி உறுதி, வாழ்வில் நிம்மதி நிச்சயம் என்பது அவர்களின் நம்பிக்கை.

குறிப்பாக, தேர்தல் வந்துவிட்டால், அரசியல் பிரமுகர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக, கூடுமலை வந்து மகா கணபதியின் திருவடியில் மனுவின் பிரதியைத் தாக்கல் செய்த பிறகே, தேர்தல் ஆணையரிடம் ஒரிஜினல் வேட்பு மனுவைத் தாக்கல் செய்வார்களாம். அப்படி அங்கு வந்து சென்ற கர்நாடக அரசியல் ஜாம்பவான்களின் பட்டியல் மிக நீளமானது என்கிறார்கள், கோயில் ஊழியர்கள்.

முன் மண்டப விதானத்தில், கிருஷ்ணதேவராயர் ஆட்சிக் கால இலச்சினைகளான சூரியன், சந்திரன், கத்தி, வராகம், மீன்கள் ஆகியன பொறிக்கப்பட்டுள்ளன. மூலவர் சந்நிதிக்கு முன் உள்ள தூணில் ஸ்ரீசாமுண்டீஸ்வரி, ஸ்ரீவிருபாட்சேஸ்வரர் திருமேனிகள். கிருஷ்ணதேவராயர் கட்டிய ஆலயங்கள் யாவற்றிலும் இந்தச் சிலைகளும், சின்னங்களும் கண்டிப்பாக  அமைக்கப்பட்டிருக்குமாம்!

வில்லுடன் ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர், ஆறு முகங்களுடன் ஸ்ரீசண்முகப் பெருமான் ஆகியோரின் திருவுருவங்களும் அழகிய சிற்பங்களாக வடித்து வைக்கப்பட்டுள்ளதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

கொடிய அசுரனை மிகப்பெரும் சக்தியுடன் அழித்தவரும், தன்னை வழிபட்ட கவுண்டின்ய மகரிஷிக்கு மோட்சம் அளித்தவரும், பக்தர்கள் வேண்டுகோள் எதுவாயினும் அதை நிறைவேற்றி அருள்பவரும், தன்னைப் பூஜித்துவிட்டுத் துவக்கும் எந்தக் காரியத்திலும் ஜெயம் அளிப்பவருமான கூடுமலை மகா கணபதியை வணங்கித் தொழுதால், வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும், வெற்றியும், வியாபாரத்தில் லாபமும் கூடும் என்பதில் சந்தேகம் இல்லை.

படங்கள்: ச.வெங்கடேசன்

'எதிரிகள் தொல்லையை அழித்தருள்வார்!’

கோடி வரம் தரும் கூடுமலை நாயகன்!

''ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீசிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடிக்கடி சந்தித்து அளவளாவிய புண்ணியத் திருவிடம் இது. இங்கு வந்து ஸ்ரீமகா கணபதியைத் தொழுதால், மன நிம்மதியும் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும். மாதந்தோறும் வருகிற சங்கடஹர சதுர்த்தி நாளில், இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்கின்றனர்.

ஸ்ரீமகா கணபதியைத் தரிசித்துவிட்டுத் துவக்குகிற எந்தக் காரியத்திலும் வெற்றி நிச்சயம். திப்ராசுரனை அழித்து வதம் செய்ததுபோல், நம் எதிரிகளையும் தீய சக்திகளையும் அழித்து நம்மைக் காப்பார் கணபதி பெருமான்'' எனச் சொல்லிப் பூரிக்கிறார் இந்தக் கோயிலின் தலைமை அர்ச்சகர்

சங்கர் தீக்ஷித்.