மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 19 - ‘மாடத்தி எடுத்த கல்லு...’

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 19 - ‘மாடத்தி எடுத்த கல்லு...’
பிரீமியம் ஸ்டோரி
News
மண்... மக்கள்... தெய்வங்கள்! - 19 - ‘மாடத்தி எடுத்த கல்லு...’

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 19 - ‘மாடத்தி எடுத்த கல்லு...’

மிழகத்தின் கிராமமெங்கும் பல்லாயிரக்கணக்கான கதைகள், பாடல்கள் சிறுதெய்வங்கள் குறித்து உலவிக்கொண்டிருக்கின்றன. இவை  உணர்வுபூர்வமான பந்தத்தால் விளைந்தவை; அறிவால் உணரக் கூடியவை அல்ல. நெல்லைப் பக்கம் உலவும் அணஞ்சி - மாடத்தியின் கதையும் அப்படியானதே!

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 19 - ‘மாடத்தி எடுத்த கல்லு...’

அணஞ்சி ஆடு மேய்க்கும் தொழில் செய்தவர். ஏராளமான ஆடுகள் அவரது பட்டியில் இருந்தன. கிடை போடுவது அவரது பிரதான தொழில். எங்கும் பசுமை பூத்துக்கிடந்த மண்ணில் திடீரென வறட்சி படர்ந்தது. கடும் வெம்மை... பயிர், பச்சைகள் எல்லாம் வதங்கிச் சரிந்தன. ஆடுகளுக்குத் தீவனம் கிடைக்கவில்லை.

இனிமேல் இந்த ஊரில் இருந்தால், ஆடுகளைக் காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்த அணஞ்சி, தன் மனைவி மாடத்தியின் பொறுப்பில் அவற்றை விட்டுவிட்டு அண்டையூர்களுக்கு பச்சை பார்க்கச் சென்றார். கூடவே தம்பி, சின்ன அணஞ்சியையும் அழைத்துச் சென்றார்.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 19 - ‘மாடத்தி எடுத்த கல்லு...’தொலைதூரம் நடந்தாயிற்று. எந்த இடத்திலும் துளிப் பச்சையில்லை. இரண்டு நாள் நடைப்பயணத்தில் களைப்பு மேலிட துவண்டு விழவிருந்த நேரத்தில், ஒரு பச்சைபூமி கண்களில் பட்டது. அதைப் பார்த்த நொடியில் உடம்பில் அப்பியிருந்த களைப்பெல்லாம் ஓடிவிட்டது. வந்த வேகத்திலேயே நடந்து தங்கள் ஊருக்குத் திரும்பினார்கள். சிறிதுநேரம் ஓய்வெடுத்துவிட்டு, பின்னர் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வேகவேகமாக தாங்கள் பார்த்து வைத்த இடத்துக்குச் சென்றார்கள். அந்தப் பச்சை நிலத்துக்கு மேலாக பட்டியடித்து கிடை போட்டுவிட்டு மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றார்கள்.  

ஆடுகளை ஓட்டிச்சென்று இரண்டு வாரங்களுக்கு மேலானதால் மாடத்தி, தன் கணவரின் தம்பி மனைவியையும் அழைத்துக்கொண்டு அவர்கள் வந்த தடத்தில் நடந்து வருகிறாள். ஒரு வழியாக தங்கள் பட்டியைக் கண்டுபிடித்துவிட்டார்கள் இருவரும். மனைவியரைப் பார்த்த மகிழ்ச்சி சின்ன அணஞ்சிக்கும் பெரிய அணஞ்சிக்கும். நெடுநாட்களாயிற்று, நல்ல உணவு சாப்பிட்டு. தன் மனைவியிடம் சமைக்கப் பணிக்கிறார் அணஞ்சி. 

மாடத்தி அருகில் கிடந்த கற்களையெல்லாம் கூட்டி அடுப்பு செய்கிறாள். அந்தக் கற்கள், இசக்கியின் சிலையிலிருந்து சிதறிய துண்டுகள். இதைக் கவனிக்காத மாடத்தி கற்களைக் கூட்டி சமைத்தும் விட்டாள். அந்த உணவைச் சாப்பிட்ட எல்லோருக்கும் உடல்நலம் பாதித்தது. குறிப்பாக, மாடத்தி மிகவும் சோர்ந்துபோனாள். தானறிந்த வைத்தியங்களையெல்லாம் பெரிய அணஞ்சி செய்து பார்க்கிறார், பயனில்லை.  பயந்துபோன அணஞ்சி ஆடுகளை ஓட்டிக்கொண்டு தன் சொந்த ஊருக்கேச் சென்றுவிடத் திட்டமிட்டார்.  ஊரில் இப்போது மழை பெய்து கொஞ்சம் பச்சை எட்டிப் பார்த்திருப்பதாக செய்தி கிடைத்திருக்கிறது. ஒரு தொட்டிலைக் கட்டி மாடத்தியை அதில் வைத்துத் தூக்கிக்கொண்டு ஆடுகளையும் ஓட்டிக்கொண்டு கிளம்பினார்கள். 

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 19 - ‘மாடத்தி எடுத்த கல்லு...’

வழியில் ஒரு கனத்த கருவேல மரமொன்று இருந்தது. சின்ன அணஞ்சி, “அண்ணா, மழை பேஞ்சு கிணத்துல கொஞ்சம் தண்ணி சேந்திருக்கும். நெடுநாட்களாக கிணத்துக்குத் திலாம் போட மரமில்லாமக் கிடக்கோம். இந்த கருவேலத்தை வெட்டிக்கிட்டுப் போனா திலாம் போட்டு தண்ணி எறச்சு கூடவே கொஞ்சம் சாகுபடியும் செய்யலாம்ல” என்றான்.

பெரிய அணஞ்சிக்கும் அது சரியெனப்பட்டது.  “வெட்டு” என்றார். சின்ன அணஞ்சி கோடாரி கொண்டு வெட்ட,  மரம் அவ்வளவு எளிதாக முறியவில்லை. கடும் போராட்டத் துக்குப் பிறகு சாய்ந்தது.

தேவையில்லாத கிளைகளைக் கழித்து சின்ன அணஞ்சி தோளில் சுமந்துகொண்டு நடந்தான். ஒரு வழியாக ஊர் வந்து சேர்ந்தார்கள். ஊருக்கு வந்தும் மாடத்தியின் நோய் தீரவில்லை. கூடவே ஆடுகளும் பாதிக்கப்பட்டன. சின்ன அணஞ்சிக்கும் முதுகில் ராஜபிளவை வந்தது. குடும்பத்தையே இப்படி பிணி பிடித்து ஆட்டுவ தால் தவித்துப்போனார் பெரிய அணஞ்சி.

“ஏதோ தெய்வ குத்தம் ஆகிப்போச்சு... போய் நம்ம பூசாரிக்கிட்ட குறிகேட்டு வாரும்” என்றார் பக்கத்து வீட்டு தம்பிரான். வெற்றிலை பாக்கு, எலுமிச்சை சகிதம் பூசாரியிடம் குறி கேட்க அமர்ந்தார் பெரிய அணஞ்சி.  பூசாரி தெய்வங்களை அழைத்தார்... நெடுநேரம் உடுக்கை தெரித்தது.

“கருப்பா, முனியா, செங்கிடாக்காரா.... அணஞ்சி குடும்பத்தை ஏய்யா வதைக்கிறீய... என்ன குறை வச்சான்...?” - கேள்வி கேட்ட பூசாரியே பதிலும் சொன்னார்.

“மாடத்தி எடுத்த கல்லு இசக்கியோட பாகம்... சின்ன அணஞ்சி வெட்டின மரம் மாயாண்டிக்காரன் வீடு... ரெண்டு பேத்தையும் கூட்டியாந்து வீட்டுக்குள்ள விட்டுட்டீக...அமர இடமிட்டாம ஒவ்வொரு உடம்பா ஏறி உக்காந்துக்கிட்டிருக்காக... கட்டிக்குடு, ஒரு தனி வீடு... அமைதியாப் போயி உக்காந்திருவாக...காலகாலத்துக்கும் உனக்குத் தலைக்காவலா நிப்பாக”

சொல்லிவிட்டு நாக்கைக் கடித்து உடலை முறித்து ஓங்கிக் குரல் கொடுத்து ஓய்ந்தார் பூசாரி.  அணஞ்சிக்கு எல்லாத் தவறுகளும் புரிந்தன. இருந்த ஆடுகளை விற்று தன் நிலத்தில்  இசக்கிக்கும், மாயாண்டிக்கும் கோயில் எழுப்புகிறார். பிழை பொறுத்து தங்கள் குடும்பத்தைக் காக்குமாறு வேண்டினார். தெய்வங்கள் மனமிரங்கி தங்கள் வீட்டுக்குப் பெயர்ந்தன. சின்ன அணஞ்சிக்கும், மாடத்திக்கும் நோய்கள் குணமாகின. மானம் மும்மாரி பெய்யத் தொடங்கியது. பயிர், பச்சைகள் தழைக்கத் தொடங்கின!

- மண் மணக்கும்...


வெ.நீலகண்டன், படங்கள்: எல்.ராஜேந்திரன்