ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

தடைகள் நீக்கும் தாண்டவர்தோட்டம்

தடைகள் நீக்கும் தாண்டவர்தோட்டம்

தடைகள் நீக்கும் தாண்டவர்தோட்டம்
##~##
மு
ப்பத்து முக்கோடி தேவர்களுக்காகவும் முனிவர்களுக்காகவும் சிவனார் திருநடனம் புரிந்தார் அல்லவா? அப்போது, அவர் காலில் இருந்த சலங்கையின் மணிகள், தெறித்து எங்கெங்கோ விழுந்தனவாம். அப்படி மணிகள் சிதறிய இடங்களில் கோயில்கள் எழுப்பப்பட்டன. அவற்றில், நடார் எனும் திருத்தலத்தில் ஸ்ரீமணிகண்டேஸ்வரர் என்றும், தாண்டவர்தோட்டம் எனும் கிராமத்தில் திருநடனபுரீஸ்வரர் என்கிற திருநாமத்துடனும் சிவபெருமான் அருள்பாலிக்கிறார் என்பது தெரியுமா உங்களுக்கு?

நடனபுரி, நர்த்தனபுரி, தாண்டவர்தோட்டம் என்றெல்லாம் ஒருகாலத்தில் அழைக்கப்பட்டு, தற்போது தண்டந்தோட்டம் எனும் பெயரில் அமைந்துள்ள அந்த அற்புதத் தலத்தைத் தரிசிப்போமா?

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது தண்டந்தோட்டம். மிகச் சிறிய கிராமத்தில், மிகச் சிறிய ஆலயத்தில், அற்புதமாக அருளாற்றிக் கொண்டிருக்கிறார் நடனபுரீஸ்வரர். அரசலாற்றங்கரையில் அமைந்துள்ள கோயில் இது!

தடைகள் நீக்கும் தாண்டவர்தோட்டம்
தடைகள் நீக்கும் தாண்டவர்தோட்டம்

சிவனாரின் திருநடனத்துக்கும் இந்தத் தலத்துக்கும் தொடர்பு இருப்பதால், சிதம்பரம் தலத்துக்கு இணையானது என்பார்கள். சிவனாரின் காலில் இருந்த சலங்கை மணிகள் தெறித்து விழுந்ததைக் கண்டு பதறிய விநாயகர், ஓடோடிச் சென்று, மணியை எடுத்து தந்தையின் சலங்கையில் கட்டினாராம். எனவே, இந்த ஊரில் தனியே கோயில் கொண்டுள்ள விநாயகருக்கு 'மணிக்கட்டி விநாயகர்’ என்றே திருநாமம் அமைந்தது.

அதுமட்டுமா? சிவ-பார்வதியின் திருமணக் கோலத்தைத் தரிசிக்க வேண்டும் என அகத்தியர் பேராவல் கொண்டார்; அவருக்கு சிவனாரும் தம்பதி சமேதராகத் தரிசனம் தந்தார் அல்லவா? நடனபுரி என்கிற இந்தத் திருவிடத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, இங்கே அகத்தியர் கடும் தவம் புரிந்தார் என்கிறது ஸ்தல புராணம் (அகத்தியர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கம், ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் எனும் திருநாமத்துடன் நடனபுரீஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே உள்ளது). எனவே, திருமணஞ்சேரி போலவே, திருநடனபுரீஸ்வரர் ஆலயமும் திருமணத் தடை முதலான அனைத்துத் தடைகளையும் நீக்கும் திருத்தலம் எனப் போற்றப்படுகிறது. இந்தக் கோயிலின் உத்ஸவர், ஸ்ரீகார்த்தியாயினி சமேத திருக்கல்யாண சுந்தரமூர்த்தியாக, மாப்பிள்ளை ஸ்வாமியாக திருமணக் கோலத்தில் வரமருள்கிறார். சுமார் மூன்றரை அடி உயரத்தில், ரிஷபாரூடராக அவர் காட்சி தருவதைப் பார்த்தாலே, நம் கவலைகள் அனைத்தும் பறந்துவிடுகின்றன. ஆக, சிதம்பரம் மற்றும் திருமணஞ்சேரி தலங்களுக்கு இணையான தலம் இது!  

தடைகள் நீக்கும் தாண்டவர்தோட்டம்
தடைகள் நீக்கும் தாண்டவர்தோட்டம்

இன்னொரு சிறப்பும் உண்டு. அகத்தியருக்கு சிவனார் காட்சி தந்த போது, 'இந்தத் தலத்துக்கு வரும் அன்பர்களுக்கு திருமணத் தடை முதலான சகல தடைகளும் நீங்கப் பெற்று, சுபிட்சமாக வாழவேண்டும். அதேபோல், இங்கு வந்து வழிபட்டால், திருக்கயிலாயத்துக்கு வந்து தங்களைத் தரிசித்த புண்ணியம் கிடைக்க வேண்டும்’ என வரம் கேட்க... 'அப்படியே ஆகட்டும்’ என அருளினார் சிவனார். எனவே, கயிலைக்கு இணையான தலம் என்றும் போற்றுகிறது ஸ்தல புராணம்.

ஸ்வாமியின் திருநாமம் - திருநடனபுரீஸ் வரர். அம்பாள்- ஸ்ரீசிவகாம சுந்தரி; அவளின் திருப்பார்வையில் பொங்கித் ததும்புகின்றன, அன்பும் பெருங்கருணையும்!

திருநடனபுரீஸ்வரர் கோயிலின் அருமை பெருமைகளை, கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர் மக்கள் இன்னும் சரிவர அறியவில்லை. அவ்வளவு ஏன், அந்தக் கோயில் அமைந்துள்ள தண்டந்தோட்டத்து மக்களுக்கே தெரியவில்லை. ஆனால், கேரளாவின் பாலக்காடு மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து, பக்தர்கள் பலர் இங்கு வந்து திருநடனபுரீஸ்வரரையும் ஸ்ரீசிவகாமி அம்பாளையும் தரிசித்துச் செல்கின்றனர்.

தடைகள் நீக்கும் தாண்டவர்தோட்டம்

என்ன காரணம்?

சோழ தேசத்தின் ஒரு பகுதியில் வாழ்ந்த அந்தணர்கள் சுமார் மூவாயிரம் பேர், ஒரு காலகட்டத்தில், கேரளாவின் பாலக்காடு பகுதிக்குச் சென்று குடியேறினர். அப்போது, ஸ்வாமி மற்றும் அம்பாளை சாளக்கிராமத் திருமேனியாகச் செய்து, இந்தத் தலத்தில் இருந்து பிடிமண்ணையும் எடுத்துக்கொண்டு, பாலக்காடு அருகில் உள்ள தங்கைக்காடு  கிராமத்தில் பிரதிஷ்டை செய்து, கோயில் எழுப்பி வழிபட்டனர். அடுத்தடுத்த தலைமுறையினர்,

தங்களின் குலதெய்வம் தெரியாது போனார்கள். இதனால், அவர்கள் குடும்பங்களில் சுமங்கலிப் பெண்களுக்கு துர்மரணமும் திடீர் நோயும் வந்தனவாம்! இதையடுத்து ஒரு கூட்டம், பிரஸ்னம் பார்க்கும் தீவிரத்தில் இறங்க... இன்னொரு கூட்டம் காஞ்சிக்கு வந்தது. அங்கே மகாபெரியவாளைத் தரிசித்து, தங்களின் வேதனையைத் தெரிவிக்க... அனைத்தையும் கேட்ட மகாபெரியவா, அடையாளம் காட்டிய திருவிடம்... தண்டந்தோட்டம். கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது; கிழக்கு, தெற்கு என இரண்டு வாசல் கொண்ட கோயில்;  அதில் தெற்குப் பார்த்த வாசலே அதிகம் புழக்கத்தில் இருக்கும்;  அம்பாளும் தெற்குப் பார்த்தே காட்சி தருவாள்; நுழைந்ததும் வில்வமரமும் தீர்த்தக் கிணறும் இருக்கும் என கோயிலை அப்படியே விவரித்து, பாலக்காடு அந்தணர்களின் குலதெய்வத்தைக் காட்டி அருளினார் காஞ்சி மகாபெரியவா. அதேநேரம், கேரளாவில் பிரஸ்னம் பார்த்ததில், தண்டந்தோட்டம் தலம் பற்றிய தகவல்கள் வரவே, சிலிர்த்துப் போனார்கள் அந்தணர்கள்.

தடைகள் நீக்கும் தாண்டவர்தோட்டம்

பிறகு, இந்தத் தலத்துக்கு வந்து வணங்கினர். உத்ஸவ மூர்த்தத்துக்கு திருக் கல்யாணம் செய்து வைத்தனர். இன்றைக்கும் வைகாசி விசாகத்தில்,  சிறப்புறக் கொண்டாடப்படுகிறது திருக்கல்யாண வைபவம். எந்தவொரு காரியத்தைத் துவக்குவதாக இருந்தாலும், தண்டந்தோட்டம் வந்து, ஸ்வாமியிடம் அனுமதி பெற்ற பிறகே, காரியத்தில் இறங்குகின்றனர்.

தடைகள் நீக்கும் தாண்டவர்தோட்டம்

மகாபெரியவா அடையாளம் காட்டிய இந்தத் தலத்துக்கு மற்றொரு பெருமையும் உண்டு. 1965-ஆம் வருடத்தில், தண்டந்தோட்டத்துக்கு வந்த மகாபெரியவா, அங்கே தங்கி, சாதுர்யமாஸ்ய விரதம் மேற்கொண்டு பூஜித்தார் என்கி ன்றனர், ஊர்ப் பெரியவர்கள். அத்துடன், ஊருக்கும் பெயருக்கும் ஏற்றாற்போல், பிரமாண்டமான ஸ்ரீநடராஜர் விக்கிரகம் இங்கு இருந்ததாம். ஒருமுறை பத்தூர், சிவபுரம் மற்றும் தண்டந்தோட்டம் ஆகிய தலங்களில் உள்ள நடராஜ மூர்த்தங்கள் கொள்ளை போயின. மிகப் பெரிய தேடுதலுக்குப் பிறகு, பத்தூர் மற்றும் சிவபுரத்தின் நடராஜர் விக்கிரகங்கள் மட்டுமே கிடைக்கப் பெற்றதாகவும், இங்கே சிறிய, அழகிய நடராஜரின் விக்கிரகத் திருமேனியை, காஞ்சி மகா பெரியவாளே கொடுத்து பூஜித்து வரப் பணித்ததாகவும் சொல்கின்றனர், ஆலய நிர்வாகிகள்.

சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் வழிபட்ட ஆலயம் இது. குறிப்பாக, பல்லவர் காலத்து 11 செப்பேடுகள் இங்கு கண்டெடுக்கப் பட்டுள்ளன. இந்தக் கோயிலுக்காக, 300 அந்தணர்களை இந்தக் கிராமத்துக்கு வரச் செய்து, ஆட்சி சிறக்கவும் மக்கள் செழிக்கவும் எந்நேரமும் நித்யாக்னியாக ஹோமம் வளர்த்து பூஜைகள் செய்வதற்காக, இன்ன பெயர் கொண்டவர்கள், இன்ன கோத்திரக்காரர்கள் எனப் பட்டியலிட்டு, சுமார் 72 வேலி நிலத்தை அவர்களுக்குத் தானமாகக் கொடுத்ததாகச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.

இங்கே ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீதுர்கை ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. இங்கு, 12 ராசி மண்டலங்களுக்கு மேலே பீடமிட்டு அமர்ந்திருக்கிறார் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி. எனவே, இவரை ராசி மண்டல குரு எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். இவருக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, கொண்டைக்கடலை மாலை அணிவித்து வணங்கினால், 12 ராசிக்காரர்களின் சகல தோஷங்களையும் போக்கியருள்வார் என்பது ஐதீகம்.

கோயில் நகரமாம் கும்பகோணத்துக்கு வந்தால், எத்தனையோ ஆலயங்களைத் தரிசிக்கலாம். குறிப்பாக திருநாகேஸ்வரம், ஒப்பிலியப்பன் கோயில், அய்யாவாடி ஸ்ரீபிரத்தியங்கிரா கோயில், அம்மன்குடி ஸ்ரீஅஷ்டபுஜ துர்கை கோயில் ஆகிய தலங்களுக்கு அருகில் உள்ள தண்டந்தோட்டம் திருத்தலத்துக்கும் வாருங்கள்; திருநடனபுரீஸ்வரரின் பேரருளைப் பெறுங்கள்!

படங்கள்: ந.வசந்தகுமார்