மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி பதில்: தை பிறந்தால் வழி பிறக்குமா?

கேள்வி பதில்: தை பிறந்தால் வழி பிறக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில்: தை பிறந்தால் வழி பிறக்குமா?

கேள்வி பதில்: தை பிறந்தால் வழி பிறக்குமா?

? எனது வீட்டில் சமீபத்தில்தான் கல்யாணம் நடந்தது. இன்னும் இரண்டு மாதத்தில் என் மாமனாருக்குச் சிராத்தம் வருகிறது. ஆனால் சிலர், சிராத்தம் செய்யக்கூடாது என்கிறார்கள். நீங்கள்தான்  வழிகாட்டவேண்டும்.

- ஆர்.ராஜகோபால், திருச்சி

கேள்வி பதில்: தை பிறந்தால் வழி பிறக்குமா?

சிராத்தத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும் தவிர்க்கக் கூடாது. கண்டிப்பாக சிராத்தம் செய்யவேண்டும்.

சிராத்தம் என்பது நம் சந்ததி மேலும் மேலும் வளர்வதற்கு உறுதுணையாக இருக்கக்கூடிய மகத்தான கிரியை ஆகும். சிராத்தத்தின் மூலம்தான் நம் முன்னோர்களுக்கான நன்றிக்கடனை நாம் செலுத்தமுடியும். நமக்கு இந்த உடலை அளித்தவர்கள் அவர்கள்தானே. எனவே தவறாமல் சிராத்தம் செய்யவேண்டும்.

? வீட்டுப் படுக்கையறையில் சுவாமி படங்களை மாட்டிவைக்கலாமா?

- எஸ்.சிவகுமார், சென்னை - 18

கேள்வி பதில்: தை பிறந்தால் வழி பிறக்குமா?கடவுள் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர். அசையும் - அசையாத பொருள் கள் அனைத்திலும் இறைவனின் சாந்நித்தியம் நிறைந்திருக்கும். அவரின் சக்தி இல்லையென்றால் எதுவும் இயங்காது.

இறைவனின் திருவுருவங்கள் அவரது அருளை, ஆற்றலை நாம் பெற உதவி செய்கின்றன. காலையில் எழுந்ததும் விநாயகரின் திருவுருவத்தையோ அல்லது நம் குலதெய்வத்தின் திருவுருவப் படத்தையோ பக்தியுடன் தரிசிக்கும் வழக்கம் இருப்பின், படுக்கையறையில் சுவாமி படங்களை மாட்டி வைப்பதில் தவறில்லை.

பூஜையறையில் இருப்பது போன்று, எண்ணிக்கையில் அதிகமாக தெய்வப்படங்களை மாட்டிவைக்காமல், ஓரிரு சிறிய படங்களை மாட்டி வைத்துக்கொள்ளலாம். சிறிய வீடு. ஒரே ஓர் அறை மட்டுமே இருக்கிறது என்றால்... சிறிய மர அலமாரி போன்று செய்து, அதில் தெய்வத் திருவுருவப் படங்களையும், திருவிளக்கையும் வைத்து வழிபடலாம். அதனால் வீட்டில் சகல நன்மைகளும் உண்டாகும்.

? `தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பதற்கான தாத்பர்யம் என்ன, தை முதல் நாளில் சூரிய வழிபாடு சிறப்புப் பெறுவது ஏன், உத்தராயன காலத்தின் மகிமைகள் என்ன... விளக்குங்களேன்!

- எம்.பாஸ்கரன், சென்னை-34


ஒரு வருடத்துக்கு 12 மாதங்கள் என்பதை அறிவோம். அதில், தை மாதம் துவங்கி ஆனி மாதம் வரை உத்தராயனம் என்றும், ஆடி மாதம் துவங்கி மார்கழி மாதம் வரை தக்ஷிணாயனம் என்றும் பிரித்து அருளியிருக்கிறார்கள் ரிஷிகள்!
உத்தராயன காலத்தை தேவர்களின் பகல் பொழுது என்றும், தக்ஷிணாயன காலத்தை தேவர்களின் இரவுப் பொழுது என்றும் சொல்வர்.

நம் சநாதன தர்மத்தில், ஒவ்வொரு காலமும் மிகத் துல்லியமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ‘உத்தரம்’ என்றால் ‘வடக்குத் திசை’ என்றும், ‘பதில்’ என்றும் சம்ஸ்கிருதத்தில் அர்த்தங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவ்வகையில், நம் சந்தேகங்களை அனுபவத்தில் உணர்ந்து தெளிவுபடுத்துகிற சிறந்த காலம்  எனும் அடிப்படையில் `உத்தராயனம்' என்று ரிஷிகள் பெயர் சூட்டியுள்ளார்களோ என்னவோ?!

`கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே!’ என்கிறது கீதை. இந்தத் தத்துவத்துக்குள் ஓரு விஷயம் உள்ளார்ந்து கிடப்பதாகத் தோன்றுகிறது. அதாவது, ‘கடமையைச் செய்தால், அதற்கான பலன் கிடைத்தே தீரும்!’ என்பதுதான் அது.

கேள்வி பதில்: தை பிறந்தால் வழி பிறக்குமா?ஆடி தொடங்கி மார்கழி வரையிலும் நாம் செய்யும் வழிபாடுகளுக்கும், உலக ஆதாயம் சார்ந்த நமது செயல்பாடுகளுக்கும் பலன் கிடைக்கத் தொடங்கும் காலம் தை மாதம் என்று சொல்லலாம். உதாரணத்துக்கு ஆடிப் பட்டம் தேடி விதைக்கும் உழவர் பெருமக்கள், அறுவடையின் பலனைப் பெறுவது தை மாதத்தில்தான். 

இதையொட்டியே, நம் பெரியோர்கள் `தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று சொல்லி வைத்தார்கள் போலும்.

பலனை நாம் அனுபவிப்பதோடு, அதை எல்லா உயிர்களுக்கும் பகிர்ந்தளித்தும் மகிழ வேண்டும் எனும் உயர்ந்த தத்துவத்தை உணர்த்தும் வகையிலேயே திகழ்கிறது, தைப் பொங்கல் திருநாள்.

தை மாதப் பிறப்பான அன்றைய தினம், சூரியன், தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்வதால், அந்த நாளை ‘மகர சங்கராந்தி’ என்றும் போற்றுவார்கள். இந்தப் பூவுலகம் சிறப்புற இயங்கத் தேவையான ஒளியையும், அதன் மூலம் சக்தியையும் அளிக்கும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடுவதே தைத் திருநாளின் நோக்கம்! இந்த நாளை, பொங்கல் படையல் சமர்ப்பித்து சூரிய பூஜை செய்வது மிகவும் விசேஷம். அன்றுமட்டுமின்றி தினமும் ஆதவனை வழிபடுவது கூடுதல் சிறப்பு.

ஓம் மித்ராய நம: ஓம் ரவயே நம:
ஓம் சூர்யாய நம: ஓம் பாநவே நம:
ஓம் ககாய நம: ஓம் பூஷ்னே நம:
ஓம் ஹிரண்யகர்பாய நம: ஓம் மரீசயே நம:
ஓம் ஆதித்யாய நம: ஓம் ஸவித்ரே நம:
ஓம் அர்காய நம: ஓம் பாஸ்கராய நம


எனும் மந்திரத்தைச் சொல்லி, ‘ஆதித்யஸ்ய நமஸ்காரான் யே குர்வந்தி திநே திநே:  ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷூ தாரித்ர்யம் நைவ ஜாயதே:’ என்கிற வரிகளின்படி, தினமும் காலையில் பன்னிரு நமஸ்காரங்கள் செய்பவர்களுக்கு இந்தப் பிறப்பு மட்டுமின்றி, இனி எடுக்கிற ஒவ்வொரு பிறப்பிலும் செல்வச் செழிப்பில் எந்தக் குறையும் ஏற்படாது; தேக ஆரோக்கியத்துடன் வாழ்க்கை அமையும் என்கின்றன சாஸ்திரங்கள். ‘உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார்’ என்பார்கள். நமக்குத் தேவையான உணவுகளுக்காக, தன் வாழ்க்கையையே தியாகம் செய்யும் உழவர் பெருமக்களுக்கும் இந்த நாளில், மனதார நன்றி செலுத்துவோம்!

? கோயில்களில், கருவறையில் மட்டும் வெளிச்சம் மங்கலாக இருப்பது ஏன்?

-எம்.ஸ்ரீநிவாச மூர்த்தி, சென்னை - 19


அனைத்து ஆலயங்களிலும் அனைத்து சந்நிதி களிலும் நல்லெண்ணெய் அல்லது நெய்யினால் ஆன தீபத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது மரபு. தற்காலத்தில் பரிவார சந்நிதிகளில் மின் விளக்குகளும், மூலவரின் கருவறையில் திருவிளக்குகளும் ஏற்றப்படுகின்றன. வரும் காலத்திலாவது அனைத்து பரிவார சந்நிதிகளிலும் திருவிளக்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து, இயற்கையான வெளிச்சத்தில் தெய்வங் களை தரிசித்து, அருள் பெறும்படிச் செய்ய வேண்டும். அதுவே உகந்தது மட்டுமல்ல, உயர்ந்ததும்கூட.

கருவறையில் இறைவனுக்கு ஆலய அர்ச்சகர் தீபாராதனை செய்யும்போது, அந்த ஒளியின் மூலம் தெய்வத்தின் திருவுருவம் பக்தருடைய மனதில் பதிந்துவிடுகிறது. அதன் மூலம் நாம் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் தெய்வத்தின் தொடர்பு உண்டாகி நம்மை வழிநடத்தும். நம்முள் இருக்கும் ஆன்ம சக்தியைப் பெருக்கி, நமக்கு ஆனந்த நிலையை அளிக்கும் ஆற்றல் மூலவருக் குச் செய்யும் தீபாராதனைக்கு உண்டு. திருவிளக்குகள் வெளிச்சம் மட்டும் தருவதில்லை; அதன் ஒளிக்கதிர்களின் இறை சாந்நித்தியம், சுற்றுப்புறச் சூழ்நிலைகளில் உள்ள தீய சக்திகளை விலக்கி இறையருளை வியாபிக்கச் செய்யும்.

? நிர்மால்ய தரிசனம் என்றால் என்ன?அந்த தரிசனத்தால் கிடைக்கும் விசேஷ பயன் என்ன?

-இரா.மனோகரன், சென்னை-100


திருக்கோயில்களில் அருளும் மூலவர், விசேஷ ஆபரண அலங்காரங்கள் இல்லாமல் தன் சுய உருவத்தில் பக்தர்களுக்கு அருளக்கூடிய காட்சியே நிர்மால்ய தரிசனம். நிர்மால்யம் என்றால் `தூய்மை' என்று பொருள்.

திருப்பதி திருமலையில், திருவேங்கடவனின் நிர்மால்ய தரிசனம்  காண்பதை விசேஷமாகக் கருதுவார்கள் பக்தர்கள். தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் பாவங்களையும், கஷ்டங்களையும் உடனே போக்கி, அவர்களின் வாழ்வில் அனைத்து வளங்களையும், முடிவில் முக்தி என்னும் உயர் நிலையையும் அருள்பவர் வேங்கடேச பெருமாள்.

வியாழக்கிழமைதோறும் வேங்கடேச பெருமாள் தன்னுடைய அனைத்து ஆபரணங்களையும் களைந்து, தூய ஆடை ஒன்றை மட்டுமே தரித்துக் கொண்டு, நம்முடைய உண்மையான ஆன்ம நிலையை தெரிவிக்கும் விதமாக நிர்மால்ய தரிசனம் அருள்கிறார்.

இவரை இந்தக் கோலத்தில் தரிசிப்பதன் மூலம் நம் மனம்  ஒருநிலைப்பட்டு, நம் ஆற்றல் அதிகரிக்கிறது. மேலும் நாம் யார் என்பதையும், நம்முடைய கடமைகள் என்ன என்பதையும் குருவின் நிலையில் இருந்து நமக்கு உணர்த்தும் தரிசனம் நிர்மால்ய தரிசனம். நிர்மால்ய தரிசனம் கண்டு, ‘கோவிந்தா’ என்று ஜபித்து அவரை வழிபட்டாலே, நம்முடைய குறைகள் அனைத்தும் நம்மை விட்டு விலகுவதை அனுபவத்தில் உணரலாம்.

- பதில்கள் தொடரும்...

`காளிகாம்பாள் கோயில்’ சிவ ஸ்ரீசண்முக சிவாசார்யர் - ஓவியம்: பத்மவாசன்

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை `காளிகாம்பாள் கோயில்'  சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002