மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாரதர் உலா - மலைக்கோயில் சிரமங்கள்... தீர்வு கிடைக்குமா?

நாரதர் உலா - மலைக்கோயில் சிரமங்கள்... தீர்வு கிடைக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா - மலைக்கோயில் சிரமங்கள்... தீர்வு கிடைக்குமா?

நாரதர் உலா - மலைக்கோயில் சிரமங்கள்... தீர்வு கிடைக்குமா?

ற்றும் எதிர்பார்க்காத வேளையில், திடுமென அறைக்குள் பிரவேசித்தார் நாரதர். நமது வியப்பையும் திகைப்பையும் ரசித்தபடி, புன்னகையோடு சிறு பொட்டலம் ஒன்றைக் கொடுத்தார். அது, சிதம்பரம் நடராஜர் கோயில் விபூதிப் பிரசாதம்! 

நாரதர் உலா - மலைக்கோயில் சிரமங்கள்... தீர்வு கிடைக்குமா?

பயபக்தியோடு விபூதியை நெற்றியில் இட்டுக் கொண்டபடியே நாரதரிடம் கேட்டோம். ‘‘ஏதேது... ஆருத்ராவுக்காக சிதம்பரம் போய் வந்தீரோ?’’

‘‘ஆமாம்! அற்புதமான தரிசனம்’’ என்றவர், அவராகவே தாம் கொண்டுவந்த விஷயம் குறித்து பேசத் தொடங்கினார்.

‘‘கோவை திருப்பதியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீரா?’’

‘‘எந்தத் தலம்... கொங்கு மண்டலத்தில் உள்ள நைனா மலையைப் பற்றிச் சொல்கிறீரா?

‘‘அதேதான்! மிக அற்புதமான க்ஷேத்திரம். நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை என்ற இடத்துக்கு அருகிலுள்ளது இந்தத் தலம். புதன் சந்தை எனும் இடத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தூரம்.

நாரதர் உலா - மலைக்கோயில் சிரமங்கள்... தீர்வு கிடைக்குமா?சுமார் 2,600 அடி உயரத்தில் - மலையின் உச்சியில், அருள்மிகு குவலயவல்லி தாயார் சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் வரதராஜப்பெருமாள். திருப்பதிக்குச் செல்ல முடியாத பக்தர்கள், இந்த மலைக்கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்து வழிபட்டால், திருப்பதிக்குச் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன் காரணமாக, சுற்றுவட்டாரத்துப் பக்தர்கள் இந்தக் கோயிலை சின்ன திருப்பதி என்றே அழைக்கிறார்கள்’’

‘‘புராதனமான கோயில் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.’’

‘‘ஆமாம்! பல்லவர்களாலும், பிற்காலத்தில் திருமலைநாயக்கரின் தம்பி ராமச்சந்திர நாயக்கராலும் திருப்பணிகள் கண்ட கோயிலாம்.பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமைகளிலும், விசேஷ நாள்களிலும் திரளான பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்’’ என்ற நாரதரிடம், மனமுவந்து சொன்னோம்.

‘‘நீர் சொல்லும் விஷயங்கள் எல்லாம், ஒருமுறையாவது அந்தக் கோயிலை நேரில் தரிசித்தாகவேண்டும் என்று ஆசையைத் தூண்டுகிறது...’’ 

நாரதர் உலா - மலைக்கோயில் சிரமங்கள்... தீர்வு கிடைக்குமா?

நாம் முடிப்பதற்குள்ளாக நாரதர் இடைமறித்துச் சொன்னார்:

‘‘தாராளமாகப் போய் தரிசித்து வாரும். ஆனால், வயதானவர்கள் எவரையும் உடன் அழைத்துச் சென்றுவிடாதீரும்!’’

``ஏன்... அவர்கள் வருவதில் என்ன பிரச்னை?’’

‘‘விவரமாகச் சொல்கிறேன் கேளும்...’’ என்ற நாரதர், பிரச்னைகள் குறித்து விரிவாக விளக்க ஆரம்பித்தார்.

‘‘ஒருகாலத்தில் மாமன்னர்கள் பலரும் பார்த்துப் பார்த்து பராமரித்த திருக்கோயில்தான். ஆனால் தற்போதைய நிலை வேறு! கோயிலுக்குச் செல்ல படிக்கட்டுப் பாதை உண்டு. ஆனாலும், வயதான வர்களால் எளிதில் செல்ல ஏறிச் செல்ல முடியாத நிலைதான். ஆங்காங்கே படிகள் சிதிலமுற்று கிடக்கின்றன. சிறிது பிசகினாலும் ஆபத்துதான்.’’

நாரதர் உலா - மலைக்கோயில் சிரமங்கள்... தீர்வு கிடைக்குமா?

‘‘பிரசித்திபெற்ற கோயிலாயிச்சே! பக்தர்களும் நிறையபேர் வருவார்கள். எனில், பாதையே சரியில்லையென்றால் எப்படி? அதுவும்போக,  பெரும்பாலான மலைக்கோயில்களில், வாகனங்களே செல்லும் அளவுக்கு பாதை போட்டுவிட்டார்களே... இங்கு அப்படியான முன்னெடுப்புகள் எதுவும் இல்லையா?’’

‘‘மலையுச்சிக்கு வாகனங்கள் சென்று வரும் வகையில், சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணி, கடந்த 2010-ம் வருடம் தொடங்கப்பட்டது. அதற்காக, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 50 லட்சம் ஒதுக்கீடும் செய்யப்பட்டது.  மீதித் தொகையைப் பக்தர்களிடமிருந்து நன்கொடையாகப் பெற்று பணிகளைப் பூர்த்தி செய்யலாம் என்பது திட்டம். ஆனால், ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெற்றதோடு சரி... அதன்பிறகு, கடந்த ஐந்து வருடங்களாக வேறு எந்த முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் கிடக்கிறது இந்தப் பணி. இதனால், வயதான பக்தர்கள் பலரும் கோயிலுக்குச் செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள்.

பாதையின் நிலைதான் இப்படியென்றால் கோயிலுக்குள் சிற்பங்களும் சிதிலம் அடைந்து திகழ்கின்றன. கோயில் சுவர்கள் விரிசல் விட்டும், கல் மண்டபங்கள் இடிந்தும் காணப்படு கின்றன. யாதவர் மண்டபத்தின் நிலையும் பரிதாபமாகத்தான் உள்ளது. மட்டுமின்றி, கோயில் முழுவதும் குப்பைகள் குவிந்துகிடப்பதும் பக்தர் களின் மனதை வேதனைப்படுத்துவதாக உள்ளது.

நாரதர் உலா - மலைக்கோயில் சிரமங்கள்... தீர்வு கிடைக்குமா?

‘வெகு சீக்கிரம் வாகனப் பாதை பணியைத் தொடங்கவேண்டும். திருக்கோயிலுக்குள்ளும் புனரமைப்புப் பணிகளைச் செய்யவேண்டும்’ என்று விண்ணப்பம் வைக்கிறார்கள், சுற்று வட்டாரத்து மக்கள்.’’

‘‘இதுபற்றி ஆலய நிர்வாகத் தரப்பில் ஏதும் விசாரித்தீரா?’’

‘‘விரைவில் விசாரித்துச் சொல்கிறேன். முன்னதாக வேறுசில கோயில்கள் பற்றியும் சொல்லிவிடுகிறேன்.’’

‘‘சொல்லும்... சொல்லும்...’’

‘‘சென்னைக்கு அருகிலுள்ள திருநீர்மலை பெருமாள் கோயில் பிரசித்திபெற்றது. அதன் எதிரிலேயே ஆழ்வார் மலை உள்ளது. திருமங்கையாழ்வார் இந்தத் தலத்துக்கு வந்தபோது, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெருமாளை தரிசிக்க முடியாத நிலையாம். ஆகவே, வெள்ளம் வடியும் வரையிலும் எதிரிலுள்ள மலையில் தங்கியிருந்தாராம் திருமங்கை ஆழ்வார். இதையொட்டி அந்த மலை ஆழ்வார் மலை என்றே சிறப்புப்பெற்றுவிட்டது. அங்கு அமைந்திருக்கும் ஆழ்வார் சந்நிதியில், தற்போது விரிவான வழிபாடுகளை ஏற்பாடு செய்து சிறப்புற நடத்தி வருகிறார்கள் பக்தர்கள். அடுத்த முறை திருநீர்மலைக்குச் செல்லும்போது, ஆழ்வார்மலைக் கோயிலுக்கும் சென்று வாரும்’’ என்றவர் தொடர்ந்து, அந்தத் தலம் குறித்து வேறொரு தகவலையும் பகிர்ந்துகொண்டார்.

‘‘திருநீர்மலையைச் சுற்றிலும் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் அந்நிய ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவிட்டதாக ஆதங்கப்படுகிறார்கள் பக்தர்கள். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவோம்’’ என்றபடியே புறப்பட ஆயத்தமான நாரதர், சற்று நிதானித்து, ‘‘சரித்திரச் சிறப்பு மிக்க கோயிலின் கல்வெட்டு, வேறொரு கோயிலில் படிக்கட்டாகக் கிடந்ததாய் ஒரு தகவல். அதுபற்றி விசாரித்து வருகிறேன்’’ என்றவாறு விடைபெற்றுக்கொண்டார்.

- உலா தொடரும்...