Published:Updated:

அரனே... சிவனே... அம்பலவாணா!

அரனே... சிவனே... அம்பலவாணா!

அரனே... சிவனே... அம்பலவாணா!
அரனே... சிவனே... அம்பலவாணா!

சிவத் தொண்டும் அன்பர் பணியும் நிறைந்த தேசமாகத் திகழ்ந்தது, பண்டைய தொண்டை மண்டலம். இந்தப் பகுதியை அரசாண்ட மன்னர்கள் சிவநேசச் செல்வர்களாகத் திகழ்ந்ததுடன், தங்களின் தேசம் செழிக்கவும் மக்கள் மனதில் தெய்விகம் தழைத்தோங்கவும் 108 சிவாலயங்களை அமைத்ததாகச் சொல்கின்றன புராணங்கள். அவற்றுள் 51-வது சிவத்தலம், அம்பாபுரி எனப்படும் அம்பலப்புத்தூர். நமக்கெல்லாம் நன்கு பரிச்சயமான ஊர்தான்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##
ஆமாம், சென்னை - அம்பத்தூர்தான் அந்தத் தலம். இங்கே காமராஜபுரம் எனும் பகுதியில் (அம்பத்தூர் தொழிற்பேட்டை- இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகில்), மிகக் கோலாகலமாக அருள்மிகு சிவகாமியம்மையுடன் கோயில்கொண்டிருக்கிறார் அம்பலவாணர். இவரின் திருப்பெயர் கொண்டே, இந்தப் பகுதிக்கு அம்பாபுரி, அம்பலப்புத்தூர் என்றெல்லாம் பெயர்கள் அமைந்ததாம். தற்போது, அம்பத்தூர் என மருவிவிட்டது!

இந்தத் தகவலை, கோயிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது. மேலும், கிருஷ்ணதேவ ராயரின் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றரசர்களான காளத்தி ராஜா, பெத்த ராஜா ஆகியோர் குறித்தும், அவர்கள் காலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்பத்தூரில் நடைபெற்ற சந்தை வருமானத்தில் 50 சதவீதத்தை இந்தக் கோயிலுக்கு வழங்கச் சொல்லும் அரசாணை குறித்த தகவல்களையும் இந்தக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது.

அரனே... சிவனே... அம்பலவாணா!

ஆடலரசனுக்கே உரிய 'அம்பலவாணன்’ எனும் திருநாமத்துடன் இறைவன் திகழ்வதால், மார்கழி திருவாதிரை, ஆனித் திருமஞ்சனம் போன்ற தினங்களில் இங்கு சென்று வழிபடுவது சிறப்பு. தவிர, சர்வரோக பரிகார ஸ்தலமாகவும் திகழ்கிறது, இந்த ஆலயம். மாத சிவராத்திரி தினங்களும், மகா சிவராத்தியும், பிரதோஷ பூஜைகளும் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன.

கடந்த 15 வருடங்களுக்கு முன்னர், இந்த ஆலயப் பகுதியைத் தூய்மைப்படுத்தும்போது, ஸ்ரீநாராயணி அம்மன், பிரம்மா ஆகியோரின் விக்கிரகங்கள் கிடைத்தன என்கிறார்கள். நீண்ட காலமாகப் பராமரிப்பு இல்லாமல் இருந்த இந்த ஆலயம், சிவ பக்தர்களின் முயற்சியாலும் இறையருளாலும் திருப்பணி செய்யப்பட்டு, 27.8.2006 அன்று ஸ்ரீமத் பரத்வாஜ் சுவாமிகளால் மிகச் சிறப்பாக மகா கும்பாபிஷேகம் கண்டது. ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீபைரவர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீதுர்கை, நந்திகேஸ்வரர் ஆகிய தெய்வ விக்கிரகங்கள் புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தற்போது ஸ்ரீஅம்பலவாணர் அறக்கட்டளையின் மூலம் ஆலயம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து பதினோரு சோமவாரங்கள் (திங்கட்கிழமைகள்) இந்தக் கோயிலுக்கு வந்து, நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு இறைவனைப் பிரார்த்தித்தால், நினைத்த காரியம் நிறைவேறும்; பிரதோஷ பூஜையில் இடைவிடாது கலந்துகொண்டால் செல்வச் செழிப்பும் மன நிறைவும் ஏற்படும் எனச் சிலிர்ப்புடன் கூறுகிறார்கள் பக்தர்கள்.