ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

ஆந்திர தரிசனம் - ஒண்டிமிட்டா!

ஆந்திர தரிசனம் - ஒண்டிமிட்டா!

ஆந்திர தரிசனம் - ஒண்டிமிட்டா!
ஆந்திர தரிசனம் - ஒண்டிமிட்டா!
##~##
ன்றொரு திருடன் திருந்தினான்; ராமாயணம் எனும் இதிகாசப் பொக்கிஷம் கிடைத்தது நமக்கு. அதேபோல், ஸ்ரீராம-லட்சுமணரின் அருளுபதேசத்தால் திருடர்கள் இருவர் திருந்தி நல்வழிப்பட... ஏகசிலா நகரம் எனும் க்ஷேத்திரம் கிடைத்தது. அந்தத் திருவிடத்தில் ஸ்ரீகோதண்டபாணி குடியேற, அவரருளால் ஸ்ரீஅன்னமாச்சார்யார், பம்மரே போதனாமத்யுலு போன்ற மகான்களின் ஞான நூல்களும், பாடல்களும் கிடைத்தன!

இத்தனை மகிமைகள் இந்தத் தலத்துக்கு உண்டு என்று தெரிந்தபின், சும்மா விடுவார்களா நம் சோழ வேந்தர்கள்?! சிறிய கருவறையில் அருள்புரிந்த ஸ்ரீராமனுக்கு, தங்களுக்கேயுரிய பாணியில் பிரமாண்டமாக ஒரு கோயிலைக் கட்டி வைத்தார்கள். இதன் மூலம், தங்களின் தோழமை தேசமான கீழை சாளுக்கியத்துக்கு (இன்றைய ஆந்திர மாநிலம்), காலாகாலத்துக்கும் பேர் சொல்லி நிற்கும் ஒரு கலைப் பரிசை தந்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்!

அதுசரி... ஏகசிலா நகரம் என்கிற இந்தத் தலம் எங்கிருக்கிறது? ராமனிடம் உபதேசம் பெற்ற அந்தத் திருடர்கள் யார் யார்? அவர்களின் கதையென்ன?

திரேதா யுகம்! மகரிஷி மிருகண்டுவும் சக முனிவர்களும் வேள்வி செய்து வந்த அந்தப் பகுதியில் அரக்கர்கள் தொல்லை அதிகம் இருந்தது. அவர்களிடம் இருந்து தங்களைக் காக்கும்படி ஸ்ரீராமனை வேண்டிக்கொண்டனர் முனிவர்கள். அதற்கிணங்க சீதாதேவி, மற்றும் லட்சுமணனுடன் கோதண்டபாணியாய் இங்கு வந்த ஸ்ரீராமன், அரக்கர்களை விரட்டினார். முனிவர்களுக்கு அபயம் அருளினார். அவரின் அனுக்கிரகம் நீக்கமற நிறைந்துவிட்ட அந்தத் திருவிடமே ஏகசிலாபுரம் என்கிறது புராணம்.

ஆந்திர தரிசனம் - ஒண்டிமிட்டா!

துவாபர யுகம்! இந்தத் தலத்தின் சிறப்பை அறிந்த ஜாம்பவான் இங்கே ஸ்ரீராமன், சீதாதேவி, லட்சுமணன் ஆகியோருக்கு ஒரே கல்லிலான சிலைகள் அமைத்து பிராணப் பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம்.

கலியுகமும் ஆரம்பித்தது. இந்தப் பகுதியில் ஒண்டன், மிட்டன் என்ற சகோதரர்கள் வாழ்ந்தனர். திருடர்களான இந்த இருவரும், தாங்கள் திருடிய பொன்- பொருட்களைப் பதுக்கிவைக்க இடம் தேடினர். அருகிலுள்ள வனத்தில் ஒரு குகையைக் கண்டவர்கள், அதன் சுவரில் இருந்த குழிகளுக்குள் தாங்கள் களவாடிய பொருட்களை பத்திரப்படுத்தி வந்தனர்.

ஒருநாள், அவர்கள் குகைக்குள் நுழைந்தபோது இனம் புரியாத சிலிர்ப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கண்ணைக் கூசும் பேரொளி. அதன் வெளிச்சத்தில் சீதாதேவி, லட்சுமணன் சமேத ஸ்ரீராமனின் விக்கிரக தரிசனம் கிடைத்தது. தொடர்ந்து தெய்விகக் குரல்களும் கேட்டன. ஆமாம்... சாட்சாத் ஸ்ரீராமன் மற்றும் லட்சுமணரின் உபதேசமாக ஒலித்தன அந்தக் குரல்கள்.

அருளுபதேசத்தால் உள்ளம் தெளிந்தது அந்தச் சகோதரர்களுக்கு. 'அன்பாலும் தொண்டாலும்  மற்றவர் உள்ளத்தை அல்லவா கொள்ளைகொள்ள வேண்டும்; மறுமையில் பயனற்ற பொன் - பொருட்களை கொள்ளையடித்து என்ன பயன்?’ என்ற உண்மை புரிந்தது அவர்களுக்கு. நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கியவர்கள், அன்று முதல் திருந்தினார்கள். சிலைகள் இருந்த அந்த இடத்தையும் திருத்தி, சுத்தப்படுத்தி, ஸ்ரீராமனுக்கு அழகாய் சிறியதொரு கருவறையை அமைத்தார்கள். ஏகசிலா நகரம் எனப்பட்ட அந்தத் திருவிடம், அதன் பிறகு அந்தச் சகோதரர்களின் பெயரிலேயே 'ஒண்டிமிட்டா’ என வழங்கலாயிற்றாம்!

ஆந்திர மாநிலம், கடப்பாவிலிருந்து திருப்பதி செல்லும் பாதையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது ஒண்டிமிட்டா. பரந்து விரிந்திருக்கும் ஆலயமும், கற்றளியாய் திகழும் கோயிலின் சிற்பங் களும் சோழர்களின் கலைநயத்தைக் காட்டுகின்றன. பிரமாண்டத்தை ரசித்தபடி உள்ளே நுழைந்தால், சுந்தரத் தெலுங்கில் சில கீர்த்தனைகள், நம்மை மெய்ம்மறக்கச் செய்தன.

ஜயஜய ராமா ஸமர விஜயராமா
பயஹர நிறுபக்த பாரிணராமா
ஜலதி வந்திஞ்சின ஸெளமித்ரி ராமா
ஸெலவில்லு விரசின ஸீதாராமா...  

- அன்னமாச்சார்யாரின் பக்திப் பாடல்களை, முகமண்டபத்தில் அமர்ந்து பக்தர்கள் சிலர் பாடிக் கொண்டிருந்தனர். திருமாலைப் போற்றி பக்திப் பாடல்கள் பல தந்த ஸ்ரீஅன்னமாச்சார்யார், ஒண்டிமிட்டா ஸ்ரீகோதண்டராமனையும் போற்றிப் பாடியுள்ளாராம். இவர் பிறந்த ஊரான தாளப்பாக்கம், ஒண்டிமிட்டாவில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. இவரைப் போன்று இன்னும் பல மகான்களும் ஸ்ரீகோதண்டராமரை சிறப்பித்துள்ளனர்.

ஆந்திர தரிசனம் - ஒண்டிமிட்டா!

ராமாப்யுதயம் எனும் ஞானநூலை இயற்றிய, அய்யலராஜு ராமபத்ரன் என்பவருக்கு சிறு வயதிலேயே சீதாதேவியின் அனுக்ரகம் வாய்த்ததாம். மகான் பம்மரே போதனாமத்யுலு என்பவர், தெலுங்கில் ஸ்ரீமத் பாகவதம் இயற்றியது இவ்வூரில்தான். அப்போது, சில விஷயங்கள் சிந்தைக்கு எட்டாமல் தடைப்பட, ஸ்ரீராமனே வந்து அதை பூர்த்தி செய்தாராம்.

அதுமட்டுமா? நவாப் ஒருவன், தனது கோட்டைக்கு (ஸித்து வடம் கோட்டை என்பர்) செல்லும் வழியில் இங்கே தங்கி இளைப்பாறினான். அப்போது, இந்தப் பகுதியில் உள்ள சிலர் கடவுள் உண்டா- இல்லையா என வாக்குவாதம்செய்து கொண்டிருந்தனர். அதற்குத் தீர்வு காண, தேவஸ்தான வாயிலை மூட நவாப் முயற்சித்த போது, 'ராம... ராம’ என்று பேரொலி எழுந்து!  இதில் வியந்துபோன நவாப், ஸ்வாமி அபிஷேகத்துக்காக தீர்த்தக் கிணறு வெட்டிக் கொடுத்தானாம். இதுபோன்று பல்வேறு அற்புதங்களை கதை கதையாய்ச் சொல்லி சிலிர்க்கிறார்கள் பக்தர்கள்.

முதலில் கருவறையுடன் சிறிய கோயிலாக திகழ்ந்தது. அடுத்து முக மண்டபம் மட்டும் அமைத்துள்ளனர். பின்னாளில்தான் பெருங் கோயிலாகப் பரிணமித்திருக்கிறது. சோழர்  காலச் சிற்பங்கள் மற்றும் சில கல்வெட்டுகள் மூலம் ஆலயச் சரித்திரம் தெரியவருகிறது. இன்னும் சில கல்வெட்டுகள், கோயிலுக்கு வழங்கப்பட்ட நிவந்தங்கள் குறித்துத் தெரிவிக் கின்றன. விஜயநகர திருப்பணிகளும் இந்தக் கோயிலுக்கு உண்டு.

ராமாயணம், மகாபாரதக் கதைகள், தசாவதார காட்சிகள், சேதுபந்தன வைபவம், கோவர்த்தனகிரி மற்றும் காளிங்கநர்த்தனம் என ஆலய மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் வெகு அழகு. இவை தவிர, சீதா கல்யாண வைபவத்தில் ராமன்-சீதை எதிர்கொள்ளல், முகப்பில் காளி கோபுரத்தில் தென்படும் பசு-யானை மற்றும் நடனச் சிற்பங்களும் ரசிக்கத்தக்கவை. ஒண்டிமிட்டா சிற்பங்கள் குறித்து, 1652-ல் இந்தப் பகுதிக்கு யாத்திரையாக வந்து சென்ற தாவெனியர் என்ற வெளிநாட்டு யாத்ரீகர், தனது பயணக் குறிப்பில் வெகு சிறப்பாகப் பாராட்டியுள்ளார்.

ஆந்திர தரிசனம் - ஒண்டிமிட்டா!

கருவறையில் கோதண்டபாணியாய் அழகு கோலம் காட்டுகிறார் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி. இடது கையில் கோதண்டமும் வலது கையில் ஸ்ரீராம பாணமுமாக அருளும் ஸ்வாமியை பார்த்துக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகு; தீட்சண்யம்! ஸ்வாமிக்கு வலப்புறம் இளவல் லட்சுமணன்; இடப்புறத்தில் சீதா.

இந்தக் கோதண்டபாணியை ஒருமுறை தரிசிக்க, சத்ரு தொல்லைகள் யாவும் நீங்குமாம். எத்தகைய சத்ருக்கள்? ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களாகிய நமக்குள்ளே இருக்கும் பகையும், வறுமை, பிணி போன்ற இக வாழ்க்கைக்கான பகையும் அறுபடுமாம்!

ஸ்ரீஆஞ்சநேயர், அஞ்சலி ஹஸ்தத்துடன் தனிச் சந்நிதி கொண்டிருக்கிறார்; பிற்கால பிரதிஷ்டை என்கிறார்கள். யாகம் காக்க ஸ்ரீராமன் இங்கே வந்த தருணத்தில், அனுமன் பரிச்சயம் இல்லையாம். எனவே, ஆதியில் இங்கு அனுமன் விக்கிரகம் அமைக்கப்படவில்லை என்கிறார்கள். மூலவ விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்த ஜாம்பவான், அனுமனை விடப் பெரியவர். ஆகவே, ஆதியில் அனுமன் இங்கு காணப்படவில்லை என்றும் சிலர் சொல்கின்றனர்!  ஆதிசேஷன் குடைபிடிக்க அமர்ந்த கோலத்தில் இருக்கும் ஸ்ரீதேவி-பூதேவி சமேத நாராயணரையும் இங்கு தரிசிக்கலாம். பாஞ்சராத்ர முறைப்படி பூஜைகள் நிகழும் இந்த ஆலயத்தில், ஸ்ரீராம நவமி விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் இருந்து அகோபிலத்துக்கு நவ நரசிம்ம மூர்த்தியரைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்கள், கடப்பா - அல்லகட்டா வழியாகச் செல்ல வேண்டும்.  அப்படியே, கடப்பாவில் இருந்து இந்தத் தலத்துக்கும் வந்து (சுமார் 40 நிமிட பயணம்) ஸ்ரீகோதண்டராமனையும், இந்த ஊருக்கு அருகிலேயே உள்ள மகான் அன்னமாச்சார்யாரின் ஜென்ம ஸ்தலமாம் தாளப்பாக்கத்தையும் தரிசித்து, அருள்பெற்று செல்லலாம்!

படங்கள்: என்.விவேக்