Published:Updated:

ஒரு கருவறை... இருவாசல்கள்... சூரியத் தேரில் அருள்புரியும் சாரங்கபாணி பெருமாள்!

'பெருமாளே, நீர் பல அவதாரங்கள் எடுத்தீர். ஒவ்வோர் அவதாரத்தின்போதும், தேசம் விட்டு தேசம் நடந்து சென்றீர். விண்ணும் மண்ணும் அளந்தீர். அதனாலெல்லாம் உமக்குக் களைப்பு ஏற்பட்டுச் சயனித்திருக்கிறீரோ?'

ஒரு கருவறை... இருவாசல்கள்... சூரியத் தேரில் அருள்புரியும் சாரங்கபாணி பெருமாள்!
ஒரு கருவறை... இருவாசல்கள்... சூரியத் தேரில் அருள்புரியும் சாரங்கபாணி பெருமாள்!

கோயிலில் தேர் இருக்கும். ஆனால், இறைவனின் கருவறையே தேரின் தோற்றத்தோடு அமைந்திருப்பது அபூர்வம். பிரமாண்டமான சக்கரங்கள் கொண்ட தேர். அதன் இருபக்கங்களிலும் இருவாசல்கள். ஒரே நேரத்தில் இரண்டு வாயில்களும் திறந்திருப்பதில்லை. ஆறுமாதங்களுக்கு ஒருமுறை ஒரு வாயில் மூட, மறுவாயில் திறக்கும். இவையெல்லாம் அமையப் பெற்ற புண்ணியத்தலம்தான் கும்பகோணம் ஶ்ரீ சாரங்கபாணி பெருமாள் ஆலயம்.

அமுதம் பொங்கும் குடந்தை ஒரு கோயில் நகரம். குடந்தைக்கு உள்ளும் புறமும் கோயில்கள் அநேகம். அவற்றுள் ஶ்ரீகோமளவல்லி சமேத  ஶ்ரீ சாரங்கபாணிப் பெருமாள் திருக்கோயில் சிறப்புப் பெற்றது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களுள் இது மூன்றாவது திவ்யதேசம். 

இங்குப் பெருமாளுக்கு, 'ஆழ்வார்' என்று பெயர். ஆழ்வாருக்கு 'பிரான்' என்று பெயர். இறைவனுக்குப் பக்தன் பெயர். பக்தனுக்கு இறைவன் பெயர். இறைவன் ஆராவமுத ஆழ்வார், திருமழிசை ஆழ்வாருக்கு 'திருமழிசைபிரான்' என்று பெயர். அந்த அளவிற்கு இறைவன் பக்தரோடு கலந்து ஆனந்திக்கும் திருத்தலம். அப்படி இல்லையென்றால் உரிமையோடு திருமழிசை ஆழ்வார் கோபித்துக்கொள்வாரா? அப்படி பக்தன் கோபித்துக்கொண்டதும், பகவான்தான் பதறி எழுவாரா?

திருமழிசை ஆழ்வார் நீண்டதூரம் நடந்து வந்து இந்தத் தலத்தில் பெருமாளைச் சேவித்தார். பெருமாள் சயனக் கோலத்தில் காட்சி கொடுத்தார். பக்தனாய் இருந்தால் வெறுமனே கன்னத்தில் போட்டுக்கொண்டு வந்திருப்பான். ஆனால், ஆழ்வார் கவிஞருமாயிற்றே..! 'அட, இந்தப் பெருமாள் இப்படி சயனக்கோலத்தில் எப்போதும் இருக்கிறாரே, அதன் காரணம் என்னவாக இருக்கும்' என்று சிந்தித்தார்.

          'நடந்தகால்கள் நொந்தவோ நடுங்க ஞாலமேனமாய்
          இடந்தமெய் குலுங்கவோ விலங்குமால் வரைச்சுரம் 
          கடந்தகால் பரந்த காவிரிக்கரைக் குடந்தியுள்ள 
          கிடந்தவாறெழுந்திருந்து பேசு' 

என்று பாடினார். 

இறைவனின் திருக்கோலங்கள் மூன்று. ஒன்று நின்றகோலம், மற்றொன்று கிடந்தகோலம், மூன்றாவது அமர்ந்தகோலம். பெருமாள் கிடந்த கோலத்தில் சேவை சாதிப்பது இயல்பே. அப்படியிருக்க, சயனக் கோலத்தில் இருக்கும் பெருமாளை தரிசித்த ஆழ்வாரின் கவியுள்ளம், 'நீர் ஏன் படுத்திருக்கிறீர்?' என்று கேட்டு, அதற்குக் கவித்துவத்துடன் அவரே இப்படி பதிலும் கூறுகிறார். 'பெருமாளே, நீர் பல அவதாரங்கள் எடுத்தீர். ஒவ்வோர் அவதாரத்தின்போதும், தேசம் விட்டு தேசம் நடந்து சென்றீர். விண்ணும் மண்ணும் அளந்தீர். அதனாலெல்லாம் உமக்குக் களைப்பு ஏற்பட்டுச் சயனித்திருக்கிறீரோ?' என்று காரணமும் சொல்கிறார். சரி, அத்துடன் விட்டாரா என்றால் அதுதான் இல்லை. 'யார் யாருக்கெல்லாமோ ஆயிரமாயிரம் காதம் நடந்து சென்ற நீர், இதோ உம்மைக் காண வந்திருக்கும் என்னிடம் எழுந்து வந்து பேசினால் குறைந்தா போய்விடுவீர்?' என்று உரிமையுடன் கோபித்துக்கொள்ளவும் செய்தார்.

பக்தனுக்குப் பாவனை இருக்கலாம் என்றால் பகவானுக்கு இருக்கக் கூடாதா? அதுவும் பொல்லாத மாயக்காரனான அந்தத் திருமால், பக்தனுடைய பாவனைக்கு பதில் சொல்வது போல், 'என்ன கேட்டீர், எழுந்து வந்து உம்மிடம் பேசவேண்டும். அவ்வளவுதானே' என்று கேட்டபடி தன் சயனக் கோலத்தை விட்டு மெள்ள எழுந்துகொள்வது போன்று ஒரு பாவனை புரிந்தார். 

அவ்வளவுதான் ஆழ்வார் ஒரு கணம் திகைத்தேவிட்டார். தம்மால் பெருமாளின் சயனத் திருக்கோலம் கலைந்துவிட்டதே என்ற பரிதவிப்பில், அவர் மேலும் எழாதபடி, 'வாழி கேசவனே!' என்று மங்களாசாசனம் செய்துவிட்டார். இன்றைக்கும் பெருமாள் சயனத்திலிருந்து பாதி எழுந்து கொண்ட நிலையிலேயே சேவை சாதிக்கிறார். பெருமாளின் இந்த சயனத்துக்கு, 'உத்தான சயனம்' என்று பெயர்.

இந்தத் தலத்தில் பாதாள அறையில் இருக்கிறார் பாதாள சீனிவாசன். திருமலையில் இருந்து தாயாரோடு திருவிளையாடல் புரியும் நோக்கில் இறைவன் குடந்தை பாதாள அறையில் தங்கினார். தாயார், இறைவனைத் தேடிக்கொண்டு இங்கு வந்து சேர்கிறார். வந்த இடத்தில் மகாலட்சுமித் தாயார் மகவாய் அவதரிக்கத் திருவுளம் கொண்டார். அங்கு தவமியற்றிக் கொண்டிருந்த ஹேமரிஷியின் (முற்பிறவியில் பிருகு) மகளாகத் திருவுளம் கொண்டு பொற்றாமரைக் குளத்தில் சிறு மழலையாக அவதரித்தார். ஹேமரிஷி அவரைக் கண்டெடுத்து, கமல மலர்களின் நடுவே தவழ்ந்தவள் என்பதால், கோமளவல்லி என்று பெயரிட்டு வளர்த்தார்.

கோமளவல்லியும் திருமணப் பருவம் எய்தியதும், மகாவிஷ்ணுவையே மணந்துகொள்ள வேண்டும் என்று தவமியற்றினார். தவத்துக்கு இரங்கிய மகாவிஷ்ணு, தாயாரை மணந்துகொள்ள வைகுண்டத்திலிருந்து நேரடியாக இந்தத் தலத்துக்கு வந்து சேவை சாதித்தார். வைகுண்டவாசனாக பெருமாள் எழுந்தருளிய காரணத்தினால், இந்த ஆலயத்தில் சொர்க்கவாசல் இல்லை. இங்குள்ள பெருமாளை என்றைக்கு தரிசித்து வழிபட்டாலும் வைகுண்ட ஏகாதசியன்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இறைவன் தாயாரைத் திருமணம் செய்து கொள்ளத் தேரில் வந்தார். அதுவும் சூரிய ரதத்தில். இந்தத் தலத்தில்தான் சூரியன் சாரங்கபாணி பெருமாளை வழிபட்டு தன் சாபம் நீங்கித் தன் முழு ஒளியினையும் பெற்றான். அதனால் இந்தத் தலம் 'பாஸ்கர க்ஷேத்திரம்' என்றும் அழைக்கப்படுகிறது. சூரிய ரதம் என்பதால், இறைவனின் கருவறை தேரின் வடிவத்திலேயே அமைந்திருக்கிறது. அதேபோல், சூரியனின் வடதிசை, தென்திசை பயணத்தைக் குறிப்பிடும் வண்ணம், இரண்டு வாயில்கள் உள்ளன. ஒன்று தெற்கு நோக்கி நகரும் தட்சிணாயனம். மற்றொன்று வடக்கு நோக்கி நகரும் உத்தராயனம். மற்ற ஆலயங்கள்போல நேரான வாயில் இந்த சந்நிதிக்கு இல்லை. மாறாக இரண்டு வாயில்களும் இரண்டு பக்கவாட்டு திசைகளில் அமைந்துள்ளன. 

ஆடி முதல் மார்கழி வரையிலான மாதங்கள் தட்சிணாயனம். தை முதல் ஆனி வரையிலான மாதங்கள் உத்தராயன மாதங்கள். ஒவ்வோர் ஆறுமாதத்திற்கும் ஒரு வாசல் திறந்திருக்கும். இந்த ஆண்டின் உத்தராயன  புண்யகாலம் தை முதல் நாள் தொடங்கியது. இதையொட்டி நடைபெற்ற சங்கரமண உற்சவத்தின் ஒரு பகுதியாக  தட்சிணாயன வாசல் மூடப்பட்டு உத்தராயன வாசல் திறக்கப்பட்டது.  கடந்த ஆறுமாதமாகப் பக்தர்களுக்கு இறைவனின் திருவருள் பெற வழியாக இருந்த வாயிலுக்கும், அடுத்த ஆறு மாதத்துக்கு வழியாக இருக்கும் வாயிலுக்கும் வியாழக்கிழமை பூஜைகள் நடைபெற்றன. தட்சிணாயன வாசல் அடைக்கப்பட்டதும் உத்தராயன வாசலுக்கு அபிஷேகமும் ஆராதனைகளும் செய்து பக்தர்கள் 'கோவிந்தா' கோஷம் முழங்க, அதன் கதவுகள் திறக்கப்பட்டன.

இங்கு சயனகோலத்தில் இருக்கும் இறைவனின் திருப்பெயர் ஆராவமுதன். அமுதமே அருந்தினாலும் கொஞ்சத்திலேயே நமக்குத் திகட்டிவிடும். ஆனால், இந்த பெருமாளின் திருவருள் என்னும் அமிர்தத்தை எவ்வளவுதான் அருந்தினாலும், திகட்டவும் செய்யாது; பெருமாளை அனுதினமும் தரிசிக்கவேண்டும் என்ற நம் ஆர்வமும் தீரவே தீராது. எனவேதான், பெருமாளுக்கு இந்தத் திருப்பெயர் ஏற்பட்டது.

இந்த உலகில் நாம் மறுபடியும் பிறவி எடுக்காமல் இருக்கவேண்டும் என்றால், ஆராவமுதனையும், சாரங்கம் ஏந்தி நின்று காட்சி தரும் சாரங்கபாணியையும் தரிசித்து நல்லருள் பெறுவோம்.