தொடர்கள்
விழாக்கள் / விசேஷங்கள்
Published:Updated:

தைப்பூச தரிசனம்!

தைப்பூச தரிசனம்!
பிரீமியம் ஸ்டோரி
News
தைப்பூச தரிசனம்!

தைப்பூச தரிசனம்!

தைப்பூச தரிசனம்!

கல்யாண வரம் அருளும் புகழி மலை கந்தன்!

ரூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 16 கி.மீ தொலைவில் உள்ளது வேலாயுதம்பாளையம். இந்த ஊரில், இயற்கை எழில் கொஞ்சும் சிறு குன்றின் மீது அமைந்திருக்கிறது அருள்மிகு புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்; சுமார் 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.

தைப்பூச தரிசனம்!

பராந்தக நெடுஞ்சடையன் எனும் பாண்டிய மன்னனும் அதியன் என்ற மன்னனும் போர்க் காலங்களில் இம்மலையில் உள்ள குகைகளைப் போர்த் தந்திர வேலைகளுக்குப் பயன்படுத்தியதாக, திருக்கோயில் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இந்தக் கோயிலில், மயில் வாகனத்தின் தலை இடப்புறம் நோக்கியும், தோகை வலப்புறமாகவும் திகழ்கின்றன. இத்தகைய அமைப்பு, சூரசம்ஹாரத்துக்கு முற்பட்ட முருகனின் திருக்கோலத்தைக் குறிக்குமாம். இங்கே முருகனுக்கு நேர்த்திக்கடனாக வேல் செலுத்தி வழிபடும் வழக்கம் பிரசித்தம். அதேபோல், தொடர்ந்து 12 வாரங்கள்  - செவ்வாய்க் கிழமைகளில் முருகனுக்குச் செவ்வரளிப் பூ மற்றும் செவ்வாழைப் பழம் படைத்து வழிபட்டால், தடைகள் விலகி விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. ஐப்பசி மாதம், சஷ்டி தினத்தில் தினை மாவு வைத்து வழிபடுவது கூடுதல் விசேஷம் என்கிறார்கள் பக்தர்கள்.

ஞானவேல் விபூதிப் பிரசாதம்!

முத்துக்குமரன் விரும்பி உறையும் சென்னை கந்தசாமி கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள பகுதி சிந்தாதிரிப்பேட்டை. இப்பகுதியில், ஐயா முதலி தெருவில் (மார்க்கெட் பின்புறம்) அமைந்துள்ள முருகவேள் திருக்கோயிலில், அடியார்களின் வேண்டுகோளுக்கிணங்க, ‘ஞானவேல்’ ஒன்றை ஸ்ரீமத்பாம்பன் சுவாமிகள் பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது.

தைப்பூச தரிசனம்!

அந்த ஞானவேலுக்குத் திருநீறு (விபூதி) அபிஷேகம் செய்யப்பட்டு, அடியார்களுக்கு அருள்பிரசாதமாக வழங்கப்படுகிறது. அந்த ஞானவேல் பிரசாதம், அன்பர்களது மனக் கவலைகளை நீக்கி, நோய் தீர்த்து, மகிழ்ச்சியை அளிக்கும் என்பது நம்பிக்கை. அத்துடன், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் திருக்கரங்களால் கடம்ப மரக்கன்று ஒன்று நடப்பட்டதாகவும் அறிய முடிகிறது. கடம்ப மலர் முருகனுக்கு உகந்த மலர் அல்லவா?! கிருபானந்தவாரியாரும் போற்றிப்பரவிய திருக்கோயில் இது.

மாம்பழப் பிரார்த்தனை!

சேலம் மாவட்டம், அம்மாபேட்டை அருகில் சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ளது குமரகிரி திருத்தலம். சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சந்நியாசிகுண்டுக்குச் செல்லும் மினிபஸ், குமரகிரி அடிவாரம் வழியாகச் செல்லும். ஆனால், பஸ் வசதி குறைவுதான்; ஆட்டோவில் செல்லலாம்.

அடிவாரத்திலிருந்து சுமார் 600 படிகள் கடந்து மலையேறினால், அழகனாம் ஸ்ரீபாலதண்டாயுத பாணியை தரிசிக்கலாம். மலைக்குமேலுள்ள திருக்கோயில், முருகனின் ஆணைப்படி ஸ்ரீலஸ்ரீகருப்பண்ண ஞானி என்ற துறவியால் கட்டப்பட்டது. ஞானப் பழம் தனக்குக் கிடைக்காத கோபத்தில் பழநிக்குச் செல்லும் வழியில், முருகன் இளைப்பாறிய இடம் இது என்கிறது தலபுராணம்.

தைப்பூச தரிசனம்!

குமரகிரி முருகனுக்குப் பிடித்த நைவேத்தியம் மாம்பழம்தான்! திருமண பாக்கியம், குழந்தைப் பேறு, வியாபார விருத்தி, அமோக விளைச்சல் என எந்தப் பிரார்த்தனையாக இருந்தாலும், முருகனுக்கு மாம்பழம் சமர்ப்பித்து மனதார வேண்டிக்கொள்கின்றனர் பக்தர்கள். அதேபோல், பிரார்த்தனை நிறைவேறிய பிறகும், மாம்பழங்களை குமரனுக்குச் சமர்ப்பித்து வழிபடுவதுடன், பக்தர் களுக்கும் பிரசாதமாக வழங்கி மகிழ்கின்றனர்.

தீராத நோயால் அவதிப்படுவோர், திடீர் விபத்தில் படுத்தபடுக்கையாகக் கிடப்பவர்கள் என இருந்தால்... அவர்களின் உறவுக்காரர்கள் இங்கே வந்து, முருகப்பெருமானுக்கு பன்னீர் மற்றும் சந்தனத்தால் அபிஷேகம் செய்து, விருச்சிப்பூவால் திரிசதி அர்ச்சனை செய்து வழிபட்டால், ஆயுள் பலம் கூடும்; நோய் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வர் என்பது நம்பிக்கை!

தொகுப்பு: ஏ. கோவிந்தராஜ், சென்னை-44