Published:Updated:

"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு!" - பழநி பாதயாத்திரை பக்தர்

உள்ளுக்குள் கொஞ்சம் அவநம்பிக்கைதான். பழநிக்குச் சென்றார்; தன் மனக் குறைகள் அனைத்தையும் அவனிடம் சொல்லிக் கதறினார். பழநி முருகன், தான் ஆண்டிக் கோலத்தில் இருந்தாலும் நம்பி வந்தவர்களுக்கு அரசபோகங்களை அருள்வதில் வள்ளல் அல்லவா?

"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு!" - பழநி பாதயாத்திரை பக்தர்
"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு!" - பழநி பாதயாத்திரை பக்தர்

வர் பெயர் அருணாசலம். வயது 55. செய்துகொண்டிருந்த தொழில் முடங்கிவிட்டது. வருமானம் இல்லாத நிலை. வீட்டில் இருந்தவர்கள் எல்லோரும் நோய்கண்டு நலம் குன்றிவிட்டார்கள். வாழ்வை வெறுத்துச் செய்வதறியாது திகைத்து நின்றார். அப்பொழுது அவரை ஒரு பெரியவர் சந்தித்தார். அவர் ஒரு முருக பக்தர். இந்த உலகின் வினைகளை எல்லாம் போக்கும் அருமருந்து அந்தக் கந்தக் கடவுள் என்று கண்டு தெளிந்தவர். அவர் இவருக்குத் திருநீறு இட்டு, 'பழநிக்கு ஒரு எட்டுப் போய்ட்டு வா. உன் குறை எல்லாம் தீரும்' என்று வழிகாட்டினார். 

துயரத்தில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை அவ்வளவு விரைவில் வந்துவிடுமா என்ன? ஆனால் வேறு வழியும் அவருக்குத் தெரியவில்லை. கடலில் சிக்கித் தத்தளிப்பவனுக்கு சிறு கட்டை கிடைத்தாலும் அதைப் பற்றிக்கொண்டு எப்படியாவது கரை சேர முயற்சி செய்வான் அல்லவா? அப்படித்தான் அருணாசலமும் அந்தப் பெரியவர் சொல்லியபடி பழநிக்குச் செல்ல முன்வந்தார். உள்ளுக்குள் கொஞ்சம் அவநம்பிக்கைதான். பழநிக்குச் சென்றார்; தன் மனக் குறைகள் அனைத்தையும் அவனிடம் சொல்லிக் கதறினார். பழநி முருகன், தான் ஆண்டிக் கோலத்தில் இருந்தாலும் நம்பி வந்தவர்களுக்கு அரசபோகங்களை அருள்வதில் வள்ளல் அல்லவா? அப்படியிருக்க, அவநம்பிக்கையுடன் வந்திருந்தாலும்கூட, தன் சந்நிதிக்கு வந்து முறையிட்ட அருணாசலத்துக்கு அருள்புரிய மாட்டானா என்ன?
பழநி முருகனிடம் முறையிட்டுவிட்டு வீடு திரும்பிய அருணாசலம், அதன் பிறகு நடைபெற்றவற்றை நெகிழ்ச்சியும் சிலிர்ப்புமாக நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“எம் பேரு அருணாசலம். வயசு 55. சொந்த ஊரு ஈரோடு. முதல் முறை நடந்து பழநி வந்து போனபோது அதை ஒரு சடங்காகத்தான் செய்தேன். ஆனால், போய்வந்ததுக்கு அப்புறம் வாழ்க்கை பெரிதா மாறிடுச்சி. முடங்கிய வியாபாரம் மறுபடி துளிர்க்க ஆரம்பிச்சது. வியாபாரம் வளர வளர குடும்பத்தின் வறுமையும் மறைஞ்சது. அதுக்கு அப்பறம் எந்தக் குறையையும் முருகன் எனக்கு வைக்கல. குடும்பத்துல இருக்கறவங்க உடல் நலமும் கொஞ்சம் கொஞ்சமா தேறிடுச்சி. சகல செல்வத்தையும் என் அப்பன் முருகன் கொடுத்தாரு. அதுக்கு அப்புறம் ஒவ்வொரு வருஷமும் தைப்பூசத்துக்கு நானும் என் குடும்பத்தாரும் நடந்தே பழநிக்கு பாத யாத்திரையா போய்ட்டு வர்றோம் ” என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

அவர் மட்டுமா நூற்றுக்கணக்கான மக்கள் நடைப்பயணமாக பழநிக்குச் செல்கிறார்கள். அதில் ஏழு வயது குழந்தையில் இருந்து எழுபது வயது முதியவர்களும் அடக்கம். எல்லோருக்கும் அந்த முருகன்தான் வழித்துணை. விரதம் இருந்து பழநிக்குக் கிளம்பும்போதே 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்று முருகனை வாழ்த்திவிட்டுத்தான் கிளம்புகிறார்கள்.

கிளம்புமுன் 'முருகா நீதான் எங்க பயணத்தைக் காவல் காக்கணும். நாங்க குத்தம் குறை எதுவும் பண்ணியிருந்தா மன்னித்து, பத்திரமா கூட்டிப்போய் உன் தரிசனம் காட்டி மறுபடி பத்திரமா வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்க்கணும்' என்று வேண்டிக்கொள்கிறார்கள்.   முருகன் அவர்களின் நம்பிக்கையை எப்போதும் நிறைவேற்றுகிறார்.

முருகனுக்கு மாலை போட்டு விரதமிருப்பவர்களை முருகனாகவே பக்தர்கள் கருதுகிறார்கள். அக்கம்பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் அவர்களை "முருகா" என்றே அழைக்கிறார்கள். கூடவே குழந்தைகளுக்கு நோய் நொடி ஏற்பட்டால் இவர்களை அழைத்து திருநீறிடச் சொல்வார்களாம். இவர்கள் முருகனை நினைத்துத் திருநீறு இட அவர்களை முருகன் சுகமாக்குகிறான் என்று நம்புகிறார்கள்.  
''ஒரு நாளில் எவ்வளவு தூரம் நடந்தே கடக்கமுடியும்?'' என்று அவரிடம் கேட்டோம்.

"ஒரு நாளைக்கு 30 கி.மீ க்குக் குறையாம நடப்போம். என் வயசுல இருக்கறவங்கள்ல சில பேரு அதைவிடவும் அதிகமா நடப்பாங்க. நாலு நாளுக்குள்ள பழநி மலையடிவாரம் போயிருவோம். போய்ச் சேர்ற அன்னைக்குக் கிரிவலம் போய் மலையடிவாரத்துலையே ஓய்வெடுப்போம். மறுநாள் காலைல மலை ஏறி அந்த தண்டாயுதபாணிய தரிசிக்கப் போவோம். அவன் தரிசனம் எங்க களைப்பை எல்லாம் மாற்றி புத்துணர்வு தரும். அந்தப் புத்துணர்வே அடுத்த வருஷம் வரைக்கும் தாங்கும். இப்படி வாழ்நாள் முழுக்க வந்துபோறதுதான் வாழ்க்கையோட அர்த்தமே" என்று சொல்லிக் கண்கலங்கினார்.

பழநியில் தைப்பூசத் திருவிழா கோலாகமாக நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து முருகனைத் தரிசித்து மகிழ்கின்றனர். நடப்பது மட்டுமா, கூடவே காவடியும் சுமந்தல்லவா நடக்கிறார்கள். முருகனுக்குத் தேவையான, பால், பன்னீர், புஷ்பம், சந்தனம் , சேவல் எனப் பல்வேறு காவடிகளைச் சுமந்து செல்கிறார்கள். ஒரு காலத்தில் சர்ப்பக் காவடி எடுக்கும் வழக்கமும் இருந்தது. எதையும் அவர்கள் சுமையாக நினைப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை சுமப்பது அவர்கள் இல்லை. முருகன்தான். எனவே வழிப்பயணத்தில் பாரம் தெரிவதில்லை.  

கொஞ்சநேரம் நம்மோடு பேசி இளைப்பாறியவர் மறுபடி மீண்டும் தன் பயணத்தைத் தொடங்க ஆயத்தமானார். கிளம்பும் முன்பு "முருகனோட புகழைப் பாடுறதும், அதைப் பேசுவதும்தான் சார் வாழ்க்கையோட குறிக்கோளா நினைச்சு வாழந்துகிட்டிருக்கோம். அதுக்காக இந்த உடம்புல உயிர் உள்ள வரைக்கும் நடந்து வந்து அந்த முருகனைத் தரிசனம் பண்ணிக்கிட்டே இருப்போம். மத்ததெல்லாம் அந்த முருகன் செயல்" என்று சொல்லி நடக்க ஆரம்பித்தார். அவர் பின்னால் சென்றவர்கள்  'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா' என்று முழக்கமிட்டபடியே அவர் பின் சென்றனர்.