மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 21

ரங்க ராஜ்ஜியம் - 21
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம் - 21

ஓவியம்: ம.செ

ரங்க ராஜ்ஜியம் - 21

மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும், இவ்
வையந் தன்னொடும் கூடுவ தில்லையான்,
‘ஐயனே அரங்கா’ என்றழைக்கின்றேன்
மையல் கொண்டொழிந் தேனென்றன் மாலுக்கே!’

-பெருமாள் திருமொழி (3-ல்)
குலசேகராழ்வார்


கள் கமலவல்லியின் மாற்றத்தைக் கண்டு திகைத்துப்போனான் நந்தசோழன். மந்திரிமார்கள் கேட்ட கேள்விகளுக்கு கமலவல்லி அளித்த பதில்களோ, மன்னவனின் திகைப்பை மேலும் அதிகப்படுத்தின.

‘‘வழிபாடுகளின் பொருட்டு பசியும் பட்டினியும் கிடப்பது சரியா’’ என்றொருவர் கேட்க, ‘‘அமுதனைக் கண்டவள் என்பதால் என்னவோ பசியே இல்லை’’ என்று பதில் அளித்தாள்.

“இயற்கைக்கு மாறாக உள்ளதே தாங்கள் சொல்வது. அது எப்படி?” - என்று கேட்டார் இன்னொரு மந்திரி.

“சரியாகத்தான் கூறியுள்ளீர்! எனக்கு நேரிட்ட அனுபவம் இயற்கைக்கு மாறானதே. எல்லோருக்கும் நிகழக்கூடிய ஒன்றல்ல. ஆனால் இந்த அனுபவம், இதுவரை நான் வாழ்ந்தது வாழ்க்கையில்லை - இனி வாழப் போவதே வாழ்வென்று சொல்கிறது. அதற்கென்ன சொல்கிறீர்?”

அதிகம் பேசாத, நிமிர்ந்தும் பார்க்காத, பார்த்தாலும் தந்தையான நந்தசோழனையன்றி பிறரைப் பார்த்தேயறிந்திராத இளவரசியா இத்தனை தெளிவாக பதில் கூறுகிறாள் என்று அந்த மந்திரி மட்டுமல்ல, அனைவருமே ஆச்சரியப் பட்டனர்.

திருவரங்க ஆலயத்து வேதியரும் அப்போது அங்கு அழைத்துவரப் பட்டிருந்தார். நந்தசோழன் அவரை ஏறிட்டான். அவன் அப்படி ஏறிட்டுப் பார்த்ததே, ‘நடந்ததைக் கூறு’ என்பதுபோல் இருந்தது.

“சோழச் சக்ரவர்த்திக்கு அடியேன் அரங்க தாசனின் அனந்தமான வந்தனங்கள். இளவரசியார் அரங்கநாதப்பெருமானின் யௌவன கோலம் காணும் பேறு பெற்றுள்ளார். அதனால் எனக்கும் எம்பெருமானின் மேலாடை தரிசனம் வாய்த்தது. தேவியார் பெற்ற பேறு அவரின் முன்ஜன்ம வினை! எம்பெருமான் எதையோ உலகுக்கு உணர்த்த விரும்புகிறார் போலும். அதையொட்டியே இந்தச் சம்பவம் நடந்துள்ளதாய் பலரின் உள்ளம் கருதுகிறது” என்று பணிவாய்க் கூறி முடித்தார். நந்தசோழன் பதிலேதும் கூறாமல் எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தான்.

ரங்க ராஜ்ஜியம் - 21

“சக்ரவர்த்தி இதுகுறித்து சலனப்பட தேவையில்லை. இளவரசியாரை ஆட்கொண்ட அரங்கன், தங்களையும் ஆட்கொள்ளப்போவது திண்ணம். இளவரசியாரை தடாகத்துத் தாமரையாக தங்கள் வசம் சேர்த்தவனும் அவனே. இப்போது, அந்தத் தாமரையைத் தேடி வந்து ஆட்கொண்டிருப் பவனும் அவனே! இதன் பின்புலத்தில் சாமான்யர்கள் நம்மால் அறிய இயலாத தேவ ரகசியங்கள் இருக்கக்கூடும். அவை காலத்தால் தெரியவும்கூடும்” என்ற வேதியரின் கருத்தே அனைவருக்கும் சரி என்று தோன்றியது.

அதன்பின் நாள்களும் வேகமாய் கழிந்தன. இளவரசி கமலவல்லி, அரங்க ரூபமல்லாது வேறு ஒன்றைக் காணேன் என்பது போல் பூஜை நேரம் போக மற்ற நேரங்களில் கண்களைத் துணியால் கட்டிக்கொண்டாள்.

“என்னம்மா இது விநோதம்?” என நந்தசோழன் கேட்டதற்கு, “விநோதம் இல்லை தந்தையே விரதம்...” என்றாள்.

“விரதமா?”

“ஆம்... விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்து என் கண்ணில் பட்டவன் வசம் இந்த பெண் சேர வேண்டாமா”

“நீ என்னம்மா சொல்கிறாய்?”

“இது அவன் குறித்த விரதமப்பா. அவனைக் கண்ட கண்கள் வேறு எதையும் காணக்கூடாது எனும் விரதம். ஏன்... தவம் என்றுகூடச் சொல்லலாம். விரதத்துக்கும் தவத்துக்கும் அருள் செய்ய அவன் வந்தாக வேண்டுமே?”

“யார் எதைக் கேட்டாலும், அதற்கு மாணிக்கமாய் ஒரு பதில் கூறி வாயை அடைத்துவிடுகிறாய். உன்னுள் ஞானச்சுடர் பொலிவதை நானும் காண்கிறேன். இப்படியே நீ எத்தனை நாள் இருக்க முடியும் என்றும் தெரியவில்லை. ஒரு மானுடப் பெண் தேவாதிதேவனை அடைய இயலுமா? அவன் தந்தைக்கு தந்தையானவன் என்பது உண்மையென்றால், ஒரு தந்தையாய் நான் படும்பாட்டை புரிந்துகொண்டு, விரைந்து உன் போக்குக்கு ஒரு முடிவை அவன் ஏற்படுத்தவேண்டும்” என்று சற்றே கண்கலங்கி அழுதான் நந்தசோழன்.

அவன் கண்ணீர் வீண்போகவில்லை. அன்றிரவே கனவில் நந்த சோழனுக்கு அரங்கன் சேவை சாதித்தார்.

“நந்தா... கலங்காதே! உன் மகள் திருமகள்! பக்தியால் எனை அடையப்போகிறவள். யோக நெறிக்குப் பல ரிஷிகளும் முனிகளும் உதாரணமாயுள்ளனர். கிரகஸ்தாஸ்ரமம் எனும் குடும்ப நெறிக்கும் உதாரணங்கள் தேவைப்படுகின்றன. புலன்களை அடக்கினாலேயே எனை அடைய முடியும் என்றில்லாமல், இல்வாழ்வு கண்டும் எனை அடைய முடியும் என்பதற்கு ஓர் உதாரணமாகவே உன் மகளை நான் மணந்து வழிகாட்ட இருக்கிறேன். மானுடம், தேவம் என்ற பாகுபாடுகள் எனக்கேது?
என் சக்தியால் தோன்றியவை பக்தியாலேயே எனை திரும்ப அடைய முடியும். அம்மட்டில் உன் மாப்பிள்ளையாகி உனது தலைநகராம் உறையூரிலும் அழகிய மணவாளனாய் கோயில் கண்டு அருள்புரிய விரும்புகிறேன்”  என்றார்.

நந்தசோழன் கனவு கலைந்து எழுந்தான். அரங்கன் தனக்கே மாப்பிள்ளையாகப் போவதை எண்ணி நெகிழ்ந்தான். அந்த நொடியே தன்னை அரங்கனின் மாமனாராகக் கருதியவன், அவன் தந்த செல்வம் அனைத்தையும் அவனுக்கே தர உள்ளம் கொண்டான். தந்தையின் கனவு மூலம் தனக்கொரு பதிலை அரங்கன் சொல்லிவிட்டதை எண்ணி கமலவல்லியும் பூரித்தாள்.

கஜானாத் தங்கம் அவ்வளவும் அரங்கனுக்காக சீர்வரிசைப் பொருளாகத் தொடங்கியது. 360 கலங்களில் பொன்னரிசி இட்டு, அதற்கான பருப்பு வகையையும் பொன்னாலேயே செய்து கொம்பஞ்சு, கொடியஞ்சு, கறியமுதம் என்றும், கொம்பில் காய்ப்பவை, கொடியில் காய்ப்பவை எனக் காய்களை எல்லாவற்றையும் தங்கத்திலேயே செய்து, தட்டுத் தட்டாய் அந்த ஸ்வர்ண காணிக்கை களை... நூறு மங்கலப் பெண்டிரைத் தேர்வு செய்து அவர்கள் வசம் தந்து அணிவகுக்கச் செய்து, தன் திருமகளையும் யானை மேல் உள்ள அம்பாரியில் அமர்த்தி, பன்னிரு புரவிகள் பூட்டிய ரதத்தில் தானும் பின்தொடர்ந்து திருவரங்கம் சேர்ந்தான்.

திருவரங்கச் சந்நிதியும் திறந்திருந்த நிலையில், மாலையோடு சென்ற கமலவல்லி ஒரு ஜ்வாலை போலாகி, அரங்கன் திருமார்பின் மேல் சில நொடிகள் நின்று பிரகாசித்த நிலையில், அப்படியே அவருக்குள் அடங்கி விட, ‘ரங்கா, ரங்கா’ எனும் கோஷம் விண்ணைப்பிளக்கத் தொடங்கியது!

ரங்க ராஜ்ஜியம் - 21

அது ஓர் அற்புதக் காட்சி... ஆனந்தக் காட்சி!

இறப்புக்குப் பின்பு என்றில்லாமல், இருக்கும்போதே உயர்பக்தியால் அரங்கனை ஒருவர் அடைய முடியும் என்பதற்கு, அந்த நிகழ்வு ஒரு பெரும் சான்றாகிவிட்டது.

அதன்பின், நந்தசோழன் தன் அத்தனை செல்வங்களையும் அரங்கனுக்கே என்று செலவு செய்தான். உறையூரில் கோயில் எழுப்பி அழகியமணவாளன் எனும் திருநாமத்துடன் அரங்கனின் உப சந்நிதியை அங்கே உண்டாக்கினான். தன் மகளானாலும் மாலுடன் கலந்து விட்டவள் என்பதால், அவளை மகாலட்சுமியாகக் கருதி, அவளுக்கும் கமலவல்லித் தாயார் எனும் பெயரில் சந்நிதி கண்டான்.

திருவரங்கன் அழகிய மணவாளனாய் கமலவல்லியை தன்னோடு சேர்த்துக்கொண்ட அந்தக் கல்யாண நிகழ்வை, கமலவல்லியைத் தான் கண்டெடுத்த பங்குனி மாத ஆயில்ய நட்சத்திர  6-ம் திருநாள் அன்று கோயிலில் நடைபெறவும் ஏற்பாடு செய்தான்.

மானுட வாழ்வில் இல்லறமே நல்லறம், புலன்களை ஒடுக்கித் தவம் புரிந்து பிறப்பெனும் கர்மத்திடமிருந்து விடுபட முனைவது எல்லோர்க்குமானது அல்ல. அந்தக் கடின வழியைவிட இந்த இல்லற வழியும் அதன்பாலான தர்மங்களும் என்னிடம் மானுட ரைச் சேர்த்துவிடும் என்பதற்குச் சான்றே இந்தத் திருக்கல்யாண வைபவம். இதன் நினைவாகவே ஆலயத்தின் ஒரு சுற்றுக்கு அழகிய மணவாள ராஜமகேந்திரன் திருவீதி என்கிற பெயரும் சூட்டப் பட்டது. திருவரங்க வரலாற்றின் இந்நிகழ்வு, பக்தி மார்க்கத்துக்குப் பெரிதும் தூண்டுகோலாகியது.

இங்ஙனம், ஒருபுறம் பக்தி மார்க்கம் வளர்ந்த அதேநேரத்தில்... விருட்சங்கள் ஓங்கிடும்போது சருகுகள் உதிர்ந்து குப்பைகள் உருவாவதும் சகஜம் என்பதுபோல், பக்திக்கு எதிரான அறமற்ற செயல்பாடுகளும் நடக்கத் தொடங்கின.

கலியுகத்தின் இயல்பும் அதுவே! காமம், குரோதம், பொறாமை, சுயநலம்போன்ற குணங்கள் எல்லாம் கலி புருஷனுக்கு மந்திரிகளாகி இந்தப் பூ உலகத்தை வழிநடத்தத் தொடங்கினர். நிழலின் அருமையை வெயிலில் உணர்கிறார் போல் இந்த கேடுகெட்ட குணங்களின் சக்தியை அனைவரும் உணர்ந்து வருந்தினர்.

இதனால் பஞ்சபூதங்கள் பாதிப்புக்குள்ளாகி அவ்வப்போது கடற்கோள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு என்று உற்பாதங்களும் ஏற்பட்டன. காலம் யாருக்காகவும் நிற்பதில்லை. அது சுழன்று கொண்டே செயல்பட்டதில் திருவரங்கமும் சரி, உறையூர் ஆலயமும் சரி மீண்டும் இயற்கைச் சீற்றங்களுக்கு ஆட்பட்டு பின் வந்த ராஜாக்களால் மிளிரத் தொடங்கின.

குறிப்பாய் ஆலயம் சீரோடும் சிறப்போடும் இருந்தாலே நாடும் மக்களும் நலங்களோடு திகழ முடியும் என்பதை அரசர் பெருமக்கள் உணர்ந்து, அரங்கன் ஆலயத்தை தங்கள் உயிரினும் மேலாகக் கருதிப் பேணி வந்தனர்.

இப்படிப் பேணியவர்களில் சேர நாட்டு மன்னன் திடவிரதன் என்பவனும் ஒருவன். பிள்ளைப்பேறில்லாத ஒரு துன்பம், இவனை ஆலய கைங்கர்யத்தை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்யவைத்தது.

காரணமில்லாமல் காரியமில்லையே!

- இன்னும் வரும்...

இந்திரா சௌந்தர்ராஜன் - படம்: என்.ஜி.மணிகண்டன்

நிறம் மாறிய பூக்கள்!

ரங்க ராஜ்ஜியம் - 21

துளசிதாசர் ராமகாவியம் எழுதினார். தினமும் அதை தன் சீடர்களுக்கும் படித்து விளக்கம் கூறுவார். அப்போது யாருக்கும் தெரியாமல் ஆஞ்சநேயரும் அங்கு வந்து ராமகாவியத்தைக் கேட்டு மகிழ்ந்தார்.

ஒரு நாள் துளசிதாசர், ‘‘அனுமன், சீதையைத் தேடிக்கொண்டு அசோக வனத்துக்குச் சென்றார். அப்போது, அவர் கண்களில் அங்குள்ள வெள்ளை மலர்கள் தென்பட்டன!’’ என்று கூறினார். அப்போது அனுமன், ‘‘தவறு, நான் அசோக வனத்தில் கண்டது, சிவப்பு நிற மலர்கள்’’ என்றார். குரல் கேட்ட திசை நோக்கி துளசிதாசர் திரும்பிப் பார்த்தார். அங்கு அனுமன் நின்று கொண்டிருந்தார். ‘‘நான் அங்கு பார்த்தது சிவப்பு நிறப் பூக்கள். நீங்கள் வெள்ளை நிறப் பூக்கள் என்று சொல்கிறீர்களே, இது தவறு!’’ என்று அனுமன் மீண்டும் கூறவே, துளசிதாசர் இந்த விவகாரத்தை ஸ்ரீராமரிடம் எடுத்துச் சென்றார்.

‘‘அனுமா, துளசிதாசர் சொல்வதும் உண்மை. நீ சொல்வதும் உண்மை. நீ கோபத்தில் இருந்ததால் உன் கண்கள் சிவந்திருந்தன. அதனால் வெள்ளை நிறப் பூக்கள் சிவப்பாகக் காட்சி தந்தன’’ என்று ராமபிரான் விளக்கினார்.

‘நாம் எந்த நோக்கில் பார்க்கிறோமோ, அதுவே காட்சியில் நமக்குத் தோன்றும்’ என்பது இதன் கருத்து என்பர்.

- ராதாபரிமளம், திருச்சி-21