தொடர்கள்
விழாக்கள் / விசேஷங்கள்
Published:Updated:

‘வள்ளலார் மகிமை’

‘வள்ளலார் மகிமை’
பிரீமியம் ஸ்டோரி
News
‘வள்ளலார் மகிமை’

‘வள்ளலார் மகிமை’

‘வள்ளலார் மகிமை’

வாழையடி வாழையாய்...

தை
ப்பூசத் திருநாளில் அருட்பெருஞ் சோதியில் ஐக்கியமான ராமலிங்க அடிகளார், தன்னை யார் என்று அறிமுகம் செய்துகொள்கிறார் தெரியுமா?

‘வாழையடி வாழை என வந்த திருக்கூட்ட மரபினில் யானும் ஒருவன்’ என்கிறார். ஞான பரம்பரைக்கு வாழை மரம்தான் ஏற்ற உவமை. ஆலமரம், அரசமரம், புளியமரம் எல்லாம் வளர்ந்து அதனதன் வாழ்வு முடியும்போது, ஒரு வாரிசை விட்டுச் செல்வதில்லை. ஆனால், தாய் வாழை சாயும்போது, தன் சேய்வாழையைத் தோற்றுவிக்கிறது. அதேபோல், சங்கிலித் தொடர்பு அற்றுப்போகாமல் ஞான பரம்பரை தோன்றி நலம் புரிகிறது.

‘வள்ளலார் மகிமை’

ஒரு வாழையின் அடியில் இன்னும் சில வாழைக் கன்றுகள் தோன்றுவது, திருவடி சம்பந்தமாக மகான்கள் வருவதைக் குறிக்கும். நூறு சதவிகிதம் முழுமையாகப் பயன்படும் வாழைமரம், ஞானி என்பவன் மனித குலத்துக்குத் தன்னை மொத்தமாக அர்ப்பணிக்கவேண்டும் என்பதை உணர்த்தும்.

வீடுகளில் கட்டப்பட்டிருக்கும் வாழைமரம், மங்கல விழா நடைபெறுவதைக் காட்டுவது போல், ஞானிகளின் வருகையே மங்கலம்தான் என்பதையும் அடிகளாரின் உவமை அற்புதமாக விளக்குகிறது!

இறைவனை ‘நிழல் கனிந்த கனியே!’ என்று பாடுகிறார் வள்ளலார். அதற்கு என்ன பொருள்? ‘நிழலிலேயே பழுத்த பழம்’ என்று நினைக்கிறீர்களா?!

காயைப் பழுக்கவைக்கும் முறை பல உண்டு. வைக்கோலை ஓர் அறையில் நிரப்பி, அதில் முதிர்ந்த காய்களைப் பரப்பி வைப்பது; தீ மூட்டி அச்சூட்டில் பழுக்க வைப்பது;  வெயில் படும்படி வைத்துப் பழமாக்குவது, மூட்டைக்குள் போட்டு மூச்சுத் திணற வைத்து முற்றாகக் கனிய வைப்பது என காயைக் கனியவைக்கப் பல வழிகள் உண்டு.

இப்படித்தான் கடவுளைக் காணும் வழிமுறை களும். மூச்சை அடக்கியும், கால் மடக்கியும், சாதனைகள் செய்தும், சமாதி நிலையில் இருந்தும் கடவுளைக் காணும் இந்த வழிமுறைகள்... வலிய முறைகள்! ஆனால், எளிய முறை ஒன்றுண்டு. அது, அனைத்துயிர்க்கும் அன்பு செய்து ஆண்டவன் அருள் பெறுவது. அதைத்தான் ‘நிழல் கனிந்த கனி’ என அற்புதச் சொற்பதங்களால் ஆராதிக்கிறார் அருட்பிரகாசர்!

திருடனுக்கும் அருள்செய்தவர்


டலூரை அடுத்த குள்ளஞ்சாவடி எனும் இடத்தில் தங்கியிருந்தார் சுவாமிகள். உடன் இருந்த காவல்துறை அன்பர் ஒருவர், அவருக்கு புதிய ஆடை ஒன்றை வழங்கினார்.

அன்று இரவு, அந்த ஆடையைப் போர்த்தியபடி படுத்திருந்தார் வள்ளலார். எல்லோரும் நன்றாகத் தூங்கிய வேளையில், அங்கே வந்தான் திருடன் ஒருவன். வள்ளலார் போர்த்தியிருந்த புத்தாடையை அபகரிக்க முயன்றான். சட்டென்று விழித்துக் கொண்ட காவல்துறை அன்பர், அவனைப் பிடித்துவிட்டார்.

ஆனால் வள்ளலார், ‘`பாவம்... ஏழை போல. இல்லாததால்தானே திருடுகிறான். இருப்பவர்கள், இல்லாதவர்களுக்கு கொடுப்பதுதானே முறை’' என்று காவல்துறை அன்பரிடம் சொன்னதுடன், அவனுக்கு அந்தப் புத்தாடையைத் தந்து உதவினார்.
அதேநேரம், அவனிடமும் ‘`திருடுவது பாவத்தைத் தரும்; உழைத்துப் பிழை’’ என்று அறிவுரை கூறி வழியனுப்பினார் வள்ளலார்.

மழை கொடுத்த மேகம்!

டலூர் அருகில் உள்ள புதுப்பேட்டை கிராமத்தில் திடீரென தண்ணீர் பஞ்சம். எங்கும் வறட்சி... மரம், செடி-கொடிகள் அனைத்தும் நாசமாயின. கால்நடைகளும் துன்புற்றன. கலங்கிக் கதறிய மக்கள், வள்ளலாரிடம் வந்து முறையிட்டனர். மனம் பதைத்த வள்ளலார், அவர்களின் ஊருக்குச் சென்றார். ஆறு குடம் தண்ணீரை எடுத்து தனது தலையில் ஊற்றச் சொன்னார்.

எங்கெல்லாமோ அலைந்து திரிந்து ஆறு குடங்களில் நீரைக் கொண்டு வந்து, அப்படியே செய்தனர். அவ்வளவுதான்... சிறிது நேரத்தில் கருமேகங்கள் திரண்டன; பெருமழை பெய்து, நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. மக்கள் மகிழ்ந்தனர்.

பசிப்பிணி நீங்குக!

ள்ளலாரின் மீது அன்பு கொண்டவர்களுள் வேங்கடசுப்பய்யர் என்பவரும் ஒருவர். மஞ்சக்குப்பம் பகுதி தாசில்தாராகப் பணிபுரிந்த வேங்கடசுப்பய்யர் வெளியில் வரும் போதெல்லாம், இவரது வருகையைத் தெரிவிக்கும் விதமாக பணியாள் ஒருவன் கொம்பு ஊதிய படியே முன்னே செல்வான்.

ஒருநாள், வள்ளலாரின் சொற்பொழிவைக் கேட்க வந்திருந்தார் தாசில்தார். வழக்கம் போல், அவருக்கு முன்னே கொம்பு ஊதியபடி வந்த பணியாள், வியர்த்துக் களைத்து மயங்கும் நிலையில் இருந்தான். இதைக் கண்ட வள்ளலார் மிகவும் வருந்தினார். தாசில்தாரை அழைத்தவர், ஜீவகாருண்யத்தைப் பற்றி அறிவுறுத்தி, பணியாளை கருணையுடன் நடத்தவேண்டும் என்றும், அவனை இவ்வாறு ஓடச் செய்து துன்புறுத்தக் கூடாது என்றும் அன்புடன் கேட்டுக் கொண்டார். மனம் வருந்திய தாசில்தார், அதுமுதல் பணியாளை அன்புடன் நடத்தினாராம்!

வீடுதோறிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் என்றெல்லாம் ஏழைகள் படும் துன்பங்கள் கண்டு மனம் வருந்தினார் வள்ளலார். எல்லா தானங்களிலும் அன்ன தானமே உயர்ந்தது என்று அறிவித்து, வடலூரில் சத்திய தருமச்சாலை அமைத்து ஏழைகளின் பசித் துயரைப் போக்கினார். அவர் அன்று ஏற்றிய அன்னதான அடுப்பு இன்றும் எரிந்து, அடியவர்களின் பசிப்பிணியை நீக்கிக் கொண்டிருக்கிறது.

அருட்பெருஞ் ஜோதி; அருட்பெருஞ் ஜோதி;
தனிப்பெருங் கருணை; அருட்பெருஞ் ஜோதி!

- பா.சு.ரமணன்