மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 20 - மழையேறி வந்தாள்...

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 20 - மழையேறி வந்தாள்...
பிரீமியம் ஸ்டோரி
News
மண்... மக்கள்... தெய்வங்கள்! - 20 - மழையேறி வந்தாள்...

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 20 - மழையேறி வந்தாள்...

கிராமக் கோயில்களில் இருக்கும் இறைச்சுதைகள் மிகவும் உயிர்ப்பானவை. எளிமையின் வடிவான அந்தச் சிலைகளில் உறைந்திருக்கும் ஆன்மா, அந்த ஊரைச் சுற்றிலும் ஒரு மெல்லிய இழையாகச் சூழ்ந்திருக்கிறது. 

மரம், செடி, கம்பம், பாறைகளைத் தெய்வமாக வணங்கிய பழங்குடி மக்களின் நீட்சி, சுதைப் படிமங்களில் நிலைகொண்டது. கிராமங்களில் இருக்கும் மண்பாண்டக் கலைஞர்கள் தங்கள் கரங்களால் உருக்கொடுக்கும் சிற்பங்களில் மூத்தோனின் ஆன்மா உறைகிறது. மக்களின் வேண்டுதல்களும் வழிபாடுகளும் அச்சுதைக்குச் சக்தி கொடுக்கின்றன.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 20 - மழையேறி வந்தாள்...

இப்படி, கிராமக் கோயில்களில் மண் சுதைகளே தெய்வ உருவாக வைக்கப்படுவதன் பின்னால் ஒரு மரபு இருக்கிறது. கல்லில் சிலை வடிக்க அதிகப் பொருள்செலவாகும். வேளாண்மையையும் கிராமியத் தொழில்களையும் நம்பி வாழ்ந்து வரும் மக்களுக்கு, அந்தப் பொருள்செலவு கூடுதல் சுமை. தவிர, கற்சிலை வடிக்கும் சிற்பிகள் பெரு நகரங்களில் வசிப்பார்கள். அங்கிருந்து சிலை செய்து கிராமத்துக்கு எடுத்து வருவதும் பெரும் வேலை.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 20 - மழையேறி வந்தாள்...அந்தக் கிராமத்திலேயே வசிக்கிற மண்பாண்டக் கலைஞர், அந்த கிராமத்து மண்ணெடுத்து, அந்த மனிதர்களின் முகச்சாயலில் உருக்கொடுத்து உருவாக்கும் சிற்பத்தில்தான் அந்தக் கிராமத்தின் காவல் தெய்வம் விருப்பதோடு உறைகிறது. மண்பாண்டக் கலைஞர்களுக்கு வாழ்வளிக்கவும் தங்கள் மூத்தோன் உறைந்திருக்கும் ஆலயத்தைப் பொலிவாக்கவும் ஆண்டுக்கொரு முறை மக்கள் `குதிரையெடுப்பு’ என்ற பெயரில் பழைய சிலைகளை மாற்றி புதிய சிலைகளைச் செய்து வைக்கிறார்கள்.

சில தெய்வங்கள் மட்டும் உருவிலேயே அழுத்த மான ஒரு கதையைச் சுமந்துகொண்டிருக்கின்றன. வேளாண் வேலைகளுக்கு மண் தோண்டும் போதோ, ஆற்றுப்படுகைகளில் மீன் பிடிக்கும்போதோ பார்வைக்குத் தட்டுப்படும் சிலைகள், அந்த கிராமத்தின் வேரைச் சுமந்துகொண்டிருக்கும். பிற்காலத்தில் அதுவே, காவல் தெய்வமாக மாறி நன்மை, தீமைகளைத் தீர்மானிக்கும்.

அது ஒரு வேளாண் பூமி. கடுமையான வெயில் காலம். அம்மை நோய் அந்தக் கிராமத்தையே சூழ்ந்து வதைத்துக்கொண்டிருந்தது. குடிக்க தண்ணீர் கிடைக்கவில்லை. நோயின் வெம்மையால் குழந்தைகள் துடித்தன. பயிர், பச்சைகளெல்லாம் வறண்டு கருகிப்போனதால், கால்நடைகளுக்குத் தீனியில்லை; கொத்துக்கொத்தாகச் செத்து மடிந்தன.

``அம்மா... மகமாயி... மழைதெய்வமே! உனக்குப் பொங்கல் வைத்துப் படைக்கக்கூட கைப்பிடி அரிசியில்லை. எங்கள்மீது கருணை காட்டு தாயே... எங்கள் மனதையும் நிலத்தையும் குளிர்வித்து, எங்கள் குழந்தை குட்டிகளையும் உயிரென வளர்க்கும் கால்நடைகளையும் காப்பாற்று” என்று மக்களெல்லாம் நாளொரு பொழுதாக வேண்டிக் கொண்டிருந்தார்கள்.

மெள்ள வான் இருட்டியது. காற்றில் மெல்லிய ஈரம் சுரந்தது. வெம்மை தணிந்து, மெல்லிய தூறல்கள் விழுந்தன. மக்கள் முகத்தில் வெளிச்சம். வாழ்க்கையின் மீது நம்பிக்கை துளிர்த்தது.

ஆனால், அடர் மழை நாலைந்து நாள்களாக இடைவிடாமல் கொட்டிக்கொண்டிருந்தது. சின்னதொரு துளி பூமியில் விழாதா என்று காத்துக்கொண்டிருந்த மக்கள், `இந்த வானம் பொய்த்துப் போகாதா, மழை நிற்காதா’ என்று வேண்டத் தொடங்கினார்கள்.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 20 - மழையேறி வந்தாள்...

``அம்மா தாயே... கேட்டதற்கு அதிகமாய் அள்ளிக்கொடுக்கிறாயே... அடித்து வெளுக்கிற மழை எங்கள் இயல்பையெல்லாம் பறித்துக் கொண்டிருக்கிறது... காப்பாற்று” என்று அபலைக் குரல் எழுப்பினார்கள்.

மழை நின்றபாடில்லை. மெள்ள மெள்ள வீடுகளில் ஏறியது மழைநீர். வலைபோல ஊரை வளைத்து நின்றது வெள்ளம். மக்கள் மேடான பகுதிகளில் ஏறி நின்றார்கள். அதிலும் ஏற எத்தனித்தது தண்ணீர். குழந்தைகளையெல்லாம் அணைத்துக்கொண்டு, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அந்தத் திட்டில் ஏறி நின்றார்கள் மக்கள். நல்ல இருள். கண்பட்ட இடமெல்லாம் தண்ணீர்.

திடீரென அந்த தண்ணீருக்குள் வெள்ளி முளைத்ததைப் போன்று பளீரென அடித்தது வெளிச்சம். மக்கள் அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாக அந்தக் காட்சியைப் பார்த்தார்கள். வெள்ளத்துக்கு நடுவில் பிரகாசித்த அந்த ஒளி மெள்ள மெள்ள மக்களை நோக்கி நகர்ந்து வந்தது. சில இளைஞர்கள் தைரியமாக தண்ணீருக்குள் இறங்கினர். ஒளி வந்த திசை நோக்கி நீந்திச் சென்றனர். பிரகாசித்த பொருளை எடுக்க முயற்சி செய்தனர். வேறு சிலரும் உதவிக்கு வர, அந்தப் பொருளை மேட்டுக்குக் கொண்டு வந்தார்கள். அது ஓர் அம்மன் கற்சிலை.

மக்கள் பக்தியுடன் வழிபட்டார்கள். சில மணி நேரங்களில் மழையின் வேகம் குறைந்தது.  வெள்ளம் படிப்படியாக வடியத் தொடங்கியது. அம்மன் கிராமத்தின் காவல் தெய்வமாகிப் போனாள். மழையேறி வந்ததால் `மழையேறி அம்மன்’ என்று இந்த அன்னைக்குப் பெயர். பிற்காலத்தில் `மழை’,  `மலை’யாகத் திரிந்துவிட்டது.

இன்றைக்கும் இந்த அம்மனுக்கு, அவள் சிலையாய்க் கிடைத்த மணற்திட்டோடு தொடர்புச் சடங்குகள் இருக்கின்றன. திருவிழாக் காலத்தில் அம்மனை அலங்கரித்து பிறந்த வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

அம்மன் சிலை எந்த இடத்தில் கிடைத்ததோ அதுதான் பிறந்த வீடு. இப்போது, அந்தத் திட்டு குடியிருப்பாகிவிட்டது. அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் வெற்றிலை - பாக்கு வைத்து தங்கள் மகளை வரவேற்கிறார்கள். ஒருநாள் முழுவதும் அந்த இடத் தில் இருக்கிற அம்மன், மறுநாள் தன் இல்லம் செல்கிறாள்.

இப்படியான சுவாரஸ்ய சடங்குகளும், நம்பிக்கைகளும், கொண்டாட்டங்களும்தான் கிராமத்து வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குகின்றன. தங்களைக் காப்பாற்ற தங்கள் தெய்வம் இருக்கிறது என்ற நம்பிக்கை மக்களின் துயரங்களைக் கடக்கும் துடுப்பாக இருக்கிறது.

- மண் மணக்கும்...

  வெ.நீலகண்டன் - படங்கள்: ம.அரவிந்தன்