Published:Updated:

தைப்பூச தரிசனம்!: சித்தர்கள் வழிபட்ட தோரணமலையான்!

தைப்பூச தரிசனம்!: சித்தர்கள் வழிபட்ட தோரணமலையான்!
பிரீமியம் ஸ்டோரி
தைப்பூச தரிசனம்!: சித்தர்கள் வழிபட்ட தோரணமலையான்!

கடையம் பாலன் - படங்கள்: எல்.ராஜேந்திரன்

தைப்பூச தரிசனம்!: சித்தர்கள் வழிபட்ட தோரணமலையான்!

கடையம் பாலன் - படங்கள்: எல்.ராஜேந்திரன்

Published:Updated:
தைப்பூச தரிசனம்!: சித்தர்கள் வழிபட்ட தோரணமலையான்!
பிரீமியம் ஸ்டோரி
தைப்பூச தரிசனம்!: சித்தர்கள் வழிபட்ட தோரணமலையான்!
தைப்பூச தரிசனம்!: சித்தர்கள் வழிபட்ட தோரணமலையான்!

திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே... மேற்குமலைத்தொடரின், ஒரு சிதறலாகத் திகழ்கிறது தோரணமலை. முருகன் குடிகொண்டிருக்க, அவனது அருள்சாந்நித்தியம் தழைத்தோங்கித் திகழும் இந்த மலைப்பகுதியே, ஒரு காலத்தில் பட்டங்கள் வழங்கும் பாடசாலையாக விளங்கியது என்கிறார் சித்தர் ஆராய்ச்சியாளர் காமராஜ்.

‘‘கயிலாய பர்வதத்தில் நடைபெற்ற சிவனாரின் திருக்கல்யாணத்தின் போது, வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது அல்லவா? அப்போது,  ஈசனின் ஆணைக்கிணங்க, உலகைச் சமன் செய்யும்பொருட்டு அகத்தியர் தென்திசை வந்ததும், உலகம் சமநிலை பெற்றதும், தொடர்ந்து முருகனருளால் அவர் இலக்கணம் சமைத்ததும் நாமறிவோம். அதன்பிறகு, அகத்தியர் உலக மக்கள் நோயின்றி வாழவேண்டும் எனும் நோக்கில், மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

மருத்துவம் என்றால், இப்போது உள்ளது போன்று உடற்கூறுகளையும் அதற்கான மருந்துகளையும் மட்டுமே அடிப்படையாகக்கொண்டதல்ல.இந்த மண்ணிலிருந்து விண் வரையிலும் உலக இயக்கம் குறித்த ஒட்டுமொத்த ஞானத்தோடு தேர்ச்சி அடைந்தால்தான், ஒருவர் முழு வைத்தியன் ஆகமுடியும். இதற்காக அகத்தியர் 1,24,000 கிரந்தங்களை வகுத்தாராம். தான் கண்டறிந்த சித்த மருத்துவக் குறிப்புகளைக் கொண்டு `அகத்திய வைத்திய சேகரம்’ என்ற நூலையும் அருளினார்.

தைப்பூச தரிசனம்!: சித்தர்கள் வழிபட்ட தோரணமலையான்!தம் சீடர்களை வானவியல், வேதியல், மண்ணியல், கணிதவியல், மருத்துவம் என வெவ்வேறு துறையை பற்றி ஆராய்ச்சி செய்யப் பணித்தார். அந்த ஆராய்ச்சிகளின்படியே பாடத்திட்டங்களை வகுத்தார். அவற்றில் முதன்மையானது தமிழ் இலக்கிய - இலக்கணம் கற்பதே.

தொடர்ந்து பீச கணிதம், மருத்துவ ஆய்வு வகைகள், வான சாஸ்திரம், இருநிலை பிரிவாகம், மலை வாசகம், மூலிகை வாடகம், பாடான வாகடம், மூலிகை மூலாதரத்துவம், ரசாயன ஆய்வு மற்றும் அதற்கான அனுபவ பயிற்சி என நீள்கிறது அகத்தியர் வகுத்த பாடத்திட்டங்கள். மேலும் சிறப்பு மருத்துவமாக கிருமிநாசினி, நச்சு அகற்றும் முறை, மழலையர் மருத்துவம், ரணவாடகம், உடல் தத்துவம், நார், தசை, தந்தம், குருதி ஆகியவற்றின் ஆய்வு, கபாலம் பற்றிய ஆய்வு, நேந்திரம், நாசி, செவி, கண்டம், சருமநிலை குறித்த படிப்புகளும் உண்டு. இவைமட்டுமின்றி, ஆறு ஆதார நிலைகளை அறிதல் பற்றிய கலைகளும் கற்றுகொடுக்கப்பட்டன’’ என்கிறார் காமராஜ்.

தைப்பூச தரிசனம்!: சித்தர்கள் வழிபட்ட தோரணமலையான்!

இப்படி, முழுமையான பாடத்திட்டம் வகுத்தப் பின்னர் அகத்தியர் தோரணமலை பகுதியில் பாட சாலையை தொடங்கினாராம். இந்தப் பாட சாலையில் ஆறு ஆறு ஆண்டுகளாகப் பாடங்கள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு கல்விப் பருவத்துக்கும் தனித்தனியே பட்டங்கள் வழங்கப்பட்டன.  சீனா உள்பட உலகின் பல நாடுகளிலிருந்தும் ஞானிகள் பலர் இங்கு வந்து பயின்றனராம்.

இந்தப் பாடசாலையைத் தொடர்ந்து திருவாலங் காடு, சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய பகுதிகளிலும் பள்ளிகள் திறக்கப்பட்டன. அங்கு பயின்றவர்கள் மூலம் நம் தேசத்திலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பாடசாலைகளின் கிளைகள் உருவாக்கப் பட்டன. அவற்றில் இலஞ்சி, மருதமலை, ஆவினன்குடி(பழநி), கொள்ளி மலை, சித்தர்குகை, அவன் அவளாய் நின்ற மலை ஆகியவை முக்கியமானவை. இதை விளக்கும் பாடல் ஒன்று...

`தோரணகிரி பயிற்சி முகாம் தன்னில்
தொடர்துவாய் ஆங்காங்கே
அவைசார்பாக கூடமெனும்
கனகஅவை தில்லையாக, ரசித அவை
கயல்விழி எல்லை ஒட்டி
தாம்பர அவை காந்திமதி எல்லை
இரத்தின அவை என திருஆலங்காடு
சித்திர அவை கூடமெனு அசலம்சார்
குன்று ஒட்டி வரிசையதாய் கிளை
பலவும் தோரணகிரி இலஞ்சி ஒட்டி
அசலம்சார் குன்றுதனில்
மருதமலை, ஆவினன்குடி, சித்தர்குகை...

- என நீள்கிறது. இந்தக் காலக்கட்டத்தில்தான், மன்னன் காசிவர்மனுக்குத் தீராத தலைவலியை நீக்கும் பொருட்டு கபால அறுவை சிகிச்சை செய்தார் அகத்தியர். அப்போது அவருக்கு உதவிகரமாக இருந்த சீடர் தேரையர்.அவரும் தோரணமலையில் தங்கியிருந்து மூலிகைகள் மூலம் மருத்துவ சேவை செய்து வந்தார். அப்போது, அகத்தியரும் தேரையரும் தோரண மலையில் முருகனை சிலை வைத்து வழிபட்டு வந்தார்கள். தேரையர் இங்கேயே சமாதி நிலையை அடைந்தார். காலப்போக்கில் வழிபாடு நின்றுபோனதுடன், முருகன் சிலையும் காணாமல் போனது.

காலங்கள் உருண்டன. அன்பர் ஒருவரது கனவில் தோன்றிய முருகக்கடவுள், தோரணமலையில் தான் இருப்பதாகவும், அங்கேயுள்ள சுனையில் மறைந்துகிடக்கும் சிலையை வெளியே எடுத்து உச்சியிலுள்ள குகைக்குள் நிறுவி வழிபடும்படியும் ஆணையிட்டாராம். அதன்படியே,   சுனையிலிருந்த முருகப்பெருமான் சிலையை எடுத்து குகைக்குள் எழுந்தருளச் செய்தார் அந்த அன்பர். தற்போது நாம் வணங்கும் குகைக் கோயிலின் திருக்கதை இதுதான். குற்றாலத்துக்கு அருகில் இருக்கும் தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது தோரணமலை. இதன் உச்சியில் மட்டுமல்ல, அடிவாரத்திலும் முருகன் கோயில்கொண்டிருக்கிறான்.

அடிவாரத்தில் கோயிலுக்கான நுழைவாயில் போன்று அழகிய தோரண வளைவு நம்மை வரவேற்க, சுற்றிச் சூழ்ந்த மலைச் சிகரங்களும், முகம் தழுவிச் செல்லும் பொதிகைத் தென்றலும் நம் அகத்தை மகிழ்விக்கின்றன. மலை அடிவாரத்தில் இருக்கும் கோயிலில் ஸ்ரீ வல்லப விநாயகர், நவகிரக சந்நிதி, தனிச் சந்நிதியில் அருளும் ஸ்ரீ குருபகவான்,ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ சரஸ்வதி, சப்த கன்னிமார்கள், ஸ்ரீ கன்னிமாரம்மன், நாகர்கள் ஆகியோரைத் தரிசிக்கலாம். மேலும், ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் சிவபெருமானின் சுதைச் சிற்பங்களையும் காணலாம்.

தைப்பூச தரிசனம்!: சித்தர்கள் வழிபட்ட தோரணமலையான்!

அடிவாரத்தில் இருந்து 926 படிகள் ஏறிச் சென்றால், உச்சியில் உள்ள குகைக்கோயிலை அடையலாம். மேலே குகைக்கோயிலில் கிழக்கு நோக்கி அருள்கிறார் தோரணமலை முருகன். இங்கு வந்து இந்த அழகனை மனதாரப் பிரார்த்தித்து வழிபட்டால், தடைப்பட்ட மற்றும் தள்ளிப் போகும் திருமணங்கள் நடக்கும்; புத்திரபாக்கியம், வேலை, மன நிம்மதி ஆகியன கிடைக்கும் என்பது பல பக்தர்கள் தங்கள் வாழ்வில் அனுபவித்துள்ள பிரத்யட்சமான உண்மை.

இக்கோயிலின் பரம்பரை அறங்காவலர் கே.ஆதிநாராயணன். முருகப்பெருமான் கனவில் தோன்றி தமக்கு இட்ட ஆணையை நிறைவேற்றிய அன்பரைப் பற்றி பார்த்தோம் அல்லவா? அவரின் வம்சத்தில் வந்தவர். இவரின் தீவிர முயற்சியின் காரணமாக பக்தர்களின் பங்களிப்போடு மெள்ள மெள்ள படிக்கட்டுப் பாதை உருவானது.  இந்த நிலையில், தோரணமலை முருகனின் தீவிர பக்தரும் மருத்துவருமான ஆவுடையானூர் சி.தர்மராஜ் முயற்சியில் படிக்கட்டு பணிகள் பல முழுமை அடைந்தன; லட்சுமி தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடுவதற்கான வசதிகளையும் ஏற்படுத்தினார்.

தற்போதும், இந்தத் திருக்கோயிலுக்கான புதிய திருப்பணிகள் தொடங்கப்படவுள்ளன. பணி நிறைவடைய நாமும் தோள்கொடுப்போம்; நம்மால் இயன்ற பொருளுதவிகளைச் செய்து முருகனின் திருவருளைப் பெறுவோம்.

இதோ, தைப்பூசப் பெருவிழாவுக்குத் தயாராகிறது தோரணமலையானின் ஆலயம். வரும் 20.1.19 மற்றும் 21.1.19 ஆகிய இரண்டு நாள்கள்... திருவீதியுலா, விவசாயம் செழிக்க அகத்தியர் பூஜை, முருகன் திருக்கல்யாணம் ஆகிய வைபவங்களோடு களைகட்டப்போகும் விழாவில் நீங்களும் கலந்துகொண்டு வழிபட்டு வாருங்கள். முருகனின் பேரருளோடு, அகத்தியர் மற்றும் தேரையர் ஆகிய சித்தபுருஷர்களின் திருவருளும் சேர்ந்து உங்கள் வாழ்வில் சகல சுபிட்சங்களையும் உண்டாக்கட்டும்!

உங்கள் கவனத்துக்கு...

ஸ்வாமி: அருள்மிகு தோரணமலை முருகன்

தலம்: தோரண மலை

தலச் சிறப்பு: அகத்தியர் மருத்துவச்சாலை நிறுவி பணிசெய்த தலம். அவரின் சீடர் தேரையர் ஜீவசமாதி அடைந்ததும் இங்குதான் என்கின்றன சில நூல்குறிப்புகள்.

எப்படிச் செல்வது?:
திருநெல்வேலி மாவட்டம், தென்காசியிலிருந்து கடையம் செல்லும் பேருந்தில் ஏறி, மாதாப்பட்டினம் விலக்கில் இறங்க வேண்டும். அந்த இடத்திலிருந்து தோரணமலைக்குச் மினி பஸ்கள் செல்கின்றன. ஆட்டோ வசதியும் உண்டு.

மலைக்குமேலுள்ள குகைக்கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டு பாதையில் சிறுவர்களையும் முதியவர்களையும் அழைத்துச்செல்லும்போது, மிகுந்த கவனம் தேவை. மலையேற முடியாத அன்பர்களுக்கு அருள்பாலிக்கும் விதமாக, மலைப்படிகள் தொடங்கும் இடத்திலேயே ஸ்ரீபாலமுருகன் எழுந்தருளியிருக்கிறார்.

தொடர்புக்கு: செண்பகராமன் (9965762002)