Published:Updated:

"நீ கோயிலுக்கு நெறையச் செய்யணும்!"

"நீ கோயிலுக்கு நெறையச் செய்யணும்!"

தென் மாவட்டங்களில் புகழ்வாய்ந்த  அய்யனார் கோயில்களில் தூத்துக்குடி மாவட்டம் காயாமொழிக்கு அருகே உள்ள தேரிக் குடியிருப்பு ஸ்ரீகற்குவேல் அய்யனார் திருக்கோயிலும் ஒன்று. 'தாமிரபரணி’, 'ஐயா’, 'வில்லு’, 'சிங்கம்’ எனப் பல திரைப் படங்களின் படப்பிடிப்பு இங்கு நடைபெற்று இருக்கிறது. கார்த்திகை மாதம் இங்கு நடைபெறும் கள்ளர்வெட்டு திருவிழா மிகவும் பிரபலமானது.

"நீ கோயிலுக்கு நெறையச் செய்யணும்!"
##~##

''அந்தக் காலத்துல பக்தர்கள்கிட்ட இருந்த பொருட்களை ஒருத்தன் தொடர்ந்து திருடிட்டே இருந்திருக்கான். பக்தர்கள் கற்குவேல் அய்யனார் கிட்ட முறையிட்டு இருக்காங்க. சாமி அந்தத் திருடனைப் பிடிச்சு தேரியில் வெச்சு மரண தண்டனை கொடுத்ததாம். உடனே, திருடனோட தாய் சாமிகிட்ட வந்து, 'என் மகன் செஞ்ச சின்ன தப்புக்கு இவ்ளோ பெரிய தண்டனையா? அவன் மேல இரக்கம் காட்டு’னு மன்றாடி இருக்காங்க. உடனே சாமி ஒரு இடத்தைச் சொல்லி, 'அவன் அங்கே இறந்துகிடக்குறான். தண்ணியைத் தெளிச்சுப் பிரம்பால் ரெண்டு அடி அடிச்சா, அவன் உயிரோடு வருவான்’னு பூசாரி மூலமா அருள்வாக்கு சொல்லியிருக்கு. திருடனும் உயிர் பிழைச்சுத் தன் தப்பை உணர்ந்து திருந்தியிருக்கான். அதன் நினைவா இப்பவும் வருஷா வருஷம் கார்த்திகை ஒண்ணாம் தேதி தொடங்கி, கார்த்திகை முப்பது வரைக்கும் இந்த கள்ளர்வெட்டு நடக்கும். ஒண்ணாம் தேதி யில் இருந்து தினமும் அய்யனார் கதையை வில்லுப் பாட்டாப் பாடுவோம். கார்த்திகை 30-வது நாள் தாமிரபரணி ஆத்துல தண்ணி எடுத்துட்டு வந்து சாமிக்குச் சிறப்பு அபிஷேகம் பண்ணுவோம். அப்புறம் ஒரு கயிற்றைத் திருடனோட உடம்பாவும், இளநீரைத் தலை யாவும் பாவிச்சு, ரெண்டையும் எடுத்துட்டு  கோயிலுக்குக் கிழக்குப் பக்கம் திருடப்போறது மாதிரி போவோம். அப்புறம் கோயிலுக்கு மேற்கே தேரியில் அந்தக் கயிற்றை கீழே படுக்க வெச்சு இளநியை மேல வைப்போம்.  கோயில்ல இருந்து ஒருத்தர் சாமி அருவாளோட ஆடிட்டே  வந்து இளநியை வெட்டுவார். அந்த இளநியோட தண்ணீர் படுற இடம் புனிதமானதுங்கிறது எங்களோட நம்பிக்கை. அதை வீட்டுக்கு எடுத் துட்டுப் போய் வழிபடுவோம்'' என்று கள்ளர்வெட்டுபற்றி நம்மிடம் கூறினார் கோயில் பூசாரி மெய்கண்ட முத்து.

"நீ கோயிலுக்கு நெறையச் செய்யணும்!"

கள்ளர்வெட்டு நிகழ்ச்சிக்கு வந்த எம்.ஜி.சங்கரலிங்கம் என்ற பக்தரிடம் பேசினோம். ''நான் 1977-ல் குடும்பத்தோடு கோயிலுக்கு வந்தேன். யதார்த்தமா ஒருத்தர் என் கையைப் பிடிச்சி இழுத்து கோயிலுக்குள்ளே கூட்டிட்டுப் போனார். கை நிறைய திருநீறு கொடுத்து, 'நீ கோயிலுக்கு நெறைய செய்யணும்’னு சொன்னார். எனக்கு ஒண்ணுமே புரியலை. அய்யனாரைக் கும்பிட்டுட்டு சூடம் விற்க ஆரம்பிச்சேன். இன்னைக்கு விருதுநகர்ல நான் ஒரு பெரிய சூட வியாபாரி. நன்றி மறக்கக் கூடாதுல்ல? அப்போ இருந்து இப்போ வரைக்கும் ஒவ்வொரு வருஷமும் விரதம் இருந்து இந்த கள்ளர்வெட்டு நிகழ்ச்சிக்கு வர்றேன். கோயிலுக்கு வெள்ளிப் பொருட்கள், கழிப்பிட வசதினு என்னால முடிஞ்ச அளவுக்கு  செஞ்சிருக்கேன். இனியும் நிறையச் செய்வேன். இந்தப் புனித மண்ணை எடுத்துட்டுப் போய் கல்லாப் பெட்டியில வெச்சா வியாபாரம் பெருகும்; தொழில் விருத்தி ஆகும். ஆனா மது, மாது, சூது எதுவும் இல்லாம வந்து அய்யனாரை வழிபடணும்!'' என்கிறார் சங்கரலிங்கம்.

"நீ கோயிலுக்கு நெறையச் செய்யணும்!"

- ஆ.கோமதி நாயகம்
படங்கள்: ஏ.சிதம்பரம்

அடுத்த கட்டுரைக்கு