மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அன்பே தவம் - 12

அன்பே தவம் - 12
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பே தவம் - 12

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்படம்: கே.ராஜசேகரன் - ஓவியம் பாலகிருஷ்ணன்

அன்பே தவம் - 12

மார்கழி மாதம், அதிகாலைப்பொழுதில் பெண்கள் பாவைநோன்பு நோற்பார்கள்.  தங்களுக்கு வாழ்க்கைத்துணைவராக வருபவர் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்வார்கள். மாணிக்கவாசகப் பெருமான், `முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே...’ என்று தொடங்குகிற திருவெம்பாவைப் பாடலில், கரைந்துருகி அதை விவரித்திருக்கிறார். `பழைமைக்குப் பழைமையாக, புதுமைக்குப் புதுமையாக இருப்பவன் இறைவன்.’ 

அன்பே தவம் - 12

நம்மில் பலர் பழைமை என்றால், ஆகாத குப்பைகூளம், தேவையற்றது, புறக்கணிக்கப்படவேண்டியது என்று நினைக்கிறோம். அது, புறந்தள்ளவேண்டியதல்ல; தூக்கி எறியவேண்டியதுமல்ல. விளைநிலங்களில் உழுகிறவர்களைக் கேட்டால், `ஆகாத குப்பைகூளங்கள், சாணங்கள் மட்கி எருவாக மாறி, புதிய பயிரை உற்பத்தி செய்வதற்கு உரமாகப் பயன்படும்’ என்று சொல்வார்கள். ஆக, மட்கிய குப்பைகூளங்கள், எருக்கள் புதிய உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வதற்கு அடித்தளமாகின்றன. எது புதுமை? பழைமையாகிய உரத்தின் துணையோடு வந்த உணவுப்பொருள்கள் புதுமை. பழைமை தாய்; புதுமை, பழைமை ஈன்ற சேய்.

மார்கழி நோன்பிருக்கும் பெண்கள், தங்களுக்கு, இறைமைப்பண்புக்கே இலக்கணமாக இருக்கிற சிவபெருமானின் தொண்டர்கள் கணவராக அமைய வேண்டும் என்று வேண்டுகிறார்கள். அடியார்கள் எப்படிப்பட்டவர்கள்? தலைவன் எப்படியோ, அப்படிச் செயல்படுகிறவர்கள். தலைவன் எப்படிப்பட்டவன்? இன்பதுன்பங்களைக் கடந்தவன்; விருப்புவெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவன்; பிறர்வாழத் தன்னை அர்ப்பணிக்கிறவன். 

அன்பே தவம் - 12`அந்தப் பெண்களின் கனவு நிறைவேறுமா?’ கேள்வி நம்மைத் துளைக்கிறது. ஆனால், வாழ்க்கை என்ற வட்டம் நம்மை எங்கே நகர்த்திக்கொண்டு போகிறது? பழந்தமிழ்ப் பாடல் ஒன்று இதை அருமையாகச் சொல்கிறது. `இல்லென்று இரப்போர்க்கு இயைவது கரத்தல் வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும் பொருளே காதலர் காதல்.’

பழந்தமிழகத்தில் இளைஞர்கள் திரைகடல் ஓடி, திரவியம் தேடினார்கள். எங்கெங்கோ சென்று தேடி வந்த செல்வத்தை இல்லத்தில் குவித்து, உறவுகளும் நட்புகளும் சூழ மகிழ்ந்து சேர்ந்து வாழ்ந்தார்கள். இன்று? மாமனார் வீட்டுச் சீதனத்துக்காக மறுகிக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.

இரண்டு நாட்டு மன்னர்களிடையே சண்டை. ஒரு மன்னன் தோற்றுவிட்டான். வென்றவன், தோற்றவனைச் சிறையிலிருந்து விடுவிக்க ஒரு நிபந்தனை போட்டான். ``நான் மணம் முடிக்கவேண்டிய பெண்ணை மிகவும் நேசிக்கிறேன். அவள், எனக்கு ஒரு நிபந்தனை போட்டாள். அவள் மனத்திலிருக்கிற ஒரு கேள்விக்கு விடை சொன்னால்தான் மாலை சூட்டுவேன் என்றாள். கேள்வி இதுதான், `உலகத்தில் ஒரு பெண் எதை அதிகம் விரும்புகிறாள்?’ அதற்கு எனக்கு விடை கிடைக்கவில்லை. பலரையும் கேட்டேன். கிடைக்கவில்லை. இதற்குச் சரியான பதிலை நீ சொல்லிவிட்டால், உன்னை விடுவித்து, மீண்டும் உன் நாட்டுக்கே உன்னை  மன்னனாக்கிவிடுவேன்.’’

தோற்றவன், விடை தேடினான். கிடைக்கவில்லை. அவன் நண்பனும் அவனுக்காக விடை தேடினான். கிடைக்கவில்லை. கடைசியாக அந்த நண்பன் ஒரு கிழவியைச் சந்தித்தான். அவளிடம், `உலகத்தில் ஒரு பெண் எதை அதிகம் விரும்புகிறாள்’ என்கிற கேள்வியைக் கேட்டான். அவள், ``அந்தக் கேள்விக்கு விடை சொன்னால், நீ எனக்கு என்ன தருவாய்?’’ என்று கேட்டாள்.

``என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்.’’

கிழவி வயதானவள். அவளுக்குக் கோரைப் பற்கள் வேறு. ``நிபந்தனையை மீறக் கூடாது’’ என்றாள்.

அவன் ஒப்புக்கொண்டான். 

அன்பே தவம் - 12

``விடையைச் சொல்கிறேன். அந்த விடை மூலம் உன் நண்பனின் பிரச்னை தீர்ந்த பிறகு, நீ என்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.’’

அவன் யோசித்தான், நண்பனுக்காக ஏற்றுக்கொண்டான்.

``உலகத்தில் ஒரு பெண், தான் சார்ந்த முடிவுகளைத் தானே எடுக்க விரும்புகிறாள். அந்த முடிவுகளில் பிறர் தன் கருத்தைத் திணிப்பதை, தலையிடுவதை அவள் ஒருபோதும் விரும்புவதில்லை. இதுதான் அத்தனை பெண்களின் இயல்பான எண்ணம்.’’

நண்பன் விடையை, தோற்ற மன்னனிடம் சொன்னான். அவன், வென்ற மன்னனிடம் சொன்னான். அவன் அந்த விடையைத் தன் காதலியிடம் கூறினான். காதலி, கல்யாண மாலை சூடிக்கொள்ள ஒப்புக்கொண்டாள்.

நண்பன் பிரச்னை தீர்ந்த பிறகு, கிழவி இருக்குமிடம் போனான். அங்கே கிழவி இல்லை; ஓர் அழகான பேரழகி இருந்தாள். அவன் விசாரிக்க, அவள் சிரித்தபடி, ``நான்தான் அந்தக் கிழவி. ஒரு நாளில் ஒரு பகுதி நேரம் அழகாக இருப்பேன்; மற்றொரு பகுதி நேரம்  கிழவியாக இருப்பேன். இது நான் பெற்ற சாபம். நான் எப்படி இருக்க வேண்டும் என்று நீ சொல். உலகத்துக்குப் பேரழகியாகத் தெரிய வேண்டுமென்றால், உன்னோடு இருக்கும்போது நான் கிழவியாக இருப்பேன்.  உன்னோடு இருக்கும்போது நான் பேரழகியாக இருக்க வேண்டுமென்றால், உலகுக்கு நான் கிழவியாகத் தெரிவேன்’’ என்றாள்.

`` `உலகத்தில் ஒரு பெண், தான் சார்ந்த முடிவுகளைத் தானே எடுக்க விரும்புகிறாள். அந்த முடிவுகளில் பிறர் தன் கருத்தைத் திணிப்பதை, தலையிடுவதை அவள் ஒருபோதும் விரும்புவதில்லை. இதுதான் அத்தனை பெண்களின் இயல்பான எண்ணம்’ என்று நீதானே சொன்னாய். நீயே முடிவெடுத்துக்கொள்’’ என்றான் அவன்.

அன்பே தவம் - 12அவள் சிரித்துக்கொண்டே, ``எப்போதும் பேரழகியாகவே இருக்கிறேன்’’ என்று சொன்னாள்.

இது கற்பனைக் கதைதான் என்றாலும், யதார்த்த வாழ்க்கைக்குத் தேவையானது. போகித் திருநாள் முடிந்துவிட்டது. ஆகாத குப்பைகூளங்களை இல்லத்திலிருந்து தூக்கி எறிந்துவிட்டோம். சில நேரங்களில் மனிதர்களும் தூர எறியப்படுகிறார்கள்; உணர்வுகளும் தூர எறியப்படுகின்றன. அன்பு, குப்பைக்கூடையில் வீசப்படுகிறது. ஆசை, அந்த இடத்தை ஆக்கிரமிக்கிறது. பாசம், எங்கோ வழுக்கி விழுகிறது. கோபம், பாசத்தைப் பொசுக்குகிறது.  பொறாமை, நம்மைச் சிக்கலுக்குள் அழைத்துச் செல்கிறது. ஆக, இந்தக் குப்பைகளை நம் இதயத்திலிருந்து வெளியேற்ற வேண்டும். இதயம் தூய்மையாக இருக்க வேண்டும்.
 
இல்லம் தூய்மையாக இருந்தால் போதுமா? வண்ணம் பூசிய வீடு பொலிவைத் தரும். உயர்ந்த எண்ணங்கள் உடைய இதயம்தான் `வாய்மை’ என்ற புனிதப் பொலிவு பெறும். போகியை முன்னிட்டு, புறம் பேசுவதைப் புறந்தள்ளுவோம். பிறரை நேசிக்கிற அன்பு மனத்தை வளர்த்துக்கொள்வோம். தேவையற்ற ஆசை, பொறாமை, கோபம் முதலியவற்றை இதயத்திலிருந்து அகற்றிவிட்டு, அன்பை, நட்பை, தோழமையை, பாசத்தை, நேசத்தை, மனிதநேயத்தை அமர்த்தி நம் இதயத்தை அழகு செய்வோம்.

தை பிறந்துவிட்டது. இது உழைக்கும் மக்களுக்கான உன்னதத் திருநாள். மனிதர்கள் நம்மை ஏமாற்றுவார்கள். இயற்கை ஒருபோதும் ஏமாற்றாது. மண்ணும் மரங்களும் கால்நடைகளும் நம்மை ஏமாற்றாது.

இதோ பொங்கல் திருநாள்... `பொங்கலோ பொங்கல்’ என்று பொங்கல் பொங்குகிறது. அன்பு பொங்கி வழிகிறது. நமது குன்றக்குடி ஆதீனத்தில் ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொங்கல் திருநாள் அன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குப் பொங்கல் பானைகளை அன்பளிப்பாக வழங்குவது வழக்கம்.  மண் பானை, அரிசி, பருப்பு, வெல்லம், ஏலம், நெய் என்று எல்லாப் பொருள்களும் கரும்பு சூழ, மஞ்சள் கொத்துடன் அன்பர்கள் இல்லம் நோக்கிப் போகும். அந்தப் பட்டியலில் உயர் அலுவலர்கள், செல்வந்தர்கள், கடைக்கோடி உழைக்கும் மக்களும் இருப்பார்கள். சாதி, சமய வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் நம் குன்றக்குடி ஆதீனத் திருமடத்திலிருந்து சமத்துவப் பொங்கல் பானைகள் ஒவ்வோர் இல்லத்தையும் நோக்கிப் போகும். பெரும் செல்வந்தர்கள்கூட நம் பொங்கல் பானையை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்... இது நம் ஆத்மார்த்த அன்புப் பிரசாதம் என்பதற்காக. அதனால்தான், தாய்மார்கள் நம் பொங்கல் பானையைத் தாய்வீட்டுச் சீதனமாகவே கருதுகிறார்கள்.

மாட்டுப் பொங்கல் திருநாளன்று, நம் பண்ணைகளில் வேலை செய்கிற விவசாயப் பெருமக்களோடு தித்திக்கும் பொங்கலிட்டு, நாமும் அவர்களோடு சேர்ந்து உண்கிற மகிழ்ச்சி வேறு எங்கும் கிடைக்காது. மண்ணாலான பானை, மண்ணிலிருந்து தோன்றிய கரும்பு, அந்தக் கரும்பிலிருந்து கிடைக்கிற வெல்லம்... அனைத்தும் ஒன்றுகூடியதுதான் பொங்கல், எல்லாம் மண்ணுக்குள்ளிருந்து தோன்றியவை; எல்லாம் மண்ணுக்குள் போவன. இதுதான் வாழ்க்கைத் தத்துவம். சர்க்கரைப் பொங்கலை உண்ணுகிறபோது சற்று உப்புக் கரிக்கும். ஏன்? பொங்கலில் இருக்கிற உவர்ப்பு, நம் விவசாயி நிலத்திலிட்ட வியர்வைத்துளியோ, கண்ணீர்த்துளியோ என்று எண்ணத் தோன்றும்.

மாட்டுப் பொங்கலன்று, `மஞ்சிவிரட்டு’, `ஜல்லிக்கட்டு’ என்று காளையர்கள் காளைகளை அடக்கத் தயாராகிற வீர விளையாட்டைப் பார்க்கிறோம். அது, தமிழர்கள் பண்பாட்டில் எவ்வளவு உயர்ந்திருக்கிறார்கள் என்பதற்கான அடையாளம்.  முற்காலத்தில் இதில் பங்கேற்று, வெற்றி பெற்றுத்தான் மங்கையர்களை மணம் முடிப்பார்கள் இளைஞர்கள்.

`உழவர் தினம்’ கொண்டாடுகிறோம். உண்மையில் உழவர்களின் வாழ்க்கைநிலை எப்படியிருக்கிறது? ஏழைகளுக்காகக் கனவு கண்ட நேரு, `என் சாம்பலை ஏழை விவசாயிகளின் நிலங்களில் தூவுங்கள்’ என்றார். இன்று, சுதந்திர இந்தியாவில் ஏழை விவசாயிகளின் சாம்பலை நாம் நிலங்களில் தூவிக்கொண்டிருக்கிறோம். கழனிகள் கல்லறைகளாகிவிட்டன. விவசாயிகளின் விளைநிலங்கள் `வீட்டடி மனைகள்’ என்ற கல்லறைகளாக மாறிவருகின்றன. அண்ணாந்து பார்க்கிற மாளிகைகள் ஒருபுறத்தில்; கஜா புயலில் காணாமற்போன குடிசைகள் மறுபுறத்திலிருக்கின்றன. ‘இதுதான் உங்கள் பொன்னுலகமா?’ என்று கஜா புயல் நம்மைப் பார்த்து ஏளனமாகக் கேட்பதுபோல் இருக்கிறது.

இன்றைக்கு ஆன்லைன் வர்த்தகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது.  விவசாயமோ, டெட்லைனில் (Deadline) கீழே கிடக்கிறது. இனிக்கும் கரும்பைப் பயிரிட்டவன், கசந்துபோய்க் கிடக்கிறான். புத்துணர்ச்சி தரும் தேயிலையைப் பயிரிட்டவன், சோர்ந்துபோய்க் கிடக்கிறான். தேங்காயைப் பயிரிட்டவன், தேங்காய்க்குள்ளிருக்கும் தண்ணீரைப்போல் கண்ணீர் சிந்துகிறான். ஏன் இந்த அவலம்?

ஒரு தேநீர்க் கடைக்காரர், தான் தயாரிக்கிற தேநீருக்கு விலையைத் தானே நிர்ணயம் செய்கிறார்.  ஒரு சிற்றுண்டிக் கடைக்காரர், தான் தயாரிக்கிற சிற்றுண்டிகளுக்குத் தானே விலையை நிர்ணயம் செய்கிறார். ரத்தத்தை வியர்வையாக்கி உழைக்கிற எம் விவசாயத் தோழர்கள் மட்டும், தாமே விலையை நிர்ணயம் செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள். உழவன் முதுகில் ஏறி, சவாரி செய்கிறது விவசாயப் பொருளாதாரம். இதிலிருந்து நாம் எப்போது விடுபடுகிறோமோ, அப்போதுதான் உண்மையான தைப்பொங்கல் திருநாளை, மாட்டுப்பொங்கல் திருநாளை நாம் கொண்டாட முடியும். அந்த மகிழ்ச்சித் திருநாளை நாம் வாழ்த்தி வரவேற்போம்!

(புரிவோம்...)   

அன்பே தவம் - 12

தென் தமிழகத்தின் ஒரு மூலையில், `முல்லைப் பெரியாறு’ என்ற பெரிய நீர்த்தேக்கம். ஜனவரி 15, தைப்பொங்கலன்று, கம்பம் பள்ளத்தாக்கு மக்கள், குறிப்பாக  கூடலூர், சுருளிப்பட்டி, பாலாறுபட்டி  பகுதிகளைச் சார்ந்தவர்கள் பொங்கல்வைத்துக் கொண்டாடுவார்கள். ஏன்? முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கம் உருவாகக் காரணமாக இருந்த `ஜான் பென்னிகுவிக்’ என்ற மகத்தான ஆங்கிலேயப் பொறியாளர் பிறந்த நாள் ஜனவரி 15.  அந்த மக்களைப் பொறுத்தவரை, அவர்தான் அவர்கள் வாழ்வுக்கு அடித்தளம் அமைத்துத் தந்தவர்.  

அன்பே தவம் - 12

முல்லைப் பெரியாறு, வெறும் கல்லாலும் மண்ணாலும் எழுப்பப்பட்ட நீர்த்தேக்கம் அல்ல. கண்ணீராலும் செந்நீராலும் எழுப்பப்பட்டது.  சாலைப் போக்குவரத்து, மின்சார வசதி எதுவுமே இல்லாத காலத்தில் பென்னிகுவிக் அந்த அணையின் கட்டுமானப் பணியைத் தொடங்கினார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு ஒப்பந்தம் செய்துகொண்டு, அந்தப் பணியில் ஈடுபட்டபோது, அது பெரும் சவாலாக இருந்தது. அதை முடிப்பதற்குள் இழந்த மனித உயிர்கள் ஏராளம். விஷப் பூச்சிகளால், மிருகங்களால் தாக்கப்பட்டவர்கள், காட்டாற்று வெள்ளத்தில் காணாமற்போனவர்களின் சடலங்களையெல்லாம் தேடியெடுத்து, அவற்றைப் புதைப்பதற்கு இடமின்றி, அங்கேயே புதைத்துவிட்டு, அந்தச் சமாதிகளுக்கு மேலேதான் நீர்த்தேக்கம் எழுப்பப்பட்டது.

அந்த நீர்த்தேக்கப் பணி மூன்று முறை நிறைவு பெற்றபோதும், அணை உடைந்துபோனது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், பென்னிகுவிக்குக்கு உத்தரவு போட்டது. `இந்தத் திட்டம் தேவையற்றது. விட்டுவிடு’ என்றது. திட்டத்தை நிறைவேற்றவேண்டிய நிறுவனமே கைவிட்டுவிட்டபோது, அதை நிறைவேற்றும் பொறியாளரின் நிலை எப்படியிருந்திருக்கும்? `இதைச் செய்து முடிக்க என்ன செய்யலாம்?’ அவர் யோசித்தார். சொந்த ஊருக்குப் போனார். சொத்துகளை விற்றுவிட்டு, நீர்த்தேக்கப் பணியை மீண்டும் தொடங்கினார். அணைப் பணி நிறைவுபெற்றது. அணைத் திறப்பு விழா... அணையிலிருந்து நீர் கொட்டியது. பென்னிகுவிக் கண்களிலிருந்தும், அவர் மனைவியின் கண்களிலிருந்தும் வழிந்தது  ஆனந்தக்கண்ணீர்!

படம்: வீ.சக்தி அருணகிரி