ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!
##~##
ரத கண்டத்தில் உள்ள எந்த அரசரும் படை திரட்டிக்கொண்டு போய் வெளி தேசம் ஜெயித்ததில்லை. தங்களை நோக்கி அந்நியர்கள் தாக்க வரும்போது, தடுத்து நிறுத்தி, பின்தள்ளியிருக்கிறார்கள். மறுபடியும் தாக்க முற்படும்போது, அடிபட்டுத் துவண்டு இருக்கிறார்கள்.

ஆனால், ஒரு தமிழ் மன்னன் மட்டுமே படை எடுத்துச் சென்று, பல தேசங்களை வென்று, அங்கிருந்து செல்வங்களைத் திரட்டிக்கொண்டு வந்து, தன் நாட்டைச் செழிப்பாக்கினான்; அந்தத் தமிழ் மன்னன் மட்டுமே சேரர்களையும், பாண்டியர் களையும் அடக்கி வைத்தான்; அவன்தான் சிங்களத்தின் மீது படையெடுத்து, காடுகளை ஊடுருவிச் சென்று, களத்தைத் தாக்கிச் சூறையாடி, மதுரை மன்னன் கொடுத்து வைத்திருந்த பாண்டியனது முடியையும் செங்கோலையும் அங்கிருந்து கொண்டு வந்தான்.

அவன் தந்தை மிகப்பெரிய கோயில் எழுப்ப, அதேவிதமாக, தான் அமைத்த ஊரில் மிக அழகானதொரு கோயில் எழுப்பினான். தந்தையின் கோயில் பிரமாண்டமானது. இவனுடைய கோயிலோ கலையழகு மிக்கது. கிட்டத்தட்ட மத்திய இந்தியா வரை படை எடுத்துப் போய், பல செல்வங்களையும் குதிரைகளையும் யானைகளையும் பசுக்களையும் தமிழ்நாட்டில் கொண்டு வந்து இறைத்தான். மிக வீரமுள்ள புத்திரர்களைப் பெற்று, அவர்களுக்குத் தக்க வயதில் பதவி கொடுத்து, பயிற்சி கொடுத்து, தமிழ் தேசத்தை வளப்படுத்தினான். தமிழில் தேவாரம் பாடுபவர்களை ஆதரித்தான். புலவர்களைக் கொண்டாடினான். அவனும் பாட்டு எழுதுவதில் விருப்பமாக இருந்தான். அந்த மன்னன் பெயர், ராஜேந்திர சோழன்.

ஆலயம் தேடுவோம்!

தமிழகத்தில் இருந்த மன்னர்களில் அத்தனை பேரிலும் மிகச் சிறந்தவன். மாபெரும் வீரன். தன்னுடைய வணிகர்களை யார் அவமதித்தாலும், அவர்கள் வேலையில் யார் குறுக்கிட்டாலும், உடனே விரைந்து சென்று தாக்கிப் பகைவர்களை அழிப்பான். தமிழ் மக்கள் நலனே தன் உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தான்.

ஆலயம் தேடுவோம்!

ஆனால், அவன் ஆசை ஆசையாக எழுப்பிய கற்றளி ஒன்று சிதைந்து போய்க் கிடக்கிறது. சமீபத்தில் அந்தக் கோயிலைப் போய்ப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கும்பகோணத்தில் உள்ள என் நண்பர் சீதாராமன் மூலமாக இந்தக் கோயில் பற்றி எனக்குத் தெரிந்தது. கும்பகோணத்தில் இருந்து நெய்வேலி போகும் சாலையில், திருப்பனந்தாளுக்கு அருகே மானம்பாடி என்கிற கிராமத்தின் ஆரம்பத்திலேயே இந்தக் கோயில் இருக்கிறது. கல்வெட்டுகள் அதைக் கயிலாசநாதர் கோயில் என அழைக்கின்றன.

மிக அற்புதமான கற்றளி. கருங்கற்களால் அஸ்திவாரம் கட்டி, சுவர் எழுப்பி, அதற்கு மேல் ஒரு விமானத்தை செங்கல்லால் தீர்மானித்துள்ளனர். கோயில் முழுவதும் அற்புதமான கடவுளர் சிலைகளைப் புடைப்புச் சிற்பங்களாக வடித்திருக்கின்றனர்.

உக்கிரமாக நிற்கும் ஸ்ரீகாலபைரவர், சிரிப்புடன் திகழும் ஸ்ரீநடராஜர், ஆழ்ந்து அமைதியாய் கண்களைத் தாழ வைத்துக்கொண்டிருக்கிற ஸ்ரீதட்சிணாமூர்த்தி, மிக ஒயிலான மகிஷாசுரமர்த்தினி, ஸ்ரீபிரம்மா எனப் பலரது உருவங்களும் அங்கங்கே சரியான முறையில் நிறுவப்பட்டிருக்கின்றன. சிறிய கோயில்தான். ஆனால், சொல்லில் வடிக்க முடியாத அளவுக்குச் சிற்பங்களின் அழகு இருக்கிறது; வேறெங்கும் காண முடியாத காட்சிகள் இருக்கின்றன.

தஞ்சை விமானத்துக்குள் சோழ ஓவியமாக தில்லை நடராஜர் இருக்க, ராஜராஜ சோழன் வீற்றிருக்க, எதிர்ப்பக்கம் வேறொரு அரசன் முகம் சிதைந்திருக்க, ராஜராஜ சோழனுக்கு அருகே மூன்று மனைவிகள் இருக்க, வேதியர்களும் பணிப்பெண்களும் காவலாட்களும் இருக்க, ஓர் அழகிய சித்திரம் உண்டு. கிட்டத்தட்ட அந்தச் சித்திரத்தின் உருவம் போல், இங்கேயுள்ள நடராஜர் சிலைக்கு ஒரு புறம் பெரிய கொண்டையுடன் ராஜராஜனும், அவனுடைய மூன்று மனைவிகளும் நிற்கிறார்கள். மறுபுறம் நல்ல தடிமனான உருவத்துடன், உச்சிக் கொண்டையுடன் ஐந்து தேவியர் களுடன் வேறு ஒரு அரசனின் படம் காட்டப்பட்டிருக்கிறது. எதிர்ப்பக்கம் ராஜராஜசோழனாக இருந்தால், இந்தப் பக்கம் இருப்பது ராஜேந்திரன்தானே என்ற அனுமானம் வருகிறது.

ஆலயம் தேடுவோம்!

ராஜேந்திர சோழன் உருவத்தைப் பார்க்கும்போது, தஞ்சை சரஸ்வதி மஹாலில் உள்ள ஒரு ஐம்பொன் விக்கிரகம் நினைவுக்கு வருகிறது. அழகிய தொந்தியுடன், அகன்ற மார்புடன், கூப்பிய கைகளுடன், காலில் வீரக்கழலுடன், முப்புரி நூலுடன், தலை உச்சியில் ஒரு ஆபரணம் போட்டு வைத்த கொண்டையுடன், சுருள் சுருள் முடியுடன், மெல்லிய சிரிப்புடன் ஓர் ஆண்மகன் உருவம் இருக்கும். பிரம்மராயர் என்று மியூசியத்தில் உள்ளவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இந்தக் கோயிலில் உள்ள ஐந்து தேவியருடன் கூடிய ராஜேந்திர சோழன் உருவத்தைப் பார்த்த பிறகு, அந்த ஐம்பொன் சிலையும் ராஜேந்திர சோழனாகவே இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்தச் சிலை வடிப்பும் அந்த ஐம்பொன் வடிப்பும் ஒரேவிதமாக இருக்கின்றன.

சிறிய அளவிலான சிவலிங்க உருவம் இருக்கிறது. பக்கவாட்டில் ஓர் உருள் பதுமத்தில் கல்வெட்டுகள் இருக்கின்றன. அந்தக் கல்வெட்டு ராஜேந்திர சோழனின் கீர்த்தியை, தேதி குறிப்பிடாமல் சொல்கிறது. வேறொரு கல்வெட்டு... ராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் ஐந்தாம் ஆண்டுக் கல்வெட்டு, இந்தக் கோயிலின் பெயர் கயிலாசநாதர் கோயில் என்றும், கோயில் அமைந்துள்ள ஊரின் பெயர் மற்றும் இருப்பிடம் குறித்து, 'வடகரை இராஜேந்திர சிம்ம வடநாட்டி மிழலை நாட்டில் உள்ள இலச்சிகுடி என்கிற வீரநாராயணபுரம்’ என்றும் தெரிவிக்கிறது.

ஆலயம் தேடுவோம்!

அதோடு மட்டுமல்லாமல், இந்த மன்னனிடம் தேவார நாயகம் என்பவர், அதாவது தேவாரம் பாடுபவர்களை மேற் பார்வையிடுபவர், நாங்கூர் நாட்டு மரக் காடன் பதஞ்சலி பட்டாரகன் என்பவர் காசு கொடுக்க, இந்தக் கோயிலில் இருந்த சிவ பிராமணர்கள் மூன்று நந்தா விளக்கு எரித்தனர் என்கிறது. இன்னொரு கல்வெட்டு, இலச்சிகுடியில் வாழும் நகரத்தார் இந்தக் கோயிலுக்காக மன்னனின் பெயரால் ஒரு நந்தவனம் அமைக்க வரியில்லா நிலங்களைத் தானமாகக் கொடுத்ததைத் தெரிவிக்கிறது. சந்தேகமே இல்லாமல் இது ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட ஓர் அற்புத ஆலயம். சோழர் கால சிற்பக் கலை வண்ணம் இங்கு தெள்ளத் தெளிவாக இருக்கிறது.

ஆனால், கோயிலைச் சுற்றிலும் முட்புதர்கள். கோயிலுக்கு முன்னே இருக்கிற மண்டபத்தின் குறுக்குத் தூண், சரிந்த நிலையில் இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற பயத்தைக் கொடுக்கிறது. மேலே உள்ள விமானம் முழுவதும் புற்கள் முளைத்து, புதர்கள் மண்டி, செங்கற்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இன்னும் இரண்டு பலத்த மழைக்குப் பிறகு, இந்தக் கோயில் முற்றிலும் அழிந்துவிடக்கூடும். ராஜ ராஜனையும் ராஜேந்திரனையும் ஒருங்கே நடராஜருக்கு எதிரே வரிசையாகக் காணும் பாக்கியம், நமது அடுத்த தலைமுறைக்கு இல்லாது போகும். அழகான தட்சிணா மூர்த்தியும், ஒயிலான மகிஷாசுரமர்த்தினியும் நம் அடுத்த தலைமுறையில் காணாமற் போகக் கூடும். ரிஷபாரூடராக இருந்து பார்வதியின் தோளை மெள்ள அணைத்தவாறு இருக்கிற கம்பீரமான சிவன் உருவம் சிதைந்து போகக் கூடும். அப்படிப் போகாமல் காப்பது நமது கடமை. அப்படிச் செய்யவில்லை என்றால், தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்த்து, நானூறு ஆண்டுகள் சோழ சாம்ராஜ்ஜியம் மிகத் தெளிவாக இருக்கும் படியாகச் செய்த அந்த மன்னர்களுடைய பேராற்றலை நாம் புறக்கணிப்பதாக ஆகும். ராஜேந்திர சோழன் என்ற தமிழ் மன்னன், கடல் கடந்து காம்போஜ்யம், கடாரம், மாயூடுகங்கம், இலங்காசோகம் எனப் பல இடத்தை வென்றான் என்பது நம் மக்களுக்குத் தெரியாது போகும். அந்த மன்னனுக்கு மரியாதை செய்ய நாம் மறுத்ததாக ஆகும்.

பரதகண்டத்தின் பாதியைத் தன் வாள் வலிமையால் ஜெயித்த அந்த மன்னனின் பெருமையை நாம் கொண்டாடாது போனால், நாம் தமிழையும் கொண்டாட மாட்டோம் என்பதுதான் அர்த்தம். தமிழ் வரலாற்றை புறக்கணித்துதான் நிற்போம் என்கிற அவலமே மிஞ்சும்.

ஆலயம் தேடுவோம்!

மானம்பாடி கிராமத்து மக்கள் சிலர், மிகச் சிரமப்பட்டு தினந்தோறும் விளக்கேற்றி, வாசலில் கோலமிட்டு, கயிலாசநாதருக்கு ஒரு வேளை பூஜை செய்கிறார்கள். ஆனால், அவர்களால் இந்தக் கோயிலைச் சீர்படுத்தி, தூக்கி நிறுத்த முடியவில்லை. எவரேனும் உதவி செய்யமாட்டார்களா என்று அந்தக் கிராமத்து மக்கள் ஏங்குகிறார்கள். பலமுறை இதுபற்றி அரசிடம் விண்ணப்பித்தும் பலனில்லை என்று சொல்கிறார்கள்.

வெகு நிச்சயம் இந்தக் கோயில் கொண் டாடப்படவேண்டிய கோயில்; தூக்கி நிறுத்த வேண்டிய கோயில். தமிழ் மக்கள் அவசியம் போய் தரிசிக்க வேண்டிய கோயில்.

தமிழகத்துத் தொல்பொருள் இலாகாவோ அல்லது மத்திய தொல்பொருள் இலாகாவோ தலையிட்டு, இதைச் சீர்செய்ய வேண்டும். புற்களை அகற்றி, கோயிலை நிமிர்த்தி, விமானத்தை மெருகேற்றி, இந்தத் தொன்மையைப் பற்றிப் பலகை எழுதி வைக்க வேண்டும். குடந்தையிலிருந்து சென்னைக்கு வருபவர்கள் யாராயினும் திருப்பனந்தாளுக்கு அருகே உள்ள மானம்பாடி கயிலாசநாதரையும், சுற்றுப் புறத்தில் இருக்கிற மற்ற தெய்வங்களையும் தரிசிக்க வேண்டும். தமிழ் மன்னர்களான ராஜராஜனையும் ராஜேந்திர சோழனையும் கை கூப்பி வணங்க வேண்டும்.

தமிழகத்தின் நிதி நிலைமை அத்தியாவசி யமான விஷயங்களுக்கே சரியாக இல்லை; இந்தச் செலவுக்கு எங்கே போவது என்று அரசாங்கமும் அதிகாரிகளும் கை விரிக்கலாம். ஆனால் தமிழக முதல்வர் மனம் வைத்தால், இந்தக் கோயிலைத் தூக்கிக் கம்பீரமாக நிறுத்திவிட முடியும். யாரையேனும் தனி நபரை உதவி செய்யுங் கள் என்று உத்தரவு இட்டால், இந்தக் கோயில் சிறப்பாக மாறிவிடும்.

ஆலயம் தேடுவோம்!

ராஜராஜ சோழனையும் ராஜேந்திர சோழனை யும் மனைவிமார்களோடு அவர்கள் தில்லை நடராஜரை வணங்குவது போன்ற ஒரு சிற்பம் எனக்குத் தெரிந்து, தமிழகத்தில் வேறெங்கும் இல்லை. இந்தக் காட்சியினாலேயே இந்தக் கோயில் மிக முக்கியமானதாக ஆகிறது. இந்தக் கோயிலில் உள்ள மற்ற சிற்பங்களெல்லாம் மிக உன்னதமாக இருக்கின்றன. கோயிலின் தொன்மையை உணர்ந்து, அதைத் தூக்கி நிறுத்திச் செப்பனிட்டால், பொதுமக்கள் தானாக வருவார்கள். அவர்களால் கோயில் வழிபாடு தொடர்ந்து நடைபெறும். பராமரிப்பும் அவர் களாலேயே செய்ய முடியும்.

ஆரம்பித்து வைக்க வேண்டியது அரசாங்கத் தின் கடமை; ஆலயப் பணிகளில் நாட்டமுள்ள இன்றைய தமிழக முதல்வரின் கடமை; அல்லது, பெருந்தனம் வாய்ந்த பெரியவர்களின் கடமை. மனமும் பணமும் உள்ள தனியார் எவரேனும் இந்தக் கோயிலை ஒருமுறை பார்த்தால், அவர் கள் மனத்தில் நிச்சயம் இதை உடனே சீர்செய்து முடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழும்.

சிங்களர்களை அடித்து நொறுக்கியவன், மேலைச் சாளுக்கியத்தைக் கடைசி வரை போய்த் தாக்கி, அங்கிருந்து தூண்களும் சிற்பங்களும் கொண்டு வந்தவன், கீழைசாளுக்கியம் என்கிற ஆந்திரத்தோடு நல்ல உறவுகள் கொண்டவன், கங்கையிலிருந்து நீர் கொண்டு வந்து தன்னுடைய கங்கைகொண்ட சோழபுரத்தைப் புனிதப்படுத்தியவன், பர்மா, மலேசியா, சிங்கப்பூர் எனப் பல தேசங்களை கப்பற்படை மூலம் அடைந்து, அங்கு புலிக்கொடியை நாட்டிப் பெருஞ்செல்வத்தைக் கொண்டு வந்தவன் என்கிற பெருமைக்கெல்லாம் பாத்திரமானவன் ராஜேந்திர சோழன். பரத கண்டத்தில் ஏனைய அரசர்கள் எல்லோரும் அவன் புகழ் அறிந்து, அமைதியாய் அவனுக்கு அடங்கி நடந்தார்கள். அத்தகைய மாமன்னன் எழுப்பித்த கற்றளி சிதைந்து போகும்படி விடுவது நமக்கு அழகல்ல. ஓர் அற்புதமான கலைக் கூடத்தைப் பாழாக்குவது நமக்குப் பெருமையல்ல.

தமிழர் வரலாற்றில் தமிழராகிய நாமே அக்கறை செலுத்தாமல் இருப்பது நியாயமே அல்ல. எனவே, பல லட்சங்கள் செலவழித்து, வெகு நிச்சயமாய் தனியாரோ அரசாங்கமோ இதை உடனடியாகப் புதுப்பிக்க வேண்டும். அப்படிப் பராமரித்தால் அவரின் பெயரும் ராஜராஜ சோழனின் புகழைப்போல, ராஜேந்திர சோழனின் பெருமையைப்போல, காலகாலத்துக்கும் நிலைத்து நிற்கும். இது சத்தியம்!