Published:Updated:

சொந்த வீடு, மனை அருளும் பூமிதேவி வழிபாடு -  அருள்மிகு காலகாலேஸ்வரர் கோயில்!

சிவபக்தியால் கூடாத காரியம் எதுவுமே இல்லை. சிவபெருமானை முழுமையாக நம்பி அவன் திருவடிகளில் சரணடைவோரைக் காலனும் நெருங்க அஞ்சுவான். இந்த அற்புதத்தை மார்க்கண்டேய மகரிஷி மூலம் உலகுக்கு உணர்த்தியவர் சிவபெருமான்.

சொந்த வீடு, மனை அருளும் பூமிதேவி வழிபாடு -  அருள்மிகு காலகாலேஸ்வரர் கோயில்!
சொந்த வீடு, மனை அருளும் பூமிதேவி வழிபாடு -  அருள்மிகு காலகாலேஸ்வரர் கோயில்!

சிவபக்தியால் கூடாத காரியம் எதுவுமே இல்லை. சிவபெருமானை முழுமையாக நம்பி அவன் திருவடிகளில் சரணடைவோரைக் காலனும் நெருங்க அஞ்சுவான். இந்த அற்புதத்தை மார்க்கண்டேய மகரிஷி மூலம் உலகுக்கு உணர்த்தியவர் சிவபெருமான்.
மார்க்கண்டேயன் மிகச் சிறந்த சிவபக்தன். 16 வயதுதான் தனது ஆயுள் என்ற வரத்தோடு பிறந்தவன். அவன் வாழ்க்கை முடியும் நாளில் அவனுக்கு இந்த உண்மையை அவன் பெற்றோர்கள் சொல்கிறார்கள். மார்க்கண்டேயரோ மனம் கலங்கவில்லை.

தனது கடைசி நிமிடங்களில் இறைவனைப் பற்றிய சிந்தனையிலேயே இருக்கவேண்டும் என்றும், இறைவனின் திருவடிகளில் ஐக்கியமாகிவிடவேண்டும் என்று விரும்பினான். சிவலிங்க மூர்த்திக்குப் பூஜை செய்ய ஆரம்பித்தான். அப்போது காலன் அங்கு வந்தான். காலனைக் கண்டதும் மார்க்கண்டேயன் அஞ்சவில்லை.

மாறாக, 'தான் யாருடைய திருவடிகளைப் புகலிடமாகக் கொண்டோமோ அவருடைய திருவடிகளையே பற்றிக்கொள்வோம்' என்று நினைத்து, தான் பூஜை செய்துகொண்டிருந்த சிவலிங்க மூர்த்தத்தை இறுகத் தழுவிக்கொண்டான். ஆனாலும், சிவபூஜையில் இருக்கும் மார்க்கண்டேயன் மீது பாசக் கயிற்றை வீசலாமா என்ற தயக்கம் எதுவும் இல்லாமல், யமன் பாசக்கயிற்றை மார்க்கண்டேயன் மீது வீச, அது சிவலிங்கத் திருமேனியிலும் பட்டது. 


பாச பந்தங்கள் அற்றவன் பரமன். அவனைக் கயிற்றால் கட்டி இழுக்கமுடியுமா? பரமன் கோபம் கொண்டார். தன் மீது அம்பு செலுத்திய காமனைத் தகனம் செய்தது போல தன் மீது பாசக் கயிற்றை வீசிய யமனின் தலையை இடறினார். சிவபக்தியின் பெருமையை உலகுக்கு உணர்த்திய மார்க்கண்டேயனை சிரஞ்சீவியாக்கினார். 


யமன் இல்லாததால் மரணம் என்பதே இல்லாமல் போய்விட்டது. உலகில் உயிர்கள் பெருகின. பிறப்பைப் போலவே இறப்பும் உயிர்ச் சுழற்சியில் முக்கியம் அல்லவா! பூமாதேவியின் பாரம் அதிகரிக்கத் தொடங்கியது. பூமாதேவி சிவபெருமானை சரணடைந்து தன் நிலையை உணர்த்தி, யமனை மன்னித்து உயிர்ப்பிக்குமாறு வேண்டினாள். அதன்படியே சிவனும் யமனை மன்னித்து உயிர்ப்பித்து உலகின் துயர் தீர்த்தார்.

இந்த நிகழ்வுகள் நடந்ததாக நம்பப்படும் திருத்தலம்,  நாகை மாவட்டம் எருக்கட்டாஞ்சேரியில் உள்ள ஸ்ரீ காலகாலேஸ்வரர் ஆலயம். அதனால்தான் இங்கு மூலவர் சந்நிதியில் இறைவனோடு பூமாதேவியும் யமனும் எழுந்தருளியுள்ளனர்.  
காலனை உயிர்ப்பித்துத் தந்த ஈசன் இங்கு சுயம்புவாக எழுந்தருளியுள்ளதால் அவர்  ஸ்ரீ காலகாலேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும்.  சமயக் குரவர் நால்வரும் பிற கோயில்களைப் பற்றிப் பாடிய தேவாரத் திரட்டில், 'காலனைக் காத்த ஸ்ரீ காலகாலேஸ்வரர்' என்று போற்றிப் புகழ்ந்துள்ளனர்.   


பூமாதேவியின் வேண்டுகோளை ஏற்று யமனை மன்னித்து மீண்டும் யமனுக்கு உயிர்கொடுத்து எழுப்பிவிட்டார் ஈசன்.  அதனால்தான் இந்த ஊர், 'எழுப்பிவிட்டாஞ்சேரி' என்று அழைக்கப்பட்டு, பின் காலப்போக்கில் மருவி 'எருக்கட்டாஞ்சேரி' ஆயிற்று.  
இந்தக்கோயிலின் குருக்கள் பாலாஜியைச் சந்தித்தோம். 

“சுயம்புவாக ஸ்ரீ காலகாலேஸ்வரரும், இரண்டு கைகளிலும் கமலத்தை ஏந்தியவாறு அம்பாளாக கருந்தடங்கண்ணியும் அருள்பாலிக்கும் தலம் இது.  ஆயுள் விருத்தித் தலமாகவும், நவகிரக தோஷ நிவர்த்தித் தலமாகவும் விளங்குவதால் இங்கு ஆயுஷ் ஹோமம் உள்ளிட்ட வைபவங்கள், பரிகாரப் பூஜைகள் செய்வதற்கு உகந்த தலமும்கூட.  மாதந்தோறும் அஷ்டமி, பிரதோஷம், சங்கடஹரசதுர்த்தி, கிருத்திகை போன்ற நாள்களில் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.  

திருக்கடையூரில் யமனை சம்ஹாரம் செய்த மூன்றாம் நாள், அதாவது சித்திரை மக நட்சத்திர நாளன்று யமனை எழுப்பிவிடும் நிகழ்ச்சி இங்கு உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. வாழ்வில் வளம் தரும் அனைத்து தெய்வங்களும் ஓரிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காலகாலேஸ்வரர் கோயிலுக்கு நீங்களும் ஒருமுறை வந்து தரிசனம் செய்து நற்பலனை அடையலாம்!” என்றார்.  


கோயிலுக்குச் செல்லும் வழி:  மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடி பேருந்து மார்க்கத்தில் 22 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பிலிருந்து 23 கி.மீ. தொலைவிலும் இக்கோயில் உள்ளது.  வேன், கார், ஆட்டோ வசதிகளும் உண்டு.  

இறைவன்  : அருள்மிகு காலகாலேஸ்வரர்
இறைவி :     அருள்மிகு கருந்தடக்கண்ணி
தலவிருட்சம்: வில்வம்

பலன்கள் : இங்குள்ள ஸ்ரீ காலகாலேஸ்வரரை மனமுருகி வணங்கினால் நீடித்த ஆயுள் உண்டாகும், திருமணத் தடை அகலும், புத்திர பாக்கியம் கிட்டும்.  யமதர்மராஜனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் மரண பயம் நீங்கும், அகால மரணம் நேராது.  பூமாதேவியை வணங்கினால் வீடு, மனை என்று சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.  மார்க்கண்டேயர் தன்னை வணங்குவோருக்கு தான் பெற்ற சிரஞ்சீவி வரத்தை வழங்குவார் என்பதும் ஐதீகம்.