ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

மாருதி ஆலயத்திற்கு மகா கும்பாபிஷேகம்!

மாருதி ஆலயத்திற்கு மகா கும்பாபிஷேகம்!

மாருதி ஆலயத்திற்கு மகா கும்பாபிஷேகம்!
மாருதி ஆலயத்திற்கு மகா கும்பாபிஷேகம்!

பிருந்தாரண்ய க்ஷேத்திரம் என்று புராணங்கள் போற்றும் தலம் சென்னை- திருவல்லிக்கேணி. இங்குள்ள அனுமந்தராய தெரு, சுமார் 300 வருடங்களுக்கு முன் வணிகப் பெருமக்களின் வழித்தடமாகத் திகழ்ந்திருக்கிறது.

ஒருமுறை, வியாபாரப் பொருட்களை ஏற்றிக்கொண்டு மாட்டு வண்டி ஒன்று இவ்வழியே வந்தது. அப்போது, தெருவில் கிடந்த கல் ஒன்றால் தடங்கல் ஏற்பட்டு, வண்டி தடுமாறி நின்றது. மற்ற வண்டிக ளுக்கும் இடைஞ்சலாக இருக்குமே என்று கருதி, அங்கிருந்தவர்கள் அந்தக் கல்லைப் பெயர்த்தெடுக்க முயன்றனர். அவர்கள் பூமியைத் தோண்டியபோது, சுமார் 2 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் விக்கிரகம் கிடைத்தது. சிலிர்ப்புடன் வணங்கியவர்கள், அந்த அனுமன் விக்கிரகத்தை அருகிலிருந்த அரசமரத்தடியில் வைத்துவிட்டுச் சென்றனர். நாளடைவில், அல்லிக்கேணி அன்பர்களின் பிரியனாகிப் போனார் அந்த அனுமன். அவரைச் சுற்றிலும் நாகர் சிலைகளையும் வைத்து பக்தர்கள் வழிபட ஆரம்பித்தனர்.

##~##
கால மாற்றத்தில், அல்லிக்கேணியில் குடியேறிய மத்வகுல அன்பர்கள், சிறிய மேடை அமைத்து, அதன் மீது ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்தனர். அனுமனின் சாந்நித்தியம் அவர்களைக் கட்டிக்காத்தது. பிற்காலத்தில் அனுமனுக்குக் கோயில் அமைக்கவும் முடிவு செய்தனர். 1910-ல் பணம் வசூலித்து, அனுமனுக்குச் சிறிய அளவில் கோயில் கட்டி, கும்பாபிஷேகமும் நிகழ்ந்தது.

2-ஆம் உலகப்போரின்போது, ஊர்க்காரர்கள் அனைவரும் இடம் பெயர்ந்தனர். ஆனால், அனுமனுக்கு நித்ய பூஜைகள் செய்து வந்த பாபுராம்பேட்டை ஸ்ரீநிவாஸாச்சார், பூஜைகள் தடைபடக் கூடாது என்பதற்காக ஆலயத்தின் அருகிலேயே தங்கிவிட்டாராம். அனுமனுக்குப் படைத்து, அதையே தானும் உண்டு, அவன் காலடியே கதியென கிடந்தவருக்கு எந்த ஆபத்தும் நேராமல் அருளியவர் இந்த அனுமன் என்று சிலிர்ப்புடன் விவரிக்கிறார்கள் பக்தர்கள். அதன் பிறகு, 1943-ல் ஸ்ரீராமா அசோசியேஷன் துவங்கப்பட்டது. இந்த அமைப்பைச் சேர்ந்த அன்பர்களின் முயற்சியால் 1976-ல் கோபுரமும் சுற்றுச் சுவரும் அமைக்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது.

கருவறையில், வலது காலை சற்று முன் வைத்த கோலத்தில் அருள்கிறார் அனுமன். நமது வேண்டுதல்களை அவரே முன் வந்து நடத்தி வைப்பதாக ஐதீகம். உருவில் சிறியவர்தான் என்றாலும், இந்த அனுமனின் கீர்த்தி பெரிது; வேண்டிய வரங்களை சடுதியில் தரும் வரப்ரசாதி என்கிறார்கள் பக்தர்கள். ஸ்ரீராமநவமி, நவராத்திரி, ஹனுமத் ஜயந்தி, அட்சய திருதியை ஆகிய தினங்கள் இந்தக் கோயிலில் விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன. ஸ்ரீராமநவமி அன்று இஸ்லாமிய அன்பர்கள் இந்த அனுமனுக்காக 'நபூத்’ எனும் வாத்தியம் இசைப்பது, தனிச்சிறப்பு. அன்று கோயிலில் தர்ம உபநயனம் செய்துவைப்பார்களாம்; அன்னதானமும் நடைபெறும்.

அல்லிக்கேணி பக்தர்களின் உள்ளம் நிறைந்த இந்த அனுமனின் ஆலயத்தில் திருப்பணிகள் நிறைவு பெற்று, மகா கும்பாபிஷேகம் (ஜனவரி- 12) நடை பெறுகிறது.

அழகன் பார்த்தசாரதியைத் தரிசிக்க அல்லிக்கேணி செல்லும் பக்தர்கள், இந்த அனுமனையும் தரிசித்து அருள் பெறலாம்.